குறிஞ்சித்திணை - தமிழ் இலெமுரியா

11 January 2015 4:52 pm

அகமும்  புறமும் கலந்ததே மனித வாழ்க்கை என்று பழந்தமிழர்  கருதினர். அக வாழ்க்கையைக்  கூடத்  தமிழன்  என்றும்  வெறுந்  தன்னல வாழ்க்கையாகக்  கருதவில்லை. தன்னலமாகக்  கருதியிருப்பின்  முதலில்  தான், தனது" எனும்  உளக்கோட்டங்களை வேரறுப்பதே மனித வாழ்க்கையின்  குறிக்கோள்  என்று கருதியிருப்பர். அத்தகைய வாழ்க்கையில் புறத்திற்கிடமின்று. தமிழன் சிறந்ததாகக் கருதிய அகத்திற்குமிடமின்று. பழந்தமிழர், வாழ்க்கை வாழ்வதற்கே என்று கருதினர். அதில் தனது உள்ளத்திற்கிடமுண்ண; தான்  வாழும் நிலத்திற்கும் காலத்திற்கும் இடம் உண்டு. தன்னைச்  சுற்றி வாழும்  செடி, கொடிகளுக்கும்  உயிரினங்களுக்கும்  அதில்  இடமுண்டு; அதனால்தான் அகத்திணையில் முதல், கரு, உரிப்பொருள்  என்று பாகுபடுத்திக்  காட்டினான். தான்  வாழும் நிலத்தையோ, நிகழும்  பொழுதையோ, நிற்கும்  செடியையோ, நில்லா விலங்கையோ எதையுமே தன்னுடைய அக வாழ்க்கைக்குப்  புறமாகக்  கருதவில்லை. தன்னைச்  சுற்றியுள்ள, சூழ்ந்துள்ள நிலப்  பொருளையும்  இயங்கு பொருளையும்  உள்ளத்துடன்  இணைத்த வாழ்வையே பிணைத்த வாழ்க்கை முறையையே பழந்தமிழன்  "திணை" என்று கூறினான். தமிழர்  அகமெனக்  கூறியது வெறும்  தன்னலமன்று. தன்னலத்தில்  முளைத்துத்  துணை நலமாக முகிழ்த்துப்  பிறர்  நலமாக மலர்வது. அன்புடை நெஞ்சம்  தாங்கலந்து மக்களைப்  பெற்றுச்  சுற்றம்  தழுவிப்  பிறர்  நலம்  பேணி "சிறந்தது பயிற்றலே" தமிழனது குறிக்கோள். அக வாழ்க்கையில்  முதல்  பொருள், கருப்பொருள், உரிப்பொருள், பாகுபாடு மிக நுண்ணியதாகும். முதல், கருப்பொருள்கள்  இயற்கையும்  செயற்கையுமான சூழ்நிலையைக்  குறிக்கின்றது. அச்சூழ்நிலையில்  ஊடாடும்  போது, தொடர்புறும்  போது மாறும்  உள்ளப்  பாங்கையே உரிப்பொருள்  குறிக்கின்றது. திணைகளில்  முதல்திணை குறிஞ்சி என்பர். கூடுவதே அக வாழ்க்கையில்  முதற்கட்ட மாதலால்  குறிஞ்சியே முதல்  திணையாயிற்று. வரலாற்று அடிப்படையில்  பார்க்குங்கால்  மலைகளிலும்  காடுகளிலும்  தேனும்  கிழங்கும்  பழமும்  தேடி உண்டு வாழ்ந்த வாழ்க்கையே மனிதனின்  முதல் வாழ்க்கை யாதலால்  குறிஞ்சித்  திணையே முதல்  திணையாகக்  கருதப்பட்டது. மலையும்  மலை சார்ந்த இடமும்  குறிஞ்சி என்பர். ஆயின்  இவ்விடத்திற்கு இப்பெயர்  எதனால்  வந்ததெனில்  மலையில்  வாழும்  ஒரு செடியின்  பூவினால்  வந்ததென்பர். பல செடிகள்  வாழும்  மலைக்கு ஒரு செடியின்  பெயர்  இடுவது ஏன்  என்றால்  விடை தேடித்தான்  பிடிக்க வேண்டும். அப்பொழுதுதான்  நமக்கு அறிவியல்  துணை செய்கின்றது. அறிவியல்  துணை கொண்டு ஆராயுங்கால்  பழந்தமிழரின்  நுண்மாணுழை புலமும், இயற்கை ஈடுபாட்டாராய்ச்சியும்  வெளியாகின்றது. கடல்  மட்டத்திற்கு மேல்  ஆறாயிரம்  அடிக்கு மேற்பட்டே இயற்கையில்  காணக்  கூடிய செடி குறிஞ்சிச்  செடியாகும். பிற செடிகளுக்கு அத்தகைய கட்டாய வரையறை இச்செடிக்கிருப்பது போல்  கிடையாது. ஆறாயிரம்  அடிக்கு மேற்பட்ட நிலம்  மலையும்  மலை சார்ந்த பகுதியாகத்தான்  இருக்கும். இத்தன்மையின்  அடிப்படைக்  காரணத்தாலேயே மலையும்  மலை சார்ந்த இடத்தை இச்செடியின்  பெயரால்  அழைத்தனர். இதற்கு மற்றொரு காரணமும்  உண்டு. அது இச்செடியிலுள்ள  பூவின்  தனித்  தன்மையாகும். இச்செடியின்  பூ ஒன்பது ஆண்டுக்கொரு முறை தோன்றிப்  பன்னிரண்டு ஆண்டுகள்  வரை தொடர்ந்து காணப்படுகின்றது. இயற்கையில்  இத்தகைய வியப்பிற்குரிய பூ வேறின்மையால்  மலையும்  மலை சார்ந்த இடத்தில்  காணப்படும்  இந்தப்  பூவின்  பெயராலேயே இந்த இடத்தை அழைத்தனர். செடி நூலில்  இச்செடி ஸ்ட்ரொபிலான்தஸ்  (Strobilanthes) என்ற இனத்தைச்  சார்ந்தது. தமிழ்நாட்டிலும்  ஈழத்திலும்  மத்திய இந்தியாவிலும்  காணப்படுகின்றது. நீலகிரி,  பழனி, கொடைக்கானல் மலைகளில்  பல ஆண்டுகளாக இச்செடி பூக்கும்  காலத்தைக்  கண்டு எழுதி வைத்திருக்கின்றனர். இவை மலைச்  சாரல்களில்  பூக்குங்கால்  பல்லாயிரக்கணக்கான பூக்கள்  ஒரே கூட்டமாகத்  தென்படும். ஒன்பதாவது ஆண்டிலிருந்து பன்னிரண்டாவது ஆண்டு வரை மலைச்  சாரல்களில்  கூட்டம்  கூடமாக இச்செடிப்  புதர்கள்  பூத்துக்  கிடக்கும். பன்னிரண்டாம்  ஆண்டில்  செடிகள்  இறந்து விடுகின்றன. இப்படிக்  கூட்டம்  கூட்டமாகப்  பார்த்ததால்  தான்  பழந்தமிழ்ப்  புலவர்  "கருங்கோற்  குறிஞ்சி யடுக்கம்" என்று கூறினார். இந்தப்  பூவில்  நிறையத்  தேனுண்டு. தேன்மிக உடையதாக அறிஞர்கள்  கூறும்  பூக்களில்  இதுவுமொன்று. பல்லாயிரக்  கணக்கான பூக்கள்  ஒரு குறிப்பிட்ட காலத்தில்  தோன்றுவதால்  தேன்  மலிந்து போய்  விடுகின்றது. அதனால்  தேனீக்கள்  மலைச்  சாரல்களில்  பெரிய பெரிய தேன்  கூடுகளை நிறையக்  கட்டுகின்றன. இச்செடி பூக்கத்  துவங்கியதும்  தேன்  கூடுகள்  மலைச்  சாரல்களில்  மலிந்து விடுகின்றன. இதைக்  கண்டே சங்கப்  புலவரொருவர், கருங்கோற்  குறிஞ்சிப்  பூக்கொண்டு பெருந்தே னிழைக்கும்  நாடமொடு நட்பேஎன்று பாடினார். குறிஞ்சிப்  பூவின்  தேனை மிக இனியதெனக்  கருதினார். "கருங்காற்  குறிஞ்சி மதனில வான்பூ நாறு கொள்  பிரச மூறுநா டற்கு"என்ற நற்றிணைப்  பாடலில்  குறிஞ்சித் தேனின்  இனிமை கூறப்பட்டிருக்கின்றது. குறிஞ்சிப்  பூவின்  தேனை மிக உயரியதாகக்  கருதியதற்கு இன்னொரு காரணமும்  உண்டு. பொதுவாகத்  தேன்  கூடுகளில்  பலவகைப்  பூக்களின்  தேன்  காணப்படும். ஆனால்  குறிஞ்சிப்  பூக்களின்  தேனால்  இழைக்கப்படும்  கூட்டில்  பிற பூக்களின்  தேன்  கலப்பதில்லை. ஏனெனில்  குறிஞ்சிச்  செடி பூக்க ஆரம்பித்தால்  தேனீக்கள்  குறிஞ்சித்  தேனையே கூடுகளில்  சேர்க்கின்றன. இத்தகைய தேனை "தனிப்  பூத்தேன்" (Unifloral Honey) என்று அறிஞர்கள்  அழைக்கின்றனர். இப்பொழுது சவ்வாது மலையில்  சந்தனப்  பூத்தேன்  சேர்க்கச்  சென்னை அரசியலார்  ஒரு தேன்  ஆராய்ச்சிப்  பண்ணையை நிறுவியிருக்கின்றனர். இந்தத்  தனிப்  பூத்தேன்  மணத்திற்கும்  இனிப்புக்கும்  பெயர்  பெற்றது. பூக்குங்  காலத்துக்  குறிஞ்சித்தேன்  நிறைந்து விடுகின்றது. இனிமை மிகுந்தது. நறுமணம்  வாய்ந்தது. பல்லாண்டுக் கொருமுறை அரிதாகக்  கிடைக்கின்றது. இத்தகைய அரிய, பெரிய, இனிமையான, மணமான தேனைத்  தருவதாலும்  மலையும்  மலை சார்ந்த இடத்தையும்  குறிஞ்சி என்ற பெயரால்  அழைத்தனரென்று தெரிகின்றது. குறிஞ்சித்  தேனின்  அருமை பெருமைகளைத்  தமிழர்  மட்டுமன்றிப்  பழங்குடி மக்களும்  அறிந்திருக்கின்றனரென்று தெரிய வருகின்றது. டாக்டர்  வெரியர்  எல்வின்  (Dr. Verrier Elwin) என்ற அறிஞர்  பழங்குடி மக்களைப்  பற்றிப்  பல ஆராய்ச்சிகளை வெளியிட்டிருக்கின்றார். சூடுநாகபுரியில்  வாழும்  பைகர்கள் (Baiga) என்ற இனத்தாரைப்  பற்றியும்  எழுதியுள்ளார். அவர்  சொல்வதாவது: "குறிஞ்சிப்  பூக்கள்  கூட்டம்  கூட்டமாகப் பூக்கும். ஒன்பதாண்டுக்  கொருமுறை பூக்கும். அப்பொழுது பைகர்கள்  தேனீ விழாக்  கொண்டாடுவர். விழா முடிவு நாளில்  மலைத்தேனைச்  சடங்குகளுடன்  நடனத்துடன்  உண்பர்." என்று அழைப்பதாகக்  கூறுகிறார். நடு இந்தியாவில்  மக்கள்  குறிஞ்சித்  தேனைப்  போற்றுவதைக்  காணுங்கால்  அவர்களுக்கும்  பழந்தமிழருக்கும்  மிகப்  பழங்காலத்தில்  தொடர்  தோடர்கள்  தங்கள்  குழந்தைகளின்  வயதைக் குறிஞ்சிச்  செடி பூப்பதைக்  கொண்டே கணக்கிட்டனராம். ஒரு வேளை மிகப்  பழந்தமிழரும்  பன்னீராட்டை அகவையினை "இரு குறிஞ்சி அகவையினன்" என்று கூறினரோ என்று எண்ணவும்  இடமுண்டு. பழந்தமிழர்  வேங்கை மரம்  பூப்பதைக்  கண்டு ஆண்டுகளைக்  கணக்கிட்டனர்  என்பது தெரிந்த செய்தியாகும். குறிஞ்சிச்  செடி எப்படிப்  பழங்குடி மக்களையும்  பழந் தமிழரையும்  கவர்ந்ததோ அது போலவே நீலகிரியிலும்  கொடைக்கானலிலும்  வாழ்ந்த வெளிநாட்டாரின்  கவனத்தையும்  ஈர்த்திருக்கின்றது. இரண்டு நூற்றாண்டுகளாக இதைப்  பற்றிய நாட்குறிப்பும்  (Diaries) எழுதியுள்ளனர். இச்செடியின்  பூவைப்  படம்  வரைந்தும்  பாடம்  செய்வதும்  வைத்திருக்கின்றனர். குறிஞ்சிச்  செடியில்  பல இனங்கள்  உள்ளன. அதில்  ஓர் இனம் ஸ்ட்ரோபிலன்தீஸ் வாலிசி (Strobilanthes Wallichi) பன்னிரண்டு ஆண்டுகளுக்கொரு முறை மலருமாம். அது விளையும்  போது பிற செடிகளை வளரவிடாது அழுத்தி விடுமாம். அதனால்  மலைச்  சாரலில்  குறிஞ்சிச்  செடியைத்  தவிரப்  பிற செடியைக்  காண முடியாதாம். இந்தச் செடி வளர்வதும்  தனிப்பட்ட முறையாகும். ஆண்டு தோறும்  இளவேனிலில்  குருத்துத்  தோன்றும். பல கணுக்கள்  விட்டு வளரும்  இக்குருத்து, ஆண்டிறுதியில்  கீழ்க்கணுவைத்  தவிர்த்து முழுவதும்  அழிந்து விடுமாம். இம்முறையில்  ஒவ்வொரு ஆண்டும்  கீழ்க்கணுவை விட்டுப்  பிற கணுக்கள்  (Internodes) அழிந்து போவதால்  இச்செடியின்  வயதைப்  பழைய கணுக்களின்  எண்ணிக்கையைக்  கொண்டு சொல்லி விடலாம். ஒரு வேளை பழங்குடி மக்கள்  இம்முறையாக எண்ணித்தான்  வயதைக்  கணக்கிட்டிருப்பாரோ என்று எண்ண இடமிருக்கின்றது. குறிஞ்சிச்  செடியில்  21 இனங்கள்  ஈழத்தில் காணப்படுகின்றன. பர்மாவிலும்  அசாமிலும்  இவை காணப்படுகின்றன. ஆனால்  தமிழ்நாட்டில்  மட்டும்தான்  அவை சிறப்புடையதாகக்  காணப்படுகின்றன என்று செடி நூலறிஞர்கள்  கருதுகின்றனர். ஏனெனில்  வேறெங்கும்  அவை செழிப்பாகவும்  பெரியதாகவும்  தமிழ்நாட்டில்  வளர்வது போல்  இருப்பதில்லை. குறிஞ்சி இனங்களில்  பூக்களின்  நிறம்  மாறுபடுகின்றது. மிக அழகிய பூக்களையுடைய இனங்கள்  பல ஆண்டுகொருமுறையே பூக்கின்றன என்று அறிஞர்கள்  கூறுகின்றனர். அறிவியல்  அறிஞர்கள்  இச்செடியை "மலைவாழ்  புதர்ச்  செடியென" வருணிக்கின்றனர். குறிஞ்சிப்  பூவின்  நிறங்களில்  நீல நிறத்தையே தமிழர்  போற்றினர். நீலக்  குறிஞ்சிப்  பூவையே நறுங்குறிஞ்சியாகக்  கருதினர். அசாமில்  வாழும்  ஒரு வகை நீலநிறக்  குறிஞ்சிப்  பூக்களை நீலச்சாய மிறக்குவதற்காக அசாம்  மக்கள்  பயன்படுத்துகின்றனர். நீலகிரி என்ற பெயரே, நீலக்  குறிஞ்சி வளர்வதால்  வந்த பெயரோ என்று ஐயமுற வேண்டியிருக்கின்றது. ஏனெனில்  ஒரு சில இனங்கள்  நீலகிரியில்  மட்டும்  காணப்படுவதாகச்  செடி நூலறிஞர்  கூறுகின்றனர். நீலகிரியின்  கிழக்குச்  சாரலில்  இரு இனங்கள் (Strobilanthes Amabillis, Strobilanthes Kunthianus) வாழ்வதாகத்  தெரிகின்றது.  குறிஞ்சிப்  பூவின்  பல நிறங்களைத்  தமிழர்  நன்றாக அறிந்திருந்தனரென்று கூறுவது மிகையாகாது. "கருங்கோற்  குறிஞ்சிப்பூ" என பல விடயங்களில்  இப்பூ வருணிக்கப்படுகின்றது. குறிஞ்சி அரும்பாயிருக்கும்  போது வெண்மையாகக்  காணப்படும். நற்றிணையும்  "கருங்கோற்  குறிஞ்சி மதனில வான்பூ" என்று கூறுகின்றது. குறிஞ்சித்  திணையில்  குறிஞ்சிப்பண்  தோன்றியது. குறிஞ்சிப்  பண்ணில் தோன்றும்  இராகங்களைக்  குறிஞ்சி இனப்  பூக்களின்  நிறத்தால்  பெயரிட்டழைத்திருக்கின்றனர். மேகராகக்  குறிஞ்சி என்பது ஓர் இராகம். இது மேக நிறம் (Grey) போன்று உள்ள குறிஞ்சிப்  பூவின் நிறத்தால்  பெயர்  பெற்றது. வியாழக்  குறிஞ்சி என்ற இராகம்  சிவந்த குறிஞ்சிப்  பூவால்  பெயர்  பெற்றது. பிற்காலப்  பாடலொன்று குறிஞ்சிப்  பூவைக்  குங்குமத்திற்கு ஒப்பிடுகின்றது. பொன்வண்ணக்  குறிஞ்சி என்ற இராகம்  மஞ்சள்  நிறக்  குறிஞ்சிப்  பூவைக்  குறித்திருக்கலாம். செடி நூலிலும்  குறிஞ்சிப்  பூக்கள்  பல நிறங்களுடையன வென்று கூறப்பட்டிருக்கின்றது. பண்களுடனும் இராகங்களுடனும் நிறங்களை இணைத்துக்  கூறுவது ஒரு நுண்ணிய அனுபவ உணர்ச்சியால்  எழுந்ததாகும். நீலாம்புரி என்ற இராகத்தின்  பெயரில்  நீலம்  பயில்கின்றது. இம்முறையில்  இயற்கை நிறங்களை இசையுடன்  இணைத்துப்  பார்க்கும்  கொள்கை (Colour-Music) மேலை நாட்டில் தோன்றியிருக்கின்றது. மேல்நாட்டு இசையில்  பாச் பித்தோவன், மோசார்ட் போன்ற பெரிய அறிஞர்களின்  இசைப் பாடல்களைச்  சில நிறங்களுடன்  இணைத்துக் கூறுகின்றனர். இந்த நுண்ணிய உள்ளுணர்வு பழந்  தமிழரின்  இசையிலும்  இருந்திருக்கின்றதென அறியும்  போது வியப்படையாமல்  இருக்க முடியாது.  குறிஞ்சியின் கருப்பொருள் எவ்வளவு சிறப்புடையதோ அது போன்றே அதன் உரிப்பொருளும்  சிறப்புடையது. காதலர் கூடுவது குறிஞ்சியின்  உரிப்பொருள். மலைகளில்  பெருங்  காடுகள்  இருப்பதால்  காதலர்  தனிமையில் காணவும்  கூடவும்  மலைச்  சூழல்  வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. முனிவரையும்  மயங்க வைக்கும் சூழல்  மலையும்  மலை சார்ந்த இடத்தில்  உளது. குறிஞ்சிப்  பாட்டில்  கபிலர்  அழகிய செடி, கொடிகள் அத்தனையும்  காதலர் கூடுமிடத்தில்  இருப்பதாகக் கூறியுள்ளார்.  தமிழ் நூற்படி நள்ளிரவே காதலர் கூட்டத்திற் கேற்றது. ஏனெனில் நள்ளிரவில்தான் தடங்கல்கள் குறையும். நள்ளிரவில் தலைவன் வரும் காட்சியைப் பல சங்கப் பாடல்கள் படம் பிடித்தாற்போல் காட்டுகின்றன. நடு இரவில் காதலன் வருவான். அது பார்த்து வல்வாய் நாய்கள் குரைக்கும். கெடுமதி முகில் விட்டுத் திடுமென வெளிவரும். தண்கதிர் பாய்ச்சும் கூகை குழறும். ஆந்தை அலறும். முட்டாள் சேவலொன்று விடிந்ததோ எனக் கூவும். இயற்கையின் இரவுத் திருவிளையாடல்களெல்லாம் காதலனுக்குத் தாங்க முடியாத தடங்கல்கள். இடைஞ்சல்கள் எதிர்பாராமல் "பல்முட்டுகள்". இரவு முழுவதும் கண் விழித்துத் திறந்த வெளியில் பரந்த உலகில் நடக்கும். இந்நிகழ்ச்சிகளையெல்லாம் கூர்ந்து கவனித்த ஆங்கில அறிஞர் ஆர்.எல். ஸ்டீவென்சன் ஒரு நூலில் இரவில் நிகழும் செய்திகளையெல்லாம் வருணித்திருக்கின்றார். நள்ளிரவில் நாய்கள் குரைப்பதைக் கூறியுள்ளார். சேவல் கூவுவதைச் சொல்லியுள்ளார். ஆங்கில நாட்டில் ஓர் ஊரில் இரவில் நடக்கும் செய்திகளை வர்ணித்துள்ள ஒரு நாவலில் தமிழ்நாட்டில் நடப்பதே போல் நாய் குரைக்கின்றது. கோழி கூவுகின்றது. கூகை குழறுகின்றது. இரவில் இயற்கை, உலகம் முழுவதும் ஒன்றேபோல் இருக்கும் போல் தோன்றுகின்றது. மோரிஸ் டெகரென் (Mourice Deguerin) என்ற பிரெஞ்சு ஆசிரியர் இயற்கையைப் பற்றி எழுதுவதில் வல்லுநர். அவர் பிரிட்டனியில் ஓர் ஊரில் ஊர்  உறங்கியும் நாய்கள் உறங்காது. நள்ளிரவில் குரைப்பதைக் குறிப்பாகக் கூறியுள்ளார். 122 ஆம் அகப்பாட்டு நாய் குரைப்பதையும் பிற தடங்கல்களையும் மிக அழகாகக் கூறும். இத்தடங்கல்களில் நாய் குரைப்பதை மட்டும் பல நாட்டுக் கவிகளும் அறிஞர்களும் கூறிப் போயிருக்கின்றனர். ஸ்டீவென்சன், மாரிஸ்டெ கெரென், அலெக்சாண்டர் குப்ரின் (Alexander Kuprin) என்ற உருசிய நாவலாசிரியர் ஆகியோர் நாய் குரைக்கும் நிகழ்ச்சியைக் குறிப்பாகக் கூறியுள்ளனர். "மைக்கால் மலை"களில் (Maikal Hills) வாழும் பழங்குடி மக்களின் காதல் பாட்டில் நாய் குரைப்பது கூறப்படுகின்றது."நள்ளிரவில் நாய்கள் குரைக்கின்றனவிண்மீன்கள் வானிடம் வந்துவிட்டனஇலை நீண்டவை பசுமூங்கில்கள்அவையூடே என்கள்வன் வருகின்றான்நள்ளிரவில் நாய்கள் குரைக்கின்றன" இந்த எளிய பழங்குடி மக்கள் பாடலில் நாய் குரைப்பதே முதலும் முத்தாய்ப்புமாக வருவது எண்ணி மகிழத்தக்கது. இவை போன்ற எளிய பாக்களாகத்தான் சங்கப் பாக்களும் பல நூற்றாண்டுக்கு முன் தோன்றி இருக்க வேண்டும். "யாருமில்லைத் தானே கள்வன்" என்றே குறுந்தொகை காதலி காதலனைக் "கள்வன்" என்றழைக்கின்றாள். அலெக்சாண்டர் குப்ரின் என்ற நாவலாசிரியர் எழுதிய ஒரு கதையில் ஒரு பல்கலைக் கழக மாணவன் தற்கொலை செய்து கொள்வதை வருணிக்கின்றார். துப்பாக்கியை மார்பில் வைத்துச் "சாகலாமா சாகக் கூடா தா" என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது இடையிடையே அடிக்கடி நாய்கள் குரைப்பதைக் கேட்கின்றான். அது தவிர வேறெதுவும் அவன் சிந்தனையைத் தடை செய்வதில்லை. "நாய்கள் குரைக்கின்றன" எனப் பல தடவை தனக்குள் கூறிக் கொள்கின்றான். கடைசியில் சுட்டுச் சாகின்றான். கவிகள், அறிஞர்கள், பழங்குடி மக்கள் முதலியோருக்கு மட்டுமன்றிச் சாகத் துணிந்தவனுக்கும் நாய் நள்ளிரவில் குரைப்பது ஒரு தனிக் கவர்ச்சியை உண்டு பண்ணியிருக்கின்றது. நாய்கள் நள்ளிரவில் குரைப்பது எளிய நிகழ்ச்சி, இயற்கை செய்தி; உலக நிகழ்ச்சி; ஆனால்  பல கவிஞரைக் கவர்ந்த நிகழ்ச்சி. இதையே சங்கப் பாடல்களும் பிற பிற்காலப் பாடல்களும் பார்க்கக் கூறக் காணகின்றோம். இதிலிருந்து பழந்தமிழருடைய இயற்கை ஈடுபாடும், நுண்ணிய உணர்வும் தெள்ளென விளங்குகிறது. நாய் குரைப்பது கூட அவர்களுக்கு அகத்திணையில் ஒரு பொருளாகத் தோன்றிற்று. தமிழரது அகத்திணை வாழ்க்கையில் எதுவும் விலக்கு அன்று. இயற்கையொடு உள்ளுணர்வை இணைத்துப் பார்க்கும் முறை அறிவியல் வளர்ந்த பின் தோன்றிய தொன்று; மிகபிற் காலத்தது. ஆனால் சங்க காலத் தமிழர் இயற்கை நிகழ்ச்சிகள், செய்திகள் எல்லாவற்றையும் நுண்ணிய உள்ளுணர்வோடு இணைத்துப் பார்த்திருக்கின்றனர். நிறத்திற்கும் இசைக்கும் ஒப்புமை காணும் அளவு நுண்ணிய மனவுணர்ச்சி உடையவராயிருந்தனர். நிறத்தையும் ஒழுக்கத்தையும் இணைத்துப் பார்க்கும் நுண்ணுணர்வும் இருந்தது. கற்பிற்குச் சின்னமாக மேல்நாட்டில் வெண்மையான "லில்லி" (Lily) என்ற பூவை இலக்கியத்தில் கூறுகின்றனர்; ஓவியங்களில் வரைகின்றனர். சங்ககாலப் புலவர்கள் வெள்ளை முல்லையை கற்புக்கு அறிகுறியாக அக்காலத்திலேயே கூறினர். பல்லாண்டுகளுக்கொரு முறை பிறந்து இறந்து, பிறந்து இறந்து வாழும் குறிஞ்சிப் பூவின் தேன் சாரலில் சேர்ந்து பெருந்தேனுவது போலப் பிறந்து இறந்து வாழும் எல்லாப் பிறப்பிலும் நாடனொடு நட்புக் கூட வேண்டும் என்று கூறக் கூடிய நுண்ணிய உள்ளுணர்வு பழந்தமிழிலக்கியத்தில்தான் காண முடியும். காதலர் கூட்டத்திற்குக் குறிஞ்சிநிலம், கூதிர்க் காலம், நள்ளிரவு என்று பொருத்தம் கூறும் உளநூலறிவு சங்க இலக்கியத்தில்தான் அக்காலத்தில் காணமுடியும். அகத்திணையில் நாம் காண்பது சிறந்த ஒழுக்கம், உயரிய குறிக்கோள், நுண்ணிய உள்ளுணர்வு, ஆழ்ந்த ஆராய்ச்சி, பரந்த உலகியலறிவு, அஃகி அகன்ற இயற்கையறிவு. உலகம் அடங்கலும் அகத்திணையில் அடக்கிப் பார்த்த பழந்தமிழரின் அறிவைப் போற்றாதிருக்க முடியாது.- பி.எல்.சாமி"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி