15 February 2017 6:21 pm
கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாட்டில் நடைபெற்ற நிகழ்வுகள் இந்திய நாட்டின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தவையாகும். தமிழ்நாட்டின் பண்பாட்டு உரிமைகள் மீது நடுவணரசு கைவைத்த போது அரசியல் தளங்களிலிருந்து எதிர்ப்பட்ட குரல்களை விட மக்கள் தளத்திலிருந்து எதிர்ப்பட்ட குரலும் தொடர்ந்து நடைபெற்ற அறப் போராட்ட வடிவங்களும் இந்திய அரசியல்வாதிகளை திரும்பிப் பார்க்கச் செய்தன; திடுக்கிட வைத்தன. வேற்றுமையில் ஒற்றுமை என்ற முழக்கத்தில் ஒற்றுமையில் வேற்றுமை காண முயன்ற அரசியல்வாதிகள் பின்னர் வேறு வழியின்றி அவசரச் சட்டம், மாநிலச் சட்டம் என எழுதி மாநில அமைச்சரவை, மத்திய அமைச்சரவை, ஆளுநர், தலைமையமைச்சர், குடியரசு தலைவர் என அனைவரும் கையெழுத்திட்டனர். இவ்வாறு அனைவரையும் ஆட்டிப் படைத்தமையும் தொடர்ந்து நடுவணரசின் உணர்வு, வல்லாண்மை & வேளாண்மைக்கு எதிரான போக்கினையும் எதிர்த்து நின்றமையும் தமிழ்நாட்டு மாணவர்கள் சிந்தனையில் ஏற்பட்ட ஒரு பெரு மாற்றம் ஆகும். கூழாங்கற்கள் என எண்ணியிருந்த ஒரு கூட்டம் எழில் மிகு கோபுரமாக காட்சி தந்தது. அந்தப் பெருமையை எண்ணி மகிழ்ந்திருந்த தமிழ்நாட்டில் தொடர்ந்து வந்த அரசியல் சீரழிவுகள் நம்மை வெட்கித் தலைகுனியச் செய்துள்ளன. மேனாள் முதல்வர் செல்வி செயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஒருமனதாக தங்கள் கட்சியின் சார்பில் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வத்தை தேர்வு செய்தனர். கடந்த நான்கைந்து மாதங்களாக முடங்கிக் கிடந்த அரசு நிருவாகம் சீர்படத் தொடங்குகின்றது என்று சற்றே நிம்மதி பெருமூச்சு விட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு முதலில் ஓர் இயற்கைச் சீற்றமாக வார்தா புயலும் தொடர்ந்து அரசியல் வானில் ஒரு செயற்கை சீற்றமாக முதலமைச்சர் இருக்கைக்கான போட்டியும் திடீரென சுழன்றடித்தன. தனிப் பெரும்பான்மையுடன் ஆளும் கட்சியாக விளங்கும் அ.இ.அ.தி.மு.க.வில் முதல்வர் தேர்வு செய்த 60 நாட்களில் மற்றொரு முதல்வர் தேர்வு நடைபெறுகிறது. ஆளுநர் மாளிகையில் ஆளுநர் இல்லை. புதிய முதல்வரை முன்மொழிந்த தற்கால முதல்வர் தான் மிரட்டப்பட்டதாகவும் தாக்குதல்குள்ளானதாகவும் தெரிவித்து, பல்லாண்டு காலம் இணைந்து செயலாற்றிய தன்மைகள் பலவற்றிலிருந்து தன்னை வேறுபடுத்துகிறார்! என்னே விந்தை! வாக்களித்த மக்கள் பலரும் வாய்பிழந்து நிற்கின்றனர். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பது போல தன்கட்சி ஆட்சியில்லா மாநிலத்தின் குழப்பங்களைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள எண்ணுகிறது நடுவணரசு. அரசு நிருவாகம் மீண்டும் முடங்குகிறது. அத்துணைக் குழப்பங்களுக்கும் ஆணிவேராக இருப்பது ஆளுநர் என்ற அரசமைப்புப் பதவியே ஆகும். மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஒரு நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர், தலைமையமைச்சர் என அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சார்பாளர்கள். ஏன் குடியரசு தலைவர் பதவி கூட மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்படுவதாகும். ஆனால் ஆளுநர் என்பவர் நமது அரசமைப்புச் சட்டத்தின் ஓர் அதிசயப் படைப்பு; ஆங்கிலேயர் விட்டுச் சென்ற ஏகாதிபத்தியத்தின் கடைசி சின்னம்; இந்திய நாட்டு விடுதலைக்குப் பின்னரும் அறுத்தெரிய முடியாத ஓர் ஆடம்பரப் படைப்பு; நடுவணரசின் கங்காணி; மாநில மக்களுக்கும் மாநில அரசிற்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லா வலிமையான ஓர் அதிகார மையம். மாநிலத்தின் ஆட்சித் தலைவர். இவர் மட்டுமே தன் விருப்புக்கொப்ப முடிவுகளை மேற்கொள்ள முடியும்! இப்படிப்பட்டப் பொறுப்புக்குரியவர் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்? மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியை சார்ந்தவர்; நொந்து போன அரசியல்வாதிகளுக்கு சில நேரங்களில் தரப்படும் ஆறுதல் பரிசு; திறமையற்ற இடைத்தரமான அரசியல் வாதிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடை; பொதுத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அல்லது தேர்தலைக் கண்டு அஞ்சுகின்ற அரசியல்வாதிகளின் கடைசி அடைக்கலம். இப்படித்தான் ஆளுநர் தேர்வாகின்றார். மக்களாட்சி முறைக்குச் சற்றும் ஒவ்வாத இந்த ஆளுநர் நடவடிக்கையே தமிழ்நாட்டில் நிகழ்ந்த அனைத்து சிக்கல்களுக்கும் கரணியமாக விளங்குகின்றது. இந்தப் பதவி ஒழிக்க்கப்பட வேண்டும் என்பது எம் கருத்தாகும்.ஒருபுறம் கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் விலங்குகள் போல் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை ஏராளாம் என கணக்கு காட்டும் புதிய முதல்வர். மறுபுறம் பதவி துறந்து பரிசுத்தமானவராகக் காட்சிக் கொள்ளும் பழைய முதல்வர். இதுதான் அரசியலா? இதழை வாசிக்கும் இந்நேரம் ஏதோ ஒரு தீர்வு கிட்டியிருக்கும். ஆனால் அது தான் தீர்வா? மெய்யான திர்வுகளைத் தேட வேண்டிய காலம் இது. அங்குமிங்கும், எங்கெங்குமாய் பீதியைக் கிளப்பும் வன்முறையாளர்கள் போல், இருட்டின் ஈடுபாடர்களாய் ஏய்த்துச் சுருட்டுவோர்; பேராசையிலே முக்காலும் மூழ்கியிருக்கும் முதலாளிகள், பதுக்கிப் பணம் சேர்க்கும் வணிகர்கள், முச்சந்தியில் பொய்யை நிலைநாட்டும் வழக்குரைஞர்கள், எவர் எக்கேடு கெட்டுப் போகட்டும் என செய்தி பரப்பும் ஊடகங்கள், நல்லோராய் நடிக்கும் வேடதாரிகள், சாதி ஒழிக என்று முழங்கி சாதிக்கு மட்டும் அரணாய் நிற்கும் அரசியலாளர்கள், பணத்தை வாங்கி வாக்களித்தப் பாவிகள், அனைத்து அவலங்களுக்கும் பழகிப் போனவர்களாய் அச்சடித்த பதுமைகள் போல் அசையாமல் நிற்கும் மக்கள் என அனைவரும் எம் பார்வையில் குற்றவாளிகளே! இது தொடருமாயின் தொடர்புடைய நம் தமிழ்ச் சமுதாயத்தின் எதிர்காலம் என்றும் ஏறுமுகமாயிராது. தீர்வுகளைத் தேடி அலைகின்ற அனைவருக்கும் தமிழ்நாட்டு மாணவர்களும் மக்களும் தீர்வைத் தரமுடியும் என்பது எமது நம்பிக்கை. சரளைக் கற்களின் சத்தங்களுக்காக வைரக் கற்கள் வருத்திக் கொண்டிருக்கலாமா? இந்த இழிநிலையின் கருவைக் கண்டு கருக்கலைப்புச் செய்ய வேண்டிய தருணம் இது. உலகு என்பது உயர்ந்தோர் மாட்டு" எனும் உண்மையை ஒதுக்கிவிட்டு முரட்டடி முயற்சிகளோடு மூர்க்கத்தனமாக குமுகாயத்தில் உலவும் புல்லரிவாளர்களை, உள்நோக்குடன் உறுத்துவோரையும் வீழ்த்திடுக! நீறுபூத்த நெருப்பாய் தமிழர் நெஞ்சில் தெறிக்கும் கணல் தடைகளைத் தாண்டி தடம் பதிக்கட்டும். இயற்றமிழ் நிலத்தைச் சிந்தையில் கொண்ட சீராளர்களே எண்ணியதை எண்ணியவாறு எடுத்துரைப்போம். ‘விதைத்ததே விளையும் வினையே விளைவாகும்’ என்பதற்கிணங்க எண்ணிச் செயல்பட்டால் இனி ஒரு தலைமை உருவாகும்; அதுவே தமிழ்நாட்டின் விடிவாகும். தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை திருக்குறள் (702) – திருவள்ளுவர்கனிவுடன் சு.குமணராசன், முதன்மை ஆசிரியர்.Editor In ChiefS.KUMANA RAJANமாசி – 2048(பிப்ரவரி – 2017)"