ஒன்றே உலகம் - தமிழ் இலெமுரியா

17 June 2014 9:14 am

ஒன்றே உலகம்- தனிநாயக அடிகள்தமிழ் ஈழத்தில் பிறந்து தமிழ்நாட்டிலும் பிற நாடுகளிலும் தமிழ்ப் பணியாற்றி தமிழ் மொழியின் வளத்தை உலகோர் அறியும் வண்ணம் எண்ணற்றச் சிந்தனைகளை வழங்கியுள்ள பேரறிஞர் தனிநாயக அடிகளார் தமிழ் மக்களுக்குத் தந்துள்ள ஓர் அரிய நூல் ஒன்றே உலகம்" என்பதாகும். இது ஒரு பயண நூல். பல்வேறு நாடுகளில் பயணம் செய்து, பல தகவல்களைக் கண்டறிந்து தமிழ் தொடர்பான பல்வேறு செய்திகளையும், உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பான தகவல்களையும் அடுத்த தலைமுறைக்காகத் தந்துள்ளார் தனிநாயக அடிகள். இவருடைய கடல் வழிப் பயணங்கள் பல அறிய செய்திகளை இந்நூலில் தந்துள்ளன. பயணம் செய்வது ஒரு கலை. சிறுசெலவுச் செய்து பல இடங்களைக் காண்பது எப்படி? எவ்வாறு ஒரு நாட்டின் வளர்ச்சி, பண்பாட்டுக் கூறுகளைக் கண்டு கொள்வது என பல அரிய தகவல்களின் கருவூலமாக விளங்குகின்றது இந்நூல். இந்தப் பயண நூலில் இடம் பெற்றுள்ள 21 நாடுகளும் தமிழ் தமிழர் வரலாற்றுடன் தொடர்பு உள்ளவை என்பதை நூலின் பல்வேறு பகுதிகள் நமக்கு உணர்த்துகின்றன. மொரிசியசு, ஆப்பிரிக்கா, பர்மா, எகிப்து, பிரான்சு, கிரேக்கம் போன்ற நாடுகளில் வாழ்ந்து வருகின்ற தமிழர்களின் நிலைகளைக் குறிப்பிடும் போது தமிழ்நாட்டிற்கும் அயல் நாடுகளுக்கும் உள்ள உறவுகளைத் தெளிவாக விளக்குகின்றார்.  பண்டைய காலந்தொட்டு இந்நாடுகளுக்கு வந்த தமிழர், தம் இலக்கியங்களையும், பண்பாட்டையும், வரலாற்றையும், கலைகளையும் குடியேறிய நாடுகளின் மொழிகள் வாயிலாகத் திறம்பட புலப்படுத்தியிருந்தால் இன்று கீழ்த்திசை நாடுகள் சிலவற்றில் விரும்பப்படாத குடிமக்களாக, உரிமையற்று வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்று வருந்தி எழுதியுள்ளார். இது ஒரு பயண நூல் என்பதை விட தமிழர் தம் பண்பாட்டையும், சிந்தனையும் உலகோர்க்கு விளக்கும் நூல் எனலாம். காஞ்சிபுரத்திலிருந்து சீனாவுக்குச் சென்று வர்மக்கலையை கற்றுக் கொடுத்த போதிதர்மர் முதல் கிரேக்க கவிஞர்கள், சிந்தனையாளர்கள் பலரின் பதிவுகள் பலவும் மிகவும் பெருமைப்பட எழுதப்பட்டுள்ளன. அடிகளார் சென்று வந்த நாடுகளைப் பற்றிய பொதுவான செய்திகளையும், வரலாற்று உண்மைகளையும் தந்திருப்பதோடு , தமிழரின் மாட்சி, தமிழரின் ஆளுமை, தமிழர்களின் தொன்மை முதலியன குறித்து விரிவாக எழுதியுள்ளார். தமிழர்கள் எந்தத் துறையில் இருப்பினும் அவசியம் படித்துணர வேண்டிய ஒரு அற்புதமான நூல் இதுவாகும். இந்நூல் அச்சாக்கம், வடிவமைப்பு மிகவும் நேர்த்தியாக அமைகப்பட்டுள்ளன. திரு இராமசாமி நினைவுப் பல்கலைக் கழக "தமிழ்ப் பேராயம்"அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பல நூல்களின் வரிசைகளில் தமிழுக்கு இது மற்றுமொரு அணிகலனாகும்.வெளீயீடு: தமிழ்ப் பேராயம் திரு.இராமசாமி நினைவுப்  பல்கலைக் கழகம், காட்டாங்குளத்தூர் – 603 203 காஞ்சிபுரம் மாவட்டம்(பக்கங்கள்:264 விலை: 170)"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி