காவேரி நதிநீர் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு – 2 - தமிழ் இலெமுரியா

15 September 2014 5:47 am

நடுவர் மன்றத் தீர்ப்பு : (பார்வை : தொகுதி-5 ,  பக்கம் : 20)        காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பில் ஒவ்வொரு மாநில அரசுக்கும் வழங்கப்பட்ட நீரின் அளவும், பாசனப்பரப்பும் கீழே அட்டவணையில் தரப்பட்டுள்ளன. அவைகளின் பரப்பு இலட்சம் ஏக்கரிலும், அவைகளின் நீர்ப் பயன்பாடுகள் டி.எம்.சியிலும் வழங்கப்பட்டுள்ளன.விவரம்       தமிழ்நாடு   பாண்டிச்சேரி   கர்நாடகா   கேரளா    மொத்தம்  பாசனப் பரப்பு         24.71            0.43             18.85          1.93          45.92நீர்ப் பயன்பாடு          419.0           7.0               270.0          30.0        726.0                            சுற்றுப்புறச் சூழ்நிலைக்கான நீர்த்தேவை     10.0                               கடலில் வீணாகும் நீரளவு                4.0                                   மொத்த  நீர்ப் பயன்பாடு             740.0                                              நடுவர் மன்றத் தீர்ப்பும் பாசனப் பரப்பும்:  நடுவர் மன்றம் 1924 ஒப்பந்தப்படியும், சர்வதேச விதிகளின் படியும், தானே வகுத்துக் கொண்ட கோட்பாடுகளின் படியும் ஆய்வு செய்து ஒவ்வொரு மாநில அரசுக்கும் உரிய பாசனப்பரப்பை மூன்று பிரிவுகளின் கீழ் முதலில் நிர்ணயம் செய்தது. பின் அப்பாசனப் பரப்புகளுக்கு உரிய நீர்த் தேவைகளையும் நிர்ணயம் செய்தது. அந்த மூன்று பிரிவுகள் வருமாறு,1. 1924க்கு முந்தைய பாசனப் பயிர்பரப்பு.2. 1924 ஒப்பந்தப்படியான பாசனப் பயிர்பரப்பு.3. தகுதி அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட பாசனப் பயிர்பரப்பு.1)1924க்கு முந்தைய பாசனப் பயிர்பரப்பு: பாரம்பரியமாக, மிக நீண்டகாலமாக பாசனம் செய்து வந்த பாசனப்பரப்புகள்  இதில் அடங்கும். இந்த முதல் பிரிவில் தமிழ்நாடு 15.19 இலட்சம் ஏக்கரும், கருநாடகம் 3.44 இலட்சம் ஏக்கரும் பாசனம் செய்து வந்ததாக்கக் காவேரி நடுவர்மன்றம் அங்கீகரித்துள்ளது. இப்பிரிவில் நமக்குக் கருத்து வேறுபாடு இல்லை.2)1924 ஒப்பந்தப்படியான பாசனப் பயிர்பரப்பு: 1924 ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இப்பாசனப் பரப்புகளை நடுவர்மன்றம் நிர்ணயம் செய்து அங்கீகாரம் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டின் பாசனப் பயிர் பரப்புகளை விரிவாக்கம் செய்ய 1924ல் உள்ள மூன்று விதிகள் வழிவகை செய்கின்றன. அந்த மூன்று விதிகளின் கீழ் தமிழ்நாட்டிற்கு 6.195 இலட்சம் ஏக்கர் பரப்பும், கருநாடகத்தின் பாசனப் பரப்புகளை விரிவாக்கம் செய்ய 1924ல் உள்ள நான்கு விதிகளின் கீழ் கருநாடகத்திற்கு 7.24 இலட்சம் ஏக்கர் பரப்பும் நடுவர் மன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.        1924 ஒப்பந்தப்படி தமிழ்நாட்டிற்கான மூன்று விதிகளில் இரண்டு விதிகளின் கீழ் மட்டுமே 6.195 இலட்சம் ஏக்கர் பரப்பு அங்கீகரிக்கப் பட்டுள்ளது. விதி எண் 10(xii)ன் கீழ், தமிழ்நாடு அரசு கேட்ட 4.937 இலட்சம் ஏக்கர் பரப்பு ஏற்றுக் கொள்ளப் படவில்லை. அதே சமயம் கருநாடகா அரசு கேட்காமலேயே அவ்விதியின் கீழ் 2.72 இலட்சம் ஏக்கரை நடுவர் மன்றம் அங்கீகரித்துள்ளது. இங்குதான் நாம் முரண்படுகிறோம். விதி எண் 10(xii)  என்பது 1924க்கு முந்தைய பாசனப் பகுதிகளில் நீரைச் சேமிப்பதற்குத்தான் பொருந்துமே ஒழிய பிந்தைய திட்டங்களுக்குப் பொருந்தாது. ஆனால் நடுவர் மன்றம் அவ்விதியைத் தவறாகப் புரிந்துகொண்டு 1924க்கு முந்தைய பாசனத் திட்டங்களில் 1972 வரை, 80 டி.எம்.சி நீர்வரை சேமித்த தமிழகத்திற்கு எதுவும் வழங்காது கருநாடகத்திற்கு 23.19 டி.எம்.சி. நீரை வழங்கியுள்ளது.  அதன் காரணமாக 1924 ஒப்பந்தப்படியான பாசனப்பரப்பில் கருநாடகத்திற்கு 7.24 இலட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை நடுவர் மன்றம் அங்கீகரித்துள்ளது. இதில் முறையற்று வழங்கிய 2.72 இலட்சம் ஏக்கர் பாசனப் பரப்பைக் குறைக்க வேண்டும். அப்பொழுது கருநாடகத்திற்கு 4.52 இலட்சம் ஏக்கர் பாசனப் பரப்பு மட்டுமே இந்தப் பிரிவில் கிடைக்கும். அதே சமயம் தமிழ்நாடு இந்தப்பிரிவில் கேட்டிருந்த 4.937 இலட்சம் ஏக்கர் பரப்பை அங்கீகரிக்காவிடினும், தகுதி அடிப்படையில் மூன்றாவது பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட 2.065 இலட்சம் ஏக்கர் பரப்பையாவது இந்த இரண்டாவது பிரிவில் அங்கீகரித்து அதனை இரண்டாவது பிரிவில் சேர்க்க வேண்டும். இந்த விதி எண் 10(xii)  இன் கீழ் தமிழ்நாடு 80 டி.எம்.சி வரை சேமித்துள்ளது. அந்த விதியின்படி அந்த 80 டி.எம்.சி நீரும் நமக்கு வழங்கப்பட வேண்டும். ஆகவே குறைந்தது இந்த 2.06 இலட்சம் ஏக்கர் பரப்புக்குத் தேவையான 29 டி.எம்.சி நீரையாவது தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டியது நடுவர் மன்றத்தின் உடனடிக் கடமையாகும். அதன் மூலம் இந்தப் பிரிவில் தமிழ்நாட்டின் பாசனப்பரப்பு 6.195 + 2.065 = 8.260 இலட்சம் ஏக்கர் என ஆகும். கருநாடகத்தின் பரப்பு முன்பு சொன்னவாறு 2.72 இலட்சம் குறைந்து 4.52 இலட்சமாக ஆகும்.தமிழ்நாட்டின் நீர் சேமிப்பு:      தமிழ்நாடு 1924க்கு முன்பிருந்தே 15.2 இலட்சம் ஏக்கர் பரப்பு பாசனம் பெற்று வந்துள்ளது என்பதை நடுவர்மன்றம் தனது தீர்ப்பில் ஏற்றுக் கொண்டுள்ளது. 1972ல் அமைக்கப்பட்ட காவேரி உண்மை அறியும் குழு (CCFFC),   1928வாக்கில் இந்தப் பழைய பாசனங்களில் பயன்படுத்தப்பட்ட நீர் உயரம்(டெல்டா) முதல் 1972 வாக்கில் பயன்படுத்தப்பட்ட நீர் உயரம்(டெல்டா) வரை ஆய்வு செய்து தரவுகளை வழங்கியுள்ளது (பார்வை: தொகுதி-5, பக்: 33)  அத்தரவுகளின்படி காவேரி டெல்டா பகுதியிலும், கீழ்க்கொள்ளிடம் அணைக்கட்டுப் பகுதியிலும் சேர்ந்து சுமார் 10.7 இலட்சம் ஏக்கரில், 1928க்கும் 1972க்கும் இடைப்பட்ட காலத்தில் சுமார் 55 டி.எம்.சி நீரை தமிழ்நாடு மிச்சப்படுத்தி உள்ளது. இவை டியூட்டியை மேம்படுத்தி, டெல்டா உயரத்தைக் குறைத்து மிச்சப்படுத்தப்பட்டதாகும். மீதி உள்ள சுமார் 4.5 இலட்சம் ஏக்கரில் குறைந்த பட்சம் 25 டி.எம்.சி நீர் மிச்சப் படுத்தப்பட்டிருக்கும். எனவே தமிழ்நாடு 1928 முதல் 1972க்குள், டியூட்டியை மேம்படுத்தி பாசன நீர் உயரத்தைக் (டெல்டா) குறைத்து, மொத்தமாக 80டி.எம்.சி பாசன நீரை மிச்சப்படுத்தி உள்ளது எனலாம்.        இந்த நீரை மட்டும் கொண்டு விரிவாக்கப்படும் பாசனப் பரப்புகள் அனைத்தும் விதி எண் 10(xii) இன் கீழ் வருகிறது. நாம் இந்த மிச்சப்படுத்தப் பட்ட பாசன நீரைக் கொண்டு 1,28,000 ஏக்கரில் நெற்பயிரும் 78,500 ஏக்கரில் புன்செய்ப் பயிரும், ஆக மொத்தம் 2,06,500 ஏக்கர் பரப்பில் பாசனம் செய்துள்ளோம். இவை அனைத்துமே தகுதி அடிப்படையில் மூன்றாம் பிரிவின் கீழ் நடுவர் மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை(தொகுதி-4, பக்: 110, 111). அவைகளுக்கு மொத்தம் தேவைப்படும் பாசன நீரின் அளவு என்பது கிட்டத்தட்ட 22+7 = 29 டி.எம்.சி. ஆகும். இவை முன்பு சொன்னவாறு மூன்றாம் பிரிவில் இருந்து, 1924 ஒப்பந்தத்தில் உள்ள விதிஎண் 10(xii) இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டு  இரண்டாம் பிரிவிற்கு மாற்றப்பட வேண்டும். விதி எண் 10(xii) பற்றிய முழு விபரம் இணைப்பு-1 இல் தரப்பட்டுள்ளது.3)தகுதி அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட பாசனப்பயிர்பரப்பு:        மூன்றாம் பிரிவில் உள்ள சிறு பாசனத் திட்டம் என்பது 1924 ஒப்பந்தத்தில் இல்லை என்பதால், தமிழ்நாடு, கருநாடகம் ஆகியவற்றின் சிறுபாசனத் திட்டங்கள் மட்டும் தகுதி அடிப்படையில் முன்பு போல் மூன்றாம் பிரிவில் ஏற்றுக் கொள்ளலாம். நடுவர் மன்றத்தால் தகுதி அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட பிற பரப்புகள் நியாயமானதாகவோ, முறைப்படியானதாகவோ இல்லை. ஆகவே மூன்றாம் பிரிவில் அங்கீகரிக்கப்பட்டப் பிற பரப்புகள் அனைத்தும் நிராகரிக்கப் படவேண்டும். அதன்பின் மூன்று பிரிவுகளையும் கணக்கிட்டால் கீழ்க்கண்டத் தரவுகள் கிடைக்கும். நடுவர் மன்றம் இவ்வாறு அங்கீகரிப்பதன் மூலமே தமிழ்நாட்டிற்கு ஓரளவு நியாயம் வழங்கியதாக ஆகும். பாசனப்பரப்புப் பிரிவு   அங்கீகரிக்கப்பட்டது   அங்கீகரிக்கப்படவேண்டியது.(இலட்சம்  ஏக்கரில்)    தமிழ்நாடு  கருநாடகம்   தமிழ்நாடு  கருநாடகம்1)1924க்கு முந்தையது    15.19       3.44         15.19       3.442)1924 ஒப்பந்தப்படி       6.20       7.24           8.26       4.523)தகுதி அடிபடையில்     3.32       8.17           1.26       1.26மொத்தம்                 24.71       18.85         24.71       9.22இதர நீர் வளங்கள்: நதி நீர் கோட்பாடுகளை வழங்கிய 1966ஆம் ஆண்டைய ஹெல்சிங்கி விதியில், ஒவ்வொரு வடிநில அரசினுடைய இதர நீர்வள ஆதாரங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பது ஒரு முக்கியக் கோட்பாடாகும். காவேரி நீரை மாநிலங்களுக்கு இடையே பிரித்து வழங்கும் போது இந்த விதியைக் கணக்கில் கொள்ள வேண்டியது மிக முக்கியம் ஆகும். தமிழ்நாட்டின் மொத்த நீர்வளம் என்பது காவேரியின் மூலம் கருநாடகம் வழங்குவதையும் சேர்த்து மொத்தம் 1500 டி.எம்.சி.க்கும் குறைவாகவே உள்ளது.  அதே சமயத்தில் கருநாடகத்தின் நீர்வளமோ 3400 டி.எம்.சி.க்கும் மேலாக உள்ளது. கருநாடகத்தின் மக்கள்தொகை தமிழ்நாட்டின் மக்கள் தொகையை விடக் குறைவு. அதனால் ஆண்டுதோறும் கிடைக்கும் தனிநபர் நீர் அளவு என்பது தமிழ்நாட்டை விட 2.5 மடங்குக்கும் அதிகமாகும். அதன் தரவுகள் வருமாறு,பொருள்                     தமிழகம்        கருநாடகம்    குறிப்புமொத்த நீர்வளம் (டி.எம்.சி)     1500               3400 மக்கள்தொகை(கோடியில்)       6.24             5.3         2001(census)    தனிநபர் நீர் அளவு(கனஅடி)   24000              64000        2.67மடங்கு எனவே கருநாடகா தனது காவேரி வடிநிலத் தேவையை பிற நீர் வள ஆதாரங்களின் மூலம் மிக எளிதாகப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஆனால் தமிழ்நாடு ஒரு பற்றாக்குறை மாநிலம் ஆகும். அது தனது குறைந்தபட்ச தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளது.  உலகக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் தமிழ்நாடு மிக மிகப் பற்றாக்குறையோடு தான் உள்ளது. உலக மக்கள் தொகை இன்று சுமார் 700கோடி. உலக நீர்வளம் சுமார் 48000 கன கி.மீ. தமிழ்நாட்டின் மக்கள் தொகையோ இன்று சுமார் 7கோடி. தமிழகத்தின் நீர்வளமோ சுமார் 43 கன கி.மீ.தான். அதாவது உலக மக்கள் தொகையில் 100இல் ஒருபங்கு உள்ள தமிழ்நாடு, உலக நீர்வளத்தில் 1100இல் ஒரு பங்குக்கும் குறைவாகவே கொண்டுள்ளது.  அதாவது சராசரி உலக மனிதனை விட 11இல் ஒரு பங்குக்கும் குறைவான நீர்வளம் கொண்டவனாக ஒரு சராசரித் தமிழன் உள்ளான். ஆகத் தமிழ்நாடு இந்திய அளவிலும், உலக  அளவிலும் ஒரு நீர்ப் பற்றாக்குறை மாநிலம் ஆகும். எனவே இவைகளைக் கணக்கில் கொண்டே காவேரி நதிநீர்ச் சிக்கல் தீர்க்கப்பட வேண்டும். - (வளரும்)- கணியன் பாலன், ஈரோடு(காவேரி நீர்ச் சிக்கல் என்பது பல்லாண்டு காலமாக கருநாடகா, தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையே தொடர்ந்து வரும் சிக்கலாகும். தேசியம், ஒற்றுமை என்ற சொற்கள் இந்திய இறையாண்மையின் பலம் எனப் பேசப்பட்டாலும் நேர்மையும், நீதியும் இன்றும் வரை தமிழ்நாட்டு வேளாண் மக்களுக்கு கிட்டவில்லை என்பதையே பல்லாண்டு கால நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஒன்றோடொன்று மோதிக் கொள்வதும், நடுவணரசின் நியாயம் அற்ற போக்கும், கருநாடக அரசியல்வாதிகளின் பிடிவாத குணமும் மனித நேயத்திற்கும், இயற்கை வளம் பாதுகாப்பிற்கும் சவாலாக அமைந்துள்ளன. எனவே காவேரி நீர் குறித்த செய்திகளை வரலாற்று ரீதியாகக் கோர்வையாக தர முயன்றிருக்கின்றார் கட்டுரையாளர் திரு கணியன் பாலன், ஈரோடு மாவட்டத்தில் இயற்கை வளப் பாதுகாப்புப் பணியில் முன்னின்று செயல்படும் கணியன் பாலன். தமிழ்நாடு அரசு துறையிலிருந்து ஓய்வு பெற்ற வேளாண்மை பொறியாளர், சமூக இலக்கிய ஆர்வலர், தமிழ்த் தேசிய பற்றாளர். தற்போது சங்ககால வரலாறு குறித்த ஆய்வை செய்து வருகிறார். ஈரோடு மக்கள் சிவில் உரிமைக் கழக மாவட்ட செயலாளராகவும், ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். செய்திகள் மிகுந்திருப்பதால் இக்கட்டுரை இன்னும் சில திங்கள் தொடர்ந்து வெளியிடப்படும். – ஆசிரியர்.)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி