15 May 2016 8:03 pm
அறிஞர்கள் பார்வையில் கண்ணியம்" குலோத்துங்கன்- இராம.குருமூர்த்திஅறிஞர் அண்ணா தாம் எழுதிக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு வந்தவருடன் உரையாடிக் கொண்டிருக்க, அந்த சிறுவன் அண்ணா எழுதியிருந்த கட்டுரையை எடுத்து அதன் இறுதியில், வாழ்க அண்ணா! வாழ்க தமிழ்! எங்கும் முழங்கட்டும் தமிழ்! என்று எழுதிவிட்டான். அதைப் பார்த்த அண்ணா சிரித்தபடியே "அன்று குலோத்துங்கனுக்குக் கலிங்கத்துபரணி பாடினார் செயங்கொண்டார். இன்று செயங்கொண்டத்தில் குலோத்துங்கன் தமிழ்பரணி பாடுகிறான், குலோத்துங்கன் பெயரில் மட்டும் வேந்தனல்ல, எழுத்துத் துறையிலும் நல்ல வேந்தனாகவே திகழ்வான்" என அறிஞர் அண்ணா வாழ்த்தினார் எனும் அரிய செய்தியினை மேனாள் புதுவை சட்டமன்ற உறுப்பினர் முத்து தன் நினைவலையில் கூறியுள்ளார். நூலின் நாயகரான குலோத்துங்கனை எண்ணற்ற அறிஞர் பெருமக்கள் உளமார பாராட்டி வாழ்த்தியுள்ளதை அறியும் போது அவரது திறமையை இந்நூலின் வாயிலாக வாசிப்போர் அனைவரும் உணர முடியும். மென்மையான இயல்புகள் கொண்ட, வலிமையான மனிதர். காட்சிக்கு மிக எளியவராகத் தெரியும் இவர், சிக்கல்கள் வரும் போதெல்லாம் கம்பீரமாக மல்யுத்த வீரனைப் போன்று போராடியிருக்கிறார். இதனை சிம்சன் குழும நிருவாகத்தை எதிர்த்து உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக, களம் அமைத்துப் போராடிய வரலாற்று நிகழ்வு நிரூபிக்கிறது! நாற்பத்தைந்து ஆண்டுகாலமாக "கண்ணியம்" சிற்றிதழை நடத்திவரும் ஓர் இதழாளர், எழுத்தாளர், தொழிற்சங்கவாதி என பன்முக ஆற்றல் வாய்ந்தவரை முழுவதும் படிக்க வேண்டும்! ஆம் படிப்போருக்கு இவரது வாழ்வு ஒரு பாடமாகும். நூலை அருமையாக அமைத்த ஆசிரியர் இராம.குருமூர்த்தியை பாராட்ட வார்த்தைகளே இல்லை!வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 600108. பேசி: 044 2595 4528 (பக்கங்கள்: 400 விலை: 200)"