தாய்மொழிவழிக் கல்வியின் தனிச்சிறப்புகள் - தமிழ் இலெமுரியா

16 October 2014 7:51 am

ஒரு மனிதன் சிந்திப்பது, அன்றாட வாழ்வில் திட்டமிட்டுச் செயல்படுவது எல்லாம் தன் தாய்மொழி மூலம்தான். அவனது இயல்பு வாழ்க்கைக்கு உறுதுணையாய் விளங்குவது அவனுடைய தாய்மொழியே. யுனெசுகோ போன்ற உலகளாவிய நிறுவனங்கள் தாய்மொழி மூலம் கற்பதையே பரிந்துரைக்கின்றன. அண்ணல் காந்தியடிகளும் தாய்மொழி மூலம்தான் கற்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். தாய்மொழி மூலம் கல்வி கற்கும் பொழுதுதான் பாடங்களைச் சரியாகப் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். தானாகச் சிந்திக்கவும் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கவும் வாய்ப்புகள் ஏற்படும். விடுதலை பெற்ற பிறகு நமது அண்டை நாடுகள் எல்லாம் உயர்நிலைக் கல்வி வரை அந்தந்த நாட்டு மொழிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதிலேயே கவனம் செலுத்தின. மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளெல்லாம் உயர்கல்வி வரை பயிற்று மொழியாக அந்தந்த நாட்டு மொழிகளையே பயன்படுத்தி வருகின்றன. வளர்ச்சி பெற்றுள்ள சீனா, சப்பான், ஃபிரான்சு போன்ற நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் மொழிகளே பயிற்று மொழிகளாகவும் ஆட்சி மொழிகளாகவும் உள்ளன. ஒரு நாட்டின் பெருமை, அந்நாட்டு இளைய தலைமுறையினர் சிறந்த அறிவியல் அறிஞர்களாக, படைப்பாளிகளாக வளர்ந்து நாட்டின் பெருமையை உலகில் முன்னிலைப் படுத்துவதேயாகும். ஒரு குழந்தையின் அறிவாக்கத்திற்கு அது தன் தாயின் வாயிலாகப் பெறுகின்ற தாய்மொழியே அடித்தளமாகிறது. அதன் பிறகு தந்தை, சுற்றங்கள் வாயிலாக தன் தாய்மொழியிலேயே அறிவாக்கம் தொடர்கிறது. தாய்மொழிக் கல்வியே படைப்பு உவகையைத் தரவல்லது. புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளிப்பது. இதற்கு ஏராளமான உதாரணங்களைக் கூற முடியும். புவியின் சுற்றளவைக் கணக்கிட்டுச் சொன்னவர், அரிசுடாட்டில் என்ற கிரேக்கர். சூரிய மையக் கொள்கையை வகுத்துரைத்த கோபர்நிகஸ், ரேடியம் கண்டுபிடுத்த மார்க்கோனி, பரிணாமக் கொள்கையைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல் ஸ்காட்லாந்துக்காரர். ஏ.கே 47 துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர் ஒரு உருசியர். டீசல் எஞ்சினைக் கண்டுபிடித்த குடலாப் டீசல், உளவியலின் தந்தை சிக்மன்ட் பிராய்ட், மின்காந்த அலைகளைக் கண்டுபிடித்த ஹெர்ட்ஸ், தொலைக்காட்சிப் பெட்டிக்கு அடிப்படையான கேதோடு கதிர்க்குழாயைக் கண்டுபிடித்த பிரௌன், ரேடார் கருவியைக் கண்டுபிடித்த ஹெல்ஸ்மெயர், ஒவ்வொரு கோளும் சூரியனை நீள்வட்டப் பாதையிலேயே சுற்றி வருகிறது என்று சொன்ன கெப்ளர், சார்பியல் தத்துவத்தை உருவாக்கிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், மார்க்சியத்தைப் படைத்த காரல் மார்க்ஸ் போன்றவர்கள் அனைவரும் ஜெர்மனியர்கள். இந்தப் புதியன கண்டுபிடிப்பாளர்களும் படைப்பாளர்களும் தத்தம் தாய்மொழி வழிக்கல்வி பயின்றவர்களே என்பது குறிப்பிடத் தக்கது. தாய்மொழியைத் தவிர்த்து வேறு அன்னிய மொழியில் இவர்கள் கல்வி கற்பிக்கப்பட்டிருந்தால் இவர்கள் சாதனையாளர்களாக ஆகியிருக்க மாட்டார்கள். வெறுமனே மனனம் (மனப்பாடம்) செய்யும் செயற்கை எந்திரங்களாகவே இருந்துவிட்டுப் போயிருப்பார்கள். செயற்கை எந்திரங்களாகப் பள்ளிக் குழந்தைகளை ஆக்குகின்ற கல்விமுறை உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் ஊக்குவிக்கப்படுகிறது. ஆம், இங்கு மட்டும்தான் ஆங்கில வழிக் கல்வி தலை தூக்கி நிற்கிறது. பொது மக்களிடையிலும் ஆங்கில மாயை வளர்ந்துள்ளது. தம் குழந்தைகள் ஆங்கிலத்தில் சில சொற்களைப் பேசிவிட்டால் பெருமைப் படுகிறார்கள். ஆங்கிலம் கற்றால் அறிவுலகத்தில் புகழலாம்; மேலை நாடுகளில் வேலை கிடைத்துப் பொருளீட்டலாம் என்று நம்புகிறார்கள். இது மூட நம்பிக்கை என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க முயற்சிப்பார் இலர். இன்று மேலை நாடுகளில் பணியாற்றுகின்ற 40 அகவைக்கு மேற்பட்ட தமிழர்கள் பள்ளி இறுதி வரை தமிழ் வழியில் கல்வி கற்றவர்கள் என்பதே மெய்மை நிலை. தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியே கற்பிக்கப்படுகிறது. பல பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகக் கூடக் கற்பிப்பதில்லை. தற்போது அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலம் வழிக் கல்வியை ஒன்றாம் வகுப்பிலிருந்தே தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 3 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி தொடங்கப்பட்டு அதில் 25 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். உலகில் எந்த மொழிக்கும் இல்லாத புறக்கணிப்பு, தடைகள் தமிழுக்கு – உயர்தனிச் செம்மொழியாம் தமிழுக்குத் தமிழ்நாடு மாநில அரசால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பது வேதனைக்குரியது. ஆங்கில வழிக் கல்வியினை முன்னிறுத்திக் கொள்ளையடிக்கும் கல்வி வணிகர்களுக்குத் தரகு வேலை செய்வதுதான் தமிழ்நாடு அரசின் முதன்மையானப் போக்காக உள்ளது. அரசின் இந்த நிலைப்பாடு சரியானதுதான் என்று நிறுவுவதற்கு அரசு சொல்லும் காரணங்கள் எதுவும் ஏற்புடையன அல்ல. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுமாற்போலவே உள்ளன. திரு.இராமசாமி நினைவுப் (எஸ்.ஆர்.எம்) பல்கலைக் கழகத் துணைவேந்தர், முனைவர் மு.பொன்ன வைகோ எழுதுகிறார். இலிபியாவில் அந்நாட்டுத் தலைவர், அரபு மொழியில்தான் மருத்துவ தொழிலியல் கல்வி வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கூறி வந்தார். இலிபியக் கல்வியாளர்களும் நம் போன்றே அரபு மொழியில் கலைச் சொற்கள் இல்லை, புத்தகங்கள் இல்லை, கற்பிக்க ஆசிரியர் இல்லை என்று நொண்டிச் சாக்குகளைக் கூறி வந்தனர். அவர் ஓர் இலிபிய ஆசிரியரை அழைத்து மின் விசிறியைக் காட்டி இது எப்படிச் செயல்படுகிறது என்பதை அரபு மொழியில் மாணவர்களுக்கு விளக்கிக் கூற முடியுமா? எனக் கேட்டார். அதற்கு அந்த ஆசிரியர், முடியும்; ஆனால் அதில் பிளேட், மோட்டார், காயில், ஸ்ட்ராட்டர், ரெகுலேட்டர் போன்ற ஆங்கிலச் சொற்களுக்கு அரபு மொழியில் சொற்கள் இல்லையே எனக் கூறினார். உடனே அத்தலைவர், தத்துவத்தை அரபு மொழியில் விளக்குங்கள். வேண்டுமானால் ஆங்கிலச் சொற்களை அப்படியே முதலில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஓரிரு பருவங்களில் நீங்களே அரபு மொழியில் புத்தகங்கள் எழுதி விடுவீர்கள் என்று கூறினார். அவர் இலிபிய நாட்டில் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற எல்லாத் துறைகளிலும் கல்வி அரபு மொழி வழியில்தான் வழங்க வேண்டும் என முடிவு செய்து, பிற நாடுகளிலிருந்து இலிபியா வந்து ஆங்கில மொழி வழிக் கற்பிப்போருக்கு அரபு மொழி வழிக் கற்பித்தாலொழிய ஊதியம் இல்லை எனச் சட்டம் செய்து, 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தார். அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த என்னைப் போன்ற ஆங்கில வழிக் கல்வி ஆசிரியர்களெல்லாம் தத்தம் நாடுகளுக்குத் திரும்பினோம். எகிப்து நாட்டிலிருந்து ஏராளமான அரபு மொழி ஆசிரியர்கள் இலிபியா அழைத்து வரப்பட்டார்கள். மருத்துவம் மற்றும் தொழிலியல் கல்வி அனைத்தும் அரபு மொழியில் 1989 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தேவை எழுமாயின் தீர்வு தானே பிறக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. "இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டு சூலை மாதம் பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தரானேன். பல ஆண்டுகளாகத் தமிழக மண்ணில் தமிழ் மொழிக் கல்வி, தமிழ் வழிக் கல்வி ஆகியவற்றிற்குப் பல்கலைக் கழகங்களும் பிற கல்விக் கூடங்களும் ஆர்வம் காட்டாமல் நிலவிய நிலை என்னை வெகுவாகத் தாக்கியிருந்தது. தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக, தனித்தமிழ் பேச்சு மொழியாக, கல்வி மொழியாக, வழிபாட்டு மொழியாக இல்லாமல் வழக்கில் தமிழ் தமிங்கில மொழியாக மாறிவரும் நிலை மிகுந்த துன்பத்தைத் தந்தது. இந்நிலை மாற இளைய குமுகாயம் மாற வேண்டும். இளைய குமுகாயத்தை கல்விக் கூடங்களால்தான் மாற்ற இயலும். கல்விக் கூடங்களையும் இளைய குமுகாயத்தையும் துணைவேந்தர்கள் நினைத்தால் மாற்ற முடியும் என்ற ஆழ்ந்த துணிவினைப் பெற்றேன். அதன் விளைவாக பல்கலைக் கழகத்தில் பல மாற்றங்களைக் கொணர்ந்தேன். தமிழைப் பல்கலைக் கழக ஆட்சி மொழியாக்கினேன். பேச்சு மொழி, கல்வி மொழியைத் தமிழாக்கினேன். தமிழாக்க அருட்சுனைஞர் பட்டயப் படிப்பைத் தொடங்கினேன். பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளும் தமிழ் வழியில் செயல்படும் கட்டாயத்திற்கு உள்ளானார்கள். பட்டப் படிப்பில் பயிலும் மாணவர்கள் எந்த நாட்டினராயினும் கட்டாயம் தமிழ் மொழியைப் பயில வேண்டும் எனப் பாடத் திட்டத்தை மாற்றியமைத்தேன். அதே நிலையைத் தமிழ்நாட்டில் உள்ள அத்தனைப் பல்கலைக் கழகங்களும் பின்பற்ற வேண்டிய நிலையை உருவாக்கினேன். பல்கலைக் கழகம் வழங்கும் பாடத் திட்டங்கள் தமிழ் வழியிலும் ஆங்கில வழியிலும் நடைபெற வழிவகுத்தேன். எல்லா நிகழ்ச்சிகளும் தமிழ்வழி நடைபெறத் தொடங்கின. முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரைகள் தமிழிலும் வழங்க வழி செய்தேன். பல்கலைக் கழக இணைய தளம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வடிவமைக்கப்படுவதற்கு வழி செய்தேன். தமிழில் ஆய்வுப் பணிகள் வளர வித்திட்டேன். துணை வேந்தராக எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகம் உலகின் முன்னிலைப் பல்கலைக் கழகங்களில் ஒன்றாக வளர ஒல்லும் வகையான் பணியாற்றி வருகின்றேன். தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு பல்கலைக் கழகமும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் அதன் மேம்பாட்டிற்காகவும் செயல்பட வேண்டும் என்பதில் நம்பிக்கையுள்ளவன் நான். பிற பல்கலைக் கழகங்களுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராயம் என்ற அமைப்பை உருவாக்கினேன். நடுவணரசின் "சாகித்திய அகாதமி" இந்திய மொழிகளுக்கு எத்தகைய பணிகளைச் செய்கிறதோ அதே போன்று, தமிழ் மொழிக்கு ஆக்கப் பணிகளைத் திட்டமிட்டுச் செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டு தமிழ்ப் பேராயம் (Thamizh Academy) செயல்படத் தொடங்கியது. தமிழின் மரபுச் செல்வங்களை இளைய தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லுதல், புதிய தமிழ்ப் படைப்புகளையும், தமிழ்ப்பணி ஆற்றி வரலாறு படைத்துள்ள தமிழ் அறிஞர்களையும் பாராட்டி உருபா 22 இலக்கம் பெறுமான 11 விருதுகளை வழங்குதல், தமிழ் நூல்களைப் பிற மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடுதல், தமிழ்ச் சமயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் பட்டயம், சான்றிதழ், படிப்புகளை வழங்குதல், அயலகத் தமிழ் ஆசிரியப் பட்டயப் படிப்பு வழங்குதல், கருத்தரங்கு, பயிலரங்கு, ஆய்வரங்குகள் நடத்துதல், கணினித் தமிழ்ப் பயிற்சியளித்தல், தமிழ் மென்பொருள் உருவாக்குதல் போன்ற பல்வேறு பணிகளைத் தமிழ்ப் பேராயம் ஆற்றி வருகின்றது. துணைவேந்தர் செயல்பட்டால் துறைகள் தமிழாகும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவன் நான். அதனை ஒரு துணைவேந்தராகச் செயல்பட்டு உலகிற்கு எடுத்துக் காட்டியுள்ளேன். எனது பல்கலைக் கழகச் செயல்பாடுகளைத் "துணைவேந்தர் சொல்லும் செயலும்" என்னும் நூலாக வெளியிட்டுள்ளேன். இன்றைய கல்வி நிலை தமிழ்நாட்டில் மாற வேண்டுமெனில் மக்கள் ஆங்கில மோகத்திலிருந்து விடுபட வேண்டும். ஆட்சியர் தமிழ் வழித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். கல்வியாளர்களும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தமிழ்க் காப்பிற்காக அமைக்கப்பட்ட சைவ ஆதினங்களும் செல்வந்தர்களும் தமிழ் உணர்வாளர்களாக மாறி தமிழ் வளர்ச்சிக்காகச் செயல்படுவார்களேயானால் மக்கள் மனத்தில் மாற்றங்கள் நிகழும். தமிழ்நாடு தமிழ் மண்ணாக வளரக் கல்வி மொழி, ஆட்சி மொழி, வழிபாட்டு மொழி, வழக்காடு மொழி என அனைத்தும் தமிழாக வேண்டும். இன்றேல் தமிழ்நாடு காணாமல் போய்விடும்" முனைவர் மு.பொன்ன வைகோ விடுகின்ற இந்த எச்சரிக்கையை மெய்யான தமிழுணர்வாளர்கள் அக்கறையுடன் கருதிப் பார்க்க வேண்டும். இந்தத் துணைவேந்தர் போல் தமிழ்நாட்டிலுள்ள மற்ற துணை வேந்தர்களும் செயல்பட முன்வந்தால் தமிழ் மக்களிடையே மழுங்கிப் போயுள்ள தாய்த் தமிழுணர்வைக் கூர்மையாக்கி விடலாம். ஆனால் தமிழ்நாட்டில் பணியாற்றுகின்ற பெரும்பான்மையான தமிழாசிரியர்களுக்கும் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் தமிழுணர்வே இருப்பதில்லை. கூலிக்கு மாரடிப்பவர்களாகவே அவர்களுடைய பணிமுறை உள்ளது. இவர்கள் தம் குழந்தைகளை ஆங்கில வழிப் பள்ளிகளில்தான் சேர்க்கிறார்கள். இவர்களைத் தமிழாசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் என்று சொல்வது தகுமா? தமிழர்களாகிய நமது நிலை இவ்வாறிருக்க, பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ் நாட்டின் வளங்களைச் சூறையாடப் போட்டி போட்டுக் கொண்டு வந்தவாறு உள்ளன. வட மாநிலத்தவர்கள், குறிப்பாக மார்வாடிகளும் சேட்டுகளும் இங்கே வந்து, தமிழைக் கற்றுக் கொண்டு இங்குள்ள நிலங்களையும் கனிம வளங்களையும் சுரண்டுகின்றனர். தமிழர்களுக்கான இறையாண்மை கொண்ட ஆட்சிமுறை ஏற்படாதிருப்பதன் விளைவு இதுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தாய்த் தமிழ் வழிக் கல்வியை மறுப்பவர்கள், மொழி என்பது ஒரு கருவிதானே என்று பொறுப்பில்லாமல் பேச முற்படுகிறார்கள் தற்சார்பு, சுய சிந்தனை, சமூக மேம்பாடு ஆகியவற்றை அளிப்பது தாய்மொழிக் கல்வியே. தமிழர்களின் ஆயிரக்கணக்கான ஆண்டுக் காலச் சிந்தனைத் தொடர்ச்சியை, பட்டறிவை, வரலாறு, பண்பாட்டைத் தலைமுறை தலைமுறையாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தொடர்ந்து கொடுத்து வருவது தமிழ். இத்தகைய தொடர்ச்சியை ஆங்கிலவழிக் கல்வி மூலம் துண்டித்துக் கொள்ளுதல் என்பது அறிவுடைமையாகுமா?ஒரு மனிதனுக்குத் தாய்மொழியைத் தவிர்த்த மற்ற மொழிகள் அவனது வள வாழ்வுக்குத் தேவையான கருவிகளே. ஆனால் அவனது தாய்மொழியை வெறும் கருவி என்று கருதுவது பெருந்தவறு. ஒரு குழந்தை தன்னைப் பெற்று வளர்க்கின்ற தாயை தன் வளர்ச்சிக்குரிய ஒரு கருவிதான் எனக் கருதலாமா? பெற்ற தாய் தன் குழந்தையிடன் காண்பிக்கின்ற அன்பை வேறு எவரும் அக்குழந்தைக்குக் கொடுத்தல் இயலுமா? தாயன்பைப் பெறாத குழந்தை தன் இயல்பான வளர்ச்சியைப் பெற்றிடல் கூடுமா? அது போலத்தான் ஒருவனது தாய்மொழியும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாம் அந்த மொழியில் பிறந்த சொற்களாகிய அறம், இல்லாள், மழலை, நோற்றல், இறல், விறல், ஒப்புரவு, வாய்மை, மெய்மை, உள்ளம், சான்றாண்மை, கண்ணோட்டம், புல்லறிவு, இகல், தாளாண்மை, கயமை போன்ற பலப்பல சொற்களையும் இவை உணர்த்துகின்ற பொருள்களையும் தாய்த் தமிழைப் புறக்கணித்தால் காணாமல் ஆக்கிக் கொள்கிறோம். இந்த சொற்களுக்குரிய சரிநிகர்ச் சொற்கள் வேறு மொழிகளில் இல்லை என்பதால், இச்சொற்கள் உணர்த்துகின்ற நுண்பொருள்களையும் விழுமியங்களையும் இழந்து விடுகிறோம். இழப்பின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ள நாம் முயல்வதில்லை. ஒரு குழந்தைக்குத் தாய்ப்பால் வழங்குகின்ற ஊட்டத்தைப் புட்டிப் பாலிலிருந்து பெற முடியுமா? அது போல்தான் தாய்மொழின் பயன்பாடும்; ஊனோடும் உயிரோடும் கலந்திருப்பது தாய்மொழி. தாய்மொழியுடன் கூடிய வாழ்வியலில்தான் ஒரு மனிதன் தன் இயல்பான வாழ்வைப் பெற முடியும். படைப்பு உவகை அவனுக்குத்தான் கிட்டும். அவன்தான் படைப்பாளியாக, புதியவற்றைக் கண்டுபிடிப்பவனாக ஆக முடியும். இவற்றையெல்லாம் தமிழுணர்வாளர்கள் தமிழ் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். தம் குழந்தைகள் தாய்மொழியில் கற்பதே இயற்கையுடன் இயைந்தது; கசடறக் கற்பதற்கும், இயல்பான சிந்தனைக்கும் ஏற்புடையது என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும். பயிற்று மொழி தமிழாகவும் ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகவும் பயிற்றுவிப்பதே முறையானது என்பதை மக்கள் ஏற்றுக் கொள்ளுமாறு அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும். தமிழுணர்வாளர்கள் திட்டமிட்டு ஓர் இயக்கமாக இருந்து கொண்டு, இந்த ஆற்றுப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா கூற்றுப்படி, தமிழ்நாட்டில் இயல்பாக மலர வேண்டிய தமிழ்வழிக் கல்விக்கு எதிராக நிற்பவர்கள் அறிவுடையவரும் அல்லர்; அன்புடையவரும் அல்லர்; மாந்த இனத்தின் உண்மை மலர்ச்சியை விரும்புபவரும் அல்லர். அவர்கள் தமிழ்நாட்டில் தமிழனைப் புறந்தள்ளி, அரசியல் ஆதாயம் அடைய விரும்புபவர்கள்; ஆங்கிலம் வழிக் கொள்கை வணிகர்கள்; மேல்தட்டு மேனி மினுக்கிகள்; வாழ்வின் விழுமியங்கள் பற்றிக் கவலைப்படாத வெற்றுத் தக்கைகள்; இப்போலிகளையும் பொய்யர்களையும் எதிர்த்துத் தமிழ்வழிக் கல்வியை நாம் மீட்டெடுத்தே தீரல் வேண்டும்.- க.சி.அகமுடைநம்பி"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி