தோல்வியை உறுதி செய்க! - தமிழ் இலெமுரியா

14 April 2014 3:47 am

இந்தியப் பெரு நாட்டின் பதினாறாவது நாடாளுமன்ற அமைப்பிற்கான பொதுத் தேர்தலைச் சந்திக்கின்ற தருணம் இது. சித்திரைத் திங்களில் முத்திரை பதித்து வாக்கு ஒப்புகை தந்து வேட்பாளர்களை வாகை சூட வைக்கும் நேரம் இது. இந்திய நாடு விடுதலை பெற்று அறுபத்தேழு ஆண்டுகளைக் கடந்த பின்பும் வாழ்வின் விடியலைக் காணா ஏழை எளிய மக்களின் எண்ணிக்கை ஐம்பது கோடியைத் தாண்டும் என்கிறது அரசின் புள்ளி விவரம். ஆனாலும் ஒவ்வொரு தேர்தலிலும் ஆண்டவர்களும், ஆள்பவர்களும் அள்ளி வீசும் வாக்குறுதிகள் ஊழல் ஒழிப்பு, வறுமை அழிப்பு, வன்முறை தவிர்ப்பு, கறுப்புப் பண மீட்பு, வேலை வாய்ப்பு, பொருளாதார மேன்மை, வெந்துயர் உழவர் வாழ்வின் ஒளி என அடுக்கடுக்கானவை. மேற்சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அளவைகள் எதுவும் இல்லையா? இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவை? தேய்ந்து போன நாட்களில் பலர் மாய்ந்தும், இன்னும் சிலர் இந்திய நாட்டு மக்களின் வளத்தை மேய்ந்து ஓய்ந்தும் போனார்கள்.  முடியரசுக் காலம் முதல் குடியரசுக் காலம் வரை இந்திய மக்கள் எத்தனைத் தேர்தல்களைச் சந்தித்துள்ளனர். இந்திய சமுகத்தில் சமதளமான ஒரு வளர்ச்சியை, மாற்றத்தை ஏற்படுத்த முடிந்ததா? நம் நாட்டின் பொருள் வள மதிப்பில் 90 விழுக்காடு 10 விழுக்காடு முதலாளிகளிடமும், 10 விழுக்காடு பொருள் வளம் 90 விழுக்காடு தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் என விரிந்து கிடக்கின்றதே இதுதான் ஒரு நாட்டின் வளர்ச்சியா? பொருளாதாரச் சமனியத்தையும், சமுக சமத்துவத்தையும் எங்கு போய் தேடுவது? நாளுக்கு நாள் ஏழை, பணக்காரன் என்கிற இடைவெளி பெருகி வருகின்றதேயொழிய குறைவதில்லை. இவற்றிற்கெல்லாம் கரணியமாக அமைவது எது? இவை அனைத்திற்கும் கிடைக்கும் ஒரே விடை இந்திய நாட்டின் அரசியல் மாண்புகளும் தனி மனித ஒழுக்கங்களும் மங்கி வருகின்றன என்பதேயாகும்.  கொள்கை அரசியலுக்கு விடை கொடுத்து கொலை, கொள்ளை, வன்மம், வக்கிரமம், வெறுப்புணர்வு என பல்முனை கொடுஞ்செயல்களின் உறைவிடமாக உருப்பெறும் அரசியல் போக்கும் கட்சி அரசியலும் தற்போது களங்கம் பெற்றுள்ளன. 1950 ஆம் ஆண்டு அப்பழுக்கற்ற முறையில் அமைந்த நாடாளுமன்ற மக்களவையின் தற்போதைய உறுப்பினர்களில் 162 பேர் (அதாவது மூன்றில் ஒரு பங்கு) மோசடி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்கிற பல குற்றப் பின்னணியுடையவர்கள் என்கிறது நாடாளுமன்ற புள்ளி விவரம். பணக்காரப் பட்டியலிலும் எண்ணற்ற உறுப்பினர்கள். பீகார் மாநிலத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரின் சொத்து மதிப்பு 794 கோடி மற்றொருவரின் சொத்து மதிப்பு 692 கோடி. தொடர்ந்து விஜய் மல்லையா, ஜெயாபச்சன் என பெரும் பணக்காரர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இவர்களின் சொத்து மதிப்பு ஒவ்வொரு அய்ந்தாண்டுகளிலும் பன்மடங்கு பெருகுவதும் விந்தையாக உள்ளது. ஒவ்வொரு கட்சியும் பிற கட்சிகள் மீது சாற்றும் குற்றங்களையும், ஊழல்களையும் கணக்கிட்டால் இது நாடா அல்லது நய வஞ்சகர்களின் கூடாராமா? என அய்யம் ஏற்படுகின்றது. தேசிய அரங்கில் ஆளும் கட்சிக்கு எதிராக ஊழல், கையூட்டு, கறுப்புப் பணம் என்கிற ஓலம் ஒருபுறம்; எதிர் கட்சிக்கு எதிராக மதவாதம், வன்முறை, பிரிவினை என்கிற ஓசை மறுபுறம். இவைகள்தான் இந்திய தேசியத்தின் இன்றைய அடையாளங்களாக விளங்குகின்றன. மாநில அளவில் ஏதாவது மாற்றம் உண்டா என்றால் அதுவும் இல்லை. ஒருவருக்கொருவர் செய்த ஊழலை, உறிஞ்சப்பட்ட பொதுச் சொத்தை, சொத்துக் குவிப்பை பட்டியலிட்டே களைத்துப் போய் விட்டனர். அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர்கள் தேர்வில் சாதியும், பணமும், மதமும் முதன்மை பெற்றுள்ளன. ஆங்காங்கே சில விதி விலக்குகள் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. முரண்பாடான கோட்பாடுகள், கொள்கைகள் இருந்தும் பதவிச் சுகத்துக்காகப் பலர் கைகோர்த்துள்ளனர்.  காப்போர் என்றோர் காப்பாராயில்லை; மீட்பேன் என்றோரும் மீட்டோராயில்லை; ஒற்றுமை என்றார்கள் உட்பகை வளர்த்தார்கள்; வாழ்கவென வாய் கூறும் வஞ்சனையே மனங்கொள்ளும்; சாதிகள் ஒழிய வேண்டுமென்றார் தம் சாதிக்கு அரணார்; பேதங்கள் கூடாதென்பார் அவரே பிணக்குகளுக்கு உரமானார்; ஏழையின் நண்பர் என்றார் எண்ணற்ற கோடிகளுக்கு அதிபரானார்; தன்மானம் பேசினர் பதவிச் சுகத்தில் அடமானம் ஆகினர்; தன் குறை மறந்து பிறர் குறை பெரிதெனக் கண்டனர். இந்தச் சூழலில் யாருக்கு வாக்களிப்பது? எந்தக் கட்சியை வெற்றி பெறச் செய்வது? என்பது பெரு வினாவாக உள்ளது. மழைக்கு ஒதுங்கி மரத்தடியில் நின்றோர் இடிக்கு இலக்கானது போல, நரியிடம் தப்பிய முயல் நாயிடம் சிக்கியது போன்று தற்காலத் தமிழினம் சிக்கித் தவிக்கின்றது.  தமிழ் மக்களின் உணர்வோடும் உரிமையோடும் வாழ்க்கையோடும் வளர்ச்சியோடும் கலந்த சிக்கல்களாக ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, காவிரி நீர்ப் பங்கீட்டில் தமிழக உழவர்களுக்கு அநீதி, முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில் தமிழகத்திற்கு அநீதி, தமிழர் விளை நிலங்களை கையகப்படுத்துதல், கல்வியில் ஊடுருவல், மாநில உரிமைகள் பறிப்பு போன்றவைகளெல்லாம் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையே உள்ள சிக்கல்கள் எனினும் இவை தேசியச் சிக்கல்களாகத் தேசியக் கட்சிகளுக்குத் தெரிவதில்லை. மாறாக கோவில் கட்டி கும்மியடிப்பதையே இன்றும் சில கட்சிகள் விரும்புகின்றன. எனவே ஏமாற்றங்களையே சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு சற்று சிந்தித்து செயல்பட வேண்டும்.  தேர்தல்களின் போது தமிழ் மக்களைத் தேடியும் நாடியும், கெஞ்சியும், கொஞ்சியும் வகை வகையான வாக்குறுதிகளை வாரிவிட்டு வாக்குகளைப் பெற்று வாகை சூடிய பலரும் தமிழினம் தவித்த போதும் தண்ணீரின்றி வாடிய போதும் தாக்கப்பட்ட போதும் தள்ளியே நின்று வேடிக்கை பார்த்தனர். முடங்கிக் கிடந்தனர், முக்காடிட்டு ஒளிந்தனர். இந்தத் தேர்தலில் யாரை வெற்றி பெறச் செய்வது என்பதை விட யாரைத் தோல்வியடையச் செய்ய வேண்டுமென்பதே முதன்மையாகும். மேற்சொல்லப்பட்ட சிக்கல்களில் தமிழ்நாடு தோல்வியடையக் காரணமாக அமைந்த கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் தோல்வியைத் தருவதே தமிழர்களுக்குக் கிடைக்கும் வெற்றியாகும். வரலாற்றுப் பேரேடுகளுக்கு வாய் இல்லை என்பதாலேயே பதிந்து போன உண்மைகள் புதைந்தா போய் விடும்? வாக்களிக்கத் தமிழன், வதைபடவும் தமிழன், உழைத்திடவும் தமிழன், உதைபடவும் தமிழன் எண்ணிப் பாருங்கள் இளையோரே! ஏனிந்த நிலைமை? ஏனிந்த கொடுமை? மாற்றங்கள் வர வேண்டும்; மறுமலர்ச்சி பெற வேண்டும். சிந்தனையை உரமாக்கி சீர்மிகு அரசியலுக்கு நீர்ப் பாய்ச்சுங்கள். தமிழுக்கும், தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் தோல்வியைத் தந்தவர்கள் யாராகினும், எக்கட்சியினராகினும், வேரறுங்கள். வெற்றி அவர்களின் கனவாகட்டும். தோல்வியை உறுதி செய்து தோள் தட்டுங்கள் என்பதே இற்றைச் சூழலில் யாம் விடுக்கும் வேண்டுகோள். சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல். (குறள்: 934)கனிவுடன், சு.குமணராசன்முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJAN,Editor in Chiefசித்திரை – 2045(ஏப்ரல் – 2014)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி