18 July 2013 2:24 pm
உலகம் எவ்வளவோ முன்னேறியுள்ளது. இந்த முன்னேற்றம் அத்தனையும் உடல் சுகத்தை கொடுப்பதாக உள்ளது. மன ரீதியாகப் பார்த்தால் முன்பு முன்நோக்கிச் சென்ற உலகம், இப்போது பின்நோக்கிச் செல்வதாகத் தெரிகிறது. அந்த பின்நோக்கியப் பயணத்திற்கு சமுதாய அங்கீகாரமும் கிடைத்து விட்டதாகத் தோன்றுகிறது.
முன்னைய காலத்தில் மாணவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து, அவர்களுக்குக் கல்வி, ஒழுக்கம், நேர்மை ஆகியவைகளைக் கற்றுக் கொடுத்தார்கள். கல்வி கற்றுக் கொடுப்பது ஒரு அறச் செயலாகக் கருதப்பட்டது. இக்காலத்தில் கல்வி ஒரு வணிகப் பொருளாகி விட்டது. மாணவர்கள் பணம் கொடுத்து கல்விச் சந்தைகளைத் தேடிச் சென்று கல்வி கற்க வேண்டிய நிலை. பணம் இருப்பவர்களுக்கு, கல்வியை வாங்குவது சுலபமாகிவிட்டது. கல்விக் கூடங்களில் அனுமதி, தனிப்பயிற்சி, மதிப்பெண்கள் பெற என பல படிநிலைகளில் பணபலமும், அதிகார பலமும் தலைநீட்ட ஆரம்பித்து விட்டது. மாணவர்களும் தான் கற்கும் கல்வியை விட, எடுக்கும் மதிப்பெண்கள்தான் பெரிது எனக் கருதி, அதைப் பெற பலவித முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். பெற்றோர்களும் அதற்கு மிகுந்த துணை போகிறார்கள். எத்தனையோ சிபாரிசுகள், கள்ளத்தனங்கள் செய்ய பெற்றோர்களே தயாராகி விட்டார்கள். இதனால் கல்வியின் தரம் கெட்டு விட்டது மட்டுமன்றி, கல்வியைக் கண்டு அஞ்சும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. கல்வியின் மேல் மக்களுக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் மங்க ஆரம்பித்து விட்டன. சுருக்கமாகக் கூறினால் கல்வி ஒரு விலைப் பொருளாகிவிடுமோ என்கிற அச்சம் தகுதியுள்ள மாணவர்களிடையே ஏற்பட்டு விட்டது. இப்படி ஆகிவிடக் கூடாது என்று தானோ என்னவோ அந்தக் காலத்தில் பணமும், படிப்பும் சேருவது மிகவும் கடினம் என்று கூறி வசதி படைத்தவர்களுக்கு கல்வியின் மீது மோகம் வராது பார்த்துக் கொண்டார்கள்.
இயற்கையை ரசிப்பதிலும் கூட, தலை கீழாக போய்க் கொண்டிருக்கிறோம். நண்பர் ஒருவர் என் வீட்டிற்கு வருகிறார். தோட்டத்தில் உள்ள ரோஜா மலரைப் பார்த்து, “மலர் மிகவும் அழகாக பிளாஸ்டிக் பூ போல் இருக்கிறதே” எனக் கூறுவது தலைகீழ் போக்காகும். பிளாஸ்டிக் பூவை அசல் மலர் போல் இருக்கிறதே எனக் கூறுவது இயல்பு. பொம்மையைத்தான் குழந்தை போல் இருக்கிறதே எனக் கூற வேண்டுமே தவிர, குழந்தையைப் பொம்மை போல் இருக்கிறது எனக் கூறுவது சரியல்ல.
நமது சமுதாயத்தில் பெரியவர், சிறியவர் என்ற மரபு இருந்தது. அதன்படி பெரியவர்களிடம் ஆலோசனை பெற்று சிறியவர்கள் எதையும் தீர்மானிப்பார்கள். இன்றோ சிறியவர்களிடம் கேட்டுத்தான் எதையும் தீர்மானிக்கும் நிலை வந்துள்ளது. வீட்டில் பொருட்கள் வாங்குவதிலிருந்து திட்டங்கள் போடுவது வரை சிறியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதன் உச்சக்கட்டம்தான், சின்னத் திரை விளம்பரங்களில், பிறக்காத குழந்தைகளை மக்களுக்கு ஆலோசனை கூற வைப்பது. வழக்கமாக அனுபவமிக்க துறை அதிகாரியிடம் ஆலோசனை கேட்டு ஆளுபவர்கள் திட்டம் தீட்டுவது மரபு. இன்றோ ஆளுபவர்கள் கூறுவது சரியோ? தவறோ? அதிகாரிகள் கேட்க வேண்டிய கட்டாய நிலை. “அமைச்சருக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்” என்பது முதுமொழி. வருகின்ற பொருள் (கையூட்டு) உரைக்கும் அதிகாரிகளே நன்மதிப்பை பெறுவதாகத் தோன்றுகிறது. இதற்கு நொண்டிச்சாக்கு “பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும்” என்ற பழமொழி. பழமொழியின் உண்மையான பொருள், எவன் ஒருவன் பணத்திற்காக வாய்ப் பிளக்கிறவனோ, அவன் பிணத்திற்குச் சமமாவான் என்பதுதான்.
பேருந்து ஒன்றில் நாகர்கோவில் சென்று கொண்டிருந்தேன். அதிகக் கூட்டமானதால் நான் நின்று கொண்டிருந்தேன். ஒரு நடுத்தர வயதுள்ள நபர் தன் மனைவி, மகனுடன் அருகில் இருக்கையில் அமர்ந்திருந்தார். நாங்குநேரியில் ஒரு வயதான மூதாட்டி ஏற முடியாமல் தள்ளாடி வண்டியில் ஏறினார். அந்த மூதாட்டி நிற்பதற்கு இயலாத நிலையை பார்த்து அருகில் இருக்கையில் இருந்தவரிடம், ஐயா, சின்னப் பையனை மடியில் வைத்துக் கொண்டு மூதாட்டி இருக்க இடம் கொடுங்கள் என்றேன். அவர் சற்று உரத்தக் குரலில் “உங்க வேலையைப் பாருங்க சார். நான் கடினப்பட்டு இடம் பிடித்து வைத்திருக்கிறேன். அந்தக் கிழவி ஏன் இந்தக் கூட்டத்தில் ஏற வேண்டும். இடம் கொடுக்க முடியாது” என்று கூறி விட்டார்.
நான் எனது மனதுக்குள் வருத்தப்பட்டுக் கொண்டேன். அந்தச் சிறு பையனுக்கு, பெரியவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை ஊட்டத் தவறி விட்டனர். அந்தப் பையன் வளர்ந்த பிறகு, தங்களையே மதிக்காமல் போவதற்கு இத்தகைய செயல்களே காரணம் என்ற அச்சம் அந்தப் பெரியவர்களிடம் இல்லை. அந்தப் பேருந்தில் 20 நிமிடம் முந்தி ஏறினால் அந்தப் பேருந்தே தனது போல் பாவித்து, ஒரு மூதாட்டிக்கு இடம் கொடுக்க மறுக்கும் இவர்கள் சமுதாயத்தில் பெரிய நிலையில் உள்ளவர்களிடம் சம உரிமை கேட்பதில் நியாயம் இருப்பதாகத் தோன்றவில்லை. தன் செயலால் பெரியவர்கள் சிறியவர்களுக்குப் பாடம் கற்பித்தால் லொழிய, சிறியவர்கள் நல்லதைக் கற்க மாட்டார்கள்.
கையூட்டு (இலஞ்சம்) ஒழிய வேண்டும் என்று பேசுவது, இன்று ஒரு நாகரீகமாகி விட்டது. பேசுபவர்கள் ஒவ்வொருவரும் தன் நெஞ்சார இலஞ்சம் ஒழிய வேண்டும் என்று நினைத்தால், நாட்டில் இலஞ்சம் ஒழிய வாய்ப்புள்ளது. இலஞ்சத்திற்கு நம்மையறியாமலேயே வீட்டிலேயே வித்திடுகிறோம். ஒரு பையனை கடைக்குப் போகச் சொன்னால் மறுக்கிறான். அவனைக் கட்டாயப்படுத்தி அனுப்புவதை விடுத்து, அன்பளிப்பு என்கிற பெயரில் “மீதியுள்ள 1 ரூபாய்க்கு உனக்கு வேண்டியதை வாங்கிக் கொள்” என்று கூறுவதே இலஞ்சத்திற்கு வித்தாக அமைகிறது. கடன் வாங்கியவன் பயப்படுவது போக, கொடுத்தவன் பயப்படும் நிலை. குற்றவாளி காவலாளிக்குப் பயப்படும் நிலை மாறி காவலாளி குற்றவாளிக்குப் பயப்படும் நிலை. இவையெல்லாம் உலகம் பின்நோக்கிச் செல்வதையே காட்டுகின்றன.
விஞ்ஞானம், உடல் ரீதியாக முன்னேற்றம் செய்ய உதவும் ஒரு கருவி. அந்த விஞ்ஞானம், தன் கடமையை வேகமாகவும், அதிகமாகவும் செய்து கொண்டிருக்கிறது. அதனால் தான் அத்துணை துறையிலும் இத்தனை முன்னேற்றம். ஒரு காலத்தில் மனிதன் மனதைப் பக்குவப்படுத்த மதங்கள் பயன்பட்டன. விஞ்ஞானத்தோடு இன்று ஒப்பிடும் போது, மதங்கள் மனித மனத்தைப் பக்குவப்படுத்த தவறிவிட்டதாகத் தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணம் மதங்களைப் போதித்தவர்கள் அதை பின்பற்றாத நிலையும், கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் அதை போதிக்காமல் இருப்பதும் தான் என்கிற ஐயம் ஏற்படுகிறது. மனம் பக்குவப்படாத மனிதனின் கையில் எந்த ஆக்கப் பூர்வமான விஞ்ஞான முன்னேற்றமும் அழிவுக்காகவே பயன்படுத்தப்படும். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்பார்கள். முற்காலத்தில் ஊரார் பிள்ளையை வளர்க்கும் பண்பு இருந்தது. இக்காலத்தில், தன் பிள்ளைக்கே தாய்ப்பாலின் அவசியத்தை மற்றவர்கள் உணர்த்த வேண்டிய நிலையில் நாடு உள்ளது. இந்தப் பழமொழிக்கு பல்வேறு பொருள் கூறப்படுகின்றன. தனது மனைவியானவள் ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், அவள் வயிற்றில் வளரும் தன் பிள்ளை நன்றாக வளரும் என்பது ஒரு கருத்து.
ஒரு பெண், ஊரார் பிள்ளையை நன்றாக ஊட்டி வளர்க்கும் பக்குவம் அடைந்து விட்டால் தன் பிள்ளையை விட்டு விட மாட்டாள். மேலும் ஊரார் பிள்ளைக்கு ஒரு தாய் ஊட்டுவதைப் பார்க்கும் குழந்தை போட்டி போட்டு நன்றாகச் சாப்பிடும். அப்போட்டி, குழந்தையின் இயல்புதானே என்று கொள்ளலாமே.
– டாக்டர் அ.மகாகிருட்டிணன்