15 August 2016 6:34 pm
உலகெங்கும் வாழும் தமிழ் மொழி பேசும் மக்கள் அனைவரும் தொன்மை வரலாற்றுத் தொடர்பும் நாகரிக மேன்மையும் பண்பாட்டு வளமும் மிக்க ஓர் இனத்தின் அங்கம் என்பதை உணர்ந்திருந்தாலும் வரலாற்றின் வழித்தடத்தில் அப்பண்புக் கூறுகள் உரிய இலக்கை நோக்கிப் பயணிக்கின்றதா? என்ற கேள்விக்கு சரியான விடை கூற முடியாது. ஆம் உலகில் பிற இனங்கள் பெற்றிருக்கும் வளர்ச்சியும் விரிவும் மொழியியல் தன்மைகளையும் ஒப்பிடுகையில் உலகின் மூத்த மொழியாக தனித்தியங்கும் மொழியாக இருக்கின்ற தமிழ் மொழியும் அம்மொழி வாயிலாக எடுத்தியம்பியுள்ள கருத்துக் குவியல்களும் மானுட இயலும் உலக மக்களுக்கு இன்னும் சேர்க்கப்படவில்லை என்பதே உண்மையாகும். தமிழ்நாட்டு எல்லைக்குள் வாழும் தமிழறிஞர்கள், அரசியல் தளத்தில் பயணிக்கும் அரசியல் வாதிகள், அதிகாரத்தை தன்வயப்படுத்தும் அரசியல் கட்சிகள் என பெரும்பாலோர் தமிழின் பெருமையினையும் அம்மொழி வளத்தினையும் உணர்ச்சிப் பொங்கப் பேசுவதும் கற்பனை வடிவங்களைக் கண்டு புளங்காகிதம் அடைவதும் உணர்ச்சிப் பெருக்கை தூண்டுவதுமான விடயங்களையே கடந்த பல்லாண்டுகளாக தொடர்ந்து செய்து வருகின்றனர். அதன் மூலம் ஒரு சில தனிக் குழுக்களும் தனி மனிதர்களும் தம் வாழ்வையும் வளத்தையும் பெருக்கிக் கொண்டனர் என்பது தற்காலப் பதிவாக நமக்குத் தெரிகின்றன. பிற மொழி இலக்கியங்களைக் காட்டிலும் வளமான வாழ்வியல் தத்துவங்களும் மனித நேய கோட்பாடுகளும் ஒழுக்க நெறிகளும் நிறைந்த தகவல்களின் பலனை இவ்வுலகு நுகர வாய்ப்பளிக்கவில்லை. திருக்குறள் போன்ற பொதுமறை நூல்களைக் கூட தமிழர்கள் பெரும்பாலாக வாழும் இந்திய நாடு உட்பட பல நாடுகள் தேசிய நூலாக ஏற்க மறுப்பது எடுத்துக்காட்டான சான்றாகும். நாம் நம் மொழியின் பெருமையைப் பற்றி எவ்வளவுதான் மேன்மை படக் கூறினாலும் ஏற்பாரில்லை. இன்றும் கூட, தமிழ் மொழியின் தொன்மை வளத்தினை உலகிற்கு எடுத்துக்காட்ட பயன்படுத்தும் சொற்கள் கால்டுவெல், ஜி.யூ.போப், காண்ஸ்டன் பெஸ்கி போன்ற மேலை நாட்டு அறிஞர்களின் ஆய்வு முடிவுகளைத்தான் எடுத்தியம்பி வருகின்றோம். இந்நிலை மாற்றம் பெறுவதற்கு தமிழ் மொழியின் சிறப்பை எங்கிருந்து செப்புவது என்பதுதான் முதன்மையானதாகும். எனவே சரியான ஒரு தளத்தைத் தேர்ந்தெடுத்து தமிழ் மொழியின் உள்ளீடுகளை உலகார் அறியும் வண்ணம் உரைப்பது ஒன்றே மனித வாழ்விற்கு பயன்தரும். உலகத்திலேயே முதல் தரம் மிக்க உன்னதமான ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் உலகின் செம்மொழிகளாக அறியப்படும் கிரேக்கம், இலத்தீன், ஈபுரு, பாரசீகம், தமிழ், சீனம், சமசுகிருதம் ஆகிய ஏழு மொழிகளில் தமிழைத் தவிர்த்து மற்ற ஆறு மொழிகளுக்கும் இருக்கைகள் உள்ளன. ஆனால் உலகின் மூத்த மொழியாகவும் இந்திய நாட்டில் முதல் செம்மொழியாகவும் அறியப்பட்ட தமிழ் மொழிக்கு அங்கு ஓர் இருக்கை அமைய இன்னும் வாய்ப்பு அமையவில்லை. அவ்வாய்ப்பு அமைவதற்கு துணை நிற்க வேண்டிய இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் அது குறித்து இன்றும் பெருமுயற்சி எடுக்கவில்லை. எனினும், அமெரிக்காவில் வாழும் இரண்டு இலட்சத் தமிழர்கள் மருத்துவத் துறையில் முன்னணியினராக கோலோச்சும் டாக்டர் சானகிராமன், டாக்டர் எசு.சம்பந்தம் ஆகிய இருவரும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் தென் கிழக்கு ஆசியக் கல்வித் துறையின் ஓர் அங்கமாகச் சங்கத் தமிழ் இருக்கை ஒன்றினை நிறுவுவதற்கான திட்டத்தைப் பல்கலைக் கழகத்தில் அளித்து அனுமதியும் பெற்று விட்டனர். இந்த அனுமதி செயலாக்கம் பெறுவதற்கு ஆறு மில்லியன் அமெரிக்க டாலர் தொகை கட்ட வேண்டும் (அதாவது இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் சற்றொப்ப 40 கோடி ஆகும்). இதில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை அந்த இரண்டு தமிழர்களும் தன் சொந்த சேமிப்பிலிருந்து முன் பணமாக பல்கலைக் கழகத்தில் செலுத்தியுள்ளனர். மீதமுள்ள தொகையை உலகமெங்கும் வாழும் தமிழர்களிடம் நன்கொடையாகப் பெறும் வகையில் திட்டமிட்டுள்ளனர். இந்த நல் முயற்சிக்குத் துணை நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் மக்களின் கடமையாகும். சிறந்த ஆய்வுப் பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மொழி அறிஞர்களும் மாணவர்களும் தமிழ் மொழி வல்லுனர்களும் ஆய்வுப் பணிகளையும் மொழி வளர்ச்சிக் கூறுகளையும் முன்னெடுக்கும் பொழுது உலகில் தமிழ் மொழி ஒரு தனிச் சிறப்பையும் தமிழ் மக்களின் தன் மதிப்பு, பொருளாதார நிலை, சமுக நிலை போன்றவைகள் உயரவும் வாய்ப்பு அமையும். உலகின் மிக உயர்ந்த நோபல் பரிசு பெற்ற வல்லுனர்கள் பலரை இப்பல்கலைக் கழகம் உலகிற்கு வழங்கியிருக்கிறது. அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா உட்பட பல தலைவர்கள் பயிற்சி பெற்றப் பல்கலைக் கழகம் ஹார்வர்டு பல்கலைக் கழகமாகும். எனவே அப்படிப்பட்ட ஒரு கல்விக் கூடத்திலிருந்து தமிழ் மொழியின் பெருமையும் தொன்மையும் இலக்கிய ஆய்வும் வெளிப்படுவதையே உலகம் ஏற்கும். எனவே ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைவது உலகத் தமிழர் அனைவருக்கும் உரியதொரு மதிப்பை ஈட்டித் தரும் என்பதில் அய்யமில்லை. எனவே இந்த முயற்சியை முன்னெடுத்த டாக்டர் சானகிராமன் எசு.சம்பந்தம் அவர்களைப் பாராட்டி வாழ்த்துகின்றோம். அவர்களின் இந்த நல் முயற்சிகளுக்கு தமிழ்நாடு அரசும் தமிழ்நாட்டு மக்களும் உலகின் பிற பகுதியில் வாழும் தமிழ் மக்களும் துணை நிற்க வேண்டும் என உரிமையுடனும் அன்புடனும் வேண்டுகின்றோம். நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் திருக்குறள் (28) – திருவள்ளுவர்கனிவுடன் சு.குமணராசன்முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJANEditor In Chiefஆவணி – 2047(ஆகஸ்ட் – 2016)