மறத்தமிழரின் வீரம் - தமிழ் இலெமுரியா

15 October 2016 5:18 pm

உலக மாந்தர்களில்  மூத்த இனமாம்  தமிழினம். வீரத்திலும்  பண்பாட்டிலும் சிறந்தவர்களாக விளங்கிய தமிழினத்தோரே, இவ்வுலகிற்கு நாகரிகத்தையும்  வாழ்வியலையும்  கற்றுக்  கொடுத்தவர்கள். கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, நாடகக்கலை, இசைக்கலை, ஆடற்கலை, தற்காப்புக்கலை, யோகாகலை, பேச்சுக்கலை என பல்வேறு கலைகளை தன்னகத்தே கொண்டிருந்தனர். சங்க இலக்கியம், சங்கம்  மருவிய கால இலக்கியம், பக்தி இலக்கியம், தற்கால இலக்கியம்  என தன்  வாழ்வியலோடு இணைத்து இலக்கியங்களைப்  படைத்தவர்கள். தன்  உயரிய கலைகளையும்  பண்பாட்டையும்  மதிநுட்பத்தையும்  இவ்வுலகிற்கு வழங்கிய தமிழர்கள்  இன்று பிற நாட்டவரால்  பிற இனத்தவரால்  பல்வேறு சுரண்டல்களுக்கு ஆட்பட்டு எங்கெங்கோ சிதறிக்  கிடக்கின்றனர். தன்  வீரத்தையும்  தன்  மொழியின் வளத்தையும்  அறியாது உலாவுகின்றனர். இதிலிருந்து மீள வேண்டுமெனில்  தமிழர்கள்  தன் வரலாற்றை முதலில்  அறிந்து கொள்ள வேண்டும். அவற்றில்  சில வருமாறு..சிறு குழந்தை இறந்தாலும் வாளால் மார்பில் கீறுவர்: சேர மன்னன் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானிடம் தோற்று சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக் காவலர்கள் அவரை மிகவும் கொடுமைபடுத்தினர். அவருக்கு பருக தண்ணீர் தரும் முன்னர் மிகவும் அவமரியாதையாக நடத்தி, காலம் தாழ்த்தி தண்ணீர் வழங்கினார். இதைக் கண்ட சேரன் கணைக்கால் இரும்பொறை அவர்களிடம் எம் மண்ணில் சிறு குழந்தை இறந்தாலும் இறந்த குழந்தையின் மார்பில் வாளால் கீறியே அம்மழலையைப் புதைப்பர். அத்தகு வீரமும் மானமும் கொண்டவர்கள்  நாங்கள்" எனக் கூறி அதை மெய்பிக்கும் வகையில் காவலாளி வழங்கிய நீரைப்  பருகாது தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.நடுகல் வழிபாடு போர் நிகழ்ந்தால் தமிழ்ப் போராளிகள் வீரமுடன் முன்னின்று போரிட்டு புறமுதுகு காட்டாமல் விழுப்புண்ணுடன் போரிடுவர். ஒருவேளை இறக்க நேர்ந்தாலும் அவர்களின் புகழை அவர்களை புதைக்கும் கல்லறைகள் மேல் கல்நட்டு, நடுகல் வழிபாடு செய்து அப்புகழுடையோரை போற்றி வணங்குவர். இந்நடுகல் வழிபாட்டை தென் ஆப்பிரிக்க மக்களும் அமெரிக்காவின் மாயோன் இனத்தவரும் பின்பற்றுகின்றனர். இவை நமக்கும் அவர்களுக்கும் உள்ள வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைக்கிறது.வீரப் பெண்டீர் புறநானூற்று பாடலில் பெண்ணொருத்தி முறத்தாலேயே தன் மேல் பாய்ந்த புலியை அடித்து விரட்டினாள் என்றும் மற்றொருத்தி தன் கணவர் போரில் வீரச்சாவு அடைந்ததும், தன்னின் செல்லக் குழந்தையையே அணியப்படுத்தி தன் தாய் நாட்டிற்காகப் போரிட அனுப்பியக் காட்சியும் வீரத்தை நெஞ்சுரமாக கொண்டவர் தமிழ்ப் பெண்கள் என்பதை பறைசாற்றுகிறது.புலிப்பல்லும் இளவட்டக் கல்லும் பழங்காலத்தில் ஓர் இளைஞனுக்கு திருமணம் ஆக வேண்டும் என்றால், அவன் வீரத்தோடு புலியைக் கொன்று அதன் பல்லைப் பிடுங்கி, அதை திருமணம் புரியும் மங்கைக்கு மங்கல நாணாக அணிவிக்க வேண்டும். ஊருக்கு நடுவே உருண்டை வடிவமான ஒரு கனமான கல் இருக்கும். அதன் பெயர் இளவட்டக்கல். அக்கல்லை இளைஞன், இரு கைகளிலும் நெஞ்சிற்கு மேல் தூக்கி, தான் வலுவுள்ளவன் என மெய்ப்பித்த பிறகே அவனுக்கு திருமணம் புரிய பெண்ணைத் தருவர்.மஞ்சுவிரட்டு  தமிழர் திருநாளும் பொங்கல் பெருநாளுமான தைத் திங்களில், காளை மாட்டை கொம்புச் சீவி ‘ஏறு தழுவுதல்’, ‘மஞ்சு விரட்டு’ என்னும் ‘ஜல்லிக்கட்டு’ போட்டி வைப்பார்கள். இளைஞர்கள் இவ்வீர விளையாட்டில் பங்கெடுத்து காளை மாட்டை அடக்கி பரிசாக பணத்தையோ, பொன்னையோ, பதக்கத்தையோ போட்டி நடத்துபவர்களிடம் இருந்து பெறுவர். அவ்வீர இளைஞருக்கு பெண்ணையும் திருமணம் செய்து வைப்பார்கள். பாகிசுத்தானில் இருக்கும் அரப்பா, மொகஞ்சதாரோவில் 5, 000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகம் இருந்தது. அங்கும் ‘மஞ்சு விரட்டு’ நடந்ததாக அகழ்வாராய்ச்சி கல்வெட்டுகளை ஆய்ந்த ஈராசு அடிகளார் தம் ஆராய்ச்சியில் வெளிப்படுத்தி உள்ளார்.கல்லணை உலகின்  முதல்  நீர்த்  தேக்கத்  திட்டம்  எனவும்  உலகின்  பழமை வாய்ந்த அணை என்றும்  போற்றப்படும்  கல்லணையைக்  கட்டியவர்  கரிகாலச்  சோழன்  எனும்  மறத்  தமிழர். 2000 ஆண்டுகளுக்கு முன்பே  இவர்  இலங்கையை ஆண்ட மன்னனை வென்று, அங்குள்ள போர் வீரர்களை கொண்டு வந்து அவர்களை பணியாற்ற வைத்து கல்லணையைக் கட்டினார் என வரலாறு கூறுகின்றது.வீர விளையாட்டுகள் தமிழர்கள் வீர விளையாட்டான களரி, சுருள், கம்பு, வாள் போன்றவற்றை சுழற்றுதல், ஈட்டி எறிதல், மற்போர் புரிதல் போன்றவற்றில் மிகவும் சிறந்து விளங்கினர். தமிழர்களின் மற்றொரு வீர விளையாட்டாகவும் தற்காப்பு கலையாகவும் திகழ்வது சிலம்பம். இது கி.பி.6 ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தில் இருந்ததற்கான ஆதாரப்பூர்வமான சிற்பங்கள் தாமல் கிராமத்தில் (காஞ்சிபுரம்) அமைந்துள்ளது. முதலாம் இராசேந்திர சோழன் புலிக்கொடியை சின்னமாகக்  கொண்ட முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி. 1012 – கி.பி.1044) புலியைப் போல் பாய்ந்து இலங்கை முழுவதையும் வெற்றி கொண்டார். இவர், பாடலி புர மன்னர் மகிபாலனைத் தோற்கடித்து ‘கங்கை கொண்ட சோழன்’ என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.  மேலும்  கிழக்கு ஆசிய நாடுகளான சுமத்திரா, மலேசியா, கடாரம் (பர்மா) ஆகிய நாடுகளையும் வெற்றி கொண்டார்.  இதனால் ‘கடாரம் கொண்டான்’ என்றும் அழைக்கப்பட்டார். இந்தோனேசியா, தாய்லாந்து, ஜாவா, மாலத்தீவு, வங்காளம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் இவர் கைபற்றிய நாடுகளே.மிகப்பெரிய கப்பல் படை முதலாம் இராசேந்திர சோழனின் படையில் 300 முதல் 500 கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. தன் வலிமைமிக்க கப்பற்படையின் மூலம் கடல் கடந்து வெளிநாடுகளுக்கு படையெடுத்துச் சென்று வெற்றி வாகை சூடிய முதல் மன்னர் இவரே. இவர்கள் காலத்தில் வங்காள விரிகுடா கடல்பகுதி ‘சோழ ஏரி’ என்று அழைக்கப்பட்டது.இத்தகைய தமிழர்க்கு கடலோடிகள் என்று பெயர். உலகுக்கே கப்பல்  படையை அறிமுகம்  செய்தவர்  தமிழர்களே. நேவி (Navy) என்னும் சொல் ‘நாவாய்’ என்னும் கப்பல் சொல்லிலிருந்து பிறந்ததே!  தமிழில் கட்டு மரம் ஆங்கிலத்தில் கேட்டமரான் (CATAMARAN) ஆனது. அந்நியரின் பண்பாட்டுப் படையெடுப்பை தடுத்து நிறுத்தி, தமிழைக் காப்பாற்றியப் பெருமை முதலாம் இராசேந்திர சோழனின் தந்தை இராசராச சோழனையேச்  சாரும். சோழர்கள்தான் முதன் முதலில் பெரிய அரசாட்சியை தென்பகுதியில் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.வலிமை மிக்க மூவேந்தர் ஆட்சி சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்கள் ஆட்சி புரிந்தனர். வலிமை மிக்கவர்களாக திகழ்ந்தனர். ஆகையால் எந்நாட்டு மன்னர்களும் இவர்களை வென்றிட முடியவில்லை. இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டதால் பிற நாட்டினர் நம் நாட்டில் நுழைய வாய்ப்பாகியது.பழந்தமிழரின் அறிவியல் திறன் தமிழ் மன்னர்கள் தங்கள் நாட்டைப் பாதுகாக்க அறிவியல்  நுட்பத்துடன்  கூடிய பல இயந்திர போர்க்  கருவிகளை அப்போதே பயன்படுத்தியுள்ளனர். மதுரைக் கோட்டையில் எதிரிகளைத் தாக்கும் வகையில் இயந்திர வில் பாயும் பொறி, கல்லெறியும் கவண்பொறி, கொதிக்கும் எண்ணெய் இறைக்கும் பொறி, உருகியச் செம்புக் குழம்பை பகைவர் மீது பீய்ச்சும் பொறி, கற்களை வீசும் கூடப்பொறி, கண்களைக் குத்தும் கிச்சிலிப்பொறி, அகழிக்குள் தள்ளும் கனவப்பொறி போன்றவை பொறுத்தப்பட்டிருந்தன என சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.இந்திய விடுதலையில் தமிழர் பங்கு வெள்ளையர் நம்மை அடிமைப்படுத்திய போது அவர்களை எதிர்த்து வீரமுடன் போராடி உயிர்நீத்த ஈகிகளில்  தமிழர்களே பலர். அவர்களில் ஒரு சிலரை மட்டும் இங்கு குறிக்கப்படுகின்றது. முதன் முதலில் வெள்ளையரை எதிர்த்தவர் பூலித்தேவன். அழகு முத்துக்கோன் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டார். கட்டபொம்மனிடம் தளபதியாக இருந்த சுந்தரலிங்கம் தன்னுடலில் தீப்பற்ற வைத்து வெள்ளையர் படைக்கலனில் (ஆயுத கிடங்கில்) குதித்து தானும் இறந்து படைக்கலன்களை சுட்டெரித்தார். வீரமங்கை வேலு நாச்சியார், வெள்ளையரை எதிர்த்து போர்க் கொடி உயர்த்தியவர். அவரின் தோழி குயிலியும் உடலில் தீப்பற்ற வைத்து, வெள்ளையரின் படைக் கலன்களை அழித்தார். மருது பாண்டியர், தீரன் சின்னமலை, கொடிகாத்த குமரன் போன்றோரும் தம்முயிரை ஈந்தனர்.  வ.உ.சி. வெள்ளையருக்கு எதிராக ஒரு கப்பலையே ஓட்டியவர். அதனால் சிறையில் செக்கிழுத்தவர். காந்தியும் நேதாஜியும் தமிழருக்கு பாராட்டு தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையருக்கு எதிராக காந்தியாருடன் தில்லையாடி வள்ளியம்மை போராடினார். வெள்ளையர் தந்த கடுமையான சிறைத் தண்டனையாலும் கடுமையான அம்மைநோய் தாக்கத்தாலும் தன் 16 அகவையில் இறந்து விடுதலை ஈகியானார். தமிழர்கள் தென் ஆப்பிரிக்காவில் போராடி துணிவுடன் முன் நின்றமையைக் கண்டு காந்தியார் "தமிழர்களின் வீர, ஈக உணர்வை பிற மொழியினரும் பின்பற்ற வேண்டும்" என மதிப்புரைத் தந்தார். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர்களின் பங்கும் நன்கொடையும் அதிகமாக இருந்தன. இதைக்  கண்ட சுபாசு சந்திர போஸ் ‘‘அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.மறைக்கப்பட்ட தமிழர்களின்  ஈகம் 1806 ஆம் ஆண்டு வேலூரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து உள்நாட்டு கலகம் (சிப்பாய் கலகம்) நடந்தது. இப்போரில் 1400 தமிழர்கள் வெள்ளையரால் துப்பாக்கியாலும் பீரங்கியாலும் சுடப்பட்டு இறந்தனர். ஆங்கிலேயர்கள் அவர்களை ஒரு பெரிய குழியில் தள்ளி புதைத்தனர். அதே போல், சீக்கிய போர் வீரர்களை ஜாலியன் வாலா பாக் என்னும் இடத்தில் 379 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இதன்  நினைவாக, பஞ்சாபிலுள்ள சீக்கியர்கள் ஜாலியன் வாலா பாக்கை நினைவிடமாக்கியுள்ளனர். பஞ்சாபிகள். ஆனால்  ஆயிரக் கணக்கில் உயிரிழந்த தமிழ் வீரர்களுக்கு வேலூரில் எந்தவொரு சின்னமும் எழுப்பவில்லை.வடநாட்டினர் திரித்துக் கூறல் 1806 இல் வேலூர் உள்நாட்டு (சிப்பாய்) கலகமே முதலில் நடந்தது. ஆனால் 1857 ஆம் ஆண்டில் மீரட்டில் நடந்த உள்நாட்டு கலகமே முதலில் நடந்தது என வடநாட்டோர் திரித்துக் கூறுகின்றனர். ஆங்கிலேயரை எதிர்த்து பெரியார், காமராசர், இராஜாஜி, பக்தவச்சலம், கே.பி.சுந்தராம்பாள் உட்பட பல தலைவர்கள்  சிறைவாசம்  சென்றுள்ளனர். வரலாறு நீளுமென்று சுருக்கமாய் ஒரு சிலரை மட்டும் குறிப்பிடலாயிற்று. வடநாட்டு ஈகிகளை தமிழர்ப் படைப்புகளிலும் பதாகைகளிலும் முன்னிலைப் படுத்துகின்றனர். ஆனால் தமிழ் ஈகிகளை?ஈழத்தில் தமிழர் முதன் முதலில் இலங்கையை ஆண்டவர்கள் (தொல்) தமிழ் அரசர்களே. 1505 ஆம் ஆண்டில்தான் போர்த்துகீசியர்கள் இலங்கைத் தீவில் காலடி  எடுத்து வைத்தனர். தமிழர்களின் யாழ்ப்பாண அரசு, கடற்படை தரைப்படை வலிமையோடு இருந்ததாக போர்த்துகீசியர் மற்றும் ராஜா வழி போன்ற சிங்கள வரலாற்று நூல்களிலிருந்தும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.இலங்கையில் தொல்குடித் தமிழர் இலங்கையில் தொல் குடியாக வாழ்ந்து வருபவர்கள் தமிழினத்தோரே! இலங்கைக்கு விடுதலை கிடைத்த போது சிங்களருடன் இணைந்து வாழ விரும்பிய நல்லெண்ணத்தாலும் வெள்ளையரின் பிரித்தாலும் சூழ்ச்சியாலும் சிங்களவரின் தீய எண்ணத்தின் கொடுமையாலும் தமிழரின் உரிமைகள் பறிக்கப்பட்டு நாலாந்தர குடிமக்களாகவும் ஏதிலிகளாகவும் ஆக்கப்பட்டனர். எல்லா தமிழ் குடிமக்களும் சமத்துவம் என்னும் கொள்கை கோட்பாடுகள் அடங்கிய உரிமைச் சட்டம் தகர்க்கப்பட்டது. உலகில் 235 நாடுகளில் தமிழர்கள் விரவியுள்ளனர்.  சங்க காலத்தில் வீரமுடன் வாழ்ந்த தமிழினத்தோர், தற்போது தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் கொள்கையற்ற அரசியலிலும் மட்டைப் பந்து போட்டியிலும் மதத்திலும் சாதியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு தமிழருக்கு ஊறு நேர்ந்தால் தமிழினம் அழிக்க நேர்ந்தால் தீக்கோழி மணலில் அதன் தலையை புதைத்துக் கொண்டு இருப்பதைப் போன்று காணா விழியினராய் கேளா செவியினராய் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழா! சோரம்  போனவராய்  சூழ்நிலைதனிலே சிக்காது போர்ப்  பரணி பாடி, புறநானூற்று மறவனாய்  வீரம்  நெஞ்சிலேற்றி வெற்றி பெற முனைவோம் வாரீர்!  - மதலை மணி, பெங்களூர்"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி