16 February 2015 8:31 pm
இலங்கை நாட்டில் கடந்தத் திங்கள் நடைபெற்று முடிந்த ஏழாவது பொதுத்தேர்தலில் அரசுத் தலைவராக மீண்டும் தனித்து வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கையுடன் தேர்தலைச் சந்தித்த அதிபர் இராச பக்சே படுதோல்வி அடைந்துள்ளார். தோற்கவே மாட்டேன் எனத் திடமாக தான் நம்பியது மட்டுமன்றி, பொதுமக்களையும் உலக நாடுகளையும் நம்ப வைத்த இராசபக்சேவின் கனவும் நினைவும் கானல் நீராகியுள்ளது. அவர் பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது என்ற நிலையிலும் முன்கூட்டியேத் தேர்தலை அறிவித்து தனது முதன்மைச் சோதிடரிடம் ஆருடம் கணித்து அதற்கொப்பவே தேர்தல் நாள், வாக்களிக்கும் நேரம் ஆகியவற்றை உறுதி செய்தவர் இராசபக்சே ஆவார். எனினும் அந்த ஆருடம் யாவையும் அணைந்து போன விளக்கானது. இவருடைய பலம் இருவகையானது. ஒன்று இலங்கையின் நடுத்தர மக்கள் மற்றும் சிற்றூர்ப்புற மக்களின் பெரும் தலைவர் என்கிற ஒரு மாயை, மற்றொன்று சிங்கள பவுத்த தீவிரவாதி என்ற ஒரு கடும்போக்கு. இவையிரண்டும் பெருவாரியான வாக்குகளை அள்ளித்தரும் என்று நம்பினார். இந்த வலிமையே அவர் தமிழ் மக்களுக்கு எதிராகவும் போராளிகளுக்கு எதிராகவும் இராணுவ பலத்தை ஏவிடத் துணை நின்றன. பல இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களின் உயிரைக் காவு கொண்டன. மேலும் அந்த அதிகாரப் போதை விரிவுபட்டு அண்டை நாடான இந்திய மண்ணையும் ஏளனமாகப் பார்க்கும் அளவு ஆணவத்தையும் அவருள் விதைத்தது. ஆனால் காற்று திசைமாறியது, கடலலையின் தாக்கம் மாறுதல் அடைந்தது. வரலாறு சுழன்றது. திடமான நம்பிக்கையுடன் தேர்தலை அறிவித்தாலும் தன் முடமான சிந்தனையில் இலங்கைக் குடிமக்களின் ஏக்கமும் அப்பாவித் தமிழ் மக்களின் தாங்கொணாத் துயரால் விளைந்த சினமும், அண்டை நாட்டைச் சீண்டிப் பார்த்தச் சிறு பிள்ளைத் தனமும் அவரை ஒரு கருத்துக் குருடனாக்கியது. நேற்றுவரை அதிக அறிமுகம் இன்றி உலாவிய மைத்திரிய சிறிசேன வெற்றி பெற்றுள்ளார். இவ்வெற்றி வடக்கு மாகாணத்தின் தமிழ்த் தேசியக் கூட்டணி, கிழக்கு மாகாணத்தின் இலங்கை முசுலீம் காங்கிரசு ஆகியவற்றால் மறைவாக வைக்கப்பட்டிருந்த அரசியல் வியூகத்தால் கிடைத்த ஒன்று என்பதை தோல்வியடைந்த இராசபக்சே, வெற்றி பெற்ற மைத்திரிய சிறிசேன இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இலங்கைக் குடியரசின் ஆளுமையை எந்த சிங்களர் எந்த பவுத்தரிடம் ஒப்படைப்பது என்கிற முடிவை சிறுபான்மை இனமாக வாழ்கின்ற ஈழத் தமிழ் மக்களும், இசுலாமியர்களும் முடிவு செய்ய முடிகிறதேயல்லாமல் குடியரசுத் தலைவராக தாம் சார்ந்த இனத்தவர் ஒரு போதும் ஆக முடியாது என்பதே இலங்கையின் அரசியல் அமைப்பாகும். இதை எவ்வாறு சம உரிமையுடைய மக்களாட்சி நாடாகக் கருத இயலும்? புதிய ஆட்சியில் தமிழர்களுக்கு விடிவு ஏற்பட்டு விட்டது, வெளிச்சம் தெரிகிறது என்றெல்லாம் அகில இந்தியக் கட்சி தலைவர்களும், தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களும் அறிக்கைகள் விட்டு தம் இருப்பையும், ஈழத்தமிழர் மீது கொண்டிருக்கும் ஆர்வத்தையும் வெளிப்படுத்துவதாக எண்ணுகின்றனர். குறிப்பாக 13வது சட்டத்திருத்தம் தமிழர்களின் இன்னலைப் போக்கும் இனிப்பு மருந்து என மக்களை நம்ப வைக்கின்றார்கள். இது மாபெரும் பொய்மை ஆகும். ஈழத் தமிழர்கள் கி.பி.1619&ம் ஆண்டு சங்கிலி மன்னனின் தோல்விக்குப் பின்னர் தம் இறையாண்மையை இழந்தனர். அதை இன்றுவரை திரும்பப் பெறவில்லை என்பதே உண்மையாகும். 1948 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்களில் ஏற்பட்ட ஆங்கிலேயே ஆட்சி முடிவிலிருந்து இன்று வரை பல்வேறு கால கட்டங்களில் தமிழர் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றது. எனினும், ஈழத் தமிழர் இழந்த இறையாண்மை குறித்து இந்தியா மற்றும் உலக நாடுகள் உட்பட யாரும் பேசுவதில்லை. அக்கறையுடன் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் இக்கரை இந்திய நாடு தமிழர்கள் இறைமை மறுக்கப்பட வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது. காரணம் இந்திய நாட்டிலும் அதே மொழி பேசும் மக்கள் வாழ்கின்றார்கள் என்ற ஐய உணர்வும் அச்ச உணர்வும் ஆரியச் சார்பு நிலையும் ஆகும். வரலாற்றில் 1954 சவகர்லால் நேரு & கொத்தலவாலா பேச்சு தொடங்கி, 1957 பண்டாரநாயகா & செல்வநாயகம் ஒப்பந்தம், 1964 சிறிமாவோ & சாஸ்திரி ஒப்பந்தம், 1965 டட்லி சேனநாயகா & செல்வநாயகம் ஒப்பந்தம், 1974 சிறிமாவோ & இந்திராகாந்தி ஒப்பந்தம், 1987 ராஜிவ் &ஜெயவர்த்தனே ஒப்பந்தம் என கன்னித்தீவு படக்கதை போல இந்தக் கண்ணீர்த் தீவில் தமிழ்மக்கள் உரிமைப் பறிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது பேசப்படுகின்ற 13&வது சட்டத்திருத்தம் என்பது இறுதியாகச் சொல்லப்பட்ட 1987 ராஜீவ் & ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இதனால் எவ்வித மாற்றமும் நிகழப்போவதில்லை. இது இந்திய அரசியலமைப்பின் மத்திய & மாநில உறவுகளை விடக் கீழானதும் கீழ்மையானதும் ஆகும்; அதிகாரமற்ற ஒன்றாகும். 2009ஆம் ஆண்டு இறுதிப் போரில் கொல்லப்பட்ட 1,70,000 அப்பாவி மக்களின் படுகொலை, அதன் விளைவாகப் புதைக்கப்பட்ட மனித உரிமைக் கோட்பாடு, கடமை தவறிய ஐ.நா மன்றத்தின் செயல்பாடு, சிங்கள அரசின் மீது உரிய பன்னாட்டு நீதி விசாரணை ஆகியவற்றை மீளாய்வு செய்வதே உலக நாடுகளின் தற்கால கடமையை£க அமைய வேண்டும். மற்றவையெல்லாம் வெறும் மாயைத் தோற்றங்களே. தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகப் பார்க்கும் மனநிலை மாற்றம் பெற வேண்டும். போர் முடிந்து ஆறு ஆண்டுகளுக்கு பின்னும் இராணுவம் தமிழ் மக்கள் வாழும் பகுதியை சூழ்ந்திருப்பதை முற்றாக நீக்க வேண்டும். புதைக்கப்பட்ட உண்மைகள் ஒரு நாள் வெளிவந்தே தீரும், சிதைக்கப்பட்ட உயிர்களும் விதைக்கப்பட்ட உடல்களும் முளைக்கும். உரிமையை இழந்து இறையாண்மையைத் தேடும் ஈழத் தமிழர்களுக்கு இனிப்பு பண்டத்தைக் காட்டும் இந்திய அரசின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் வேண்டும். நடைபெற்ற தேர்தலில் வரலாறு திரும்பினாலும் உடைபட்ட உள்ளங்களில் உரிமையும், இறைமையும் இன்றுவரை எட்டாக் கனியே! உணர்ந்து செயல்படுமா உலக நாடுகள்? அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. (குறள்: 847)கனிவுடன், சு.குமணராசன்,முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJANEditor In Chiefமாசி – 2046(பிப்ரவரி – 2015)