வடநாட்டு அரசியல்வாதிகள் தமிழர்களைச் சந்தேகக்கண் கொண்டே பார்க்கிறார்கள் - தமிழ் இலெமுரியா

17 November 2016 4:15 pm

வீர. சந்தானம் தமிழுணர்வாளர்கள் மத்தியில் கடல்முழக்கம் போல் ஓயாது ஒலிக்கிற ஒரு பெயர். அவர் பேசும்போது பலவேறு உணர்ச்சி அலைகள் பலவேறு உருவம் கொள்ளும். திருவள்ளுவரின் தாடி அடையாளத்துக்குப் பின் கருமையும் வெண்மையும் கலந்த முரட்டுத்தாடி புகழ் பெற்றதாகும். வீர. சந்தானம் ஓவியர். காவேரித் தண்ணீர் குடித்து வளர்ந்த கலைஞர். நடுவண் அரசின் நெசவாளர் பணி மையத்தில் துணை இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.  பறவை தனது இறக்கைகளின் அரவணைப்பில் குஞ்சுகளை அரவணைப்பது போல பலரையும் அரவணைப்பார்; தாய்ப்பறவை தனது குஞ்சுகளை இரை தேட விரட்டியடிப்பது போல, பலரையும் விரட்டி அடிப்பார். வீர. சந்தானத்தின் தொடக்க கால ஓவியம் முதல் இன்றைய ஓவியம் வரை தேர்ந்தெடுத்த  ஓவியங்களின் கண்காட்சி ஒருமாத கால அளவிற்கு, சென்னை தட்சிண் சித்திராவில் நடைபெற்றது. ஓவியக் கண்காட்சிக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஓவியர்கள் வருகை தந்து உணர்வு ஓர்மையை வெளிப்படுத்தினர். திரளான பார்வையாளர்களை ஓவியங்கள் ஈர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது. சந்தானம் குணச்சித்திரத் திரை நடிகர். புராண நாடகமேடை நடிகர். உலைக்களத்தின் அனல் தெறிக்கும் பழுத்த இரும்பின் தீப்பொறி போல குமுறி வெடிக்கும் பேச்சாளர். இத்தகைய பலவேறு பரிமாணம் குறித்த  சந்தானத்தின் கலை வாழ்க்கை பற்றிய ஆவணப்படத்தையும் அறிமுக நூலையும் தட்சிண் சித்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. சென்னைக் கிழக்குக் கடற்கரை சாலையில் வங்கக்கடலின் நீலத்திரைப் பின்னணியில் விரிந்த மணல்வெளியில் தென்னிந்திய கட்டடக்கலையின் பெருமைபேசும் பல வீடுகளும் சிறு தெய்வங்களும் கலை நிகழ்ச்சிகளுமாய் நிறைந்திருக்கும் தட்சிண் சித்திராவில் ஒரு முன்னிராப்போதில் மயக்கும் மகிழ்ச்சிக்கிடையே ஓவியர் வீர. சந்தானத்தைச் சந்தித்தோம். ஓவியங்கள், சிற்பங்கள், ஈழத்தமிழர் அரசியல், தமிழ்த்தேசிய அரசியல், கலையுலக அரசியல் குறித்தெல்லாம் பேசினார். தஞ்சை – முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற சிற்பங்களுக்குச் சந்தானத்தின் கோடுகளே அடிப்படை. சந்தானத்தின் ஓவியக்கலை இயக்கத்தில் மெய்ம்மன், முருகன் உள்ளிட்ட சிற்பிகள் செதுக்கிய சிற்பங்களே அவை. முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுகளைத் தொடர்ந்து, கனன்று காத்துக் கொண்டிருக்கும் அச்சிற்பங்களை நெஞ்சத்தில் பதித்தவாறே இனி சந்தானத்தின் நேர்காணல். இந்த நேர்காணலில் தமிழ்த்தேசியம் குறித்த கருத்துகள் இடம் பெறுகின்றன. இவை உங்கள் விவாதத்திற்கும் உரியவைதாம்.நீங்கள் ஓவியர் என்கிற முறையில் தமிழ்த்தேசியத்தை கலை அடிப்படையில் முதன்மைப்படுத்துவீர்களா? அரசியல் அடிப்படையில் முதன்மைப்படுத்துவீர்களா? தமிழ்த் தேசியத்தை அரசியல் அடிப்படையில் தான் முதன்மைப் படுத்துகிறேன் என்றாலும் நான் ஓவியக் கலைஞன். அந்த அடிப்படையில் நாம் இழந்துபோன, மறந்துபோன வேர்களைத் தேடித்தேடி புதுமைமிக்க என்னுடைய பாணியில் கோடுகளை ஓவியமாக்குகிறேன். இந்த ஓவியக் கோடுகளும் தமிழ்த் தேசியத்திற்குத் துணைபுரியும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு. தமிழ்த்தேசிய அரசியல் என்பது பதவி தேடும் தேர்தல் அரசியல் பற்றியதல்ல. அது தமிழனுக்கான நாடு பற்றியது, இனம் பற்றியது, மொழி பற்றியது, பண்பாடு பற்றியது. தற்போது இந்திய ஒன்றியத்தில் நாம் இருப்பதால், நான் முன்பு சொன்ன அனைத்துக் கூறுகளையும் இழந்து வருகின்றோம். இதை மீட்டெடுக்கும் முயற்சிக்கு நிச்சயம் அரசியல் என்பது தேவை. நமக்கான அரசியல் கட்டமைப்பை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறையைக் கண்டறிய வேண்டும். ஆட்சியதிகாரம் இல்லாமல் இத்தகைய நோக்கங்களை நிறைவேற்ற இயலுமா? என்பதையும் ஆராய வேண்டும்.நீங்கள் புகழ்பெற்றது ஓவியர் என்பதாலா? மேடைப் பேச்சாளர் என்பதாலா? எனக்கு என்று தனியாகப் புகழ் இருப்பதாக நான் எண்ணவில்லை. பரவலான அறிமுகம் இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஓவியத்தைக் காட்டிலும் என்னுடைய மேடைப்பேச்சு கூர்மையாக இருப்பதாகப் பலரும் சொல்கிறார்கள். பேச்சாளன் என்பதோடு நடிகன் என்கிற பிம்பமும் இப்போது எனக்குச் சேர்ந்திருக்கிறது. இத்தகைய காரணங்களால் பல ஆயிரம் பார்வையாளர்களின் கவனம் என்மேல் குவிகிறது. இதைப் பாதுகாத்துக் கொள்ள எனது கருத்தை வேகமாகப் பதிவு செய்து வருகிறேன். போர் நிகழும் காலங்களில் அநியாயத்துக்கு எதிராக எனது கோடுகள் எழுந்து போராடுகின்றன. சமாதானம் மிகுந்த அமைதிச் சூழலில், நாம் இழந்தவற்றை எனது ஓவியங்கள் தேடுகின்றன. இப்படி மரபுசார்ந்த என் ஓவியங்களோடு முள்ளிவாய்க்கால் முற்ற போர்நினைவுச் சிற்பங்களும் சேர்ந்து கொள்கின்றன.சரியான சாதனையாளர்களை முன்னிறுத்துவதற்குப் பதிலாக எதிர்மறையானவர்களைப் பழிப்பதற்கே நேரத்தைச் செலவிடுவது சரியா? நான் யாரையும் பழிப்பதில்லை. தமிழனாய்ப் பிறந்து எந்தெந்தத் துறைகளில் சாதனை புரிந்திருந்தாலும் அவர்களைத் தலைமேல் வைத்துக் கொண்டாட வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்துகளும் இல்லை. அதுமட்டுமல்ல, தமிழினத்துக்காகவும் மொழிக்காகவும் பாடுபட்டவர்களில் அவர்கள் தமிழரல்லாத வேற்று மாநிலத்தவராக இருந்தாலும் அல்லது வெளிநாட்டுக்காரராக இருந்தாலும் அவர்களைப் போற்றிப் புகழ்வதில் முன்னணியில் நிற்பேன் என்பது மட்டுமல்ல அவர்களைத் தமிழர்களாகவே அங்கீகரிப்பேன் என்பது உறுதி.தமிழ்த்தேசிய இயக்கங்கள் ஒன்றுபடாமல் இருப்பதற்குரிய அகப்பகைச் சக்திகள் எவை? எவை? தமிழ்த்தேசிய இயக்கங்கள் ஒன்றுபடாமல் இருப்பதற்குக் காரணம், ஒவ்வொருவரின் தன்முனைப்புத்தான். மேலும் சிறிய சிறிய கருத்து வேறுபாடுகளைக் கூடப் பேசித் தீர்த்துக் கொள்ளாமல் இருப்பது. திராவிடத் தேசியத்தையே தமிழ்த்தேசியம் என்று சொல்லி உள்ளடி வேலை செய்வது. இவற்றையெல்லாம் விடவும் தம் அமைப்புவழி அடையாளத்துக்காக ஒன்றிணைய மறுப்பது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வை ஏன் துக்கநாளாகக் கொண்டாடக் கூடாது என்கிறீர்கள்? முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்வு என்பது போர்க்களத்தில் நாம் கொடுத்த வீரம் மிக்க விலை. அதை ஏதோ ஒருவர் அல்லது இருவர் இறந்ததுபோல திதி கொடுத்து முடித்துக் கொள்ளக்கூடாது. ஒரு நாட்டின் தலைவன் இறந்தால், அந்தத் தலைவனின் நினைவைக் கடைப்பிடிப்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், ஓர் இனமே போர்க்களத்தில் அழிக்கப் பட்டிருப்பதைத் துக்கநாளாக மெழுகுவத்தி ஏற்றும் நாளாக மட்டும் கருதமுடியாது. போரில் கொல்லப் பட்ட வீரர்கள் வழிவந்தவர்கள் என்கிற பெருமையோடு நெஞ்சில் நெருப்பேந்திக் கடைப்பிடிக்க வேண்டிய எழுச்சி நாள்.நீங்கள் அமைப்பு சார்ந்த கலைஞரா? நான் எந்த அமைப்பிலும் இல்லை. கலைஞர்கள் தனித்துவம் மிக்கப் படைப்பாளிகள், ஆளுமையாளர்கள். முழு இனத்துக்கும் சொந்தமானவர்கள். எனவே, சாதாரண அமைப்பு விதிமுறைகளால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது என்றாலும் அவர்களுக்குள்ள சமுகப்பொறுப்பை எவரும் தட்டிக் கழித்துவிட முடியாது. சரியான தமிழ்த்தேசிய அமைப்பு என்று எந்த அமைப்பை யாவது உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா? எங்கே இருக்கிறது தமிழ்த்தேசிய அமைப்பு? ஒவ்வொரு தனிநபரும் ஒரு பெயர் வைத்துக் கொண்டிருப்பதாலேயே அது ஓர் அமைப்பாகி விட முடியுமா? குறைந்தபட்சம் இவர்கள் எல்லாம் ஒன்றிணையட்டும். அப்புறம் சொல்கிறேன்.தமிழர்களுக்கு எதிராக பலநாட்டு அரசுகள் செயல்படு கின்றன. அவை இராசதந்திரம் என்று அழைக்கப்படுகின்றன. இந்தச் செயல்களை தமிழர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? தமிழர்களுக்கு ஆதரவான இராசதந்திர முயற்சி தமிழ்நாட்டில் இல்லை. ஆனால், புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்களை அமைப்பாக ஒன்றிணைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாட்டு அரசுகளிடமும் அந்த நாட்டு அரசியல் கட்சிகளிடமும் அந்த நாட்டு மக்களிடமும் தமிழர் சிக்கல்களை இராசதந்திர ரீதியில் எடுத்துச் சொல்லி வருகிறார்கள். பொதுவுடைமை நாடுகள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்கிற ருசியா, சீனா, கியூபா, வெனிசூலா போன்ற நாடுகள் ஈழத்தமிழ் அகதிகளுக்கு மட்டுமல்ல, எந்த நாட்டு அகதிகளுக்கும் புகலிடம் தருவதில்லை. ஒருவேளை ஈழத்தமிழ் அகதிகளை அந்த நாட்டு அரசுகள் அனுமதிக்குமானால், அந்த நாட்டு அரசுகளிடமும் அந்த நாட்டு அரசியல் கட்சிகளிடமும் அந்த நாட்டு மக்களிடமும் ஈழத்தமிழர் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லத் தயாராகவே இருக்கிறார்கள்.நரேந்திர  மோடி ஆட்சி, இலங்கைத் தமிழர் பிரச்சினை களைத் தீர்க்க உதவுமா?  ஈழத்தமிழர் பிரச்சினையில் தீர்வு ஏற்பட மோடி ஆட்சி உதவி புரியும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. தோல்வியுற்ற காங்கிரசுக் கட்சி அரசாக இருந்தாலும் சரி, அல்லது இப்போது வெற்றிபெற்று ஆட்சி புரிகிற மோடி தலைமையிலான பாரதிய சனதா கட்சி அரசாக இருந்தாலும் சரி, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்ளையில் எந்த மாற்றமும் ஏற்படாதவரையில் ஈழத் தமிழர்கள் பிரச்சினைக்கு எந்தப் பயனும் கிடைக்காது. வடநாட்டு அரசியல்வாதிகளும் இந்திய ஆட்சி அதிகார வர்க்கத்தினரும் தமிழர்களைச் சந்தேகக் கண் கொண்டே பார்க்கிறார்கள். அந்தத் தனிமைப்படுத்தலே தமிழர்களைத் தனிநாட்டவர்களாக்கி விடுமோ என்கிற அச்சம் என் போன்றவர்களுக்கு இருக்கிறது. நேர்காணல் கண்டவர்: வைகறைவாணன்

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி