அடிமைச் சுமைகள் - தமிழ் இலெமுரியா

14 December 2013 7:25 am

இந்திய நாடு வெள்ளையர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த கால கட்டத்தில் பெரும்பாலான தேசியத் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்ட விடயம் இந்திய நாட்டின் அரசியல் விடுதலை" என்ற கோட்பாடு ஆகும். இந்தியாவின் தேசப்பிதா என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் காந்தி, அவருடைய அறிவு, சிந்தனை மற்றும் அரவணைக்கும் போக்கு ஆகியவற்றின் துணை கொண்டு ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு வழிவகுத்தவராவார். எனினும், இந்திய நாட்டின் பன்மைத் தன்மை, மொழி, இன, மத வேறுபாடுகள் சமுகவியல் சார்ந்த போக்குகள் குறித்து ஒரு தெளிவான கொள்கையினை, ஒருங்கிணைந்த கருத்தியலை அவரால் முன் வைக்க முடியவில்லை.  இந்திய நாட்டின் அரசியல் விடுதலை என்பது சமுக விடுதலையையும், பொருளாதார விடுதலையையும் பெற்றுத் தந்து ஒரு சமனியச் சமுதாயத்தை உருவாக்கி விடும் என்று நம்பினார். அதே கால கட்டத்தில் வாழ்ந்த சமுகவியலாளர்களான தந்தை பெரியார், பேரறிவாளர் அம்பேத்கர் போன்றவர்கள் அரசியல் விடுதலையை விட இந்தியச் சமுகக் கட்டமைப்பின் சீர்கேடுகளை சரிசெய்து ஏற்றதாழ்வற்ற சமுகக் கோட்பாட்டை முன்னெடுக்க வேண்டும்; அதுவே முதன்மையானது என்று நம்பினர். அதுபோலவே பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள் அரசியல் மற்றும் சமுகச் சமன்பாட்டை, விடுதலையை பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்வதன் மூலமே பெற முடியும் என நம்பினர். இந்த மூன்று கருத்தியலுக்குமுரிய இடைவெளி மற்றும் தற்கால இந்தியாவின் நிலைமை ஆகியவற்றை இணைத்துப் பார்க்கையில், அரசியல் விடுதலையின் மூலம் நாடாளுமன்றம், சட்ட மன்றம், பொதுத் தேர்தல்களில் அனைவரும் பங்கேற்கும் மக்களாட்சி என பல விந்தைகள் நிகழ்ந்திருப்பினும், மனிதர்களின் ஒருங்கிணைப்பால் கட்டப்பட வேண்டிய கூட்டு நிறுவனமான "சமுகம்" என்ற கோட்பாட்டில் இன்றளவும் விடுதலையோ, சமன்பாட்டையோ எட்டவில்லை.  அரசியல் விடுதலையால் விளைந்த அரசமைப்புச் சட்டங்கள் மூலம் ஏட்டளவில் ஏராளமான பதிவுகள் செய்யப்பட்டிருப்பினும், சாதி, சமயம் என்ற இறுக்கமான கட்டமைப்பிலிருந்து பெரும்பாலான மக்களின் மனம் இன்றளவும் விடுபடவில்லை. அதன் விளைவாக விடுதலைக்குப் பின், நாம் பெற்றிருக்க வேண்டிய வளர்ச்சியை நாம் எட்ட முடியாமல் இன்றளவும் பிறவி இழிவு, வறுமை, கல்வியின்மை, போதிய பொருளாதார வளர்ச்சியின்மை என திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறோம். தீண்டாமை, வரதட்சணை (மணமுறைக் கையூட்டு), குழந்தைத் திருமணம், கையூட்டு போன்றவைகள் சட்டத்தின் மூலம் ஒழிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான மனித மனங்களிலிருந்து விடைபெறாத நிலை தற்காலப் பார்வையில் "அரசியல் விடுதலை" தோல்வியடைந்து விட்டது என்பதையே பறைசாற்றுகிறது. சீர் செய்யப்படாத நிலத்தில் விதைக்கப்பட்ட விதை எவ்விதப் பயனையும் விளைவிக்காதது போன்றதே, செம்மைச் செய்யப்படாத சமுகத்தில் ஏற்படுத்தப்படும் சட்டங்களும் ஆகும்.  விடுதலையடைந்த இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான அரசியல் கட்சிகளின் தற்காலப் போக்கு நம் நாட்டை பின்னோக்கிக் கொண்டு செல்கின்றது என்பதுதான் உண்மை. நிகழ்கால கட்சி அரசியலில், தான், தன் குடும்பம், தன் கட்சி, தன் ஊர், தன் மாவட்டம், தன் மாநிலம் என்றளவிலேயே சிந்தனைப் போக்கு அமைந்து, பொருளும், புகழும் முதன்மைக் காரணிகளாக மாறிவிட்டன. கொள்கை அரசியல் குழு அரசியலாகவும், சமுகவியல் சாதியவியலாகவும், மீட்சிக்கான அரசியல் நோக்கம், வீழ்ச்சிக்கான வித்தாகவும் மாற்றம் பெற்று தாயின் மடியில் விளையாடும் குழந்தை தாயை மறந்து விடுதல் போன்ற நிகழ்வு இந்திய நாட்டில் அரங்கேறி வருகின்றது. மத வழி மார்க்கங்கள் மனித குலத்தின் இணைப்பையும், பிணைப்பையும் உறுதி செய்வதற்குப் பதிலாக வெறியையும், வெறுப்புணர்வையும் வளர்க்கும் நிறுவனங்களாக நிலை பெற்றுள்ளன. 1947க்குப் பின் தமிழ்நாட்டில் ஓரளவு அரசியல், சமுக, பொருளாதார அலகுகளில் முன்னேற்றம் அல்லது மாற்றங்கள் நிகழ்ந்திருப்பினும், அவைகளை முன்னெடுத்துச் சென்ற தலைவர்களின் மறைவுக்குப் பின்னர் ஒரு தலைகீழானப் போக்கையே இன்று நாம் கண்டு வருகின்றோம்.  தற்போது ஏற்பட்டுள்ள தடைகளுக்கும், தடங்கல்களுக்கும் முதன்மைக் காரணிகளாக விளங்குபவை 1.அறிவுரைகள் பேசப்பட்ட அளவிற்கு பின்பற்றப்படாமை, 2.தத்துவங்களைப் போற்றுவதற்குப் பதில் தலைவர்களைப் போற்றும் பாங்கு. 3.பொருள்வயப்பட்ட பொய்மை ஊடகங்கள், 4.சாதி, மதங்களின் தவறான கட்டமைப்பு, 5.புதுமையை ஏற்க தயங்குதல், 6.அயல் மோகத்தில் வளர்த்தெடுத்த நுகர்வுத் தன்மை, 7.அதிகார ஆடம்பரங்கள், 8.வெற்று விளம்பரங்கள், 9.பெருந்திரை, சிறுதிரை ஒளிக்காட்சிகளில் காண்பிக்கப்படும் பண்பாட்டுச் சிதைவுகள், 10.வெற்றுணர்ச்சியுடன் கூடிய சாதி, மத வெறித்தன்மை, 11.மதுவின் மயக்கம். மேற்கண்ட அனைத்தும் சிறுகச் சிறுக தமிழர்களின் முதுகில் ஏற்றி வைக்கப்பட்ட அடிமைச் சுமைகளாகும். பல்லாண்டுகளாகச் சிறுகச் சிறுக ஏற்றப்பட்ட இந்த அடிமைத்தனம் மக்களால் அறியப்படாமலேயே போய்விட்டது. ஒட்டகத்தின் முதுகில் ஏற்றப்பட்ட சுமைகளை இறக்கி விட்டால் அது தொடர்ந்து நடக்காது என்பர். காரணம் அவை சுமைகளைச் சுமந்தே பழக்கப்பட்டவைகளாகும். எனவே மேற்கண்ட அடிமைத் தனங்களை ஒரே நாளில் இறக்கி வைத்து விட முடியாது என்பதும் உண்மையாகும். இக்கால கட்டத்தில் எழுந்து வரும் இளைஞர்களே, மாணவர்களே "நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்" என்ற புறநானூற்றுப் புலவன் பாடலுக்கொப்ப தீமைகளிலிருந்து விலகி இருங்கள். நம் நாட்டில் முதன்மையாகச் சீர் செய்யப்பட வேண்டியது பண வறுமையை விட குண வறுமையே என உணர்ந்திடுங்கள். பணமோ, செல்வமோ சிறிதும் இல்லாமல் நாம் பண்பாளர் ஆக முடியும் என்பதை நெஞ்சில் நிறுத்துக. உழைப்பும், ஒழுக்கமும், ஒற்றுமையும், வாழ்க்கையின் மெய் பொருளாக மலர வேண்டும். அதுவே தமிழர் மண்ணின் விடுதலை, மனதின் விடுதலை, சமுக விடுதலை, அரசியல் விடுதலையாகும். இதுவே எம் ஏக்கத்தின் எதிரொலி, எழுச்சியுறப் புது வழி! தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை        (குறள்: 672) கனிவுடன்,  சு.குமணராசன். முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJAN, Editor in Chief.மார்கழி – 2044(டிசம்பர் – 2013)"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி