11 March 2018 11:05 am
இந்தியக் குமுகாயத்தில் ஓர் புற்று நோய் போல நாளுக்கு நாள் வளர்ந்து வரும் ஊழல்" மிகவும் கவலையளிக்கின்ற ஒன்றாகும். இது தற்போதையக் காலச் சூழலில் பொது மக்கள் மத்தியில் பெருமளவில் ஊடியிருந்தாலும் இதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் அரசியல் வாதிகள், பெரு முதலாளிகள், நிருவாகத்துறையின் மேல்தட்டுப் பணியாளர்கள் மற்றும் குமுகாயத்தில் "பெருமதிப்பைப் பெற்ற மக்கள்" என்று புனைந்துரைக்கப்படுகின்ற சிலரே ஆவர். இந்திய நாடு வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்ற போது அப்போதைய மக்கள் தொகையை முப்பது கோடி முகமுடையாள் என பாரதி பாடினான். ஆனால் எழுபது ஆண்டு கால இந்திய சனநாயக ஆட்சிமுறைக்குப் பின்னர் இக்கால மக்கள் தொகை 130 கோடி எனப் பெருகிய நிலையில் ஒவ்வொரு இரவிலும் பட்டினியாய்ப் படுக்கைக்குச் செல்லும் மக்கள் தொகை சற்றொப்ப 42 கோடி என இந்திய வறுமைக் கோடு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகில் ஊழல் நிறைந்த நாடுகளை ஒப்பீட்டளவில் ஆய்வு செய்ததில் 190 நாடுகளில் இந்தியா 79 ஆம் இடத்தையும், ஆசிய நாடுகளில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் தாய்லாந்து, மியன்மார், பாகிஸ்தான், வங்காள தேசம், வியட்நாம் போன்ற நாடுகளைக் கூடப் பின் தள்ளி இந்தியா முதலிடம் வகிப்பதாகவும், இந்திய நிருவாகத்தில் 69% பணிகள் கையூட்டுகள் இன்றி நடை பெறுவதில்லை எனவும் உலக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இந்த நிலை தொடர்வதற்கும் விரிவடைவதற்குமான கரணியங்கள் எவை? என்ற கேள்விக்கான விடையை இந்தியக் குடிமக்கள் ஐயமின்றி அறியாதவரை இது தொடர்கதையாகத்தான் இருக்கும். அண்மையில் அதிகமாகப் பேசப்படும் பொருளாதாரச் சுரண்டல்களில் இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தன் வாடிக்கையாளர்களின் இருப்புப் பணத்தை இழந்து, தொடர்ந்து செயலாற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. குசராத் மாநிலத்தை சேர்ந்த நிரவ் மோடி என்கிற வைரநகை வணிகர் பஞ்சாப் நேசனல் வங்கியில் முறைகேடான வழியில் உறுதி ஆவணங்களைப் பெற்று கோடிக்கணக்கான பணத்தை நகைகள் வணிகத்திற்குப் பயன் படுத்தி தற்போது தலை மறைவாகிவிட்டார். இந்திய அரசு இவரைத் தேடும் பணியில் இருப்பதாக தொடர்பில்லா சில அமைச்சர்கள் மூலம் அறிவிக்கச் செய்துள்ளது. வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நபரின் சில கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அறிவிக்கின்றனர். இவர் அண்மையில் நம் நாட்டு தலைமையச்சர் நரேந்திர மோடியுடன் பன்னாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஓர் பெரு வணிகர் என்ற முறையில் கலந்து கொண்டவர். நிரவ் மோடியின் செயல் பாடுகளால் இந்திய வங்கிகளின் இழப்பு சற்றொப்ப ரூ.19, 000 கோடிகள் என வருமான வரித்துறை அளவிட்டுள்ளது. இதுபோலவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குசராத் மாநிலத்தைச் சேர்ந்த லலித் மோடி என்ற மற்றொரு நபர் மட்டைப் பந்தாட்டம் (கிரிக்கெட்) சூதாட்டங்களில் சற்றொப்ப ரூ 7000 கோடி அளவில் வெளிநாடுகளுக்கு பணத்தைத் திருடி இந்தியாவிலிருந்து தப்பியோடி விட்டார். இவரையும் இந்தியா கொண்டுவந்து வழக்குகளை விசாரித்து தண்டனை தருவோம் என விளம்புகிறார்கள். இவர் இராஜஸ்தான் மாநில முதல்வரும், பி.ஜே.பி. முதன்மை நிருவாகிகளில் ஒருவருமான திருமதி வசுதரா ராஜேவின் நெருங்கிய நண்பர். மேலும் 2016 ஆம் ஆண்டு கிங் பிசர் என்னும் நிறுவனத்தின் தலைவரான சாராய வணிகர் விஜய் மல்லையா என்பவர் வங்கிகளில் ரூ 9000 கோடி வரை கடன் பெற்று கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டுக்குத் தப்பியோடி மகிழ்வாழ்வு வாழ்ந்து வருகிறார். இதில் மற்றொரு செய்தி என்னவென்றால் தப்பி ஓடிவிட்டதாகச் சொன்ன அன்று மதியம் வரை இந்திய நாடாளுமன்றத்தில் ஓர் அங்கத்தினர் என்ற தகுதியுடன் பங்கேற்றவர். அடுத்த நாள் அவர் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) முடக்கப் பட்டதாகவும் வங்கிகளை ஏமாற்றியதற்காக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் இந்திய அரசு அறிவிக்கின்றது. இன்று வரை அவரை இந்தியா கொண்டுவர இயலவில்லை. இவர் சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சியில் 2003 லிருந்து 2010 வரை செயல் தலைவராக இருந்தவர். 1992 ஆம் ஆண்டு குசராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்சத் மேத்தா என்ற நபர் இந்திய பங்கு சந்தையில் முறைகேடு, ஊழல் என ஈடு பட்டு ரூ 5000 கோடி பணத்தைச் சுருட்டியவர். இவரின் சொத்து மதிப்பு ரூ. 1, 35, 000 கோடிகள் என மதிப்பிடப் பட்டது. இவர் மீது 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒரு வழக்கு தவிர மீதி 27 வழக்குகள் இன்று வரை தொடர்கின்றது. இதற்கிடையில் 2001 ஆம் ஆண்டு திசம்பர் 31 அன்று மாரடைப்பால் மறைந்து விட்டதாகச் செய்தித் தாள்களில் படித்தோம். 2008 ஆண்டு கேத்தன் பரேக் என்ற மற்றொரு நபர் பங்கு சந்தையில் முறைகேடுகள் செய்து ரூ1000 கோடிகளை ஏப்பம் விட்டவர். ரூ 127 க்கு விற்ற பங்குகளை ரூ 10, 000 வரை செயற்கையாக விலையேற்றம் செய்து விளையாடியவர். இவரது வழக்கு இன்னும் தொடர்கிறதாம். ஒரு முறை தவறுகள் தெரியவந்தால் அதன் வழிப் பெற்ற படிப்பினைகள் மூலம் நிருவாக மாற்றங்கள், ஆய்வுகள், சட்டங்கள் திருத்தி அமைக்கப் பட்டு மீண்டும் அது போன்ற தவறுகள் நிகழாவண்ணம் கண்காணிப்பதே முறையான ஆட்சி முறையாகும். ஆனால் மோடிகளும், மேத்தாக்களும் பல அரசியல் கட்சிகளுக்கும், மேலிட அரசியல் வாதிகளுக்கும் நண்பர்களாகவும் உறவினர்களாகவும் இருப்பதால் தொடர்ந்து இந்தியப் பொருளாதாரம் சூறையாடப் பட்டு வருகிறது. ஒரு புறம் சில ஆயிரம் ரூபாய் வேளாண்மைக் கடனான வங்கிகளிடமிருந்து பெற்று நிதியைத் திருப்பிச் செலுத்த இயலாமலும், நேர்மையான வேளாண் தொழில் மூலம் வாழ்க்கையை நகர்த்த இயலவில்லையே என்ற ஏக்கங்களுடன் மனிதர்களுக்குரிய மான உணர்வுடன் தன் உயிரையே மாய்த்துக் கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 12, 000 ஆகும். இவர்களில் பெரும் பாலோர் மகராட்டிரம், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கருநாடகம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த குடிமக்களாவார். மறுபுறம் பல்லாயிரக்கணக்கான கோடிகளை மோசடி செய்து சுருட்டிக் கோண்டு ஓடும் மனிதாபிமானமற்ற மோடிகள், மேத்தாக்கள், பரேக்குகள் என மற்றொரு கூட்டம். இவர்கள் பெயர்களைக் கேட்டாலே தங்கள் சேமிப்புக்கு பங்கம் என அஞ்சி நடுங்குகின்ற நிலை இந்தியக் குடிமக்கள் மத்தியில் உருவாகி உள்ளது. ஊழலை ஒழிப்போம், வறுமையை ஒழிப்போம், கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்ற முழக்கத்துடன் வந்த அரசியல் கட்சிகள் யார் யார் பக்கம் நிற்கிறார்கள் எனபதை உணர்ந்தால் இது போன்ற இழிநிலைகளுக்கு விடை கிட்டும். வங்கிகள் உள் தணிக்கை, வெளித்தணிக்கை, மத்திய வைப்பு வங்கியின் தணிக்கை என பல கட்டுப்பாடுகள் இருந்தும் இந்தக் களவாணிகள் கூட்டம் தன் வேலையைக் கச்சிதமாக முடிக்க முடிகிறதென்றால் அரசியல் அரங்கில், நிருவாகத்துறையில், நீதிதுறையில் இருக்கும் சில ஓநாய்களின் ஒத்துழைப்பின்றிச் சாத்தியமாகுமா? இவர்களைப் பாதுகாத்திட எண்ணும் அல்லது பத்திரமாய் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் அரசியல்வாதிகளை அடையாளங்கண்டு அரசியல் தளத்திலிருந்து அப்புறப் படுத்தினால் ஒழிய இத்தீங்கினை அகற்ற இயலாது. இந்திய மக்கள் தொகையில் 10 விழுக்காடு பணக்கார முதலைகள் இந்தியப்பொருளாதாரத்தின் 90 விழுக்காட்டை கையில் வைத்திருப்பதும், 90 விழுக்காடு சாமானிய மக்கள் கையில் வெறும் 10 விழுக்காடு பணம் மட்டுமே என்கிற நிலைக்கு மேற்கண்ட தவறுகளே கரணியமாகும்.இந்நிலை மாற இளையோர் சிந்தனையில் தெளிவும் தேர்ச்சியும் தேவை. பேசுங்கள்; எழுதுங்கள்; செயலாற்றுங்கள். அரசியலில் பங்கேற்று தூய்மைப் படுத்துங்கள். அடுத்தத் தலைமுறையாவது நம்மை வாழ்த்தும் வணங்கும்! முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலா அதவர் திருக்குறள் (840) – திருவள்ளுவர்கனிவுடன்சு.குமணராசன், முதன்மை ஆசிரியர்."