16 February 2016 8:25 pm
விடுதலை பெற்ற இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாடு இன்னும் சில மாதங்களில் பதினைந்தாவது முறையாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கிறது. 1952 – ஆம் ஆண்டு முதல், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திற்கும் சட்ட மன்றங்களுக்கும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு மக்களாட்சித் தத்துவத்தின் முதன்மைப் பகுதியான சட்டங்கள் இயற்றும் உரிமை படைத்தவர்களாகின்றனர். எனவே ஒவ்வொரு மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களும் அதன் மூலம் பெறும் வெற்றி, ஆட்சி, அதிகார அமைப்பு அந்தந்த மாநில மக்களின் நலத்திற்கும் வளத்திற்கும் உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் ஓர் அளவீடாக அமைகின்றன. எனவே ஓட்டுரிமையும் அதன் பயன்பாடும் ஒவ்வொரு குடிமக்களுக்கும் இன்றியமையாத ஒன்று. தமிழ்நாட்டின் தற்கால அரசியல் சூழல், ஆட்சி அரசியலின் தன்மைகளை உற்று நோக்கினால் ஒவ்வொரு கட்சியிலும் எண்ணற்றோர் ஆட்சிக் கட்டிலில் அமர விரும்புகின்றனர். முதலமைச்சர் வேட்பாளர்களாக தற்கால முதல்வர் செல்வி செயலலிதா தொடங்கி மேனாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, மு.க.இசுடாலின், வைகோ, அன்புமணி ராமதாசு, தமிழிசை சவுந்திரராசன், திருமாவளவன், நல்ல கண்ணு, சீமான், விசயகாந்த், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜி.கே.வாசன் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் இதுபோன்று அளவு கடந்த முதலமைச்சர் விருப்பாளிகளை நாம் கண்டதில்லை. விடுதலை பெற்ற இந்தியாவின் சென்னை மாகாணம் அல்லது தமிழ்நாடு மாநிலத்தில் ஓமந்தூரார், பி.எஸ்.குமாரசாமி ராசா, சி.இராச கோபாலச்சாரி, காமராசர், பக்தவத்சலம், சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், செ.செயலலிதா ஆகியோர் முதலமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர். இவர்கள் தவிர இடைக்கால முதல்வர்களாக இரா.நெடுஞ்செழியன், வி.என்.ஜானகி, ஓ.பன்னீர்ச் செல்வம் ஆகியோர் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தவராவர். ஆனால் 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தல் முக்கியமான ஒன்றாகும். காங்கிரசுக் கட்சி சிறுபான்மையாகவும் மற்ற எல்லா எதிர்க் கட்சிகளும் சேர்ந்து பெரும்பான்மையாகவும் இருந்தன. காங்கிரசு கட்சியில் முதலமைச்சர் தகுதிக்குப் பொருத்தமான ஆளில்லாமல் முதலமைச்சர் ஒருவரைத் தேடினர். எதிர்க் கட்சிகளிலும் தகுதியான வேட்பாளர் இல்லை. ஒற்றுமை இல்லை. அந்நிலை காங்கிரசுக்குச் சாதகமாக அமைந்தது. இறுதியாக அரசியலிலிருந்து ஓய்வு பெற்றிருந்த சி.இராசகோபாலாச்சாரியரை அழைத்து அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தனர் என்பது ஒரு செய்தி. ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய இராசகோபாலச்சாரி நமது முதல் எதிரி இங்கிருக்கும் பொதுவுடைமைக் கட்சியே எனப் பேசிய நிலையிலும் பொதுவுடைமைத் தோழர்கள் அவை நாகரிகம் கருதி அவரது பேச்சுக்கு இடையூறு எதுவும் செய்யாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர் என்பது மற்றொரு செய்தியாகும். இவ்விரண்டு செய்திகளையும் தற்காலத் தமிழ்நாட்டு அரசியலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் எவ்வளவு கீழே வீழ்ந்திருக்கின்றோம் என்பது தெளிவாகும். தமிழ்நாட்டு மக்களின் நலத்தையும் வளத்தையும் முன்னிறுத்திப் போற்றிய மக்களாட்சி மரபு குன்றி தன்னலத் தலைமைகள், தவறானப் பாதைகள், பொருளீட்டும் போதை என பண்பிலாப் பாதாளங்களில் சிக்குண்டு சிதறிக் கிடக்கின்ற தமிழ் நாடாக இன்று காட்சியளிக்கின்றது. மதுவில் ஆழ்ந்தவன் மதியை இழந்தும் மதியை இழந்தவன் தன் மதிப்பை இழந்தும் பதவிப்பித்து எனும் பண்பிலா நெஞ்சங்களும் முற்போக்கின் தடைக் கற்களாக மூடநம்பிக்கைகளும் தன்னலத் தலைமைகளின் தாழ்வுற்ற எண்ணங்களும் அகந்தையின் வெளிப்பாடாக அடக்கமிலாச் சொற்களும் தலைமைகளின் உள்நோக்கம் அறியாது உணர்வுப் பூர்வமாக உருகிப் பலியாகும் தொண்டர்களும் பெருகியிருக்கும் தமிழ்நாட்டில் யாரைத் தேர்வு செய்வது என வேதனைகளைச் சுமந்தபடி தடுமாற்றத்தில் தமிழ்நாட்டு மக்கள் இருப்பதாகவே உணர்கின்றோம். நேற்று உறவு – இன்று பிரிவு, இன்று நட்பு – நாளை பகை, இன்று கூட்டணி – நாளை வேற்றணி என்பது அதிகார வேட்கையின் அடித்தளமாகியுள்ளது. இப்படிப்பட்டச் சூழ்நிலையில் தமிழ்நாட்டு வாக்காளர்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும். மக்களாட்சி முறையின் மாண்புகள் காக்கும் வாய்மை எண்ணங்களும் தூய்மையுமே நாட்டின் வளர்ச்சிக்கும் வருங்காலத் தலைமுறையின் வாழ்வுக்கு ஊற்றாக அமையும். மக்கள் பிறக்கலாம்; இறக்கலாம், கட்சிகள் தோன்றலாம்; மறையலாம்; வல்லாண்மை எழுச்சியுறலாம்; வீழ்ச்சியடையலாம், ஆனால் சமுக மக்களின் சமனியம், நலம், வளர்ச்சி, நல்லிணக்கம், நேர்மை கருதி மேற்கொள்ளப்படும் கொள்கைகள் மனித வரலாற்றில் நிரந்தரமாக நிலை நாட்டப்பட வேண்டிய ஒன்று. எனவே தமிழர்களே தடமறிந்து சென்றிடுக! தளமறிந்து நின்றிடுக! அப்போது தான் தமிழ் தளைக்கும்; தமிழினம் நிலைக்கும்! முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும் (திருக்குறள் : 388) – திருவள்ளுவர்கனிவுடன் சு.குமணராசன்,முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJANEditor In Chiefமாசி – 2047(பிப்ரவரி – 2016)