களவுக்கு பரிசளிப்போம் - தமிழ் இலெமுரியா

25 May 2013 3:37 pm

Mehandi

“களவும் கற்று மற” என்று ஒரு பழமொழி உண்டு. இப்பழமொழி திருட்டுத் தொழிலையும் கற்றுக் கொண்டு பின் மறந்து விட வேண்டும் என்ற பொருளினிலே இன்று வழக்கில் உள்ளது. 

பண்பையும், நாகரிகத்தையும் உலகிற்கே கற்றுத் தந்த தமிழர் உலகம் திருட்டுத் தொழிலையும் கற்க வேண்டும் என்ற தவறான கருத்தை மொழிந்திருக்க கூடுமா? நிச்சயமாக இராது. பின் இதன் உண்மையான மொழி வேறு எதுவாக இருக்க முடியும்?

“களவு கற்பில் உள” என்றுதான் இருந்திருக்க வேண்டும். களவு என்ற காதலை செய்வோர் வாழ்வு, கற்பு என்ற திருமணத்தில் உறவு வேண்டும் என்பதே முதுமொழி. ஆனால் காலப்போக்கில் இப்பழமொழி மருவி “களவும் கற்று மற” என்று ஆகிவிட்டது. இதற்கு தொல்காப்பியமும், குறளும் களவியல், கற்பியல் என்ற இயல்களை வகுத்து தந்து சாட்சியாய் நிற்கின்றன. 

ஆக காதலித்தோர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே இந்த பழமொழி நமக்கு தருகின்ற பாடமாகும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு உள்ளதா என்றால் இல்லை என்பதே அனேகரின் பதிலாகக் கூடும். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட தமிழகத்தில் ஒரு கிராமத்தில் ஓர் இளைஞனும், இளைஞியும் காதலித்து வந்ததை ஏற்காத சமுதாயம் சாதியை காரணம் காட்டி இருவரையும் ஒருசேர வீட்டின் ஒரு உத்திரத்தில் தராசுத் தட்டை தொங்கவிடுவது போல் பதைபதைக்க தூக்கிலிட்டு விட்டார்கள். இது மிகப் பெரிய அநீதி அல்லவா?ஒத்த மனமுடையோர் காதலிப்பது என்ன மன்னிக்க முடியாத குற்றமா? இல்லை காதல் என்பதே மனித அத்தியாத்தில் இருக்கக் கூடாதா?

காதல் என்பது சாதி என்ற அரக்கனை அழிக்கவல்ல மாபெரும் ஆயுதமல்லவா! “அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” என்று கூறி காதலை ஏட்டிலே ஏற்றுக் கொண்ட சமூகம் நாட்டிலே அதை நடைமுறை படுத்த விரும்பவதில்லை.

“யாயும் ஞாயும் யாராகி யரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்
யானும் நீயும் எவ்வழியறிதும்
செய்யுலப் பெயல் நீர் போல் 
அன்புடை நெஞ்சம் தான் இலந்தனவே”

என்று நம்முன்னோர் குறுந்தொகையில் கூறிய களவு என்ற தேர் வீதியுலா வர வடம் பிடிப்போர் இன்று நம்மில் எத்தனை பேர்?

திரையரங்கில் காதலை கைதட்டி வரவேற்பவர்கள் கூட நடைமுறையில் திரைமறைவாய் காய்களை நகர்த்தத்தான் செய்கிறார்கள். காதல் இல்லையேல் மனித இன வாழ்வும் நிதர்சனமாகி விடும் என்பதை அதை எதிர்ப்பவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

நீரிலே பிறந்து நீரிலே மிதக்கும் நீரோடு கலந்து நீராகும் நீர்க்குமிழியைப் போல் உள்ளத்திலே பிறந்து உள்ளத்தால் நுகர்ந்து உள்ளத்திலே உவந்து உள்ளமொடு கலப்பது தான் காதலாகும். அந்த காதல் வயப்பட்டவர் மனநிலையின் முடிவை ஒரு கவிஞன் அழகாக கூறுகிறான்.

“அன்னியர் ஒருவர் உறவினர் ஆனார்
உறவினர் எல்லாம் அன்னியர் ஆனர்”

என்று நேற்று வரை யாரென்றம் தெரியாத ஒருவர் மீது காதல் ஏற்பட்டவுடன் தனக்கு நேற்று வரை உறவினராக இருந்த யாவரும் அன்னியராகி விடுகின்றனர். அவர்களுக்கு நேற்று வரை இருந்து வந்த துன்பம் எல்லாம் போய் விடுகின்றன. மரணத்தைப் பற்றிய அச்சம் கூட அவர்களிடம் இல்லாமல் ஆகி விடுகிறது. ஆதலால் தான்

“காதலினால் சாகாமல் இருத்தல் கூடும்
கவலைபோம் அதனாலே மரணம் பொய்யாம்”

என்று பாரதி சொன்னான். மனித இனத்தைச் சார்ந்த ஆண்டாள் திருமணம் திருமாலையே காதலித்து கைப்பிடித்ததாக கூறப்படும் நாட்டில் தானே காதலை எதிர்ப்பவர்களும் இருக்கின்றனர்! காதலும், மரணமும் எப்பொழுது வரும் என்று யாராலும் கூற முடியாத ஒன்றல்லவா!

ஒத்த வயதும், மனமும் உடையோர் காதலித்தால் அவர்களை இணைத்து வைப்பது பெற்றோர்களின் கடமையாகும். மாறாக பிரிக்க நினைப்பதால்  தானே தற்கொலை என்ற சொற்களை நாம் தலையங்கமாக காண நேர்கிறது.

ஆகவே, தம்பிள்ளைகள் விரும்பும் பொருட்களை வாங்கிக் கொடுத்து உவகை எய்தும்பெற்றோர்களே! அவர்களின் களவுக்கு பரிசாய் திருமணத்தையே தாருங்கள். ஏனெனில் காதலால் வரதட்சணை ஒழியும், சமத்துவம் நிலவும், சாதி ஒழியும் சமரசம் உழவும்.

இவை ஈடேறினால் சமூக நதியின் நீரோட்டமும் சுமூகமாகவே ஓடும் என்பதை கூறவும் வேண்டுமோ!

– நெல்லை பைந்தமிழ்.

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி