கண் ஒளி - தமிழ் இலெமுரியா

25 May 2013 4:38 pm

மெய், வாய், கண், மூக்கு, செவி என்கின்ற ஐம்புலன்களின்  சிறப்பினை நாம்  அறிவோம். அவைகளில்  மிக முக்கியத்துவம்  வாய்ந்த உறுப்பு கண்கள் ஆகும். கண்ணும்  மெய்யும், கண்ணும்  வாயும், கண்ணும்  மூக்கும், கண்ணும்  செவியும்  என மற்றைய உறுப்புகளுடன்  கண்  இணைந்து செயல்படும் போது தான்  எந்தவொரு தனிச்  செயல்பாடும்  முழுமை அடைகிறது. இயற்கையைக் கண்டு ரசிக்க இயற்கை தந்த வரம்  தான்  கண்.  முகத்திற்கு  தனிப்  பொலிவையும்,  அழகையும்  தருவது கண்  ஆகும்.  

மலரண்ண கண்ணாள்  என்கிறார்  திருவள்ளுவர். மலர்  போன்ற கண்  என்கிற மாத்திரத்தில்  கண்ணின்  மகத்துவம்  புரிகின்றது. அதனைப்  பேணிக்  காக்க வேண்டிய அவசியம்  புரிகின்றது.  கண்  மருத்துவம்  பயின்று அத்துறையில்  தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்  கொண்டு கடந்த 50 ஆண்டு காலமாக மக்களுக்கு  சேவை செய்துவரும்  சேவாரத்னா வைத்ய ரத்னா பேராசிரியர்  என்.எஸ்.சுந்தரம்  அவர்கள்  தான்  பெற்ற அறிவை, அனுபவத்தை ஒருங்கிணைத்து முழுமையான ஒரு புத்தகமாக “கண்  ஒளி” என்கிற இந்நூலை எழுதியுள்ளார்.

முதலில்  எளிய நடையில்  கண்ணின்  அமைப்பனை விரிவாகவே கூறுகிறார். அடுத்தபடியாக கண்ணகளைப்  பற்றிய பரிசோதனை முறைகளை விளக்குகிறார். பின்புதான்  கண்களில்  வரும் உபாதைகள்  என்று கண்புரை, கிளக்கோமா, சர்க்கரை நோயின்  கண்பாதிப்பு என்று பல விஷயங்களை விவரிக்கிறார். இதற்குப் பின்  தலைவலியில்  கண்ணின்  பங்கு, எய்ட்ஸ், தொழுநோய், ஆகிய நோய்களில்  கண்களின்  பாதிப்பு பற்றி எழுதியுள்ளார். நவீன கணினியுகத்தில்  கணினியின்  உபயோகத்தால், கண்களின் பாதிப்பு பற்றி தெளிவுபடுத்துகிறார்.

இதன்பின்  பொது மக்களுக்கு அறிவுரைப்  பகுதி வருகிறது. இதில், சரியாக புத்தகம்  பதிக்கும்  முறை, முதியோரின்  கண்  பாதுகாப்பு, கண்களுக்கு முதல்  உதவி என்ற தலைப்புகளில்  சிறந்த முறையில்  எழுதப்பட்டிருக்கிறது. இறுதியாக மரபியல், கண்தானம்  பார்வையற்றவர்களுக்கு எவ்விதம்  உதவி புரியலாம்  என்ற அரிய கருத்துகள்  கொடுக்கப்பட்டுள்ளன.

எளிய தமிழில்  அனைவரும்  புரிந்து கொள்ளூம்  வகையில்  கண்ணின்  மகத்துவம், கண்நோய்கள்  அதன்  அறிகுறிகள், அவைகளுக்கான காரணங்கள், கண்  பாதுகாப்பு என அனைத்து அம்சங்களையும்  34 அத்தியாயங்களாக தொகுத்து அழகாக வழங்கியுள்ளார். கண்  பாதுகாப்பால்  நாம்  கடைப்படிக்க வேண்டிய நடைமுறை குறித்த அறிவுறைகள், நம்  மனதில்  எழும்  பொதுவான கேள்விகளுக்கு பதில்கள்  என்கின்ற வகையிலே தனித்தனி அத்தியாயங்களாக நூல்களை அளித்துள்ளார்  நூலாசிரியர்.  பல நூல்களை பதித்து அவைகளின்  வாயிலாக நாம்  பெறக்கூடிய அனைத்து செய்திகளையும்  ஒருங்கே தரும்  களஞ்சியமாக விளங்குகிறது இந்நூல்,

கண்  மருத்துவ இயல்  பேராசிரியர்  டாக்டர்  என்.எஸ்.சுந்தரம்  நம்  மக்களிடையே நல்வாழ்வில்  காணப்படும்  கேடுகளை பற்றி நன்கு கண்டும்,  கேட்டும்  அறிந்தவராவார். அவர்  தமிழக அரசு, அரிமா சங்கம் நடத்திய பல கண்  முகாம்களிலும்  அரசு கண்  மருத்துவமனைகளிலும், ஸ்டான்லி சென்னை மருத்துவக்  கல்லூரியிலும்  பல ஆன்டுகளாக பணிபுரியும்  வாய்ப்பினை பெற்றவர்.  அவர்  மேலே கூறிய குறிக்கோள்களை நிறைவேற்றும்  வகையில்  இந்நூலினை எழுதி செயற்கரிய தொண்டினை செய்துள்ளார்.

அனைவராலும்  குறிப்பாக மாணவர்கள்  படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல்  இதுவாகும். இம்மாணவர்கள்  கண்  பற்றிய செய்திகளை அறிந்து பயனுரும்  வகையில்  சமுதாயப்  பணியினை தன்  சிரமேற்று சிறப்பாக செய்துவரும்  கண்  மருத்துவர்  பேராசிரியர்  என்.எஸ்.சுந்தரம்  அவர்கள்  இந்நூலினை சமுதாயப்  பணியாகவே கருதி இயற்றியுள்ளார்.

தமிழ்  பேசப்படும்  நல்லுலகில்  ஒவ்வொரு பள்ளியிலும்  கல்லூரிகளிலும் ஏன்  ஒவ்வொரு இல்லந்தோரும்  அலங்கரிக்க வேண்டிய அற்புதமான நூல்  இது.

வெளியீடு:

கமலா பதிப்பகம்,
10/2, பசுல்லா சாலை, தி.நகர்,
சென்னை – 600 017

கண் ஒளி
கமலா பதிப்பகம், சென்னை

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி