தேர்தலும் ஊழலும் – ஓர் ஆய்வு - தமிழ் இலெமுரியா

17 June 2014 8:21 am

ஐக்கியப் பேரரசின் முன்னாள் தலைமையமைச்சர் சர் அண்டனி ஈடன் இந்தியநாடு துணிச்சலாக மக்களாட்சி முறைமையைத் தழுவிட முன்வந்த நிலையைச் சுட்டிக்காட்டி கீழ்க்கண்டவாறு கருத்துரைத்தார். தொடக்க காலங்களிலிருந்து இதுவரை முயற்சி செய்யப்பட்ட அரசாங்கங்கள் பற்றிய அனுபவங்களிலிருந்து, இந்திய நாட்டு மக்களின் நாடாளுமன்ற அரசாங்கம் தான் எனக்குப் பெரும் வியப்பளிப்பதாக நம்புகின்றேன். கிரேட் பிரித்தன் என்ற இந்த சிறு தீவில் பல நூற்றாண்டுகாலமாகச் சிறுகச்சிறுக உருப்பெற்ற திறந்த சனநாயகக் கோட்பாட்டை பல கோடி மக்கள் வாழும் ஒரு துணைக்கண்டமாக விளங்கும் இந்தியா நடைமுறைப் படுத்த முயற்சி செய்கிறது. இந்த முயற்சி ஒரு அறிவார்ந்த செயலாகும். இந்தியர்களின் இந்த முயற்சி என்பது நமது நாட்டின் நகல் அல்ல, ஆனால் இது நாம் கனவில் கூட எண்ணிட முடியாத ஒரு மிகப்பெரிய மக்கள் பெருக்கத்தின் துணிகர முயற்சியாகும். இது வெற்றி பெறுமானால், ஆசியப் பகுதியில் கணக்கிட இயலாத நன்மைகளை விளைவிக்கும். விளைவு, விடை எதுவாக இருப்பினும் நாம் அந்த முயற்சியை மதிக்க வேண்டும்." நிச்சயமாக, நாடாளுமன்ற சனநாயக முறைமையைத் துணிவுடன் தழுவிய   இந்திய மக்களின் முயற்சியும், முக்கியத்துவமும் இந்திய நாட்டளவில் மட்டுமல்ல உலக அளவிலும் வெற்றியை ஈட்டியுள்ளது. எனினும் தேர்தல் செயல் முறையில் கொடிய பணநாயகத்தின் ஆதிக்கம் பல்வேறு சிக்கல்களை உருவாக்கியுள்ளது. கடந்த கால தேர்தல்களில் அச்சுறுத்தலாக அமைந்த வன்முறைப் போக்கு, தசை வலிமை போன்றவைகள் பெருமளவு தற்போது மட்டுப்படுத்தப் பட்ட நிலையில், பணபலத்தின் மூலம் தேர்தலைக் கட்டுப்படுத்துகின்ற தூய்மையற்றப் போக்கும், சமரசங்களும் தற்போது ஒரு பெரும் சவாலாக நம் முன் நிற்கின்றது. இந்தச் சூழல் தான் இந்திய நாட்டின் மிகப் பெரிய நோயாக விளங்குகின்ற ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்குவதுடன், இதில் செலவு செய்யப் படும் பெரும் தொகைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் ஊழலின் வேரை அறுப்பதுடன், இந்தியாவின் தூய்மையான அரசியலுக்கு வித்திடவும் முடியும் என்று அறுதியாக நம்பலாம்.  இந்திய அரசியல் சட்ட நடைமுறையை மீள்பார்வை செய்யப்பட அமைக்கப் பட்டுள்ள தேசிய ஆணையக் குழுவின் அறிக்கையின் 4வது பகுதியின் படி, தேர்தல்களில் செலவுசெய்யப் படும் பெரும்பணமே இந்திய நாட்டில் பொதுப்பகுதியில் ஊழல் உருவாவதற்குக் காரணமாக விளங்குகின்றது. அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்காகப் பெறப்படும் பணப்பரிவர்த்தனைகள் பெரு முதலாளிகளின் கணக்கில் காட்டப்படாத தொகையாகவும், இலஞ்சமாகவும், அவர்களின் ஒரு முதலீடாகவும் விளங்குகின்றது. இதன் விளைவாக முதலீட்டின் வருமானம், அரசு  ஒப்பந்தங்கள், இன்னும் பலவென பெருமளவு  எதிர்பார்க்கின்றனர். இந்த அறிக்கையில் தேர்தல் நிர்ப்பந்தங்களே பெருமளவு தவறான பணப்பறிமாற்றங்களை உருவாக்குவதுடன் ஊழல் என்ற மேல்கட்டுமானத்தின் அடித்தளமாக அமைகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.  சில ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரோசி இந்தியாவின் ஊழல் தேர்தலுக்காகப் பெறப்பெறும் பணத்திலிருந்து தான் தொடங்குகின்றது என்பதைக் கண்டறிய முடிகிறது என்று துணிச்சலுடன் கருத்துத் தெரிவித்தார். அதன் விளைவாகவே அவர் பதவி வகித்த காலத்தில் நியாயமான தேர்தல் முறைகளைக் கையாளும் முதல் முயற்சியாக இந்திய வருவாய்த் துறை அதிகாரியான பி.கே.தாஸ் என்பவரை பணநாயகத்தைத் தடுப்பதற்கென்றே நியமிக்கப் பட்டார். குரோசி அவர்களின் முன்முயற்சியால் தான் இந்த துணிச்சலான முடிவு முதன்முதலாக செயல்பாட்டுக்கு வந்து தேர்தல் முறைகளில் நேர்மையையும், நியாயத்தையும் முறியடிக்கும் பணபலத்திற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.  பி.கே. தாஸின் முயற்சியால் சனநாயத்திற்குள் ஊடுருவ முனைந்த பணபலம் என்ற தீய செல்வாக்கினை முடிவுக்குக் கொண்டுவர தேர்தல் செலவு கண்காணிப்பு விதிகள் உருவாக்கப் பெற்றன. இது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். ஆனால் இந்த தேர்தல் முறை சனநாயகம் முழுமையாக இந்திய நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது பெருந்தலைவர்களின் புரிதலும், நுண்ணறிவும் இது பிற்காலத்தில் ஊழலுக்கு வித்திடும் என்ற செய்தியைத் தெரிவித்தது என்பது மிகவும் சுவாரஸ்மாக கற்க வேண்டிய பாடமாகும்.  19 ஆம் நூற்றாண்டில் அய்ரோப்பிய நாடுகளில் பயணம் செய்த சுவாமி விவேகானந்தர்  அய்ரோப்பிய சமுகத்தில் நிலவிய ஓட்டு அரசியலில் பெருமளவு ஊழல் நிறைந்திருப்பதை உணர்ந்தார். அவருடைய மிக ஒளிமயமான "கிழக்கும் மேற்கும்" என்ற கட்டுரையில் ஓட்டு அரசியலின் விளைவாக அய்ரோப்பிய நாடுகளின் தெருக்களில் கபடமும், இலஞ்சமும் நிர்வாணமாகத் திரிகின்றன என்று குறிப்பிட்டிருந்தார். தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அய்ரோப்பிய வேட்பாளர்கள் எந்தஅளவு தாழ்வு நிலைக்கும் தங்களை ஆட்படுத்திக் கொண்டு இலஞ்சம் தர அணியமாயிருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்திய மக்கள் கல்வி கற்க இயலாதவர்களாக இருப்பினும் இது போன்ற இழிநிலைகளுக்குள் தங்களை ஆட்படுத்திக் கொள்ளாமல், திறந்த உள்ளத்துடன் தேர்தல் நடைமுறைகளைக் கையாள்கின்றனர் என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.  19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  மேற்குறிப்பிட்டுள்ள கருத்துரைகளை வழங்கிய அறிவார்ந்த முனிவர் விவேகானந்தர் இந்திய மக்களின் பொது வாழ்விலும், சமுகத்தின் ஒவ்வொரு படிநிலைகளிலும் ஓட்டுவங்கி அரசியல் சனநாயக செயல் முறைகளில் ஊழல், இலஞ்சம் ஆகியவற்றின் வேராக விளங்குவதுடன் அவை நாளுக்கு நாள் பன்மடங்கு பெருகும் பணநாயக சனநாயகமாகும் வாய்ப்பு இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.  அய்ரோப்பாவில் வாக்கு அரசியலின் விளைவால் ஊழல் உருவாகியுள்ளது என்று விவேகானந்தர் ஆய்ந்தறிந்து விளக்கிய அதே வேளையில் இந்திய விடுதலைப் போரில் முன்னணி வீரராக விளங்கிய சி.இராசகோபாலாச்சாரியார் இந்திய விடுதலைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே தேர்தல் ஊழல்கள் குறித்து மிகக் கூர்மையாகப் பதிவு செய்தார். 1921-22 ஆம் ஆண்டுகளில் அவர் வேலூர் சிறையிலிருந்த போது கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்:- "நாமெல்லாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். சுயராஜ்யம் உடனடியாக கிடைக்கப் போவதில்லை. நான் நினைக்கின்றேன் அதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம், மகிழ்ச்சியும் நல்ல அரசாங்கமும் மக்களுக்குக் கிடைக்க நீண்ட நாட்களாகலாம். ஆனால் நாம் விடுதலை பெற்ற பின்பு தேர்தல் அதன் வழி ஊழல், நியாயமின்மை, நிருவாகத் திறமையின்மை, பேராசை போன்றவைகள் நம்மைச் சூழ்ந்து நமக்கு ஒரு நரக வாழ்க்கையைத் தான் தரவிருக்கிறது என்பதை உணர வேண்டும். மனிதர்கள் மிகுந்த வருத்ததுடன் கடந்த வாழ்க்கையை, பழைய அரசின் தன்மையை அமைதி, திறமை, நேர்மை ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். நமக்குக் கிடைக்கும் இலாபம் நாம் இழிவாகப் பார்க்கப் படமாட்டோம், அடிமைத்தனமாக நடத்தப் படமாட்டோம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. கல்வி, நேர்மை, இறை அச்சம், நல்லொழுக்கம், அன்பு ஆகியவற்றைப் குழந்தைப் பருவத்திலிருந்தே கற்றுக் கொடுத்துப் பரவலாக்குவதன் மூலமே ஒரு நம்பிக்கையைப் பெற இயலும். இதில் வெற்றி கண்டால் மட்டுமே சுயராஜ்யத்தின் மகிழ்ச்சியை நாம் உணர முடியும். இல்லையெனில் கொடுங்கோன்மையும், அநியாயமும் தான் நம் சொத்துகளாகும்."  இராசாசியின் இந்த வார்த்தைகள் இன்று மிகுந்த வலியைத்தரும் உண்மைகளாக இந்திய மக்களுக்கு நிருபனமாகியுள்ளன. விடுதலை பெற்று அறுபத்து அய்ந்து ஆண்டுகள் உருண்டோடிய பின்னர், பலவீனமாகும் தேர்தல் அரசியலும், ஊழலின் ஊற்றாக விளங்கும் பணநாயகமும் நம்முடைய தற்கால வாழ்வின் நச்சாக உள்ளன.  1957 ஆம் ஆண்டு ஒரு வணிக நிறுவனம் ஓர் அரசியல் கட்சிக்குச் செலுத்திய நன்கொடை குறித்த வழக்கில் பம்பாய் உயர்நீதி மன்ற நீதியரசர்  எம்.சி.சாக்ளா மற்றும் நீதியரசர் எஸ்.டி. தேசாய் ஆகியோர் கீழ்க்கண்டவாறு கருத்துத் தெரிவித்தனர்: சனநாயத்தின் அடிப்படையாக விளங்குவது வாக்காளர்கள். அதுவும் இந்தியாவில் வயது வந்தோருக்கு அளிக்கும் வாக்குரிமை என்பது மிகவும் முக்கியமானதாகும். வாக்குகளின் மூலம் வெற்றி பெற்று இறுதியாக நாடாளுமன்றத்திற்குள் செல்லும் வேட்பாளரின் நேர்மை, நம்பகத் தன்மை போன்றவை பாதுகாக்கப்படுவதுடன், அவர்களுக்கு வாக்களிக்கும் ஒவ்வொரு வாக்காளரின் நேர்மை, நம்பகத்தன்மையும் பாதுகாக்கப் படவேண்டும். ஒரு குறிப்பிட்ட தேர்தல் முடிவு வரவேண்டும் என்பதற்காக பெருநிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நன்கொடைகள்  விளைவாக வேட்பாளரின் நம்பகத் தன்மையையோ அல்லது வாக்காளர்களின் நம்பகத் தன்மையையோ பாதுகாப்பதென்பது ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்றாகும்.  அரசியல் கட்சிகள் பெரு வணிக நிறுவனங்களிடமிருந்து பெறும் தேர்தல் நன்கொடைகள் குறித்து பெருவாரியாக கவலை கொள்கின்ற இந்த வேளையில், நம்முடைய நாட்டை வளர்ச்சிப் பாதையில் கட்டமைக்கின்ற போது, பம்பாய் உயர்நீதி மன்ற அறிவார்ந்த நீதியரசர்களின் மேற்கண்ட கருத்துரைகளையும் இணைத்துப் பொருள் கொண்டு புரிந்து கொள்வது அவசியமாகும். வாக்காளர்களின் நேர்மைத்தன்மையை பாதுகாப்பதன் மூலம் அவர்களைப் பாதுகாப்பதுடன், அவர்களால் தேர்வு செய்யப்பட்ட அவர்களின் பிரதிநிதியான வேட்பாளரையும் பாதுகாப்பதுடன், அதன் மூலம் தேர்தல் செயல்முறையின் நேர்மையையும் பாதுகாக்க முடியும். தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் எடுத்தப் பன்மடங்கு உறுதியான நடவடிக்கைகள், பணபல அதிகாரத்தினால் தேர்தலின் தரத்தை சீர்குலைக்கும்  இழிசெயலை மட்டுப் படுத்துவதற்கு மட்டுமல்லாமல் நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கும் ஒரு கருவியாக அமைகிறது. அண்மையில் நடைபெற்ற 16வது மக்களவைக்கான தேர்தலில் சற்றொப்ப 82 கோடி வாக்காளர்கள் பங்கு பெற்ற நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப் பட்ட வாக்களிக்க விருப்பும், மறுப்பும் தெரிவிக்கின்ற ஒரு நோட்டா (NOகூஅ) அறிமுகம் என்பது வாக்காளர்களின் விருப்பம் மற்றும் நம்பகத்தன்மையை நோக்கிய ஒரு புது திருப்பு முனையாகும்.  மேனாள் தேர்தல் தலைமை ஆணையர் திரு எஸ்.ஒய்.குரோசி அவர்கள் சொன்னபடி தேர்தல் செலவுகளே நம் நாட்டு ஊழல்களின் ஊற்றுக்கண்கள் என்பதானால், அந்தக் கொடுமையான பணபலத்தின் ஆதிக்கத்தை அழிக்க வேண்டிய இலக்கை நோக்கி நம் செயல்பாடுகள் அமையுமானால் நம் நாட்டில் ஊழல் சாம்ராஜ்யத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவர இயலும்.  இந்த வேளையில் 1990 ஆம் ஆண்டு தேர்தல் சீர்திருத்ததிற்காக அமைக்கப்பட்ட தினேசு கோசுவாமி அறிக்கையினை நினைவு கூர்வது அவசியமாகும். அந்தக்குழுவின் பரிந்துரைப்படி, அரசியல் கட்சிகளுக்குப் பெருநிறுவனங்கள் வழங்கும் நன்கொடைகள் முற்றாகத் தடை செய்யும் வகையில் சட்டம் இயற்றப் பட வேண்டும் என்பதாகும். அதற்குத் தகுந்த வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவருமாறும் பரிந்துரை அளித்தது.  மேற்கு வங்க மாநிலத்தின் மேனாள் ஆளுநர் கோபால் காந்தி தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தம் குறித்து சென்னையில் 2011 ஆண்டு பிப்ரவரி 12 ஆம் நாள் நடைபெற்ற ஏழாவது தேசிய மாநாட்டில் ஆற்றிய உரையில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்தார்: அரசியல் கட்சிகளுக்கு நிதி பங்களிப்பு செய்ய நிறுவனங்களை அனுமதிப்பதின் உள்ளார்ந்த பெரும் ஆபத்துகளை பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரவேண்டியது எங்கள் கடமை என்று நான் நினைக்கிறேன். வளர்ந்து வரும் இந்த பேராபத்தானது ஒரு கட்டத்தில் பெரும் ஆளுமை பெற்று நம் சனநாயகத்தின் குரல்வளையை நெரித்துக் கொன்றுவிடக்கூடிய அபாயமாகும்.  இப்படிபட்டச் சூழலில், அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் நன்கொடை வழங்குவதற்கான சூழ்நிலை மற்றும்  வரம்புகள் குறித்து நாடாளுமன்றம் ஆய்வு செய்ய வேண்டிய தருணமாகும். இந்த ஆபத்தை முழுமையாக அறிந்து சந்திக்க வேண்டும்.  1951 ஆண்டு மக்கள் சட்டம் பிரதிநிதித்துவ பிரிவு 29 ன் படி  அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை நிதி இருபது ஆயிரத்திற்குக் கீழே இருந்தால் அந்த தனி நபர் குறித்தத் தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் வெளியிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த விதியினைப் பயன் படுத்திக் கொண்டு அரசியல் கட்சிகள் தாங்கள் பெறும் நன்கொடைகளைத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்பதில்லை. எனவே தான் இது போன்ற ஓட்டைகளை அடைக்கும்வகையில் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள் குறித்துக் கடுமையான சட்டங்கள் தேவைப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டே 1990 ஆம் ஆண்டு தினேசு கோசுவாமி அறிக்கையில் தவறான கணக்கை சமர்ப்பிக்கும் அரசியல் கட்சி வேட்பாளர்களை தேர்தல் குற்றம் செய்தவராகக் கணக்கில் கொண்டு இரண்டு ஆண்டுவரை சிறைத்தண்டணை வழங்க வேண்டுமெனவும் பரிந்துரை செய்தது.  ஆனால், இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டு இருபத்து நான்கு ஆண்டுகள் முடிவுற்ற நிலையிலும் இதை அமலாக்கம் செய்ய ஆளும் அரசியல் கட்சிகள் முன்வரவில்லை. நமது நாட்டு சனநாயகத் தேர்தல் முறையில் ஊடுருவியிருக்கும் கருப்புப்பணம் மற்றும் பணநாயகச் சூழலின் கொடிய தன்மைகளை புரிந்து கொண்டு இருபத்தியோராம் நூற்றாண்டிலாவது இந்த ஊழல் தன்மையை ஒழித்திட முன்வரவேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.  பொதுமக்களின் கருத்தாக்கம் ஊழலுக்கு எதிராக திரண்டு வருகின்ற இந்த வேளையிலாவது, மேற்கண்ட பரிந்துரைகளை ஊதாசீனப்படுத்தாது உரிய சட்ட நடவடிக்கைகள் மூலம் களைய முன்வரவேண்டும்.  அந்த தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்த பரிந்துரை அறிக்கையில் இது போன்று எத்தனையோ அம்சங்கள் நிரம்பியுள்ளன. அந்த அறிக்கையுடன் தேர்தல் ஆணையத்தின் செலவுகளைக் கவனிக்கும் முதன்மை இயக்குனர் பி.கே.தாஸ் அவர்களின் திட்டப்பரிந்துரைகளும் இணைத்து நோக்கி, மிகத் தீவிர கவனம் செலுத்தி இந்திய தேர்தல் செயல்முறைகளை தூய்மைப்படுத்தி நேர்மையை நிலை நாட்ட வேண்டிய தருணம் வந்து விட்டது.  இந்தப் பரிந்துரைகள் மற்றும் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக நடைமுறைபடுத்தப் பட்டு அதன் விளைவாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ள கோடிக்கணக்கான கள்ளப் பணம், மது வகைகள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு மக்களாட்சி தேர்தல் முறையில் நேர்மையும் நம்பகத் தன்மையையும் நிலை நாட்டி ஒரு புது யுகம் நோக்கிப் பயணிக்க வேண்டும்.  ஏற்கனவே கடந்த காலங்களில் நாம் முந்தையத்  தேர்தல்களில் வன்முறைகள் மூலம் சமுகத்தின் நலிந்த பிரிவினர் உட்பட பல வாக்காளர்கள் தடுத்து நிறுத்திய  தசை வலிமை, குண்டர்களின்  அதிகாரத்தை கட்டுப்படுத்தி வெற்றியைக் கண்டுள்ளோம். குண்டர்களின் அதிகார சாம்ராஜ்யத்தை கட்டுப்படுத்திய நாம் ஊழலின் ஊற்றாக விளங்கும் பணநாயக தேர்தல் முறையையும் கட்டுப் படுத்த முடியும்.  நம் நாட்டு நிருவாகத் துறையில் எத்தனையோ அறிவார்ந்த, வெளிச்சம் மிகுந்த அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் யதார்த்தமான பல ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.  முன்பு அரசியல் கட்சிகளை ஒழுங்கு படுத்திய தேர்தல் ஆணையத்தின் வலிமையைக் கண்டுள்ளோம். அதே வலிமை இன்றும் நம்மிடம் உள்ளது. தேர்தல் செயல்முறைகளில் ஒழுக்கத்தையும் நேர்மையினையும் சீர்மையினையும் உருவாக்கும் வண்ணம் அந்த வலிமையை  முறையாகப் பயன் படுத்த வேண்டும். பணநாயகத்தின் தன்மையை ஒடுக்கி ஒரு தூய்மையான தேர்தல் முறையை உருவாக்க வேண்டும். கடந்த தேர்தல்களில் வாக்களித்துள்ள இளைய சமுதாயம் மிக விரைவான தீர்வுகளையும் நேர்மையான பொருள் பொதிந்த சனநாயகப் பாதையினையும் விரும்புகின்றது. இந்தக் கால வாக்காளர்களில் மிகப் பெரும்பான்மையினராக விளங்கும்  இளைஞர்களின் விருப்பும், தாகமும் ஒரு நல்ல இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அமைந்துள்ளது. அந்த இளைஞர்களின் அறிவுத் திறனையும், ஒன்றுபட்ட வலிமையினையும் நாம் பயன் படுத்தி சனநாயத்தின் நேர்மையை அறுவடைசெய்ய வேண்டும்.  பணநாயகத்திற்கும், அதன் மூலம் துளிர்க்கும் ஊழலுக்கும் ஒரு முடிவு கட்டுவதன் மூலமே தற்கால இளைஞர்களின் வளர்ச்சியையும் விருப்பத்தையும் நிறைவேற்ற இயலும். சமுகத்தின் கொடிய நோயாக விளங்கும் கருப்புப் பணமும், ஊழலும் விடைபெற வேண்டும்.  நமது சனநாயகத்தை மேலும் பொருள் பொதிந்ததாகவும், துடிப்பானதாகவும், தூய்மையானதாகவும் செப்பனிடுவதற்கு நாம் இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.- எஸ்.என். சாகு, தமிழில் : மனோ.விசயக்குமார்இக்கட்டுரையாளர் எஸ்.என்.சாகு, மறைந்த மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனின் ஊடகச் செயலாளராகவும், தலைமையமைச்சர் அலுவலக இயக்குனராகவும் பணியாற்றியவர். தற்போது   இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைச் செயலகத்தில் பணிபுரியும் இணைச் செயலாளர் ஆவார். இக்கட்டுரையில் தெரிவிக்கப் பட்டுள்ள கருத்துகள் இந்திய நாடாளுமன்றதின் கருத்துகள் அல்ல. கட்டுரையின் அனைத்து அம்சங்களும்  ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துகள் எனக் கொள்க. - (ஆசிரியர்)"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி