ஏ.பி.ஜே.அப்துல் கலாம்- வாழ்க்கை வரலாறு - தமிழ் இலெமுரியா

18 November 2016 12:22 pm

ஏ.பி.ஜே.அப்துல் கலாம்- வாழ்க்கை வரலாறு- அருண்திவாரிதமது படைப்பின் கருவானது மண்ணிற்கும் இனத்திற்கும் இலக்கியத்திற்கும் பயன் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட படைப்பாளிகள் இலக்கிய உலகில் வெகுச்சிலரே. அவர்களை விரல் விட்டு எண்ணிவிட முடியும். அவர்களில் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை படைத்துள்ள அருண்திவாரியும் ஒருவராகத் திகழ்கிறார்.பிணிநீக்க எழுந்திரு நீ இளந்தமிழா, வரிப்புலியே பிற்றைக் கணி செய்யும் இலக்கியம் செய்! .. .. .. .. .. ’’  எனும் பாரதிதாசனின் அமுத வரிகளுக்கொப்ப இந்த அருமை காவியமான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின்  வாழ்க்கை வரலாற்றை, அருண் திவாரியின் வேர்ச் சொல்லில் இருந்து, நேர்ச் சொல்லாக நமக்கு நாகலட்சுமி சண்முகம் மிக நேர்த்தியாக அழகுத்  தமிழில் மொழியாக்கம் செய்திருப்பது அய்யா அப்துல் கலாமின் புகழுக்கு புகழ் சேர்ப்பதாகும். நமது நாட்டில் மகாத்மா காந்திக்கு அடுத்தபடியாக சாலைகள், மேம்பாலங்கள், சதுக்கங்கள், எண்ணற்ற சமுதாய அமைப்புகள், விருதுகள் என தனி மனிதர் பெயரில் அமைந்திருக்கும் பெருமை அய்யா அப்துல்கலாம் எனும் மாமனிதருக்கு  மட்டுமே உரியதாகும். சிறப்புகள் பல வாய்ந்த அறிவியல் மேதையும் மேனாள் குடியரசுத் தலைவரும் தமது எண்ணங்களாலும் எழுத்துக்களாலும் அறிவியல் சாதனைகளாலும் இறவாப்புகழ் கொண்ட இந்திய நாட்டுப் பெருமகனின் வாழ்க்கை வரலாற்றைப் படைத்திட்ட அருண்திவாரி, அய்யா கலாமின் சீடராக, நண்பராக, படைத்த நூல்களின் இணை ஆசிரியராக, எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டின் உயர் விஞ்ஞானிகளிள் ஒருவராகவும் பொறுப்புகள் பல வகித்தவர். இந்த நூலில் ஒவ்வொரு அத்தியாயங்களின் துவக்கத்தில் உலகத் தலைவர்களின் பொன்மொழிகளைப் பதித்திருப்பது நூலுக்கு சிறப்புசேர்ப்பதாக அமைந்துள்ளது. 1942 -இல் இரண்டாம் உலகப் போர்நடந்த போது இராமேசுவரத்தில் வீசிய நூறு மைல் வேக கடும்புயலால் சைனுலால் புதீனின் படகு சிக்குண்டு சின்னாபின்ன மானதையும் பின்னர் அவர் புதிய படகை தயாரிக்க தேக்குக் கட்டைகளை சேகரித்தபோது கறையான்கள் அரிக்கமுடியாத மரம் தேக்குமரம் மட்டுமே என்பதை சிறுவயது கலாம் அறிந்துகொண்டதும் தந்தையின் உத்வேகத்தைக் கண்டு தானும் புளியங்கொட்டைகளை சேகரித்து விற்று அதில் கிடைத்த பணத்தை தாய் ஆசியம்மாவிடம் கொடுத்து வைத்து பின்னர் கலாமின் கல்விக்கட்டணத்திற்காக தாயார்  திருப்பித்தந்ததையும் கலாம் வாங்க மறுத்தபோது, ‘அன்னையர்  கொடுக்க மட்டுமே செய்வார்கள்’ என்று கூறியிருப்பதும் படிக்கும்போது நெகிழச்செய்கிறது.  ஒருமுறை இசுலாமியத் துறவிடம் உரையாட நேர்ந்ததின் விளைவாக… இயற்பியல் படிப்பை விட்டு பொறியியல் படிக்க எண்ணி விண்ணப்பித்து அதற்கு தேவையான பணத்திற்கு திண்டாடியபோது, கலாமின் சகோதரி சொகாரா கை வளையல்களையும் சங்கலியையும் அடகு வைத்து பணம் கட்டினார். இதனால் உண்மையான தியாகம் என்றால் என்னவென்று கலாமுக்கு கற்றுத் தந்தார். இப்படி கலாமின் குடும்பத்தார் அனைவருமே ஒழுக்கசீலர்களாக அமைந்தது கலாம் பின்னர் உயர்நிலைக்கு வர ஏதுவாக அமைந்தது. அன்றையப் தலைமையமைச்சர் வாஜ்பேயிடமிருந்து வந்த உத்தரவை  அப்துல்கலாமும் டாக்டர் சிதம்பரமும் ஏற்று போக்ரான் பகுதியில் அணுகுண்டு பரிசோதனையை  செய்ய திட்டமிட்டு 1998-மே, 11-ம்நாள் உலக உளவு செயற்கை கோளின் கண்ணில் மண்ணைத் தூவி வெற்றிகரமாக உலகோர் வியக்கும் வண்ணம் நிகழ்த்திக் காட்டியதால் கலாமின் பெருமை வானளவு உயரத்தொடங்கியதை எளியநடையில் விவரித்திருப்பது நூல் ஆசிரியர்  அருண் திவாரியின் அனுபவ முதிர்ச்சியை காட்டுகிறது. கலாம் சிறந்த சொற்பொழிவாற்றல் படைத்தவராக இதில் பதியப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு அறிவியலறிஞர்களுக்கு மத்தியில் நிகழ்த்திய சொற்பொழிவில் கலாம் ஆற்றிய சொற்பொழிவை நமக்கு சுவைபட நூலில் குறிப்பிடுகிறார். அதன் சுருக்கம் வருமாறு… நோபல் பரிசுப் பெற்றவரும்,  1954-ல் பாரத ரத்னா விருது பெற்றவருமான சி. வி. ராமானுஜத்தை அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் இராசேந்திர பிரசாத் குடியரசு மாளிகையில்  தன்னுடைய தனிப்பட்ட விருந்தினராக இருக்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தனக்கு கீழ் முனைவர் படிப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவனுக்கு தன்னுடைய நேரம் தேவைப்படுவதால் அந்த அழைப்பை ஏற்க முடியாததை பணிவோடு மறுத்தார். அதேபோல் அமெரிக்காவில் யர்க்ஸ் விண்ணாய்வுக் கூடத்தில் வேலை செய்துகொண்டிருந்த டாக்டர் சுப்பிரமணியன் சந்திரசேகர் லீக், யேங் என்ற இருமாணவர்களுக்காக தினமும் 100 மைல் தனது மகிழுந்தில் பயணித்து பாடம் சொல்லியதின்  விளைவு  பிற்காலத்தில் அவர்கள் நோபல் பரிசுதனை பெற்றிட வாய்ப்பாக அமைந்தது… இராணுவ மேதையான  சாம் பகதூர் அப்போதைய  பாதுகாப்பு அமைச்சரான வி.கே.மேனனுடன் ஏற்பட்ட ஓர் உடன்பாடின்மையில் ‘வெட்டு ஒன்று துண்டு இரண்டு’ என்று நடந்து கொண்டதால் ஒரு நீதி விசாரணையை அவர் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இருப்பினும் எந்த தவறும் செய்யவில்லை என்று விசாரணைக்குழு அவரை விடுவித்தது. அவர் தலைமையமைச்சரிடமே உத்திகள் தொடர்பான விவகாரங்களில் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடத் தயாராக இருந்தவர். அவரின் நேர்மையான மன உறுதியைக்கண்டு அடுத்த ஆண்டே பிரதமரிடமிருந்து ‘பத்ம விபூஷண்’ விருதும் கிடைத்தது… 1971-ல்  அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி யிடமிருந்து, இராணுவத் தளபதி மானெக்சாவிற்கு ஓர் உத்தரவு பாகிஸ்தானுடன் போருக்குச் செல்லுமாறு. மானெக்சா மறுத்து விடுகிறார். மானெக்சாவைத்தவிர அறையில் இருந்த அனைவரையும்  பிரதமர் வெளியேற்ற உடனே மானெக்சா இராஜினாமா கடிதம் கொடுக்க பிரதமர் மறுத்துவிடுகிறார். பிரதமர் இவரின் அறிவுரையை நாட; ‘பாகிஸ்தானுடன் போருக்கான ஏற்பாடுகளை என் விருப்பப்படி செய்வதற்கும் நான் நிர்ணயிக்கும் ஒருநாளில் போரைத்  துவக்குவதற்கும் நீங்கள் அனுமதித்தால் வெற்றியைப் பெற்றுத் தருவேன்’ என்றாராம். பின்பு அதன்படியே நடக்க வெற்றியும் கிடைத்து பாகிஸ்தானும் சரணடைய வங்கதேசமும் உருவாயிற்று.  இவ்வாறாக வாழ்க்கையின் பல்வேறு நேர்மையின் நெஞ்சுறுதியாளர்களைப் பற்றி சொற்பொழிவாற்றினாராம். இது வெறும் சொற்பொழிவுக்காக மட்டுமில்லை தானும் சில உறுதிப்பாடுகளை மனதில் இருத்திக்கொண்ட அந்த மாமேதை குவஹாத்தியில்  மாணவர்களின் முன்னால் நடந்த தனது இறுதிச் சொற்பொழிவில் அவர் தேர்ந்தெடுத்த தலைப்பு ‘வாழத் தக்க  ஒருபூமியை  உருவாக்குதல்’ றபொழிவைத் தொடங்கிய சில மணித்துளிகளில் மேடையில் பின் பக்கமாக சரிய அந்த மாமனிதன் தன் வேலையை முடித்துகொண்டார் என்றும் அப்போது நேரம் மாலை 6.30 என்றும் கூறி நூலாக்கம் செய்துள்ளது வாசகர்களின் கண்கள் குளமாகியது. வாழ்வில் பக்குவமடைய பண்படைய ஒவ்வொரு மனிதனும் வாசிக்க வேண்டிய நூல்.வெளியீடு:   மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், 7/32, கிரவுண்ட் புளோர், அன்சாரிரோடு, புதுதில்லி, 110 002, இந்தியா. (பக்கங்கள்: 548 விலை: 495)"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி