22 October 2017 12:09 pm
முதன்மைச் சாலையிலிருந்து சிற்றூருக்குப் பிரியும் பாதை. பாதையின் இருபுறமும் அடர்ந்த உயிர்வேலி, வேம்பு, பிரண்டை, ஆல், கருவேப்பிலை, கள்ளி, வாதநாராயணன், நொனா இன்னும் பல்வேறுபெயர் தெரிந்ததும் தெரியாத செடி, கொடி, மரங்கள் எல்லாம் சேர்ந்ததே அந்த உயிர் வேலி. சமீபத்தில்தான் அடைமழை பெய்து விட்டிருக்க வேண்டும். எங்கு பார்த்தாலும் பல்வேறு வண்ணங்களில், பல்வேறு வடிவங்களில் மலர்கள் மலர்ந்து மனதை மயக்கும் நறுமணம் மூக்கை துளைத்தது. மண்தரைதான் மாட்டு வண்டிகள் செல்லுகின்ற சீரான வழித்தடம். தோளில் மாட்டியிருந்த சற்றேபெரிய துணிப்பையில் என்னுடைய இரண்டாமாண்டு பி.எஸ்சி, பாடசம்பந்தமான புத்தகங்கள், புலர் காலைப் பொழுதாகையால், காற்றும் சில்லென்று வீச என் உடலுடன் புத்தகங்களும் சேர்ந்து அனுபவித்து மகிழ்ந்தது.அதோ ஊர் நுழைவாயிலில் சுமைதாங்கி கல் மரம். அது எங்கள் கிராமத்தின் வரவேற்பு வழியனுப்புக் கூடமாகும். வெளியூரில் இருந்து ஊருக்கு திரும்புபவர்கள் கண்ணில் அந்தப் பெரிய மரம்தான் தன் கிளை, இலைகளை காற்றில் அசைந்து வரவேற்கும். அம்மரத்தைப் பார்த்தாலே அம்மா, அப்பா, உற்றார், உறவினர் அனைவரையும் ஒருசேரப் பார்த்ததாக ஒரு உணர்வு ஏற்படும். அரைநூற்றாண்டாய் ஓங்கி உயர்ந்து அடர்ந்து வளர்ந்து நிற்கும் அரச மரம் அது. அதனோடு பின்னி பிணைந்து வளர்ந்துள்ள செழுமையான வேப்பமரம். அதனை சுற்றி நாற்புறமும் அடிப்பகுதியில் நெஞ்சளவு உயரத்திற்கு மண் கொட்டி, பாறைகற்களை அண்ட கொடுத்திருப்பார்கள். அதன் மீது ஏறி அமர்ந்து கொண்டு உற்றார் உறவினர்களை வழியனுப்புவதும் வரவேற்பதுவும் செய்து வந்தனர்.எதிரில் இராமசாமி சித்தப்பா வந்தார். என்னப்பா தம்பி கல்லூரியிலிருந்து இப்பத்தான் வர்றியா? என்ன, படிப்பெல்லாம் எப்படி போவுது? என்றார். கல்மிசமில்லாத அவர் எனது சொந்த சித்தப்பா அல்ல. அப்பாவின் நண்பர். சிறுவயசிலேருந்து நாங்கள் ஊர்மக்களை ஒருவரையொருவர் உறவு முறை வைத்துதான் அழைப்போம்.வீட்டை அடைந்தவுடன் அம்மா, அப்பா முகத்தில் ஆனந்தம் பொங்கியது. ‘ஆத்துக்கு போய் சீக்கிரம் குளிச்சுட்டு வாடா! சுடச்சுட இட்லியும் சோளத்தோசையும் உனக்காகக் காத்திருக்கிறது’ என்றார் அம்மா. நான் புத்தகப்பையை வைத்துவிட்டு துண்டு ஒன்றை தலையில் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு, பக்கத்து வேப்பமரத்தில் வேப்பங்குச்சி ஒடித்து பல் துலக்கிக் கொண்டே ஆற்றை நோக்கி நடந்தேன். வழியில் ஊர்ப் பெரியவர்களால் ஆங்காங்கே நட்டுப் பராமரிக்கப் படுகின்ற அரசமரங்கள், வேப்பமரங்கள் வாதநாராயணன் மரங்கள் ஆற்றை நெருங்குகையில் குப்பென்று மயக்கம் வருகின்ற அளவிற்கு நறுமணக்காற்று நாசியில் மோதியது. ஓகோ! இலுப்பைத் தோப்புக்குள் நுழைந்து விட்டேனோ? அடியில் பச்சரிசி தவிடுபோல் மெதுமெதுக்கும் மணற் குவியல், ஆங்காங்கே பழுப்பு நிறத்தில் இலுப்பைக் காய்களும் கண்ணில் பட்டன. நன்றாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு ஆற்றில் ஓடும் நீரைத் தொட்டுக் கொண்டு வளர்ந்திருக்கும் செவ்வரளி தோட்டத்துக்குள் நுழைந்து சிவப்பு ரோசா வண்ணத்தில் பூத்திருந்த அரளிப் பூக்களின் வித்தியாசமான வாசனையை நுகர்ந்துகொண்டே நடக்கையில் நான்கு நான்கு சதுர இதழ்களாகப் பூத்திருந்த வெள்ளை, ஊதா வண்ணப் பட்டிப் பூக்களை ரசித்துக்கொண்டே ஆற்றில் இறங்கினேன். ‘சரசர’ என நீண்ட பாம்பு ஒன்று அருகில் உள்ள புற்றுக்குள் நுழைவதைப் பார்த்து திடுக்கிட்டேன். நாம் அதற்கு இடையூறு செய்யாதவரை பாம்புகள் நம்மை துன்புறுத்தாது என்பதை தெரிந்து வைத்திருந்தேன்.கோமுகி ஆற்றில் இடுப்பளவு நீர் ஓடிக்கொண்டிருந்தது. உடலும் மனமும் மகிழ்ச்சியில் குளிரும்படி மூழ்கி மூழ்கி குளித்தேன். உலகிலேயே மிகப் பெரிய சந்தோசம் இதைவிட வேறில்லை தண்ணீர் என்றாலே தன்மை குளிர்ச்சி என்ற பொருள்தானே. கல்லூரி விடுதியில் தொட்டியில் இருந்து குவளை குவளையாக மொண்டு குளித்தது நினைவுக்கு வந்தது. நேரம் போனதே தெரியாமல் ஒருமணிநேரம் கழித்தபிறகே அம்மா சீக்கிரம் வரச்சொன்னது நினைவுக்கு வந்தது. கரையேறினேன். வயிறு பசிக்க ஆரம்பித்தது.வீட்டிற்கு வேறு வழியில் திரும்பினேன். ‘ஊய்..’ எனத் தலைவிரித்தாடும் உயர்ந்த சவுக்கு மரங்களினூடே, அதன் விளைந்த காய்ந்த விதைகள் பழுப்பு நிறத்தில் முள்முள்ளாக ஆமணக்குக் காய்போல் கால்களில் இடற, மாந்தோப்பினுள் நுழைந்தேன். அப்பப்பா! இளம் மாந்தளிர்களின் பச்சை மாங்காய் வாசனையும் மாந்தோப்புக் குயில்களின் இனிய கானத்தையும் ரசித்தபடியே மாந்தோப்பை ஒட்டியிருந்த, சிதிலமடைந்துபோன திரௌபதியம்மன் கோயிலின் மதிற்சுவரைத் தாண்டி, அருகில் கழுத்தளவே உள்ள கூத்தாண்டவர்(அரவான்) சிலையை பயத்தோடு ஓரப் பார்வையில் பார்த்து வணங்கிவிட்டு ஒரே ஓட்டமாக வீட்டை அடைந்தேன். தெருப் பக்கமாக வீட்டிற்குள் நுழைந்தபோது திண்ணைக்குப் பக்கத்தில் பச்சைப் பசேலென அறுவடை செய்த எள்ளுக் கட்டைகளை வட்ட வடிவில் போர் அமைத்திருந்ததை சிறிது சிறிதாக விவசாய மக்கள் பிரித்து காயவைத்துக் கொண்டிருந்தனர். அடர்ந்த வெப்பக்காற்று வெண்புகையாக நீராவிபோல வெளிவந்து எள்ளுச் செடியின் நறுமணம் மனத்தை நிறைத்தது. அம்மா சுடச்சுட தட்டிலே பூப்போன்ற இட்லிகளை அடுக்கினார்கள். மணிலாப் பயிரை வறுத்து தயாரித்த மணமுள்ள, வடவம் போட்டுத் தாளித்த சுவையோ வாயில் எச்சில் ஊறவைத்தது. சட்னியை ஒருகுண்டான் அளவுக்கு அருகில் வைத்து என்தட்டில் ஊற்றினார்கள். சோளத்தட்டைப் போட்டு எரித்த அடுப்பில் தோசைக் கல்லில் தோசையை ஒவ்வொன்றாக அம்மா போடப் போட ருசித்து ருசித்து வயிறார உண்டேன். இதெல்லாம் இன்றைக்கு ஐம்பதாண்டுகளுக்கு முன் நடந்தது.அதே மண்ணின் மணம் தற்போது எங்கே போயிற்று? மனம் துடிதுடிக்கிறது.வருங்காலத்திலாவது இந்த மண்ணின் பழைய மணம் உருவாகும் வகையில் மாற்றத்தைக் கொணர முயற்சிப்போமா? சிறுவயதில் படித்த‘அறம்செய விரும்பு, ஆறுவது சினம்…ஓதுவது ஒழியேல்…’போன்று என்மனம் தற்போது மண்ணை மறவேல் என்று பாடிக்கொண்டே சென்றது.