தெளிவான வளர்ச்சிப் பாதை எது? - தமிழ் இலெமுரியா

17 June 2014 7:42 am

இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிவுற்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கைகளைக் கைப்பற்றிய பாரதிய சனதா கட்சியின் தலைமையில் இருபத்து நான்கு கட்சிகள் இணைந்து ஏற்படுத்திய தேசிய சனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. 1952 ஆம் ஆண்டு பத்து கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற பொதுத் தேர்தல் தற்போது சற்றொப்ப எட்டாயிரம் கோடி செலவில் முற்றுப் பெற்றுள்ளது.  இச்சூழலில் தேர்வு பெற்றிருக்கும் தேசிய சனநாயகக் கூட்டணி அரசையும் தேர்வு பெற்றிருக்கும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் முழு மனதோடு வாழ்த்தி வரவேற்கின்றோம்.  இந்தத் தேர்தலில் தேர்தல் ஆருடர்களால் முன் வைக்கப்பட்டக் கணிப்புகளையும் மீறி பல மாநிலங்களில் பா.ச.க. வெகுவாகத் தேர்வு பெற்றிருப்பதும், சில மாநிலங்களில் குறிப்பாக கன்னியாகுமரி தொடங்கி கொல்கொத்தா வரையுள்ள இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோர மாநிலங்களில் பா.ச.க. குறித்து எந்தவித சலனங்களும் இல்லை என்பதும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். தேர்தலுக்கு முன்பாகவே, முன்மாதிரியின்றி, தலைமையமைச்சர் வேட்பாளர் என்று சுட்டிக்காட்டப் பட்ட நரேந்திர தாமோதரதாசு மோடி அவர்களின் சொல்வன்மை, ஒருங்கிணைக்கப்பட்டச் செயலாக்கம், பரவலான பரப்புரை, அயராத முயற்சி மற்றும் வட இந்திய ஊடகங்கள் பலவற்றின் பேராதரவு என்பவைகள் இந்தப் பெரும்பான்மை வெற்றிக்கு வலு சேர்த்திருப்பினும், கடந்த பத்து ஆண்டுகாலமாக தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீது, குறிப்பாக இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மீது வாக்காளர்களுக்கு ஏற்பட்ட கோபமும், வெறுப்பும் இந்த எதிர்பார வெற்றிக்கு முதன்மைக் கரணியம் என்பதை நடுநிலையாளர்கள் யாரும் மறுக்க இயலாது. பல்லாண்டு காலம் ஆட்சி புரிந்த காங்கிரசு கட்சிக்கு வெறும் நாற்பத்து நான்கு இருக்கைகள் மட்டுமே என்பது இதற்குச் சான்றாகும். காங்கிரசு அரசு அனைத்து நிலைகளிலும் பெரிதாக தவறு செய்துவிட்டதாகவும், பொருளாதாரச் சீரழிவுகளுக்குக் காரணமாகி விட்டது எனவும் ஊதிப் பெரிதாகப்பட்டது. எனினும் முற்றாக நாம் அவ்வாறு கருதவில்லை பல்லாண்டு காலமாக இந்திய தேர்தல்களில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிட்டாத நிலையில் பல கட்சிகள் இணைந்து அமைக்கும் கூட்டணி அரசுகள் தங்கள் எண்ணங்களை சரிவர செயல்படுத்த இயலாத நிலையறிந்து தற்போது பாரதிய சனதா கட்சிக்கு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அளவுக்கு இந்தியக் குடிமக்களின் தேர்வு முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன. பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நபரே நாட்டை வழிநடத்தத் தகுதி பெறுபவர் என்பது உலகாளாவிய மக்களாட்சிக் கோட்பாடு எனினும் இந்திய அரசமைப்புச் சட்டமும், தேர்தல் வழிமுறைகளும் நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையான இருக்கைகளைக் கைப்பற்றுகின்ற கட்சிகளுக்கே  ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை வழங்குகின்றன. மேலை நாடுகளில் குடியரசுத் தலைமையாகத் தேர்ந்தெடுக்கப் பெறுபவர் அய்ம்பது விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற பின்னரே தலைவராக முடியும் என்கிற கோட்பாடு கடைபிடிக்கப் படுகிறது. எனவே மெய்யான மக்களாட்சிக் கோட்பாட்டை உறுதி செய்ய நம்நாட்டு அரசமைப்புச் சட்டமும், தேர்தல் முறைகளும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப் படவேண்டியது அவசியம் என்பது நமது கருத்தாகும்.  தற்போது இந்திய சனநாயக் கூட்டணிக்குக் கிடைத்திருக்கும் வாக்குகள் பதிவான வாக்குகளில் வெறும் 31 விழுக்காடு மட்டுமே, மீதியுள்ள  69 விழுக்காடு இந்த அணிக்கு எதிரானவை என்பதைக் காட்டுகின்றனவேயொழிய பெரு ஆதரவு அல்ல. இதே நிலை போன்று, கடந்த காலங்களில் இதைவிடக் கீழாக வெறும் 20-25 விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுள்ளனர் என்பதும் வரலாற்று உண்மைகளாகும்.  தேர்தலுக்கு முன்பும் சரி, பின்பும் சரி இந்தியாவில் பெரிதாகப் பேசப்படும் செய்தி பொருளாதாரத் தேக்கம், ஊழல், வெளிநாட்டு முதலீடுகளின் கவர்ச்சி, வளர்ச்சிப்பாதை என்பவைகளாகவே உள்ளன. இந்திய நாடு பொருளாதாரத்தில் ஏழை நாடு அல்ல, ஆனால் ஏழைகள் நிறைந்த நாடு. ஏன் இந்த முரண்பாடு? இந்த முரண்பாட்டிற்கான வேர் எதுவெனக் கண்டறியப்பட்டுச் சரி செய்வதே நிலைத்தத் தீர்வாகும். மாற்றாக பொருளாதார வளர்ச்சி, வேகம், வெளிநாட்டு முதலீடு என்று தொடர்ந்து பேசுவதும், செயல்படுவதும் மேலும் பல பணமுதலைகளை, அதிகாரக் கும்பல்களை வளர்த்தெடுக்கவே உதவும். நாட்டின் நிதி, நீதி, நிருவாகம் ஆகிய அனைத்திலும் தன்னல உணர்வும், தணியாத ஆசையும் புகுந்து பொருளும் பொருள் சேர்க்கும் அறியாமையையும் முன்னிலைப்படுத்தப் பட்டு மக்களின் உரிமையும், உணர்வும், வளமான வாழ்வும் சிதைக்கப்பட்டிருகின்ற காலகட்டம் இது. எனவே வளர்ச்சிப் பாதையைத் தெளிவாகத்  தேர்வு செய்வது புதிய அரசின் முதற்கடமையாகும்.  பொறுப்பேற்றுக் கொண்ட புதிய அரசின் தலைமையமைச்சர் நரேந்திர மோடி முதல் முயற்சியாக வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியக் கருப்புப் பணத்தை மீட்க வேண்டி புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்திருப்பதும், அமைச்சக அலுவலகங்களில் குறித்த நேரத்தில் வருகை தந்து பணியாற்ற வேண்டியிருப்பதும், இளைஞர்கள் காலில் விழும் பழக்கத்தைக் கைவிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருப்பதும் வரவேற்கத்தக்க, பாராட்டப்பட வேண்டிய செயல்பாடுகளாகும்.  ஒரு நாடு வளர்ச்சியடைந்திருக்கிறது; மக்கள் நாகரிக நிலைக்கு வந்துள்ளனர்; நாட்டு மக்களின் அறிவும் ஒழுக்கமும் நாணயமும் வளர்ந்து வந்திருக்கிறது; பிற நாடுகளால் போற்றப்படுகின்றனர் என்பதற்கு அடையாளம் என்ன? நாட்டின் அனைத்துத் துறைகளிலும் சமதருமம், சமஈவு, சமஉடமை, சம ஆட்சித்தன்மை, சமநோக்கு, சம நுகர்ச்சி, சமதுய்ப்பு உறுதி செய்யப் படவேண்டும். அனைத்தும் சரிபங்கு" என்பது பொருளாதார ஒருமைப்பாடு, அனைவரும் சரிநிகர் என்பது சமுதாய ஒருமைப்பாடு. இவ்விரண்டும் சரியாக அமைவதே ஓர் நாட்டின் உண்மையான வளர்ச்சியாகும்.  இந்த இலக்கை ஒரு நாடு அடைய வேண்டுமானால் தெளிவான சமுதாயக் கொள்கைகள், பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்பட்டுத் துணிவுடன் செயல்படுத்தப் பட வேண்டும். சாதி மதம் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நம் நாட்டை உருக்குலைக்கும் புற்று நோய்களாகும். இவைகளே நம் நாட்டை உலகோர் மத்தியில் இருண்ட வீடாகக் காட்சிப்படுத்துகின்றன. எனவே இவற்றில் வெளிச்சம் பாய்ச்ச வேண்டியது புதிய அரசின் தலையாயக் கடமையாகும்.  தனிமனித வாழ்வென்பது அதில் நிறைந்துள்ள மனிதம் எவ்வளவு என்பதாகும். பொது வாழ்வு என்பது அதில் நிறைந்துள்ள புனிதம் எவ்வளவு என்பதாகும். தூய்மையும் துணிவும் தொண்டும் துலங்கும் வாய்மையான நெஞ்சங்ளால் தான் வாழ்வு மிளிரும். புதிய அரசின் சிந்தனையும் செயலும் இதனை மெய்ப்பிக்க வேண்டும். வாழ்த்துகள்.  கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு    (குறள் 631)கனிவுடன்,  சு.குமணராசன்முதன்மை ஆசிரியர் S.KUMANA RAJANEditor in Chiefஆனி – 2045(சூன் – 2014)"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி