14 January 2016 8:45 pm
ஒரு நாடு வளம்பேற வேண்டுமானால் உழவும் தொழிலும் சிறந்தோங்க வேண்டும். இவை இரண்டும் சிறந்தோங்க அதனைச் செய்வோர் நலமாகவும் வளமாகவும் வாழவேண்டும். இன்றைய உழவர்கள் நிலையும் தொழிலாளர்கள் நிலையும் அவ்வளவு வளமாகவும் இல்லை; நலமாகவும் இல்லை. எண்ணி வருத்தப்படவேண்டிய சூழ்நிலையிலேயே உள்ளது. குறிப்பாக உழவர் சமுதாயம் உழைத்து உழைத்து உருக்குலைந்து போய்க் கொண்டே இருக்கின்றது என்ற உண்மை நிலையை ஒத்துக் கொண்டே ஆகவேண்டும். இவர்களை உரிய நேரத்தில் கவனிக்கவில்லையானால் வேர் அழுகிய செடிபோல் நாடே பட்டுப்போகும் என்பதை நமக்கு நாமே ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு இதுதான் வேலை நேரம் என்பது இல்லை உழுபவனுக்கு இரவு&பகல் எந்த நேரமும் வேலை நேரம்தான். விடியற்காலத்தில் அந்த மெல்லிய பூங்காற்றில் அவன் என்றும் படுத்திருந்து சுகம் அனுபவித்ததில்லை. இருட்டை ஒதுக்கிவிட்டு ஏர் பூட்டும் அவனுக்கு விடிவதற்குள்ளேயே வேர்வை சொட்டத் தொடங்கிவிடும். அவனுக்கு உழைப்பில் ஒரே நம்பிக்கை, உழைத்தால் முன்னேறலாம்" என்று யாரோ சொல்லிக் கொடுத்ததைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, இன்னும்- இன்னும் உழைப்பவன். உழைத்து, உழைத்து அவன் கைரேகைகள்கூட காணாமல் போய் விட்டன. விதியை அழித்து எழுதி மாற்றமுடியாவிட்டாலும் கையில் உள்ள விதி ரேகைகளை அழித்து கொண்டவன்;அன்றாட வைகறைக் கருக்கிருட்டைத்தார்க்குச்சியால் கலைத்துவிட்டுஒவ்வொருநாளும் வயலுக்குப் புறப்படும்ஓரேர் உழவனே;உன் வாழ்க்கை யிருட்டொருநாள்தானே விடியுமென்றுதானே காத்திருக்கிறாய்சலியாத வரட்டு நம்பிக்கையில், மேழிபிடித்து மேழிபிடித்துஉள்ளங்கை விதிரேகைகளைஅழித்துக் கொண்டவெகுசுத்தக் கைகாரன் நீ! அவன் தன் ரேகைகளை அழித்துக் கொண்டாலும், பூமித்தாய்க்குத் தினம் தினம் புதுப்புது ரேகைகளை எழுதிப் பொன்னும் மணியும் விளைவிக்கக் கருக்கலிலேயே கடின உழைப்பை மேற்கொண்டவன். அவன் பேராசைக்காரன் அல்ல, அவனுக்கு அமர்ந்து உண்ணக்கூட நேரம் வாய்ப்பதில்லை. பழைய சோறும் பச்சை மிளகாயும் தான் டிபனும் சாப்பாடும் விருந்தும் எல்லாமும். நமக்கு ஆண்டவன் அளந்தது இவ்வளவுதான் என்று கிடைத்ததைக் கொண்டு சமாதானம் அடைந்துவிடுபவன். அவனை மேலும் சிந்திக்காத அளவுக்கு இந்தச் சமுதாயம் அவனுக்குச் சூட்டி மகிழும் புகழ் மாலைகள், காலங்காலமாக வழங்கிவரும் பாராட்டுப் பழமொழிகள் இவைகளைக் கேட்டுக் கேட்டு அவனது உள்ளம் மட்டுமல்ல, அவன் உடல்கூட இப்பொழுது புண்ணாகி வருகின்றது.உன் கொழுமுனைக் கூர்மையால்நித்தநித்தம்புத்தம் புதிய தனரேகைகளைப்பூமியில் எழுதுகின்றாய்.ஆனால்பழைய சோறும் பச்சைமிளகாயுமேஉனக் ‘களந்த படி’ யென்றுசமாதானச் சாந்தி கொள்கிறாய், உலகளந்த பழமொழிப் பாராட்டுகளின்முத்திரைக் காயங்களால்முதுகு புண்ணானவனே! இந்த நாட்டின் முதுகெலும்பே! அச்சாணியே! நீ கொதிக்கும் வெயிலிலும், கொட்டும் மழையிலும், நடுநடுங்கும் பனியிலும், கல்லிலும், முள்ளிலும் காலம் இடம் பாராது உழைக்கின்றாய் காலில் முள்தைத்து, ரத்தம் கசிந்தாலும் இந்த மண்ணே நமக்கு மருந்து என்று இரத்தம் உறைய மண்ணைத் தூவிவிட்டு மறுபடியும் உழத் தொடங்கிவிடுகிறாய். இந்தச் சமுதாயம் இந்தக் கடின உழைப்புக்குப் பரிசு தராவிட்டாலும், பயிர்கள் செழித்து வளரும்போது, -பூத்துக் குலுங்கும் போது, காய்த்துக் கனியும்போது நீ பட்ட துன்பத்தையெல்லாம் அவற்றைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்துவிட்டு-மறந்துவிட்டு மறுபடியும் உழத் தொடங்குகிறாய். ஆனாலும் நீ கண்டது என்ன? எதிர்பாராத விதமாய் அமோக விளைச்சல் விளைந்து விட்டாலும், விளைவித்த பொருளுக்கு இவ்வளவுதான் விலை என்று சொல்லி விற்கவும் உனக்கு வழியில்லை; உரிமையும் இல்லை. அமோக விளைச்சல் என்றால் இங்கே விலைமலிந்து போய், விளைத்ததை வெட்டிக் குப்பையிலே கொட்டும் அளவிற்கும் (வெங்காயம்), வயலோடு நெருப்பு வைக்கும் (கரும்பு) அளவிற்கும் நிலைமை மோசமாகி விடுகிறது. இந்தப் போகத்திலாவது எதாவது எடுக்கலாம் என்றே நீ மீண்டும் கடன் தேடி அலைகின்ற பரிதாபத்துக்கு ஆளாகின்றாய்; பிராமிசரி நோட்டு எழுதி எழுதியே நீ ஒரு கொத்தடிமைபோல் ஆகிவிட்டாய்! தொழிலைவிட்டு விடலாமா என்றால் வேறு என்ன செய்வது என்று, எண்ணி எண்ணிப்பார்த்து மீண்டும் ஏரைத் தோளில் சுமந்து செல்கிறாய்.அதிசயமாய் ஒர் அமோக விளைச்சலில்உன் களத்து மேட்டில் தானியங் குவியும்போதுஅதை அடித்துக் கொண்டு போவதோமலிவு விளைப் புயல். ஆனால் இந்தச் சமுதாயத்தில் பேனாவால் உழுகின்ற, சூடாக உண்பதால் மட்டுமே வேர்வையைக் காணுகின்ற, உடம்பு இளைப்பதற்கு மாத்திரைகள் சாப்பிடுகின்ற மனிதர்கள் எல்லாம் "சொகுசாக" நகத்தில் அழுக்குப் படாமல் வாழ்கிறார்கள். இப்படி ஒரு பகுதி அதிகார வர்க்கம். இன்னும் ஒரு பகுதி மேடைகளில் முழங்குவதும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் தொழிலாகக் கொண்டவர்கள், பணமாகவே அறுவடை செய்பவர்கள். இவர்கள்தான் இந்த நாட்டை ஆளுகின்ற வர்க்கம். இந்த இரண்டு வர்க்கத்தையும் பிழைக்க வைக்கும் கருப்புச் சந்தைக்காரர்கள், நகராமலேயே எல்லாவற்றையும் நகர்த்தும் ஆற்றல் படைத்தவர்கள், இவ்வளவும் சேர்ந்து 20 விழுக்காடுகூட இல்லாத இவர்கள் எல்லாம்தான், இந்த நாட்டை -80 விழுக்காடு மக்களை ஆட்டிப் படைக்கிறார்கள்.இங்கேகாகிதக் குப்பை மேடுகளில்‘மட்டப் பேனா’ கலப்பையினால்‘ஆபாச உழவு’ நடத்துபவனெல்லாம்எப்படிச் ‘சொகுசை’ அறுவடை செய்கிறான்!‘மேடைக் கழனி’ களில்‘வெறுவாய் நடவு’ போடுபவனெல்லாம்எத்தனை ‘பணமுதல்’ எடுத்துவிடுகிறான்.‘பகிரங்க இருட்டுச்’ சந்தையில்‘பழுத்த புளுகுக்’ கடை விரிப்பவனெல்லாம்‘கொழுத்த கறுப்பு’ எப்படிக் கொட்டிக் கொள்கிறான்! ‘முரட்டு உழைப்பின் முழு உருவமே’ அவர்கள் எல்லாம் நிலவொளியில் விருந்துண்டு மகிழும் போதுதான், நீ சாணம் மணக்கும் உடம்பை வரப்பே தலையணையாய், வைக்கோலே பஞ்சு மெத்தையாய், தரையில் கிடத்தி, இந்தப் போகத்துப் பருத்தியிலாவது நமது கடன் தொல்லையைப் போக்கிக் கொள்ள முடியாதா? என்று வானத்தை அண்ணாந்து பார்த்துக் கனவு காண்கிறாய். ஆனால் உன் கனவுகளில்கூட கற்பனை கலப்பதில்லை. ஒட்டியாணமும் வைரமூக்குத்தியும் என்றுமே வருவதில்லை. நடைமுறை வாழ்விலேயே நடை தள்ளாடும் உனக்கு கற்பனை எங்கிருந்து வரும்? யார் யாரோ சுகமாக வாழ்கிறார்கள். ‘நீ மட்டும் இப்படியே இன்னும் இருப்பதற்குக் காரணம்? இந்த தேசம் புதுமையான தேசம். உன்னை மறப்பதே இல்லை என்று மேடையில் முழங்குவார்கள், பிறகு நினைப்பதே இல்லை என்று தங்களுக்குள்ளேயே முடிவெடுத்துக் கொள்வார்கள். இத்தகையவர்கள் தான்-உன்னால் வாழ்கிறவர்கள் உன்னை ஆளவும் செய்கிறார்கள். இந்தக் கொஞ்சம் பேர்-அதிகம் பேர்களை ஆளும் காரணம் அவர்களில் ஒவ்வொரு பகுதியினரும் ஒவ்வொரு அமைப்பின் கீழ் ஒன்று சேர்ந்து தங்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கை இவ்வளவு என்று காட்டுகிறார்கள். நீயோ தனி மரமாய், தனியேர்க்காரனாய், காலங் காலமாக வாழ்ந்து வருகிறாய். தனிமரம் தோப்பாகாது என்று நன்றாகத் தெரிந்த நீ அதை வாழ்க்கையில் கடைப் பிடிக்காமல், கூட்டு ஏர் கட்டிக் கொள்ளப் பழகாமல் இருப்பது தான் இந்த அவல நிலைமைக்குக் காரணம் என்பதை இப்போதாவது கண்டு கொள். அதனால் மக்களாட்சி முறை என்ற மண்பாண்டத்தில் பல ஓட்டைகள் விழுந்துவிட்டன என்பதை நாம் உணர்ந்தே ஆகவேண்டும். ஓட்டையை அடைக்கப் போய், பாத்திரத்தை உடைத்துவிடக் கூடாது. பாத்திரத்தின் மீது பழி போட்டுப் பயனில்லை. அதைப் பயன்படுத்துகின்றவர்களின் குற்றம் தான். அந்தப் பாத்திரத்தை வலிமையான இரும்புப் பாத்திரமாக, எந்த சக்திக்கும் வளைந்து கொடுக்காத அல்லது உடைக்க முடியாத எஃகுப் பாத்திரமாக மாற்றி அமைக்க வேண்டும். அதற்கு யாரையும் எந்தத் தலைவரையும் இனித் தேடி அலைந்து பயனில்லை. காரணம் அத்தகைய நல்ல தலைவர்களை நாம் காண்பதே அரிதாகிவிட்டது. இனி நமக்கு நாமே தலைவர்கள் ஆவோம். நமக்கு நாமே வழியமைத்துக் கொள்வோம். நல்லதைச் செய்வோம்; அல்லதைத் தவிர்ப்போம். தீமைகளைத் தட்டிக் கேட்கும் திறம் பெறுவோம். அதில் நமக்கு நாமே தலைவர்கள் ஆவோம். -இல.செ.கந்தசாமி"