தோழமை மங்கா நட்பு - தமிழ் இலெமுரியா

18 July 2016 12:57 pm

இந்திய நாட்டில் இதழியல் துறையில் ஆயிரத்திற்கும் அதிகமான ஏடுகள் திங்கள் இதழாக, வார இதழாக, நாள் இதழாக வெளிவந்து கொண்டிருந்தாலும், அன்புடை அறம், போருடைப்புறம், ஈரடி அறிவு, நாலடி நலம், எட்டுத்தொகை காட்டும் கட்டுக்கடங்கா கருத்து, பத்துப்பாட்டின் பயன்மிகு செய்திகள் என நம் தமிழ்நாடு, நம் தமிழ் மக்கள் பயனுறும் வண்ணம் புத்துலகு புதுப்பாதை" என்னும் உயரிய கோட்பாட்டை உள்ளத்தில் ஏந்தி எழுத்துருவில் எம் சிந்தையிலூறும் சீர்மைச் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் தொடங்கப் பெற்ற இதழே தங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் "தமிழ் இலெமுரியா" இதழாகும்.  தமிழையும் தமிழர்களையும் தமிழ் மொழிக்கு உள்ளும் தமிழ் நாட்டின் எல்லைக்கு உள்ளிருந்தும் பார்ப்பதை விட, வெளியிலிருந்து பிற மொழி, பிற பண்பாடு, பிற மாநிலம்  என தமிழ்நாட்டிற்கு அப்பால் இருந்து பருந்துப் பார்வையாய் பறந்து பரந்து பார்ப்பதே சரியான விடையை விழுமங்களைத் தரும் என்னும் நோக்கில் மராட்டிய மாநிலத்திலிருந்து தொடங்கப் பெற்று வெளிவந்து கொண்டிருக்கிறது. இதுகாறும் நீங்கள் படித்த இதழ் போல் அல்லாது இன்று படிக்கின்ற இதழுக்கு ஒரு தனிப்பெருமை உண்டு. ஆம் இது தமிழ் இலெமுரியாவின் நூறாவது இதழாகும்.   ஒவ்வொரு இதழின் பிறப்பும் பிரசவமும் பொருளாதார அளவில் எமக்கு மிகவும் கடினமான வேதனையை வலியை ஏற்படுத்தியிருப்பினும் பிறந்த குழந்தையின் பிஞ்சு முகம் கண்டு இயலா நிலையிலும் புன்முறுவல் பூக்கும் ஒரு தாயின் மனநிலை போல் நாமும் மகிழ்கிறோம். இதை ஓர் வணிக இதழாக எண்ணி சில சமரசங்களை ஏற்றிருந்தால் எம் வலியின் தன்மை சற்றே குறைந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். எனினும் எம் இலட்சியமும் இலக்கும் ஏற்றமிழந்த நம் இனத்தின் இயல்புகளை இற்றைச் சூழலில் ஆய்வுசெய்து தன்னலம், தனிமனித வழிபாடு, தகாத பண்பாட்டு உறவு, தொலை நோக்கின்மை, சாதி மத சடங்குகள், பணமென்னும் படுகுழி என பல்முனைத் தாக்குதல்களில் சிக்குண்டுத் தவிக்கும் நிலை மாற இவ்விதழ் பயன்பட வேண்டும் என்ற விருப்புடன் பொறுப்புடன் காகிதக் கழனியில் எழுத்து உழவுக்காக விதைகளை தமிழ் இலெமுரியா தூவி வருகிறது. தமிழ் நிலத்தின் உழவுக்கு ஒரு செயல்பாட்டுக் கருவியாக கருவாக தமிழ் இலெமுரியா  தன் கடமையைச் செய்து வருகிறது. இக்கருவறையிலிருந்து விடுபட்ட ஒவ்வொரு எழுத்தும் சொற்றொடரும் விதைகளாகவே வெளிப்பட்டுள்ளன. எம் விழைவின் விளைச்சலைக் காண இன்னும் சில காலம் தேவைப்படலாம். அதுவரை இவ்விதழின் உயிர்மூச்சு இருக்குமா என்பது கேள்விக்குரியது எனினும் எம் வேள்வி தொடரும். எதிர் கொள்ளும் நாட்களில் உச்சிமோந்து எம்மை முத்தமிடுவது வெறுமையா பெருமையா என்பது இதுகாறும் தொடர்ந்து நம் இதழை வாசித்து வரும் வாசக நெஞ்சங்களின் மதிப்பீடுகளுக்கும் தொடரும் உறவுகளுக்கும் உட்பட்டதாகும்.  நூறாவது இதழை ஓர் சிறப்பிதழாக அதிக பக்கங்களுடனும் வண்ணங்களுடனும் எண்ணற்ற அடர்வுமிகு கருத்துகளுடனும் வெளியிட வேண்டும் என்பது  ஒரு கனவாக எம் நெஞ்சத்துள் பலநாள் உறைந்திருந்தது. எனினும் அச்சக நிலுவையும் அதிக பக்கங்களும் அலுவலகப் பராமரிப்புகளும் எமக்குள் அச்சத்தை ஊட்டி எம் கனவுகளைக் கானல் நீராய் காணச் செய்தன. எனவே ஒரு முக்கியமான பிறந்த நாளைக் கொண்டாடக் கூட வழியின்றி, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள நண்பர்களுமின்றி, பழைய உடையுடன் வழக்கமாகப் பள்ளிக்குச் செல்லும் ஓர் ஏழை மாணவன் நிலை போல் ‘‘தமிழ் இலெமுரியா’’ தன் எழுத்துப் பயணத்தில் தொடர்ந்து பயணிக்கிறது. காலச் சுழற்சியில் கடினத்தினூடே நூறு இதழ்கள் தந்துள்ளோம் என்கிற மனநிறைவு எம் சோகம் நீக்கிச் சுகம்தரு தென்றலாய் வருடிச் செல்கிறது. வரலாறு காட்டும் வழித்தடம் நோக்கி விழிகளை அகல விரித்து திசைகளின் குரல்களை கேட்டபடி தொடர்ந்து முன் செல்வோம்.   ‘இலெமுரியா என்பது இழந்த பழம்புகழின் குறியீடு. தொல் திராவிட நாகரிகத்தின் முகவரி. மனித இனத்தின் பண்பட்ட முதற்பிரிவு தமிழ்ச் சமுதாயமே என்பதற்கான சான்று. மராத்திய மண்ணில் நம் திராவிடத்தின் தனிச்சிறப்பை அரங்கேற்றும் முயற்சி உங்கள் இதழ் மூலம் தொடக்கம் பெறுவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. ஓங்குக உங்கள் செயல்திறம். வெல்க தங்கள் முயற்சி. பரவுக தமிழ் இலெமுரியா’என வாழ்த்திய தமிழறிஞர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களின் விருப்பையும் விழைவையும் நெஞ்சில் நிறுத்தி; ‘மனித உறவுகளின் முதுமையும் பிரிவும் இடையிடையே உறவு அறுந்து போகின்ற நிலையும் நம்மால் வெல்ல முடியாதவை. ஆனால் நல்ல நூல்களோடு நாம் ஏற்படுத்திக்கொள்ளும் உறவானது நம்முடைய மறைவிற்குப் பின்னும் தொடர்ந்து வரும் தோழமை மங்காத மறையாத நட்பாகும்’ - என ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இலெமுரியா அறிமுக விழாவில் தமிழ்த்திரு தவத்திரு குன்றக்குடி அடிகளார் மொழிந்த மெய்மைச் சொற்களைச் சுமந்த வண்ணம் சுமைதாங்கிகளில்லா இவ்வுலகில் தொடர்ந்து பயணிப்போம்; பலன் தருவோம் என உறுதியளிக்கின்றோம்.  வாசகர்களின் தொடர்ந்த அன்பிற்கும் ஆதரவிற்கும் எம் நெஞ்சார்ந்த நன்றி.  உள்ளத்தால் பொய்யாதொழிகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்.  திருக்குறள் (294)  - திருவள்ளுவர்கனிவுடன்  சு.குமணராசன், முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJANEditor In Chiefஆடி – 2047(சூலை – 2016)"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி