16 November 2014 8:16 pm
வரலாறு அறியப்பட்ட காலத்திற்கு முற்பட்ட காலத்தில் இந்திய நாடு முழுமையும் பரவியிருந்த மொழி, பண்பாடு யாவும் தமிழாகவே இருந்தன. பி.டி.சீனிவாச ஐயங்கார், தமிழ் வரலாற்றில் (History of Tamils, upto six hundred) ஒரு காலத்தில் இந்திய நாட்டில் தமிழும் அதன் கிளை மொழிகளுமே பேசப்பட்டன என்று தெளிவுபட எழுதியுள்ளார். உள்ளீடும் வெளி வண்ணமும் போல், தமிழ் மூலமும் சமற்கிருதப்படுத்தலும் அமைந்துள்ளன. மேலே தெரிவதை வைத்து எல்லாம் வடமொழியே என எண்ணுவோர் பலர். உள் நுழைந்து ஆராய்ந்தால் எல்லாம் தமிழே என்பது புலப்படும். திருக்கார்த்திகை தமிழர் திருவிழா. அது திரிபுற்று வந்ததே தீபாவலி. வடமொழி வல்லாண்மை மிக்க காலத்தில் மாதக் கணக்கில் வேறுபாடு வந்தது. அதனால் பிரிந்து போன தீபாவலி செல்வாக்குப் பெற்றுவிட்டது. உள்மூலம் திருக்கார்த்திகையே என்பது இங்கு நிறுவப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் வானத்தில் ஆறு புள்ளிகளாக இருக்கும். அதனால் அது ஆறுமுகனின் விண்மீன் ஆனது. விசாகம் என்பதும் சுப்ரஹ்மண்யம் என்பதும் தெய்வானை கதையும் பின்னால் நுழைக்கப்பட்டவை. முருகன் சூர்பன்மாவை வென்ற வரலாறு முந்தையது. அதை மாற்றிய போது திருமால் நரகா சுரனை வென்ற கதை கட்டப்பட்டது. முருகன் ஆறு புள்ளிகளான கார்த்திகையன்று பிறந்ததாகப் போற்றி அப்புள்ளிகள் போல விளக்கு வரிசை வைத்து வணங்குவது மரபாயிற்று. இந்த மாற்றம் நிகழ்ந்த வரலாற்றை அறிவது, தமிழ் மூலங்கள் எல்லாம் எவ்வாறு வடமொழி மயமாயின என்பதற்கு ஒரு சான்றாகிறது.வெளி வண்ணமும் உள்ளீடும்: வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இந்தியநாடு முழுமையும் பரவியிருந்த பண்பாடு நெருங்கிய ஒற்றுமையுடையதாகும். பாரதத்தின் ஒருமைப்பாட்டிற்கு அடிப்படையான அஃது இன்னும் முழுமையாகக் கண்டறியப்பட்டிலது. ஒன்றின் மேல் ஒன்றாகப் பல அடுக்குகள் வீழ்ந்து கிடக்குமாயின் அடியிலுள்ளது அறியப்படாது. மேற்பரப்பே பலராலும் அறியப்பட்டுப் பேசப்படுமாறு போன்று நிலைமை உளது. அவ்வடிப்படை நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதற்கு எட்டுணையும் அய்யமின்று. சமயம், மெய்பொருள், சடங்குகள், மருத்துவம், நுண்கலை, இலக்கியம் போன்ற ஒவ்வொன்றிலும் சமற்கிருதப்படுத்துதல் என்பது மேற்பரப்பில் காணப்படும் மாற்றமேயாகும். பிறிதொரு வகையாகக் கூறினால் இவை பேரளவில் மட்டும் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் எனலாம். பேரளவில் என்பது மிகுதியையும் சுட்டும்; பேர் அளவில்" என்று பெயரளவில், கலைச் சொற்களின் அளவில், பெயர் மாற்றங்களின் அளவில், அவ்வத்துறை சார்ந்த நூல்களை ஆக்கிப் படைத்துக் கொண்ட அளவில் நிகழ்ந்தவற்றையும் சுட்டும். இன்னும் தெளிவாகச் சொன்னால் சமயம், நுண் கலைகள், தொழில்கள், மருத்துவம், இலக்கியம் போன்றவை பெரிதும் திராவிட மூலத்தன அடிப்படையின; அவை சமற்கிருத மொழியில் விளக்கப்பட்டுள்ளன; பெயர்த்தெழுதப்பட்டுள்ளன; பாதுகாக்கப் பட்டுள்ளன. அதனாலேயே அவை திராவிடர்களுடையன அல்ல என்றாகிவிடாது. இன்று ஆங்கிலம் போலச் சமற்கிருதம் ஆள்பவரின் மொழியாகவும் அதனால் பொது மொழி நிலையிலும் செயற்பட்ட காலகட்டங்கள் பலவாகும். எனவே பரதமுனிவரின் "நாட்டிய சாத்திரம்" முதல் தீபாவளித் திருநாள் வரை எந்த ஒரு விளைவுக்கும் மூலத் திராவிடத் தொடர்பும் தமிழடிப்படையும் இருந்தும் அவை வடமொழி மேற்பூச்சினை அல்லது வண்ணத்தைக் காட்டுகின்றன. பெரும்பாலானவற்றில் திராவிட உள்மூலமும் சமற்கிருத வெளிவண்ணமும் உள. ஒரு சொல் முதல் பெரும் புராணங்கள் வரை சமுதாயக் கலைத் துறைகள் அனைத்திலும் இவ்விரு சார்புமிருப்பதால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சார்பிலே நின்று, தாம் கண்டதே காட்சி என வீண் வம்பில் காலந்தள்ள இடமேற்படுகிறது.அறிவாளர் மனநிலை: நம் நாட்டில் கலைஞர்கள், கற்றறிந்தவர்கள் சமயவாதிகள், மருத்துவர்கள் எல்லோரும் தத்தமது கலை, கல்வி, சமய, மருத்துவ நுட்பங்களைப் பிறரறியா வண்ணம் மறைத்துத் தமக்கும் தமக்கு வேண்டியவர்க்கும் மட்டும் உரிய மறைபொருளாக்கி முதலீடாக்கிக் கொண்டு தமது வாழ்வினை உயர்த்திக் கொள்ளும் மனப்போக்கினராயிருந்தனர். அதற்காகத் தத்தமது அறிவுடைமைகளைப் பிறரறியா வண்ணம் முற்றிலும் மறைத்துக் காத்து, வேண்டும் போது மட்டும் வெளிப்படுத்திக் காசாக்கி வாழ்ந்து போயினர். இதனால் பற்பல நுட்பத்திறன்கள், அவ்வத்திறனுடையார் மறைந்த போது, தாமும் "மறைபொருளா"யிருந்தே மறைந்தொழிந்தன. இத்தனியுடைமை மனப் போக்கிற்கு முன்பு சமற்கிருதம் கை கொடுத்தது; இப்போது ஆங்கிலம் உதவி செய்கிறது. அம்மொழிகளில் கலைச் சொற்கண்டு எழுதி வைத்துப் பிறரறியாமல் மறைத்து அல்லது பேணிக் காத்து, வேண்டும் போது வெளியிடுவது, ஒருவர் தாம் திறனுடையவர் எனக் காட்டிக் கொள்ள நல்வாய்ப்பாக இருந்தது. இதனாலும் இவை அறிவுடையோர் மொழிகளாக, கலைஞர்களின் கருவியாக, திறனுடையார் ஊடகமாக இந்நாட்டில் விளங்கின. இதனால் இவை "அறிவு மொழி" போலவும் தமிழ் அனைய தாய் மொழிகள் சாதாரணமாக – அன்றாட வாழ்வுக்கு மட்டும் பயன்படும் மொழிகள் போலவும் "மொழிச் சாதிகள்" உருவாயின. இதனை "ஆரியச் சூழ்ச்சி" என்பதை விட "அறிவுடையோர் அனைவரின் சூழ்ச்சி" என்றால் மிகையாகாது.கலை இங்கே; விளக்கம் அங்கே: பலவற்றில் நோக்குங்கால் வடிவம் தமிழாக இருக்கும்; வண்ணப்பூச்சு வட மொழியாக இருக்கும். அடித்தளம் திராவிடமாயிருக்கும்; மேற்பரப்பு வட மொழியாக இருக்கும். மேற்பூச்சைக் கண்டதுமெல்லாம் வட மொழியிலிருந்து வந்தன என்று தோன்றும்; மேற்பரப்பைப் பார்த்ததும் "சர்வம் சமற்கிருதமயம்" என்று கூறவே மனம் முந்தும். பரத நாட்டியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தென்னாட்டில் தென்திசை நோக்கி வர வர அக்கலை வளர்ந்த வரலாறும் அதன் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய உண்மைகள் புலனாகும். தமிழ்நாட்டுக் கோயில் சிற்பங்களில் நூற்று எட்டுக் காரணஙகள் பற்றிய சிற்பங்கள் உள்ளன. தமிழ்நாட்டிலே இதற்கெனத் தனி வகுப்பார் இருந்தமை, பொட்டுக் கட்டும் வழக்கமிருந்த அண்மைக்காலம் வரை நாடறிந்த செய்தியாகும். இந்நாட்டியம் எனப்படும் "சதுர்" தென்னாட்டுக் கலையாகும். தமிழர் சமுதாயத்தில் வேரூன்றிக் கிடக்கும் நாட்டுப் புறவியல் ஆடல் வகைகளில் ஒன்றே அது. "சதுர்" ஆடுவதற்கென்றே ஒரு விரிப்புண்டு. அதைச் "சதுர்ச்சமுக்காளம்" என்பது ஒரு வட்டார வழக்கு. முன்பு சதுர் வைக்காமல் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டதே இல்லை. இறைவனையே ஆடற்கலை வல்லானாக் கண்ட, இக்கலை தொடர்பான செய்திகள் கல்வெட்டுகளிலும் சிற்பங்களிலும் குவிந்து, பரந்து கிடக்கின்றன. இவற்றைப் பற்றி ஆய்ந்து, அறிந்து தொகுத்து, வகுத்துக் கட்டிக் காப்பார் இன்றைக்கு வரை எவருமிலர். ஆயின் இவற்றை காத்தருளிய பரத முனிவர் காலத்திலேயே தமிழ் மூலங்கள் வட மொழிக் காப்பு பெற்ற முயற்சிகள் தோன்றி விட்டன. இதனால் அக்கலை வடமொழியிலிருந்து வந்தது என்றோ, வடவருக்கு உரியது என்றோ விவாதிப்பது அறிவுடைமையாகாது. விந்தியத்திற்கு வடக்கே இக்கலை கால் கொண்டிருந்ததில்லை. காசுமீரத்திலிருந்து பரதர் இதை எழுதினாரெனில், அவர் எழுதிய வரலாறுதான் ஆராயப்பட வேண்டுமே தவிர, அக்கலை பல நூற்றாண்டுகளாக விளங்கிவருமிடத்திற்கு உரிமையுடையதாகாது என எழுதி விடுதல் கூடாது. சங்க அக இலக்கியத்திற்கு ஆங்கிலத்தில் "ஆய்வேடுகள்" பல தோன்றியுள்ளன. சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு இவ்வாங்கில ஏடுகளில் புகழ் பெற்ற ஒன்றினை வைத்துக் கொண்டு ஒருவர் "அகத்திணை மரபு" தமிழர் அய்ரோப்பியரிடமிருந்து கடன் பெற்றது என விவாதித்தால் எவ்வாறிருக்குமோ அவ்வாறே இதுவும் உளது. கலை ஓரிடத்தில் காலூன்றியிருக்க அதற்கு விளக்கம் பிறிதொரு மொழியில் இருக்குமானால், அவற்றிடையே ஏற்பட்ட உறவிற்குரிய காரணத்தை உண்மை காணும் மனப்போக்குடன் ஆராய வேண்டும். இதனை அறியாமல் ஒருவர் பரதக்கலை தமிழர்களுடையதன்று என்று ஆய்வுரை எழுதி "டாக்டர்" பட்டம் பெற்றிவிட்டால், அதைக் கண்டு நோவது மட்டும் போதாது. எவரேனும் ஒருவர் தம் வாழ்நாளையே இதற்கென ஒப்படைத்து இக்கலையைக் கற்றும், இதனைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் தென்னாடு, வடநாடு எங்கும் அலைந்து தொகுத்தும் கல்வெட்டு, சிற்பம், சமுகம் அனைத்தையும் ஊடுருவி ஆராய்ந்தும் உலகிற்கு உண்மையை உணர்த்த வேண்டும். இன்றைய "டாக்டர்" பட்டங்கள் நமக்கு "உரிமங்களாக" உதவுகின்றன. அது போதாது. "பரதக்கலை எங்களுடையதே" என உணர்ச்சிவயப்பட்டு வானதிர முழங்கினாலும் போதாது. தமிழுக்கு உயிரைக் கொடுப்பது என்றால் என்ன? இத்தகைய அடிப்படை ஆய்வுகட்கு வாழ்நாட்களையே துறக்கவும் துணிய வேண்டும்.கருதுகோள் யாது? தமிழ் வடிவங்கள் பல வட மொழி வண்ணப் புறப்பூச்சைப் பெற்றுள்ளன; தமிழ் மூலங்கள் பல வட மொழியில் வளர்ச்சி பெற்றுள்ளன என மெய்ப்பிக்க எத்தனையோ சான்றுகள் காட்டலாம். இக்கருதுகோளை (Hypothesis) நிறுவிடும் அளவு சான்றுகள் இருப்பதால் நாம் உணர்ச்சி வயப்படத் தேவையில்லை. நமக்கு வட மொழியுடன் பகை இல்லை. "எல்லாம் வடமொழியே; தமிழில் ஒன்றுமில்லை" என்பார் நெஞ்சில் போய் உறைக்குமளவு நாம் ஆய்வுரைகளை எழுதிக் குவிக்க வேண்டும்; ஆரவார உரைகளால் இனிப் பயனில்லை. உண்மையை இருசாரரும் ஒப்பும் வண்ணம் நம் ஆய்வுகள் காரண காரியத்துடன் அமைய வேண்டும். இந்தியப் பொதுப் பண்பாட்டிற்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் நெருங்கிய ஒற்றுமையுள்ளது. ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் திருக்கார்த்திகை, தீபாவலி (தீப + ஆவலி – விளக்கு வரிசை) என்ற இரு பெரு விழாக்களுக்குமிடையே உள்ள ஒற்றுமை இதை மெய்ப்பிக்கும். இவ்விரண்டு விழாக்களும் ஒரு காலத்தில் ஒரே விழாவாக இருந்து, பிறகு இரண்டாகப் பிரிந்தன என முடிவு கூறுவதற்கு தக்க சான்றுகள் உள்ளன.விழாக்களின் அடிப்படை என்ன? இந்திய நாடு முழுவதும் தீபாவலி கொண்டாடப் படுகிறது. நாம் அதைத் "தீபாவளி" எனத் தவறாக ஒலிக்கின்றோம். இது வடநாட்டவர் -ஆரியரால் நம்மிடம் புகுத்தப்பட்ட விழா என்றும், நரகாசுரனைத் திருமால் கொன்று உலகைக் காத்த மகிழ்ச்சியைக் கொண்டுவதென்றும் கருதப்படுகிறது. இதில் புத்தாடை பூண்டு, மத்தாப்பூக் கொளுத்தி, வெடி வெடித்து, இனிப்புண்டு மகிழ்ச்சி வெளிப்படுத்தப்படுகிறது. வட நாட்டவர்கள் இதனைப் புத்தாண்டுப் பிறப்பாகக் கருதுகின்றனர். வட நாட்டுத் தொழிலதிபர்கள் தீபாவலி பிறந்ததும் புதுக் கணக்கு எழுதுகின்றனர். நாம் இன்று சித்திரை வருடப் பிறப்பில் புதுக்கணக்கு எழுதுவது போன்றது இது. வட நாட்டவர்கே உரிய விழாவெனில் தென்னகமெங்கும் தமிழ்நாடு முழுவதும் மகிழ்ச்சிப் பெருக்குடன் இவ்விழா கொண்டாடப்படுவதேன்? ஒரு சமூகத்தின் பண்பாடு, சமயம், உளவியல் இவற்றோடு தொடர்புடையன திருவிழாக்கள். ஒரு சமூகத்தின் மேல் ஒரு திருவிழாவை எளிதில் நுழைத்து விட முடியாது. அங்கேயே நடைபெறும் விழாவைப் புறத் தாக்குரவால் சிறிது மாற்றியமைக்கலாம். அடிப்படையான சமய மாற்றத்தால் ஒருவர் புதிய விழாக்களை மேற்கொள்ளலாம். சமுதாயம் முழுவதும் கொண்டாடும் விழாவெனில், அது புறத்தேயிருந்து நுழைக்கப்பட்டதா என்பதைச் சற்றே தயங்கி ஆராய்ந்து புறகுதான் சொல்ல வேண்டும். "நவராத்திரி" விழாவைத் திருமலை நாயக்கர் தமிழ்நாட்டில் புகுத்தினார் எனக் கூறப்படுகிறது. அது முழு உண்மையன்று. முன்பு தொன்று தொட்டு வழங்கி வந்த விழாவில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒன்று இரண்டானது திருக்கார்த்திகை விழாதான் தீபாவலி விழாவென்று ஆயிற்று. தீப+ஆவலி என்றால் விளக்கு வரிசை என்றுதான் பொருள். இரண்டும் இந்திய நாடு முழுவதும் ஒரே பண்பாடாயிருந்த தொன்மை மிக்க காலத்தில் ஒரே விழாவாகக் கொண்டாடப்பட்டுப் பின்பு பல்வேறு காரணங்களால் இரண்டு விழாக்களாகப் பிரிந்தன. இவற்றுள் தீபாவலியை மட்டும் வடவர் கொண்டாட, தீபாவலி, திருக்கார்த்திகை இரண்டையும் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். இந்த உண்மையை உணர்த்துவதே இங்குக் கருத்தாகும்.தொன்மை மிக்கது திருக்கார்த்திகை: தென்னாடு முழுவதும், சிறப்பாகத் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் திருக்கார்த்திகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. திருஞானச் சம்பந்தர் திருமயிலைத் திருப்பதிகத்தில், வளைக்கை மடநல்லார் மாமயிலைவண் மருகில் துளக்கில் கபாலீச்சுரத்தான் தொல்கார்த்திகை நாள் தளத்தேந்து இளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்என்று குறிப்பிடுகிறார். இதில் விளக்கீடு என்பதே வடமொழியில் தீபாவலி எனக் குறிக்கப்படுகிறது. கி.பி.ஏழாம் நூற்றாண்டிலேயே இது "தொல் கார்த்திகைத் திருநாள்" எனப்படுமாயின. இது "தொல் கார்த்திகைத் திருநாள்" எனப்படுமாயின், இது மிகப் பழங்காலந்தொட்டு கொண்டாடப்பட்டு வருவதென்பது தெள்ளிதிற் புலனாகும். இளம் பெண்களே பெரிதும் மகிழ்ந்து கொண்டாடும் விழாவென்ற குறிப்பும் உணரத்தக்கது. பாலை பாடிய பெருங்கடுங்கோ கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய கார்த்திகை மாதத்தில் அழகிய நீண்ட விளக்குவரிசைகளை வைப்பது போலக் கோங்கமலர்கள் பூத்துக் குலுங்குவதைக் கற்பனை செய்கிறார்: "அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கள் செல்சுவர் நெடுங்கொடி போலப் பல்பூங் கோங்கம் அணிந்த காடே" (நற். 202) கார்த்திகை மாதம் "அறஞ்செய் திங்கள்" எனப் படுகிறது. அறுமீன் – கார்த்திகை நட்சத்திரம். செல்சுடர் நெடுங்கொடி, அஞ்சுடர் நெடுங்கொடி என்பன நீண்ட விளக்கு வரிசைகள் (கொடி – வரிசை) தீப ஆவலி இதன் மொழி பெயர்ப்பே என்பது வெள்ளிடைமலை. நக்கீரர் இவ்விழா முழு நிலவன்று (பௌர்ணமி) கொண்டாடப்படும் என்ற கருத்தைத் தருகிறார் "மழைகால் நீங்கிய மாக விசும்பில் குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள் மறுகுவிளக் குறுத்து மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவுடன் அயர வருகதில் அம்ம" (அகம்.141) தெருவில் வரிசையாக விளக்கேற்றுவதை "மறுகு விளக்குறுத்து" என்கின்றார் நக்கீரர். இன்றும் தெரு, முற்றம், வாசலிலும் மதில் சுவர்கள் மேலும் தானே வரிசை வரிசையாக விளக்கேற்றி வைக்கிறோம். எல்லோரும் கொண்டாடும் மகிழ்ச்சி விழா என்பது இதிலும் சுட்டப்படுகிறது. "பாலை வழியில் பொருள் வயிற் பிரிந்ததன் காதலர், நல்ல சகுனம் நேர்வதாலும் இனிய கனவுகள் தோன்றுவதாலும் கார்த்திகை விழாவைத் தன்னுடன் கொண்டாட விரைவில் வருவாராக!" என்று தனது விழைவைத் தலைவி வெளிப்படுத்துகிறாள். கணவன், மனைவு இருவரும் உடனிருந்து கொண்டாடும் விழாவாக இது குறிக்கப்படுவது, இன்றும் தீபாவலியில் இளம் மணமக்களை உடனழைத்துக் கொண்டாடும் போக்கினை நினைவூட்டுகிறது. இன்று நாம் காணும் விழாக்களில் இந்திய நாடு முழுவதும் பற்பல வகுப்பாரும் ஒருங்கு கொண்டாடும் விழாவாகத் "தீபாவலி" காணப்படுகிறது. தமிழர்களின் மாதக்கணக்கு: தமிழர்கள் முழுமதியை வைத்தே மாதங்களைக் கணக்கிட்டனர். ஒவ்வொரு முழு மதியும் ஒரு மாத நடுவாகக் கருதப்பட்டது. "அற்றைத் திங்கள்" என்றும், தொல்லைத் திங்கள் என்றும் கடந்த மாதம் குறிக்கப்பட்டது. கண்ணுக்குத் தெரியும் மூன்றாம் பிறையைக் கண்டதும் புதிய மாதம் பிறந்தமையையும் நாள் வளர்ச்சியையும் எண்ணத் தலைப்பட்டனர். "எண்ணாள் பக்கத்துப் பிறை" எனும் போது எட்டாவது வளர்பிறை நாள் குறிக்கப்பட்டது. இத்தகைய முறையில் மதியானது நட்சத்திரங்களைச் சாரும் முறையை வைத்து நாட்கள் குறிக்கப்பட்டன. சிலப்பதிகாரத்தில் வடநாட்டில் கங்கைக் கரையிலிருந்த காலத்தில், சேரன் செங்குட்டுவன் ஒருமுறை வானத்தை நோக்கிய போது, அருகிலிருந்து களிவஞ்சி நீங்கி "எண்ணான்கு திங்கள் ஆயின" என்றான். 32 மாதங்கள் கழிந்தமை அன்று அவ்வாறு உணர்த்தப்பட்டது.கார்த்திகைக்கு முதலிடம் இரண்டாம் சந்திரகுப்த மவுரியரின் காலத்தில் (கி.பி.ஆறாம் நூற்றாண்டு) வராகமிகிரர் என்ற வான நூல் அறிஞர் தோன்றி இந்திய நாட்டுக் காலக் கணிப்பில் குறிப்பிடத்தக்க சில மாறுதல்களைச் செய்தார் என்பர். அதற்கு முன்பு 27 நட்சத்திரங்களையும் கொண்டு, கார்த்திகை முதலாக எண்ணுகிற பழக்கம் இருந்தது. மணிமேகலையில், இருதிள வேனில் எரிகதிர் இடபத்து ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின் மீனத்து இடைநிலை மீனத்து அகவ யின் போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும் (11: 40-44)என்று புத்தர் தோன்றிய வைகாசி விசாக நட்சத்திரம் கூறப்படுகிறது. புத்தர் வட நாட்டில் பிறந்தார். அவர் பற்றிய கதையும் அங்கிருந்து பெறப்பட்டதே. இதில் இருது இளவேனில் என்பது சித்திரை, வைகாசி மாதங்கள் அடங்கியது. இரு மாதங்கள் கொண்டது இருது. இரு > இருது > ருது. வட மொழியில் இது "ருது"வென வழங்கும். இரண்டு – ரெண்டு ஆவது போல இருது ருதுவாகியிருக்க வேண்டும். தமிழர் ஆண்டுக் கணக்கு மேட இராசியில் தொடங்கியதாதல் வேண்டும். மேடம் என்பது யாடு, ஆடு என்றெல்லாம் தமிழில் கூறப்படும். அதிலிருந்துதான் யாண்டு, ஆண்டு என்பன மூக்கொலி பெற்றுப் பிறந்தன என்பர். "பன்னீராட்டைப் பருவத்தாள்", ஏழரையாட்டைச் சனி என்பதும் மலையாடு என்றே பொருள் படுமென்றும் அதிலிருந்து பிறந்ததுதான் வருடம் என்று டாக்டர் தே.ஆண்டியப்பன் கருதுவார். மேற்கண்ட மணிமேகலை அடிகளில் "எரிகதிர் இடபம்" என்பது சூரியன் வந்து நின்ற இடபராசி. அது வைகாசி மாதத்தைச் சுட்டும். 27 நட்சத்திரங்களில் முன் பதின்மூன்றுக்கும் பின் பதின்மூன்றுக்கும் இடைப்பட்டது விசாகம் என்பது அடுத்த இரண்டடிகட்கும் தரப்பட்டுள்ள பொருள். கார்த்திகை முதலாக எண்ணினால்தான் பதினான்காவதாக விசாகம் வரும். இன்றைய வராகமிகரர் முறை அசுவனி முதலாக எண்ணுகிறது. அதன் படி எண்ணினால் பதினாறாவதாகத்தான் விசாகம் வரும். எனவே மணிமேகலை குறிப்பிடும் முறை வராகமிகிரருக்கு முற்பட்டது என்பது போதரும். தமிழர்களும் முன்பு கார்த்திகை நட்சத்திரம் முதலாக மாதத்தை எண்ணினார்களோ என்ற அய்யத்தைக் கார் நாற்பது ஏற்படுத்துகிறது. அதில் கண்ணாங் கூத்தனார் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார் "நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கில் தகையுடைய வாகிப் புலமெலாம் பூத்தன தோன்றி; சிலமொழி தூ தொடு வந்த மொழி" இதில் தோன்றியப் பூக்கள் எங்கும் பூத்துக் காட்சியளிப்பதற்குக் கார்த்திகை விளக்குகள் உவமை கூறப்பட்டுள்ளன. மேலும் கார்த்திகை நாள் இதன்கண் தலைநாள் எனக் குறிக்கப்பட்டிருத்தலால் அதுவே மாதத் தொடக்க நாளாக இருந்தது போலும் என்பர். இன்று ஞாயிறு முதலாக வாரத்திற்கு ஏழு நாளாக எண்ணுகிறோம். முன்பு வாரக் கணக்கு இன்றி, மாதத்திற்கு 27 நட்சத்திரங்களுக்கும் 27 நாட்கள் எனக் கொண்டு கார்த்திகை முதலாக எண்ணப்பட்டது என்பர் திரு ந.ரா.முருகவேள். இன்று திங்கள், செவ்வாய் என்று நாட்பெயர்களைக் குறிப்பிடுவது முன்பு "மகம், ஆதிரைம், கார்த்திகை" என்று நாட்களைக் குறிப்பிட்டனர். தமிழில் "நாள்" என்பதே நட்சத்திரத்தைக் குறிக்கும். நம் உரையாசிரியர்கள் மகத்திற் கொண்டான் ஆதிரையில் வந்தான், கார்த்திகையில் பெற்றான் என்பது போலக் காட்டும் எடுத்துக் காட்டுகளால் இதை உணரலாம் என்பர் டாக்டர் இரா.சாரங்க பாணி. கார்த்திகை நட்சத்திரம் மாதத் தொடக்க நாளாக இருந்தது போலக் கார்த்திகை மாதம் ஆண்டுத் தொடக்கமாக இருந்ததும் உண்டு.வராகமிகிரரின் புதிய கணக்கு: இவ்வாறு நட்சத்திரங்களைக் கொண்டு கணிக்கப்படுகிற சூரிய மாத முறை மாற்றி, வராகமிகிரர் சாந்திர மாத முறையைப் புகுத்தினார். அவர் சந்திரனை மையமாக்கிக் கொண்டு வளர்பிறை, தேய்பிறைத் திதிகளை ஆதாரமாக்கி மாதக் கணக்கை வகுத்தார். அவர் கணக்கிற்கும் பழைய கணக்கிற்கும் ஒப்பிட்ட போது பழைய கணக்கில் 15 நாட்கள் கூடுதலாவது புலனாகிறது. எனவே அப்பதினைந்து நாட்களைத் தள்ளிவிட்டு அவர் கணக்கிட்டதால் அவருடைய மாத முறை 15 நாட்கள் முன்னே போய்விட்டன. வட நாட்டில் வராகமிகிரர் முறையே பின்பற்றப்பட்டது. திரு. எல்.டி.சுவாமிக்கண்ணு இவ்வாறு பதினைந்து நாட்கள் ஏன் தள்ளப்பட்டன என்ற காரணத்தை விளக்கியுள்ளார். சாந்திர மாத முறைக்குத் திதி அடிப்படை. திதியும், நாளும் 64 என்ற எல்லையில் சிறிது வேறுபட்டன. திதி 64 கொண்டதற்கு நாளும் 64 என அமையாமல் சிறிது குறைந்து 63.001412384 மட்டுமே வருவதால், இவ்வாறு ஏற்படும் குறைவு, பலநூறு ஆண்டுகள் கழித்து நோக்கினால், 15 நாட்கள் குறையுமென்றே, வராகமிகிரர் அப்பதினைந்து நாட்களைத் தள்ளி விட்டார். இது போலவே மாதக்கணக்கிலும் நமக்கும் வட நாட்டவர்களுக்கும் சுமார் 15 – 30 நாட்கள் வரை இடைவெளியுளது. அதாவது வட நாட்டில் ஒவ்வொரு மாதமும் பதினைந்து இருபது நாட்கள் முன்னதாகவே பிறந்து விடுகிறது.மாதங்கள் மாறுதல்: நமக்கு மார்கழி நடக்கும் போது அங்கு புஷ்யம் (தை) என்ற அடுத்த மாதம் பிறந்து விடுகிறது. நமக்குப் பங்குனி நடக்கும் போது அங்கு சைத்திரம் (சித்திரை) என்ற அடுத்த மாதம் பிறந்து விடுகிறது. நமக்கு ஐப்பசி நடக்கும் போது அங்கு கார்த்தீகம் (கார்த்திகை) என்ற அடுத்த மாதம் பிறந்து விடுகிறது. இவற்றிலிருந்து ஏறத்தாழ 22 அல்லது 23 நாட்கள் முன்னதாக அவர்களுக்கு மறுமாதம் பிறந்து விடுவது புலனாகிறது. ஒரு கணம் இப்போது சிந்தியுங்கள். நாம் கார்த்திகை மாதத்தில் கொண்டாடும் திருக்கார்த்திகையைத்தான் அவர்கள் இரண்டு, மூன்று வாரம் முன்னதாகத் தீபாவலியாகக் கொண்டாடுகிறார்கள். அதாவது அவர்களுக்குக் கார்த்திகை மாதம் ஒரு மாத அளவிற்குள் முன்னதாகப் பிறந்து விடுவதேயாகும்.இவற்றிலிருந்து பல அடிப்படை உண்மைகள் புலனாகின்றன.நாம் நம் கணக்குப் படி கார்த்திகை மாதத்தில்தான் (பௌர்ணமியை ஒட்டி) திருக்கார்த்திகையாகிய "விளக்கீடு" விழாவைக் கொண்டாடுகிறோம்.வடக்கே அவர்களும் அவர்கள் கணக்குப் படி கார்த்தீகம் என்ற கார்த்திகை மாதத்தில்தான் (அமாவாசையை ஒட்டி) தீபாவலியைக் கொண்டாடுகின்றனர். அதாவது அவர்களுக்கும் இது திருக்கார்த்திகையே – விளக்கீட்டு விழாவே ஆகும். கார்தீக மாதத்தில் கொண்டாடுவதை நினைவு கொள்க.இங்கு முழுநிலவு நாளை ஒட்டியும் அங்கு உவா நாளை ஒட்டியும் கொண்டாடப்படும் வேறுபாடு கருதத்தக்கது. தமிழர் விழாவெல்லாம் நிறைமதி நாளில்தான் கொண்டாடப்படும்.நாம் நம்முடைய திருக்கார்த்திகையையும் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கொண்டாடி வருவதுடன், அவர்களைப் பின்பற்றி அவர்கள் கொண்டாடும் தீபாவலியையும் வேறெனக் கருதிப் பிற்காலந் தொட்டுக் கொண்டாடத் தொடங்கியுள்ளோம். இதனால் பண்டிகை நமக்கு இரண்டாகி விட்டது.இதனால் நாம் ஒன்றைப் புத்தாடை பூண்டு, வெடி வைத்து , இனிப்புண்டு மகிழ்ச்சிப் பெருக்கைக் காட்டுவதற்குரிய ஒன்றாகவும், மற்றதை விளக்கு வைத்துக் கொண்டாடும் விழாவாகவும் வேறுபடுத்திக் கொண்டுள்ளோம். முன்னதற்கு நரகாசுரன் கதையைக் கூறி திருமாலை வழிபடும் விழாவாகவும் பின்னதற்கு முருகன் கதையைக் கூறி அவனது பெருமையைப் போற்றி வழிபடும் விழாவாகவும் பின்னணி கூறியும் இவற்றை வேறுபடுத்த முயன்றுள்ளனர்.இவ்விழாவின் தோற்றம் வளர்ச்சியை உற்று நோக்கும் பொழுது, முதலில் தமிழ் மூலம்தான் நடந்துளது. பிறகுதான் சமற்கிருதமயமாக்கப்படுதல் நிகழ்ந்துள்ளது. அங்ஙனம் சமற்கிருதமயமாக்கினாலும் முன்னைய திராவிட மரபுகளை முற்றிலுமாக மறைக்க முடியவில்லை. இங்ஙனமிருக்கவும் உலக ஆய்வுகள் பலவும் மேற்பரப்பைக் கண்டு முடிவு கூறும் ஆய்வுகளாகவே விளங்கி வருகின்றன. இந்திய நாடு முழுமையும் சென்று பல்வேறு மொழிகளைப் பேசும் பல்வேறு மாநிலங்களும் ஊடுருவி ஆராய்ந்தால் இவ்வொருவிழாவைப் பற்றி மேலும் பல உண்மைகள், தொல் பொருளாய்வில் கண்டெடுக்கும் மெய்மைகள் போல் கிடைக்கப் பெறும். சமற்கிருதமயமாக்கப்பட்டமை என்பது உள்ளீட்டிலன்று என்ற உண்மையும் உறுதிப்படும். தமிழர்கள் திருக்கார்த்திகையையே பெரு விழாவாகக் கொண்டாட வேண்டும். அது இன்று சமய விழாவாக உளது. அதை மக்கள் வாழ்வியல் விழாவாகவும் கொண்டாட வேண்டும்.- தமிழண்ணல்"