ஊரிலும் உலகிலும் தப்புத் தாளங்கள் - தமிழ் இலெமுரியா

16 October 2014 7:38 am

கடந்தத் திங்களில் உலக அரங்கிலும் இந்திய நாட்டிலும் நிகழ்ந்துள்ள சில நிகழ்வுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். இவைகள் தற்காலக் கட்டத்தில் நிகழ்ந்தவை என்பதை நம் வாசகர்கள் மனதில் பதிவு செய்யப்பட வேண்டும் என்கிற நோக்கில் வரிசைப்படுத்துகின்றோம்.1. இசுலாமியத் தீவிரவாதத்தை ஒழிப்போம் எனும் பெயரில் அமெரிக்க நாடு ஈராக், சிரியா நாட்டுப் பகுதிகளில் தன்னுடன் மேலும் பல நாடுகளை இணைத்துக் கொண்டு அய்.நா.வின் அங்கீகாரத்துடன் ஒரு பெரும் போரைத் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றது. 2. சற்றொப்ப 13 ஆண்டு காலம் தாலிபான் தீவிரவாதிகளுடனான போருக்குப் பின்னர் இந்தியாவின் அண்டை நாடான ஆப்கானிசுதானில் அமைதியை நிலைநாட்டும் புதிய சனநாயக அரசு கடந்த செப்டம்பர் 22 ஆம் நாள் பதிவியேற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவின் பெரியண்ணன் நிலைப்பாடு தென்பட்டுள்ளது.3. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமன் என்ற நாட்டில் அரசுக்கு எதிராகப் போராடி அரசு அலுவலகங்களைக் கைப்பற்றிய சியா முசுலீம் பிரிவைச் சார்ந்த குழுவினருடன் அய்.நா முன்னெடுப்பால் அந்நாட்டுத் தலைமையமைச்சருடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.4. விண்வெளி ஆய்வில் மேலை நாடுகளே முதன்மைத்துவம் வகிக்கின்றன என்ற கூற்றைப் பொய்யாக்கும் வகையில் இந்திய நாடு செவ்வாய்க் கோள் சுற்றுப் பாதையைத் தொட்டுவிட்ட முதல் நாடாக ஆசியாக் கண்டத்தில் சிறப்புப் பெற்றுள்ளது.5. இங்கிலாந்து நாட்டுடன் இணைந்திருக்க விரும்பவில்லை என்று போராடிய ஸ்காட்லாந்து மக்களின் கோரிக்கைகளை ஏற்று நடத்தப்பெற்றப் பொது வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக 55 விழுக்காடு மக்களும் பிரிவினைக்கு ஆதரவாக 45 விழுக்காடு மக்களும் வாக்களித்து தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.6. இந்திய அரசியலில் மிகுந்து வரும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கிடையில், பதவியிலிருக்கும் போது ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறைப்படுத்தப் பட்டுள்ளார். அத்தீர்ப்பை எதிர்த்தும் ஆதரித்தும் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் வன்முறையும் ஆர்ப்பரிப்பும் செய்யும் காட்சிகள் அரங்கேறியுள்ளன. மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அரசியல், அறிவியல், மதம், ஆணவம், அதிகாரம் என பலவகைப்பட்டவைகளாகும். இந்நிகழ்வுகள் அனைத்தும் உலக அரசியலிலும் இந்திய அரசியலிலும் சில உடனடித் தாக்கங்களையும் இன்னும் பிற தொலைநோக்குத் தாக்கங்களையும் ஏற்படுத்தப்படக் கூடியவைகளாகும். இதில் செவ்வாய்க் கலன் குறித்த செய்தி தவிர பிற அனைத்தும் அழிவையும் ஆணவத்தையும் அதிகாரப் போக்கையும் பெரிதுப்படுத்தும் நிகழ்வுகளாக உள்ளன. தீவிரவாதம் மனித நேயத்திற்கு எதிரானது, மனித குலத்திற்கு எதிரானது என்பதில் உலகில் எவருக்கும் கருத்து மாறுபாடு இருக்க இயலாது. அது எந்த வடிவத்தில், எப்பகுதியில் நடைபெற்றாலும் வன்முறைகள் கண்டிக்கப் பட வேண்டியதே! ஆனால் அவற்றை எதிர்ப்பதில் தன் விருப்பத்திற்கொப்ப தேர்வு செய்து போரிடுவது என்பதுதான் அமெரிக்க நாட்டின் உள்மனதை வெளியிடுவதாக உள்ளது. ஓரிரு ஆங்கிலேய, அமெரிக்க ஊடகவியலாளர்கள் ஐ.எஸ்.ஐ என்கிற அமைப்பின் தீவிரவாதிகளால் படுகொலைச் செய்யப்பட்ட நிகழ்வு காட்டுமிராண்டித் தனமானதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது. ஆனால் அந்த மனித உயிர்கள் கொல்லப்படும் போது ஏற்படுகின்ற பதைபதைப்பதும் சனநாயகக் கடமையும் இந்தியாவை பாகிசுதான் தீவிரவாதிகள் தாக்கிய போதும், மும்பையில் சற்றொப்ப 160 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட போதும் ஏற்படவில்லையே ஏன் என்பதில்தான் அமெரிக்காவின் போர்க் குணத்தை, பொருளாதார உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. எண்ணெய் வளமிக்க அரபு நாடுகள், அண்டை நாடுகளில் மட்டுமே அக்கறை காட்டுவது ஏன்? இதற்கு தன்னுடன் சற்றொப்ப 23 நாடுகளை இணைத்துக் கொண்டு போரிடுகின்ற அமெரிக்கா, இங்கிலாந்து கூட்டமைப்பு மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலை இலங்கையிலே நடைபெற்ற போது என்ன செய்தன? வாய் மூடிகளாக, ஆயுதங்கள் வழங்கும் வணிகர்களாகத் தானே தன்னை நிலைப்படுத்திக் கொண்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்க நாடானது சற்றொப்ப 50க்கு மேலான நாடுகளில் தன் மூக்கை நுழைத்து போரிட்டுள்ளதே! இவற்றில் ஏதாவது விடிவோ வெளிச்சமோ ஏற்பட்டுள்ளதா? இதற்கு பின்னால் ஒளிந்திருப்பது ஒரு தவறான அரசியலாகும்.  அதுபோலவே ஆப்கானிசுதான் நாட்டில் கடந்த 13 ஆண்டு காலமாக தாலிபான் தீவிரவாதத்திற்கு பின்பு நாட்டில் சனநாயகம் தளைக்க தேர்தல் நடத்தப்பெற்று அஷ்ரப் கனி என்பவர் தலைமையிலும் அப்துல்லா அப்துல்லா என்பவர் தலைமையிலும் இரு அணிகள் தேர்தலைச் சந்தித்தன. தேர்தல் முடிவுகள் அஷ்ரப் கனிக்கு ஆதரவாக வந்த நிலையிலும் உரிய அமைதித் தீர்வு ஏற்படவில்லை என்ற கருத்தில் போட்டி போட்ட இருவருமே அரசு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது என அமெரிக்கா சமரசம் செய்து வைத்தது எந்த வகையான சனநாயகம் என்று புரியவில்லை? ஒருவருக்கு எதிராக வாக்களித்தக் குடிமக்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? இதுவும் தவறான பாதையல்லவா!ஏமன் நாட்டில் ஒரு மதக் குழு அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு பொதுமக்களைக் கொன்று குவித்தும், அரசு அலுவலகங்களை தீயிட்டுக் கொழுத்தியும் காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்ட நிலையில் அங்கு அரசுடன் சமரசம் செய்து வைக்கும் அய்.நா.வின் சமரச முயற்சியை எந்தப் பிரிவில் வகைப்படுத்துவது? இதுவும் தவறான முன் மாதிரியல்லவா! தமிழ்நாட்டில் பதவியிலிருந்த முதலமைச்சர் சற்றொப்ப 18 ஆண்டுகால நீதிமன்ற விசாரிப்புகளுக்குப் பின்னர் தண்டிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டமையும் அதன் பின்னர் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் தத்தம் கடமைகளைச் செய்தவர் யாரும் கண்ணில் படவில்லையே! தீர்ப்பு வழங்கிய விதமும் தேர்ந்தெடுத்த நாளும் அரசியல் தலையீடு இல்லை என்று ஒப்புக் கொள்ளும் அளவு இல்லையே! நீதிக்குப் பின்னும் மீதியாக சில அரசியல் நிலைப்பாடும் ஆக்கிரமிப்பு எண்ணங்களும் ஆங்காங்கே தெரிகின்றன என்பதை யாரும் மறுக்க முடியுமா? இதுவும் இந்திய சனநாயகத்தின் தவறானப் பார்வையல்லவா! கள்ள மனங்களும் கபட எண்ணங்களுமே இன்று உலகெங்கிலும் சனநாயக வேடமிட்டு உலா வருகின்றன என்பது வெள்ளிடை மலையாகத் தென்படுகின்றது. ஊரிலும் உலகிலும் நிகழ்பவை அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. மனித குலத்தின் அழிவுக்கே வழிவகுக்கும் இழிகாட்டிகளாக உள்ளன. சனநாயகம், நீதி, நேர்மை என்கிற போர்வையில் தாளங்கள் அனைத்தும் தப்புத் தாளங்கள். வரலாற்றுப் பிழைகள் எதிர் காலத் தலைமுறைகளின் சிந்தனை நீரோட்டத்தில் விடமாகக் கலந்து விடாமல் காக்க வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்; கடமையாகும். இன்றைய செய்தி நாளைய வரலாறு. எனவே செய்திகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மடமைகள் தவிர்த்து மனித நேயம் வளர்ப்பது மக்களின் கடமையாகும். ஆம் யாதும் ஊரே யாவரும் கேளிர்" என உலகக் குடிமகனாகத் தன்னை அறிவித்துக் கொண்ட ஒரே இனம் தமிழினமல்லவா! ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி (குறள்: 137) கனிவுடன்,  சு.குமணராசன் முதன்மை ஆசிரியர்S.KUMANA RAJANEditor in Chiefஐப்பசி – 2045(அக்டோபர் – 2014)"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி