அசுரன் - தமிழ் இலெமுரியா

17 June 2014 9:17 am

அசுரன்- ஆனந்த் நீலகண்டன்தமிழில்: நாகலட்சுமி சண்முகம்இராமாயணம் என்பது நாடறிந்த கதை. இந்திய நாட்டு பண்பாட்டு விழுமியங்கள், தருமம், ஒழுக்கம் என பலகூறுகள் மக்களிடம் சென்றடையும் வகையில் எழுதப்பட்டிருப்பதாகவும், இக்காப்பிய நிகழ்வுகள் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு, இன்னும் சொல்லப் போனால் மனித இனம் தோன்றுவதற்கு முன்பாக, நடைபெற்ற உண்மை வரலாறு என்று நம்பும் அளவுக்கு மக்கள் நெஞ்சில் பதிக்கப் பெற்றுள்ளன.  ஆனால், இராமனின் நற்குணங்களை எடுத்துக்காட்டுவதாக சொல்லப்படுகின்ற  இக்காப்பியம் ஒரு பண்பாட்டுக் கொலையின் மறுவடிவம் எனவும், இந்தியாவின் பூர்வீகக் குடியான தமிழினத்தை தகர்ப்பதற்கான ஒரு இலக்கிய வடிவம் என்று சாடினார் தந்தை பெரியார். இதே கருத்தை அறிஞர் அண்ணாவும் வலியுறுத்தி இலக்கியத் திறனாய்வு நாடகமாக நீதி தேவன் மயக்கம்" மற்றும் விமர்சனங்களாக கம்ப ரசம், ஆரியப் புரட்டு போன்ற நூல்களையும் எழுதினார். தில்லியில் வட இந்தியர்களால் கொண்டாடப்பட்டு வரும் இராமலீலா என்ற விழாவிற்கு எதிராக தமிழ் நாட்டில் பெரியார் இராவண லீலா என்று கொண்டாடுமாறும் வேண்டினார். தமிழினதைச் சாடும் இந்த நூலுக்கு மாற்றாக இராவணனைத் தலைமகனாகக் கொண்டு ஒரு காவியப் பனுவலாக "இராவண காவியம்" என்ற நூலும் வெளியிடப்பட்டு பின்னர் அன்றைய அரசுகளால் தடை செய்யப்பட்டு மீண்டும் திராவிட இயக்க ஆட்சியாளர்களால் தடை நீக்கம் செய்யப் பெற்றது. எனினும் அந்த நூலின் கருத்தாக்கம் தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கப் படவில்லை. கீமாயணம் என்ற நாடகத்தை நடிகவேள் எம்.ஆர்.ராதா சிற்றூர்களில் எல்லாம் நடத்தி இராமயணத்தில் உண்மை வடிவம் தமிழர் பண்பாட்டுக்கும், வரலாற்று ஒழுக்க நெறிகளுக்கும் எதிரானது என சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பி வந்தார். ஆன்மிக வாதிகள் பலர் இவையனைத்தும் தமிழ் வெறியர்களால் பரப்பப்படும் நாத்திக வாதம் என எதிர்வினையாற்றினர். இந்த உணர்வு தமிழ் நாட்டில் எழுந்தது போல் இந்தியாவின் திராவிட தென் மாநிலங்களில் எழவில்லை. புராண மறுப்பும், மூட நம்பிக்கை ஒழிப்பும் தமிழ் நாட்டைப் போல் வேறு மாநிலங்களில் வேர் பிடிக்கவில்லை. அடிப்படையில் இராமாயணம் என்பது ஒரு ஆரிய திராவிட பண்பாட்டுப் போரின் இலக்கிய வடிவம் என்பதை யாரும் உணரவில்லை.  இந்தப் பின்னனியில் தற்போது ஆங்கிலம், தமிழ் உட்பட பல மொழிகளில் வெளிவந்திருக்கும்  "அசுரன்" என்ற நூல்  இராவணன் மற்றும் அவன் இனத்தாரின் கதையாக ஒரு தன் குறிப்பு நூலாக வெளிவந்துள்ளது. கேரள மாநிலத்தில் பிறந்த ஒரு சிறந்த ஆங்கில எழுத்தாளரான ஆனந்த் நீலகண்டன் சமுதாய உணர்வுடன் ஊறிய கற்பனைக்கு கலைவண்ணம் தீட்டி அறிவாற்றலுடன் இப்புதினத்தை எழுதியுள்ளார். இராவணனைப் பற்றிய அவருடையப் பார்வையும் பதிவும் வியக்க வைக்கின்றன. இராமாயணம் என்பது வரலாற்றில் எப்போதும் நிகழ்வது போல வெற்றியாளர்களின் வெறித்தனமான பார்வையில் அவர்களுக்குச் சாதகமாக திரித்து எழுதப்பட்ட கதை அது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இராவணனை வில்லனாகச் சித்தரிக்கப் படுவதின் நோக்கம் என்ன? என்பதற்கு விடை காண முயன்றுள்ள புதினம் இது. ஆரியர்களின் ஆட்சியில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த சாதியச் சமுதாயத்தின் கொடுமைகளில் இருந்து ஒரு இனத்தை விடிவித்தான் என்பதாலா? அசுர இனத்தின் அழியா ஒழுக்கங்கள் அவர்களுக்கு உடன்பாடில்லை என்பதாலா? என புதினம் விடை காண முயன்றுள்ளது. 3000 ஆண்டுகளுக்கு மேலாக சாதியம் தலைவிரித்தாடும் இம் மண்ணில் இன்னும் பேயாட்டம் போடும் சில சமுகக் குழுக்கள் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்க எண்ணுகின்ற மூளைக்கட்டுக்கு எதிராக மடிந்து போனவர்களும், வீழ்த்தப் பட்டவர்களும் எடுத்தியம்பும் ஒரு வீர வரலாறாக இந்நூல் விளங்குகின்றது. நூலின் முதல் அத்தியாயமே முடிவு என்று தொடங்கி இராவணன் தன் நிலை விளக்கம் அளிக்கும் விதமாக நீண்டு செல்கின்றது. அறுபத்தைந்து அத்தியாயங்களாக நீண்டு இறுதியில் துவக்கம் என்று முடிகிறது. நீலகண்டனின் ஒவ்வொரு சொல்லும் அவருடைய அறிவாற்றலையும், கற்பனை வளத்தையும் பறை சாற்றுவதாக உள்ளன. இந்த நூலை மும்பையில் வாழும் திருமதி நாகலட்சுமி சண்முகம் தமிழில் தந்துள்ள பாங்கு படிப்போரை வியக்க வைக்கும். அழகானத் தமிழ், அருமையான சொல்லாக்கம், உவமைகள் என நூலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. கம்பராமாயணத்தின் சுவை பலரைச் சொக்கவைத்தது போல அசுரனைத் தமிழில் படிக்கும் போது விருவிருப்பான ஒரு எழுத்து நடையைக் காண முடிகின்றது.  "பிராமணர்கள் கூறுவதைப் போல், நான் மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கக் கூடும். அப்படி இருந்தால் அதுதான் மாபெரும் நம்பிக்கை. ஒவ்வொரு மரணமும் வாழ்க்கை என்று அழைக்கப்படுகின்ற ஒரு கூட்டு இசையில் ஏற்படும் தற்காலிக இடைவேளையே. இந்த உலகிற்கு மீண்டும் மீண்டும் திரும்பி வருவது குறித்த சிந்தனையில் ஓர் அளப்பரிய அழகு குடி கொண்டுள்ளது. இந்த அற்புதமான உலகிற்கு நான் மீண்டும் திரும்பி வருகின்ற அப்படிப்பட்ட பயணத்தில் அந்த அழகான பாடல் வரிகளில் உள்ள வார்த்தைகள் உண்மையாகியுள்ளதை நான் காணக் கூடும். யாருக்குத் தெரியும்"     ( இந்நூலின் இறுதி வரிகள்) வெளியீடு:  மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் 2வது தளம், உசா பிரிட் காம்ப்ளக்ஸ், 42 மால்வியா நகர், போபால் – 462 003 மின்னஞ்சல்: manjul@manjulindia.com(பக்கங்கள்: 664 விலை: 395)"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி