சிந்தையில் கொண்டு செப்பனிடுக! - தமிழ் இலெமுரியா

11 January 2015 4:09 pm

தைப் பொங்கல் தமிழ்நாட்டுக்குரிய ஓர் தனிச்சிறப்பு விழா. உழைக்கும் வேளாண் மக்களின் உயர்வுத் திருவிழா! இதில் சமயச் சார்பு இல்லை. உழவர் உழுது விளைவித்த புதிய நெல், தானிய விளைவுகளும், பசுக்கள் தரும் பால், நெய், ஆலைக் கரும்பின் சருக்கரையும் சேர்த்துப் பொங்கலிட்டு புத்தாடை உடுத்தி புத்தாண்டை வரவேற்று முன்னோருக்கு படைத்தும், வருவோர்க்கு வழங்கியும் சுற்றமொடு உண்டு மகிழ்வு கொள்ளும் ஒரு பண்பாட்டுத் திருவிழா ஆகும். எவ்வகை இன்பமும் எல்லார்க்கும் இனிதின் எய்த வேண்டுமாயின் இன நாட்டமும் ஆன்றோர் வழிபாடும் இன்றியமையாதனவாகும். ஆட்சிமுறையும் கற்போர் கற்பிப்போர் நிலையும் தொழிலாளர் தொழில் தோற்றுவிப்போர் உறவும் உழுவோர் உழைப்பும் வணிகர் தம் வாய்மையும் மன்பதை எனப்படும் குமுகாய ஒற்றுமையும் அன்பும் ஒப்புரவும் உதவியும் உள்ளன்புடன் பெருகுதல் வேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெருஞ்சிந்தனையாளர்களில் ஒருவரான டால்ஸ்டாய் திருக்குறள், வேதம், பைபிள், பகவத் கீதை உட்பட உலகின் பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தவர். எனினும் அவர் எழுதுகின்ற மடல்களில் தவறாது குறிப்பிடுகின்ற வரிகள் திருக்குறளிலிருந்து எடுத்துக் காட்டப்படுபவையாகவே இருந்தன. உலக இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்த பேரறிஞரான இவர் உலகப் பொதுமறையான திருக்குறளை நன்கு உணர்ந்தவராவார். ஆனால் தமிழர் எனப் பேர் படைத்து வாழும் தமிழ் மக்கள் தம்முடைய மொழியின் தனிச்சிறப்பை இன்றளவும் உணர மறுக்கும் போக்கு வேதனை தரும் ஒன்றாகும். இன்று பழந்தமிழ் நூல்கள் பல பேணிப் பாதுகாப்பாரற்று அழிந்து கொண்டே வருகின்றன. அவற்றைக் கற்பவர்களின் தொகை சுருங்கிக் கொண்டே வருகிறது. அறிவமைதிப் பெற்ற சான்றோர் பெருமக்களின் தொகையும் தமிழ்நாட்டில் அழிந்து கொண்டே வருகின்றது. தமிழர்களாகிய நம்மிடம் எல்லா வளங்களும் உள்ளன. ஆனால் ஒன்று மட்டும் இல்லை. அதுதான் தான் தமிழ் மொழிக்கு உரிமையுடைய தமிழன் என்ற உணர்ச்சி. இந்த உணர்ச்சி அடியோடு மறைந்து வருகின்றது. தமிழன் என்ற உணர்வு ஒன்றே தமிழ் மக்களை ஒன்றுபடுத்தும். அவ்வுணர்வு வளர்ந்தால்தான் நாம் நலம் பெற முடியும். ஒற்றுமை உயர்வைத் தரும் என்பது நியதி. கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி"என்று தன்னைத்தானே புகழ்ந்து கொண்ட தமிழினம் இன்று பெரும் தாழ்வையும் வீழ்வையும் சந்தித்திருப்பதை சற்று சிந்தித்தல் வேண்டும். தமிழினத்தைச் சீர்குலைக்கும் அடிமைத்தனம், அயல் பண்பாட்டு மோகம், அறியாமை ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற வேண்டும். தமிழினத்திற்கு இழிவையும் அழிவையும் தரும் பண்பாட்டுச் செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்.  தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல. தமிழ் என்னும் நற்சுரங்கத்தில் தோண்டத் தோண்டக் கிடைக்கப் பெறுபவை ஏராளம். கல்விக் கூடங்களில் நாம் கற்க விரும்பும் அறிவியல், புவியியல், கணிதவியல், நிருவாக இயல் போன்றவை அனைத்தும் வாழ்க்கைக்குப் பொருளீட்ட உதவும் என்ற நம்பிக்கையின்பாற்பட்டதே! ஆனால் வாழ்வின் பொருள் குறித்த புரிதலும் அறிவும் இன்றி வாழப் பொருள் சேர்க்கும் துடிப்பு என்பது அடித்தளமின்றி அரண்மனை எழுப்ப முற்படுவது போன்றதாகும்.  வாழ்வியலைக் கற்றுத் தருகின்ற மிக உயரிய சொத்தாக விளங்குவது தமிழ் மொழியில் தேனடையாக விளங்கும் இலக்கியங்களே. ஔவையின் ஆத்திச்சூடி, மூதுரை, பழமொழி, நன்னெறி, கொன்றை வேந்தன், நாண்மணிக்கடிகை, நாலடியார், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறு பஞ்சக மூலம் திருக்குறள், திரிகடுகம், பதிற்றுப் பத்து, பட்டினத்தார் பாடல் என விரிந்து கொண்டே போகும். தமிழ் இலக்கியங்கள் தரும் வாழ்வியல் இலக்கணங்கள் என்ணற்றவையாகும். அவ்விலக்கியங்கள் நம் மொழியில் இருப்பதை எண்ணி ஒவ்வொரு தமிழரும் பெருமைபட வேண்டும். அதுவும் தாய்மொழியிலேயே நமக்குச் சொத்தாகக் கிடைத்திருப்பது வேறு எந்நாட்டவருக்கும் கிட்டியிராத பெரும் பேறு ஆகும். எனவே தமிழை ஒரு மொழியாக எண்ணாமல் அது ஒரு வாழ்வியல் பாடம் என்று கருதி கற்க முற்படுவோமானால் தமிழினம் சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை. பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழும் தமிழினம் தாய்மொழி குறித்த விழிப்புணர்வும் தமிழ் மொழி குறித்த புதிய பார்வையையும் சிந்தையில் கொண்டு தன்னைச் செப்பனிட்டு வாழ முற்பட வேண்டும் என்பதே எம் விழைவும் வேண்டுதலும் ஆகும். பொங்குக தைப் பொங்கல் புவியெலாம் வாழப் பொங்குக! பொங்குக!! ஏரினும் நன்றால் எருவிடுதல்; கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு (1038) கனிவுடன்,  சு.குமணராசன் முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJANEditor In Chief.தை – 2046(சனவரி – 2015)"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி