18 April 2015 6:34 pm
மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனைப்பொய்சிதைக்கும் பொன்போலும் மேனியைப் – பெய்தகலஞ்சிதைக்கும் பாலின் சுவையைக் குலஞ்சிதைக்குங்கூடார்கண் கூடி விடின்.பதினென்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகை என்கிற நூலில் சொல்லப் பட்டுள்ள இக்கருத்து சற்றொப்ப 1500 ஆண்டுகளுக்கு முன்பு மனித குலத்திற்குப் பொதுவாக சொல்லப்பட்டதேயெனினும் இக்காலத் தமிழகத்தின் அரசியல் தளத்தில் பயணிக்கும் பலருக்குப் பொருத்தமுடையதாகவிருக்கிறது. ஆம்; தமிழ் நாட்டு அரசியல் தளத்தில் நாம் காணுகின்ற வேற்றுமைப் போக்கு, பொறாமை உணர்வு, ஒவ்வாமை போன்றவற்றிற்கு அளவேயில்லை என்ற அளவு குமுகாயம் சரிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. வட இந்தியாவில் கடந்தத் திங்களில் நடைபெற்ற ஒரு அரசியல் தலைவர் இல்லத்தின் திருமண வரவேற்பில், அரசியலில் பல்வேறு முரண்பாடுகளையும் வேற்றுப்பாதைகளையும் கொண்ட மாற்றுக் கட்சியினர் பலரும் இன்முகத்தோடு வந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி ஒருவரையொருவர் கட்டித்தழுவி தத்தம் நட்பையும் மனித நேய உணர்வுகளையும் பகிர்ந்து கொண்ட செய்தி பல ஊடகங்களில் வெளியானது நினைவிருக்கலாம். ஆனால், வரலாறு, பண்பாடு, கலாச்சாரப் பெருமை பேசுகின்ற தமிழ் நாட்டில் அது போன்று ஒரு காட்சியினைக் காண இயலாது என்பது மட்டுமல்ல; ஒருவேளை மாற்றுக் கட்சியினர் சந்திக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டால் கூட ஒருவரைக்கண்டு மற்றொருவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு ஓடுகின்ற காட்சியினைத் தான் காணமுடிகிறது. இது திருமண வீடுகளில் மட்டுமன்றி மனிதர்கள் மறைவால் துன்புற்றுக்கொண்டிருக்கின்ற இழவு வீடுகளிலும் நடைபெறுகின்ற ஒன்றாக மாறிவிட்டது. இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சில நாட்களுக்கு முன்பு தான் தீட்டிய அறிக்கை ஒன்றில் மிகுந்த கவலையுடன் குறிப்பிட்டிருந்தார். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கொள்கை என்று பேசுகின்ற அரசியல் அரங்கில் உலாவருகின்ற இன்றையத் தலைமுறையினரிடம் காணப்படும் இந்த இழி நிலை எவ்வாறு நிகழ்ந்தது? மொழிக்காப்பாளர்கள் போல் முன்னின்று பேசுகின்ற பலர் இன்று தமிழ் இனத்திற்கே குழிபறிக்கின்ற வகையில் ஒற்றுமையைச் சிதைந்து, உறவுகளை மறந்து பழியாளர்களுக்கு முதுகு சொறிந்து விடுவதில் முனைப்பாக உள்ளனர். இது தான் காலத்தின் கோலமென்பதோ? அடுக்காத இந்த அவலத்தை எண்ணுகின்ற போது நெஞ்சம் புண்ணாகிறது. தற்காலத்தில் தமிழர்கள் எதிர்கொள்கின்ற சிக்கல்கள் ஏராளம். மேற்கே கருநாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களுடன் நீர்ச் சிக்கல், வடக்கே ஆந்திர மாநிலத்துடன் நீர்ச்சிக்கல், நிலச்சிக்கல், வனச் சிக்கல் என தமிழர் உரிமைப் பறிப்பு தொடர்கின்றது. கிழக்கே கடலை நோக்கிச் சென்ற தமிழன் கரை திரும்பாது இலங்கைச் சிறைக் கொட்டடியிலும், குண்டடி பட்டும் செத்து மடிகின்றான். இந்த நேரத்திலாவது தமிழ் மக்களும், அரசியல் தலைவர்களும், சமுக ஆர்வலர்களும், மொழி ஆர்வலர்களும் ஒற்றுமையுடன் செயல் பட வேண்டாமா? ஆனால் தமிழ் நாட்டில் நிகழ்வது என்ன? தமிழ்த் தேசியம் என்ற பெயரில் தமிழினம் எதிர் கொள்கின்ற சிக்கல்களுக்கு திராவிடம் என்ற சொல்லே கரணியம்; எனவே அதுவே எம் எதிரி என்று ஒருவரை ஒருவர் வசைபாடுவது, யார் தமிழன்? ஏன் திராவிடம்? என ஆய்வு செய்து அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டு மீதியிருக்கின்ற தமிழர்களையும் பிரித்து, சிதைத்து, சின்னாபின்னமாக்கி தமிழர் ஒற்றுமையை வளர்த்துக் கொண்டிருப்பதாகக் கதைப்பதை என்னவென்று சொல்வது? திராவிடக் கட்சிகள் வேரறுக்கப்பட வேண்டும்; திராவிட இயக்கம் தவறானது; பெரியார் தவறானவர்; தமிழுக்கு தமிழனுக்கு எதிரானவர் என்றெல்லாம் நீட்டி முழங்குவதும் எழுதுவதும் சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது. திராவிட நாடு திராவிடருக்கே என்று முழங்கிய பெரியார் மொழி வழி மாநிலங்கள் பகுப்புக்குப் பின்னர் தமிழ் நாடு தமிழருக்கே" என்ற முழக்கத்தை முன் வைத்தவர்; போராடியவர். திராவிட இயக்கச் செயல்பாடுகளின் தொடர்ச்சியாக அரசியல் தளத்தில் 1950களில் கட்சி அரசியலாகத் தொடங்கி தி.மு.க, அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க போன்ற அரசியல் கட்சிகள் மற்றும் திராவிட என்ற சொல்லைத் தன்னுடன் இணைத்துக்கொண்டு தொடங்கப் பெற்ற தே.மு.தி.க என பல கட்சிகளில் சில ஆளும் கட்சியாகவும் சில எதிர்க்கட்சியாகவும் இன்னும் சில ஒரு சில சட்ட மன்ற நாடாளு மன்ற உறுப்பினர்களைக் கொண்டதாகவும் விளங்கி வருகின்றன. இவைகளின் அரசியல் நிலைப்பாடு, ஆளும் திறமை, கொள்கை முரண்பாடு, சமரசக் கோட்பாடு ஆகியவை குறித்து விமர்சனங்கள் இருக்கலாம், குறைகள் இருக்கலாம். அவற்றை நாம் நியாயப்படுத்த முயலவில்லை. ஆனால் கட்சி அரசியலைத் தாண்டி, எந்த விதத்திலும் அரசியல் தளத்தில், ஆட்சி அதிகாரத்தில் வர விரும்பாது ஒரு சமுகப் போராளியாக தன் வாழ்நாளின் இறுதி வரை போராடிய சமுகத் தொண்டரைக் கூட வேற்று மொழியினர், வேற்று மாநிலத்தவர் என்று புலம்புகின்ற செயல் இவர்களின் கீழ்மைப் போக்கையே காட்டுகின்றது. வரலாற்றை அறியாமல் வாய்க்கு வந்த படி அயல் மாநிலத்தவர் அயல் மொழியினர் என்று பேசுகின்ற போக்கு தற்காலத் தமிழ் மக்களை மேலும் பிளவு படுத்துகின்ற கோடாரியாகவே அமையும். ஜி.யு.போப், வீரமாமுனிவர், கால்டு வெல் போன்றவர்கள் அயல் மொழியினர், அயல் நாட்டவர்கள். இவர்களின் தமிழ்த் தொண்டை ஏளனப்படுத்த இயலுமா? வெற்று உணர்ச்சிகளும், வெறுமைக் கிளர்ச்சிகளும், வேடிக்கை நிகழ்வுகளும் ஊர்வலங்களும் எப்போதும் நன்மையைத் தந்திடாது. நம்மில் உணர்ச்சிகள் ஊடுருவியிருக்கும் அளவில் ஒற்றுமை இல்லை. தமிழ் நாட்டு மக்களின் மெய்யான தளர்ச்சிக்கும் அடிமை போக்கிற்கும் அடித்தளமிடுபவை சாதி மத கட்சி அரசியல் மோகம், மது புகையிலை ஆர்வம், திரைப்படம் தொலைக்காட்சி மோகம், விளையாட்டு மோகம், நுகர்வுப் பொருள்களின் மோகம் என்பனவேயாகும். இதையும் தாண்டி பெரு மோகமாக, மோசமாக விளங்குவது பொருள், பதவி, அரசியல் வல்லாண்மை என்பன. தமிழா சாதியா எனில் சாதி முதன்மை பெறுவதும் தமிழா மதமாவெனில் மதம் முதன்மை பெறுவதும் தமிழ் இனமா அரசியல் கட்சியாவெனில் அரசியல் கட்சி முதன்மை பெறுவதும் இன்றையக் கோட்பாடாக வடிவம் பெற்றுள்ளது. இவை அனைத்துடன் பொருளை ஒப்பிட்டால் பொருளே அனைத்திலும் முதன்மை பெறுவதும் அப்பொருள் சேர்க்க அடித்தளமிடும் பதவி முதன்மை பெறுவதும் விதிவிலக்கின்றி அனைத்து அரசியலாளர்களிடமும் காணப் பெறும் கசடுகளாகும். மேற்கண்ட அனைத்துமே தமிழரை தன் சுய நினைவிலிருந்தும் உணர்விலிருந்தும் மயக்கி வைத்துள்ளன. தமிழ் மொழி, தமிழ் இனம் என்று பேசும் தமிழ்த் தேசியவாதிகள் தமிழ் நாட்டின் உயர்வுக்கும், ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் தடையாக நிற்கும் காரணிகளை அகற்றிடத் திட்டமிட வேண்டுமே தவிர மறைந்து போன தலைவர்களின் மூதாதையர்கள் யார்? எங்கிருந்து வந்தனர் ? என்று தொடர்பில்லாத செயல்களை முன்னெடுத்து நம்மவர்களையே வகுத்தலுக்கும், பகுத்தலுக்கும் உட்படுத்தி வளர வேண்டிய ஒற்றுமையைச் சிதைக்கும் சிறுமைப் பணிகளில் ஈடுபடுபது தவறான விளைவுகளையே தமிழ் நாட்டுக்குத் தரும். ஆளுக்கொரு பக்கமாய் முகம் திருப்பி நின்றால் நம்மை அழுத்த நினைக்கும் ஆதிக்க சக்திகளுக்கும், ஆளநினைக்கும் அந்நியர்களுக்கும் உரமாகவே அமையும். ஊர்கூடித் தேர் இழுப்பது போன்று தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று பட்டு இணைந்தால் தான் எண்ணியதை எய்த முடியும். நம்மை அழிக்க எண்ணாத, அடக்கத் துணியாத அனைவருமே நம் அன்பிற்குரியவர்கள் அணைப்பிற்குரியவர்கள் என்ற பரந்த நோக்கும், பரிவான எண்ணங்களும் தமிழ் இளையோரிடத்தில் வளர்க்கப் படவேண்டும். அகப்பகையும் உட்பூசலும் ஒற்றுமையின்மையும் ஓர் இனத்தை வீழ்த்தியே தீரும். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழ் நாட்டிற்காகவும் பாடுபட்டு வாழ்ந்து மறைந்த தலைவர்கள் எவராயினும் மறவாது போற்றி இளையோரின் சிந்தனையை சீர்மையைப் செப்பனிடிகின்ற தலைமையும் ஒப்புரவுடன் கூடிய ஒற்றுமையுமே தற்காலத் தமிழ் நாட்டின் தேவையும் சேவையுமாகும். பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் (குறள்: 475)கனிவுடன் சு.குமணராசன், முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJANEditor in Chiefசித்திரை – 2046(ஏப்ரல் – 2015)"