15 October 2015 2:02 pm
பாரதிதாசனும் பெருஞ்சித்திரனாரும்- முனைவர் கடவூர் மணிமாறன்ஒப்பீட்டு பார்வையில் அமைந்த உயரிய நூல் இது. ‘பாடு பொருளும்’ படைப்பாளுமையும்; தமிழுணர்வு; குமுகநோக்கு, கதைநெடும் பாடல்கள், சொல்லாட்சியும், நடையும் என ஐந்து இயல்களில் பாரதிதாசனையும் பெருஞ்சித்திரனாரையும் ஒப்பியல் நோக்கில் மிக விரிவாக ஆராய்ந்துள்ளார். பாரதிதாசனை அடியொற்றிப் பாடுவதில் தனித்த ஆர்வமும் விருப்பமும் கொண்டவராகப் பெருஞ்சித்திரனார் விளங்குகின்றார் என தகுந்த சான்று களோடு நிறுவியுள்ளார். பாரதிதான் முதலில் 1926ம் ஆண்டில் வெளிவந்த ‘சுப்பிரமணியப் துதியமுது’ பாடித் தமது கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்தியவர். அடுத்த பத்தாண்டுகள் கழித்து ‘எனக்கில்லை கடவுள் கவலை’ என உறுதி மிக உரைக்கும் அளவுக்கு மனமாற்றமும் அறிவு வளர்ச்சியும் பெற்றுள்ளார். பாரதிதாசனுக்கு முப்பதாண்டுகளுக்கு பிறகு ‘கொய்யாக்கனி’ எனும் நூலை 1956ல் பெருஞ்சித்திரனார் படைத்திருக்கிறார். பொதுமை உணர்வு இருவரின் பாடல்களிலும் மலர்ந்து இருப்பதை காட்டிடும் ஆசிரியர் பாரதிதாசனின் பாடலில் அறிவு நிலையும், பெருஞ்சித்திரனாரின் பாடல்களில் உணர்ச்சி நிலையும் வெளிப்படுவதை எடுத்துக் காட்டியுள்ளார். மூட நம்பிக்கையை ஒழிப்பதில் பாவேந்தரும் பாவலரேறும் ஆர்வம் கொண்டு திகழ்ந்தாலும், கடவுள் கொள்கையில் இருவரும் வேறு படுவதை ஒளிவு மறைவு இன்றி உணர்த்துகிறார். பாவேந்தரின் பாடல்களில் எளிமையும் இயல்பும் மிகுதி எனக் கூறும் ஆசிரியர், பெருஞ்சித்திரனாரின் பாடல்களில் புதுச்சொல் புகுத்தலும் பழஞ்சொற்கள் பதுக்களும் மிகுதி என ஒப்பிடுகிறார். இப்படி நூல் முழுக்க ஒப்பிட்டாலும் இருகவிஞர்களும் எப்படி வாழ்வில் தனித்தே திகழ்ந்தார்களோ அப்படியே தமிழ் கவிஞர்களிடத்தேயும் தனித்தே நிற்கிறார்கள் எனக் கூறுகிறார். கவிஞர்கள் தமிழறிஞர்கள் என அனைத்து மக்களும் படிக்க வேண்டிய நூல்.வெளியீடு : விடியல் வெளியீட்டகம், 1/53, பெரியார் நகர், குளித்தலை – 639 104 கரூர் மாவட்டம். (பக்கங்கள் : 360 விலை : 250)