காவேரி நதிநீர் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு - தமிழ் இலெமுரியா

16 August 2014 8:24 am

 காவேரி நதியின் தொன்மையும் பெருமையும்:                                                         ……………………………………………..கூம்பொடு          மீப்பாய் களையாது மிசைபரந் தோண்டாது          புகாஅர் புகுந்த பெருங்கலத் தகாஅர்          இடைப்புலப் பெருவழிச் சொரியும்"   (புறம்-30)            ‘பெருங்கப்பல்கள் தனது கூம்புடன் கூடிய விரிந்த பாய்களை தளர்த்தாமலும், அதில் ஏற்றப்பட்டிருந்த பண்டங்களை இறக்காமலும், காவேரி நதியின் முகத்துவாரத்தில் உள்ள பூம்புகார்த் துறையில் பண்டங்களைச் சிதறியவாறு நுழைந்தன’ என்கிறார் சோழன் நலங்கிள்ளி குறித்துப் பாடிய உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.           இதன் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு ஆகும். கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பட்டினப்பாலையும் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சிலப்பதிகாரமும் இன்னபிற சங்க இலக்கியங்களும் அதன் பிந்தைய தமிழ் இலக்கியங்களும் காவேரி நதி குறித்தும் kuRkuRiththumஅதன் முகத்துவாரத்தில் உள்ள பூம்புகார்த் துறை குறித்தும்  அவைகளின் பெருமைகள் மற்றும் சிறப்புகள் குறித்தும் தொன்மை குறித்தும் பலவாறு பேசுகின்றன.        இந்தியக் கப்பலியல் (INDIAN SHIPPING) என்ற நூலை எழுதிய வரலாற்று ஆராய்ச்சியாளர் இராதா குமுத் முகர்ஜி "சங்க இலக்கியங்களில் இருந்து புகார்த்துறையின் பெருமையை தெரிந்து கொள்ள முடிகிறது. இதன் வாயிலாகத் துறைமுகத்தின் நீள அகலங்களும் நமக்குத் தெளிவாகின்றன. பெரிய பாய்மரக்கப்பல்கள் இத்துறைமுகத்தில் தமது பாய்களைத் தளர்த்தாமலேயே நுழைந்தன" எனக் குறிப்பிடுவதாகச் சொல்கிறார் இந்தியக் கடற்படை முதன்மைப் பொறியாளர்களில் ஒருவரான நரசய்யா அவர்கள்.      மேலும் நரசய்யா "பாய்களைத் தளர்த்தாமல் வரும்பொழுது கப்பலின் வேகம் அதிகமாக இருக்கும். சரக்குகளுTANடன் கப்பல்கள் பளுவாகவும் ஆழமாகவும் மிதக்கும். அதனால் பூம்புகார்த்துறைமுகம் நல்ல ஆழமும் பெரிய பரப்பளவும் கொண்ட மிகப்பெரியதொரு துறைமுகமாகத்தான் இருந்திருக்க வேண்டும்" என்கிறார். (கடல்வழி வணிகம் – நரசய்யா, பக்: 48, 49).     பூம்புகார்த் துறையும் அது இருந்த காவேரி நதியும் மிகப்பெரிய நீள அகலங்களைக் கொண்டதாகவும் மிக ஆழமானதாகவும் இருந்தன என்பதை மேற்கண்ட செய்திகள் உறுதி செய்கின்றன. இச்செய்தியோடு வணிகக் கப்பல்கள் பூம்புகார்த்துறைமுகம் முதல் உறையூர் (இன்றைய திருச்சி வரை) வரை சென்று வந்தன என்ற செய்தியையும் பொருத்திப் பார்க்கும்பொழுது காவேரி நதியில் வருடம் முழுவதும் மிகப்பெரிய அளவு நீர் ஓடிச் சென்று கடலில் கலந்து கொண்டிருந்தது என்பது உறுதியாகிறது. பெரிய கப்பல்கள் செல்லும் அளவு இருந்த அன்றைய காவேரி நதி, இன்று சிறுத்து வறண்டு கிடப்பது நம் நெஞ்சைக் கனக்க வைக்கிறது.பழைய ஒப்பந்தங்களும் பேச்சு வார்த்தைகளும்:         19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே 1892 இல் காவேரி நதி நீர் சம்பந்தமாக ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 1924 இல் மற்றொரு ஒப்பந்தம் உருவானது. இரண்டாவது ஒப்பந்தம் 50  ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1974 இல் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். ஆனால் கர்நாடக அரசு 1974 uஉடன் அந்த ஒப்பந்தம் காலாவதி ஆவதாகக் கருதி, 1924 ஒப்பந்தத்தில் உள்ள ஒப்பந்த விதிகளை மீறி பல்வேறு பாசனத் திட்டங்களை 1974 க்கு முன்பே நிறைவேற்றத் தொடங்கியது.       அதனால் கவலை அடைந்த தமிழக அரசு 1970 இல் காவேரி நடுவர் மன்றம் ஒன்றை அமைக்க மத்திய அரசை வலியுறுத்திக் கடிதம் எழுதியது. ஆனால் மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை. காவேரி உண்மை அறியும் குழு:             பின்னர் 1972 இல் மூன்று மாநில முதலமைச்சர்களும் மத்திய அமைச்சர் முன்னிலையில் நடத்திய பேச்சு வார்த்தையின் படி காவேரி  உண்மை அறியும் குழு (Cauveri Fact Finding Committee – CFFC) அமைக்கப்பட்டது. அது மாநில அரசு வாரியாகக் காவேரி நதியின் பயன்பாடு பற்றி ஆய்வு செய்தது.             அந்த ஆய்வின்படி, தமிழ் நாட்டிற்குக் கிடைத்த மொத்த நீரின் அளவு 567 டி.எம்.சி எனவும், ஆனால் தமிழ்நாட்டின்  பயன்பாடு 489 டி.எம்.சி. எனவும், கர்நாடகாவின் நீர்ப் பயன்பாடு 177 டி.எம்.சி எனவும், கேரளாவின் பயன்பாடு 5 டிஎம்.சி எனவும் இருந்தது. இந்த உண்மை அறியும் குழுவின் தரவுகளைக் கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டது. மேலும் இறுதி முடிவு எடுக்கும் வரை தற்போது  பயன்படுத்தி வரும் இந்த நீர் அளவை மட்டுமே அனைவரும் பயன்படுத்த  வேண்டும் என்பதும் கருத்தளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.காவேரி நடுவர் மன்றம்:        அதன்பின் மாநில அரசுகளுக்கு இடையே காவேரி நதிநீர்ச் சிக்கல் குறித்துப் பலமுறை பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. 1983 இல் ‘தமிழ்நாடு காவேரி நீர்ப்பாசன விலைபொருட்கள் விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்பு சங்கம்’’ என்ற ஒரு விவசாய அமைப்பு, நடுவண் அரசு காவேரி நடுவர் மன்றத்தை அமைக்க உத்தரவிட வேண்டுமென உச்சநீதிமன்றத்தைக் கேட்டு வழக்குத் தொடுத்திருந்தது.              இந்த வழக்கின் அடிப்படையில் 1990 ம் ஆண்டு மே 4 ல் உச்சநீதிமன்றம்  காவேரி நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி அதே ஆண்டில் நடுவண் அரசு காவேரி நடுவர் மன்றத்தை அமைத்தது. தமிழ்நாடு அரசு 1970 முதல் நடுவர் மன்றத்தை அமைக்கச்  சொல்லிக் கேட்டுவந்தபோதிலும் நடுவண் அரசு 20 ஆண்டுகளுக்குப் பின் 1990 ல் உச்ச நீதிமன்ற உத்தரவு தந்த பின்னரே காவேரி நடுவர்மன்றத்தை அமைத்தது. இடைக்காலத் தீர்ப்பு:         தமிழ்நாடு அரசு நடுவர் மன்றத்திடம் உண்மை அறியும் குழு கண்டறிந்த கர்நாடகத்தின் பயன்பாடான 177 டி.எம்.சி. நீரை மட்டும் கர்நாடக அரசு பயன்படுத்தத் தக்க வகையில், இடைக்கால உத்தரவை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. ஆனால் உண்மை அறியும் குழுவின் அறிக்கைக்குப் பின் 16 ஆண்டுகள் கடந்துவிட்டன என்பதால் மாநில அரசுகள் தற்பொழுது (1990) பயன்படுத்தி வந்த நீர்ப் பயன்பாட்டின் அடிப்படையில் தான் இடைக்கால உத்தரவை வழங்க வேண்டும் என நடுவர் மன்றம் தெரிவித்தது. 1990 இல் கர்நாடகம் பயன்படுத்தி வந்த 248 டி.எம்.சிக்குப் பதில் 295 டி.எம்.சி நீரைப் பயன்படுத்திக்கொள்ளத் தக்கவகையில் நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.          நடுவர் மன்றம், 1980-81 முதல் 1989-90 வரை 10 ஆண்டுகளாக மேட்டூர் அணைக்கு வந்த ஆண்டு சராசரி நீர் வரத்தாக தமிழ்நாடு அரசு தந்த தரவுகளின் அடிப்படையில், 205 டி.எம்.சி நீரை மட்டும் தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகம் தற்பொழுது பயன்படுத்தி வந்த நீரின் அளவையோ தமிழ்நாட்டிற்கு அது வழங்கிவந்த நீரின் அளவையோ கணக்கில் கொள்ளவில்லை.  அதே சமயம் karnhaadaga arasகர்நாடக அரசு 1990 இல் பாசனம் செய்து வந்த பரப்பான 11.2 இலட்சம் ஏக்கருக்கு மேல் எக்காரணத்தைக் கொண்டும் கர்நாடகம் தனது பாசனப் பரப்பை அதிகரிக்கக் கூடாது என உத்தரவிட்டது (தொகுதி-1, பக்: 86). 1990 இல் கர்நாடக அரசின் நீர்ப் பயன்பாடு:           கர்நாடக அரசு 1980-81 முதல் 1989-90 வரையான 10 ஆண்டுகளில் பில்லிகுண்டு என்ற இடத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்கி வந்த ஆண்டு சராசரி நீரளவு 227 டி.எம்.சி ஆகும். இந்த நீரளவு மத்திய நீர்வள வாரியத்தால் (cwcCWC) அளக்கப்பட்டு கர்நாடக அரசால் நடுவர் மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட நீரளவு ஆகும். பில்லிகுண்டு என்ற இடத்தில் இருந்து மேட்டூர் அணை வரையான வருட சராசரி நீர்வளம் என்பது 25 டி.எம்.சி ஆகும். எனவே கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கிய நீரளவு என்பது,  227 + 25 = 252 டி.எம்.சி ஆகும். [ பார்வை : தொகுதி-1,  பக்கம் : 101 ]            மேட்டூர் அணை வரையான வருட சராசரி நீர்வளம் 500 டி.எம்.சி என்பதால், கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கிய 252 டி.எம்.சி போக மீதி உள்ள 248 டி.எம்.சி நீர் என்பதுதான் கர்நாடகத்தின்  பயன்பாடாகும். 1972 வாக்கில் 177 டி.எம்.சி நீரைப் பயன்படுத்தி வந்த கர்நாடகம் 1990 வாக்கில் 248 டி.எம்.சி நீரைப் பயன்படுத்திக் கொண்டு,  தமிழ்நாட்டிற்கு 252 டி.எம்.சி. நீரை வழங்கி வந்துள்ளது (தொகுதி-1, பக்: 19).       எனவே நடுவர் மன்றம் 1990 வாக்கில் கர்நாடகம் பயன்படுத்தி வந்த 248 டி.எம்.சி. நீர் போக, மீதியுள்ள 252 டி.எம்.சி நீரை தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் வழங்க வேண்டும் என இடைக்காலத் தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் நடுவர் மன்றம் அதனைச் செய்யாது, 205 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன் மூலம் 248 டி.எம்.சி நீரை மட்டுமே பயன்படுத்தி வந்த கர்நாடகம், 295 டி.எம்.சி நீரைப் (500 – 205) பயன்படுத்த வழிவகை செய்தது. காவேரி நதியின் நீர்வளம் :      தமிழக அரசு 75% உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படையில் உள்ள சராசரி நீர்வளமான 670 டி.எம்.சி நீரை கணக்கில் கொள்ள வேண்டுமென நடுவர் மன்றத்தை வலியுறுத்தியது. ஆனால்  கர்நாடக அரசு 50% உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படையில் உள்ள சராசரி நீர்வளமான 740 டி.எம்.சி நீரை கணக்கில் கொள்ள வேண்டுமென நடுவர் மன்றத்தை வலியுறுத்தியது. நடுவர் மன்றம் கர்நாடகம் வலியுறுத்திய  50% உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படையில் உள்ள சராசரி நீர்வளமான 740 டி.எம்.சி நீரை கணக்கில் எடுத்துக் கொண்டது. 75% அடிப்படையை எடுத்துக் கொண்டால் பழைய பாசனங்கள் உறுதிப்படுத்தப்படும் என்பதோடு, காவேரியில் பற்றாக்குறை இருக்கும்பொழுது பாசனப்பரப்பை விரிவு படுத்தும் கர்நாடகத்தின் நோக்கம் தடுக்கப்படும். ஆனால் நடுவர் மன்றம் அதனைச் செய்யவில்லை.பன்னாட்டு விதிகள் :         பல நாடுகளுக்கு உரிய ஒரு பொது நதியில் இருந்து ஒவ்வொரு நாடும் தனக்குரிய சமபங்கு உரிமையைப் பெற 1966 இல் ஹெல்சிங்கி (HelsinkiHelsinki) என்ற இடத்தில் பல விதிமுறைகள் உருவாக்கப் பட்டன. அவை ஹெல்சிங்கி விதிகள் என அழைக்கப்படுகின்றன. அவ்விதிகளில் பிரிவு IV ,  V (Article IV &V ) aagiyaஆகியன, ஒவ்வொரு வடிநில அரசும் அதற்குரிய சமபங்கு நீரை பொது வடிநில ஆற்றிலிருந்து பெறுவதற்கான உரிமைகள் குறித்துப் பேசுகின்றன. (பார்வை: தொகுதி-4 ,  பக்: 20, 21)            ஒரு பொது நதியில் இருந்து ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய நியாயமான சமத்துவமான நீர்ப் பங்கீட்டைப் பிரித்து வழங்கச் சொல்லப்பட்டுள்ள காரணிகள் பதினொன்று ஆகும். [ (Article V -(II) ] அவைகளில் முக்கியமான சிலவற்றை காவேரி நடுவர்மன்றம் கணக்கில் கொள்ளவில்லை எனலாம். அவை வருமாறு, (i) தற்பொழுது இருந்து வரும் குறிப்பிட்ட பயன்பாடுகள் உட்பட பண்டைய பயன்பாடுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். (ii) ஒவ்வொரு அரசினுடைய பிற நீர்வள ஆதாரங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.(iii) ஒரு வடிநில அரசின் குறைந்த பட்சத் தேவைகளை, பிற வடிநில அரசை அதிக அளவு பாதிக்காமல் பூர்த்தி செய்ய வேண்டும்.       நடுவர் மன்றம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் உரிய நீர்த் தேவைகளை கண்டறிய கீழ்க்கண்ட 6 கோட்பாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டது. (பார்வை: நடுவர்மன்றத் தீர்ப்பு தொகுதி-4,  பக்கம்: 94)(i) 1924 ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத இரு போகம் நெல் மற்றும் வருடப் பயிர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.(ii) கோடைக்கால நெற்பயிர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.(iii) 1924 க்கு முன்புள்ள கோடைக்கால நெற்பயிர் புன்செய்ப் பயிராக  மற்றப்படும்.(iv) வருடாந்திரப் பாசனப் பயிரளவு (Annul Crop Intensity of Irrigation)  100% மட்டுமே அனுமதிக்கப்படும். அதாவது வருடம் ஒருபோகப் பாசனப் பயிர் மட்டுமே ஒரு பகுதிக்கு அனுமதிக்கப்படும்.(v) பயிர்க்காலம் என்பது பாசனக் காலமான ‘ஜூன் 1 முதல் ஜனவரி 31 வரை’ மட்டுமே அனுமதிக்கப்படும்.(vi) நீரேற்றுப் பாசனங்கள் (Lift Irrigation) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.(வளரும்)….                                                                    -கணியன் பாலன்(காவேரி நீர்ச் சிக்கல் என்பது பல்லாண்டு காலமாக கருநாடகா, தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையே தொடர்ந்து வரும் சிக்கலாகும். தேசியம், ஒற்றுமை என்ற சொற்கள் இந்திய இறையாண்மையின் பலம் எனப் பேசப்பட்டாலும் நேர்மையும், நீதியும் இன்றும் வரை தமிழ்நாட்டு வேளாண் மக்களுக்கு கிட்டவில்லை என்பதையே பல்லாண்டு கால நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஒன்றோடொன்று மோதிக் கொள்வதும், நடுவணரசின் நியாயம் அற்ற போக்கும், கருநாடக அரசியல்வாதிகளின் பிடிவாத குணமும் மனித நேயத்திற்கும், இயற்கை வளம் பாதுகாப்பிற்கும் சவாலாக அமைந்துள்ளன. எனவே காவேரி நீர் குறித்த செய்திகளை வரலாற்று ரீதியாகக் கோர்வையாக தர முயன்றிருக்கின்றார் கட்டுரையாளர் திரு கணியன் பாலன், ஈரோடு மாவட்டத்தில் இயற்கை வளப் பாதுகாப்புப் பணியில் முன்னின்று செயல்படும் கணியன் பாலன். தமிழ்நாடு அரசு துறையிலிருந்து ஓய்வு பெற்ற வேளாண்மை பொறியாளர், சமூக இலக்கிய ஆர்வலர், தமிழ்த் தேசிய பற்றாளர். தற்போது சங்ககால வரலாறு குறித்த ஆய்வை செய்து வருகிறார். ஈரோடு மக்கள் சிவில் உரிமைக் கழக மாவட்ட செயலாளராகவும், ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். செய்திகள் மிகுந்திருப்பதால் இக்கட்டுரை இன்னும் சில திங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். – ஆசிரியர்.) "

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி