5 June 2013 2:27 pm
சிந்தனைச் சுவைகள் – மு.தருமராசன் “தமிழ் இலெமுரியா”வின் பொறுப்பாசிரியர் கவிஞர் மு.தருமராசன் அவர்கள், தனது சிந்தனையில் உதித்த சுவையான நிகழ்வுகளை “சிந்தனைச் சுவைகள்” எனும் இந்நூலில் உதிர்த்துள்ளார். சுவையில் அறுசுவையை சுவைத்திருக்கிறோம். அந்தச் சுவைகளினும் மேலான இரட்டிப்பான பன்னிரண்டு தலைப்புகளில் சிந்தனைகளைச் சுவைக்க வைத்திருப்பது மிக அருமை. சின்னச் சின்ன செய்திகள் தாம். அவற்றைச் சீரார்ந்த முறையில் சித்தரித்திருப்பது சிறப்பாக இருக்கிறது. இந்நூல் சாதாரணமாக ஒரு கணவன் – மனைவி இடையே நிகழும் இல்லறச் சுவையில் ஆரம்பித்து அறிவியல், அரசியல், சமூகம், சமத்துவம், மருத்துவம், அனுபவம், பகுத்தறிவு என பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது. பலர் அறிந்திராத அரிய நிகழ்வுகளைத் தெரிவித்து, அவற்றுக்கான மேற்கோள்களோடு அறிவுரையும் வழங்கியிருப்பது வரவேற்கக் கூடியது. மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கி, முன்னேற்றம் காணாது முடங்கிக் கிடப்போர்க்கு, மூதறிவு புகட்டியிருப்பது அருமை. இத்தகவல்கள் அனைத்தும் அவ்வப்போது “விடுதலை” ஞாயிறு மலரில் தான் எழுதி வந்தவற்றைத் தொகுத்து, நூலாக வடிவமைத்துள்ளார் நூலாசிரியர். இந்நூலின் ஒவ்வொரு தொகுப்பும், அதில் அடங்கியுள்ள தகவல்களும் நன்கு ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது. திருக்குறளைப் போன்று சிறுகக் கூறி ஆழச் சிந்திக்க வைக்கும் இவரது எழுத்துகள் நிச்சயம் படிப்பவர் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
தமிழன்னை பதிப்பகம்,
ஜி – 1 சுவேதா பிளாட்ஸ்,
எண். 20, அப்துல்லா சாகிப் தெரு,
சூளைமேடு, சென்னை – 600 094
பக்கங்கள் : 112
விலை: ₹ 60