15 March 2014 5:55 am
இன்று எந்தத் தாவரத்திற்கான கடைசி நாள்?இன்று எந்தப் பறவை இனத்திற்கான இறுதிச் சடங்கு?இன்று எந்த இனக்குழுவிற்கான கடைசிக் கருமாதி?மரமே தெய்வம் > மரத்தடியில் தெய்வம் > மரத்தாலான குடிலில் தெய்வம்.மலையே தெய்வம் > மலையில் தெய்வம் > மலைக்கற்களால் ஆன கோயிலில் தெய்வம்.இந்த மாற்றங்களுக்குள் மூத்த குடிகளின் சிந்தனைகளை ஒத்திசையச் செய்தவர்கள் எவர்? அவர்களே மழையின் எதிரிகள். காடுகளின் எதிரிகள், கறுப்பர்களின் எதிரிகள். பெண்மையின் எதிரிகள். தமிழரின் எதிரிகள். வாழ்வின் எதிரிகள்.இடம் பெயர்தலில் உயிர்வலி அறியாதவர்களுக்குத் தெரியாது மழை ருசி. வியர்வையின் ருசியும்தான்.வாழ்வைத் தத்துவமற்று வாழ்ந்தவர்கள் இயற்கையின் தத்துவத்தை மதித்து வாழ்ந்தவர்கள். வாழ்வைத் தத்துவங்களால் மேயத் தொடங்கியவர்கள்தாம் இயற்கையின் தத்துவத்தை மிதிக்கத் தொடங்கினார்கள். அசைவம் தின்று வாழ்வை நகர்த்திய மூத்த மக்களின் மூட நடம்பிக்கைகளும் கூட இயற்கையைப் பாதுகாக்கவே உதவின. சைவம் பேசியவர்களாலேயே இயற்கையின் ஆணி வேர்களும் அழத் தொடங்கின.உளி எடுத்துச் சிற்பம் செதுக்கியவன் … மூங்கில் அறுத்துப் புல்லாங்குழல் செய்தவன்… ஓலை கிழித்துக் கவிதை எழுதியவன்… இவர்களுக்கும் பங்குண்டு… மழைக் கொலையில்.உழைப்பிலிருந்து ஒதுங்கி நின்று அழுக்குப்படாமல் பேசும் எந்தக் கலையும் மூலவாழ்வின் முகமறியாதவைதாம்.மழையை வாழ வைப்போம் என்கிறது எம்பாட்டு. மழையால் வாழ்கிறோம் என்கிறது நடவுப்பாட்டு. நடவுப்பாட்டே இயற்கை. அதுவே உன்னதம். உடல் இயங்க… உயிர் கசிய… அதுவே உண்மை. நோக்கமன்று; செயலே சத்தியம். இயற்கைக்காகக் குரல் கொடுக்கும் இந்த நூலும் ஒரு வகையில் காட்டின் பிணம்தானே.ஒவ்வொரு செடிக்கும்… ஒவ்வொரு கொடிக்கும்… ஒவ்வொரு மரத்திற்கும் பெயர் சொல்லி… உறவு சொல்லி வாழ்ந்த வாழ்க்கை வற்றி விட்டது. பாறைகளைக் கொன்று பசியாறுகிறது காலம். ஏறக்குறையத் தன் பசி தீர்க்க தாய் முலை அறுக்கும் செயல். பாறைகளில் ஊரும் எறும்புகள் தன் உடலில் ஊர… பாறையாகிக் கிடக்கும் சுகமழிந்த வாழ்க்கை என்ன வாழ்க்கை?பாறைகளின் பெருமூச்சிற்கும் மேகங்களின் மௌனத்திற்கும் இடையே விக்கித்துக் கிடக்கிறது வாழ்க்கை. காரைச் செடிகளில் ஒட்டிக் கிடக்கும் நத்தைக் கூடுகளில் இருக்கின்றன மழைவிதைகள். அசையும் நெற்றுகளின் ஓசையில் ஏமாறுகின்றன ஆழத்து வலைகளுக்குள் நண்டுகள். கரம்பில் மேயும் ஆடுகளின் மூத்திரம் நனைந்த ஈரத்திற்கு ஏமாறுகின்றன ஈசல் குஞ்சுகள். குழிப் பூச்சிகளுக்கு இரையாகின்றன இரை தேடி வெளிவந்த எறும்புகள். காணக்கிடைக்கின்றன மிச்சமாய் இன்னும் சில மீன் கொத்திகள்.ஒரு பக்கெட் தண்ணீருக்குள் குளிக்கப் பழகிப் போன எனது நகரத்து வாழ்க்கைக்கு அந்தப் பதினாறு வயதுக்குள்ளான அனுபவங்கள் ஞாபகங்களாகி ஆறுதலும் தரலாம். ஆனால், நாளைய என் மகள்களுக்கு? மகன்களுக்கு? குளித்துக் கொண்டிருக்கையில் நகரும் ஆற்று மணல் குறும்பை… கால் பாதங்களை வெடுக் வெடுக்கெனக் கடித்துக் கூசச் செய்யும் மீன் வம்புகளை… எனக்கான வாழ்க்கை என் கையில் இல்லையே. என் இனத்திற்கான ஆட்சி எம் தலைமையில் இல்லையே. எல்லோருக்குமான பசியறிவும் நிகழில்லையே.இரத்தம் சொட்டும் உன் கொலை வெறிக்கரங்களால் என் கண்ணீரைத் துடைக்க வராதே. தேசப்பக்தியை எனக்கும் ஆயுதங்களால் திணிக்க அவசரப்படாதே. என் காயங்களுக்கு மருந்து கொடுக்க முன் வராமல் என் எதிரிகளுக்கு ஆயுதம் வழங்குகிற உனக்கு அடிமையாய் வாழ்வேன் என்று எதிர்பார்க்காதே.அழிக்க அழிக்கப் பொறுமை காக்கும் காடுகளைப் பற்றித் தெரியாது உனக்கு. காடுகளை அழிக்கலாம் நீ. காட்டின் வேர்களை? அழிப்பாயோ நீ? முடியுமோ உன்னால்? பொறுமையிழந்து ஒரு நாள் திருக்கை வால்களாய்ச் சுழல ஆரம்பிக்கும் காட்டின் வேர்கள். அடிபொறுக்க மாட்டாமல் சுடுமனற் புழுவாய்த் துடிப்பாய் நீ அப்போது.கர்ப்பப் பைக்குள் உயிர்ச்சதை வழித்துப் பசியாறிய உன் அருவருப்பு வாழ்க்கையை எட்டி உதைக்கும். எம் காடுகளை, எம் ஆறுகளை, எம் கடல்களை, எம் மலைகளை, எம் நிலங்களை, எம் பெண்மையை, எம் வியர்வையை ஏய்த்துப் பிழைத்த உம் வக்கிரம் கிழிக்க வாளெடுக்கும். காலத்தின் கையில் சக்தி உயிர்க்க காணாதொழியும் உன் ஆதிக்கம். உன் மதங்கள்… உன் தெய்வங்கள்… உன் வேதங்கள்… உன் சாதிகள்… உன் கோயில்கள்… உன் பாராளுமன்றங்கள்… எம் மூளை திறக்கும் உன் போலிச் சாவிகள் யாவும் யாவும் தொலையும். தொலைவாய் நீயும். தொலை.கடை வீதிக்கு வந்தாயிற்று தண்ணீர்ப் பொட்டலங்கள். காற்றுப் பொட்டலங்களும் வருவதற்குள் விழிப்போம். நமது மூச்சின் வேர்களைத் தேடிப் புறப்படுவோம். காடுகளை விட்டு வெகுதூரம் வந்துவிட்ட நாம் காடுகளிடமே சென்று சரணடைவோம். காடு அம்மா. மூத்த அம்மா. மறப்பாள் யாவற்றையும். மன்னிப்பாள் மடியள்ளி வைத்துக் கொண்டு மழையூட்டுவாள். மழையருந்தி மழையருந்தி மழையாவோம். தாவரங்களாவோம். நீளும் கரங்கள் கோர்த்துத் தோப்பாவோம். கூட்டிசைப் பாடல்களால் பறவைகளாவோம். ஆயிரமாயிரம் நூற்றாண்டுகளைத் தாண்டிய பேத்திகளுக்காகவும், பேரர்களுக்காகவும் பூமியை, வானத்தை தூய்மை செய்து சூரியக் கிண்ணத்தில் மழையூற்றி வைப்போம்.கர்ப்பமுற்ற பெண்ணிடம் மரக்கன்றுகள் தந்து மாதத்திற்கு ஒன்றாக நடச்சொல்லி பத்தாவது மாதத்தில் அவளைப் பதினோரு குழந்தைகளுக்கான தாயாகப் பார்ப்போம். மழைக் கர்ப்பம் கலைந்து விடாத படிக்கு மருத்துவம் பார்ப்போம். இயற்கையை வெட்டி அனுபவிக்கிற வெறித்தனம் மறந்து, உலுக்கி அனுபவிக்கிற அறிவு பெறுவோம்.பூமி எல்லோருக்குமானது. வானம், மழை எல்லாம் எல்லாம் எல்லாருக்கும். வண்ணத்துப் பூச்சியும் சாப்பிட்டு விட்டதா என்பதைப் பார்த்துவிட்டு நமது சாப்பாட்டில் கை வைப்போம். மின்மினிப் பூச்சிகளையும் குழந்தைகளின் கணக்கில் சேர்த்துக் கொண்டு தாலாட்டுப் பாடுவோம். நம் எல்லோருக்குமான பாடலை மழை பாடும். மழைக்கான பாடலை நாம் பாடுவோம்.-பாவலர் அறிவுமதி