நீருக்குள் நிழலைத் தேடலாமா? - தமிழ் இலெமுரியா

15 October 2015 1:19 pm

நீதி கிடைக்கும் என நிறைமதி நெஞ்சுடன் பாலுக்காகப் பசியுடன் காத்திருக்கும் பச்சிளம் குழந்தைகள் போல ஆவலுடன் காத்திருந்த உலகத் தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு எட்டியிருப்பதோ எதிர்பார்ப்புக்கு எதிரான ஏமாற்றமே! இலங்கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் பன்னாட்டு மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சம்பந்தப் பட்ட அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டு வந்த பன்னாட்டு அளவிலான பார்வையும் நிலைப்பாடும் தற்போது தலை கீழாக மாற்றம் பெற்றுள்ளது.  கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை சமர்ப்பித்த வாய்மொழி அறிக்கையின் தொடர்ச்சியாக 16-&-9&2015 அன்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமை ஆணையாளர் சயீத் அல் உசேன் சமர்ப்பித்த அறிக்கை இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போர் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஒரு விரிவான வரலாற்று ஆவணமாகும். இவ்வறிக்கையின் கால அளவை 2002 லிருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலானதாகும்.  இதில் உறுதி செய்யப்பட்டிருக்கும் விடயங்கள்.1) 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரில் இலங்கை அரசு கொலை, சித்திரவதை, கடத்தல், கற்பழிப்பு, போர் விதி மீறல், மனித உரிமை மீறல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டமை, விடுதலைப் புலிகள் பொது மக்களை தன் விருப்பத்துக்கு மாறாக காப்பு அரண்களாகப் பயன் படுத்தியமை, சிறார்களை கட்டாயமாக தன் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்தமை, இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள அநீதி, இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் போர்க்குற்றம் புரிந்துள்ளமை போன்றவை வெளிப்படுத்தப் பட்டுள்ளன.2) உண்மைகள் கண்டு பிடிப்பு மற்றும் கையாளப் பட்ட முறைமைகள்3) தேவையான நிருவாகச் சீரமைப்புகள்.4) பரிந்துரைகள்:- அ) பொது, ஆ) ஐ.நா. நாடுகளுக்கு, 5) உண்மையைக் கண்டறிந்து நீதி வழங்குவதற்கான ஒரு கலப்புப் பொறிமுறையின் அவசியம்.  மேற்கண்ட அனைத்திலும் ஒரு உறுதியான நிலைப்பாடு அந்த அறிக்கையில் தென்படுகிறது. எனினும் இவ்வறிக்கையில் நாம் காணும் மாறுபாடான விடயங்கள் 1) பாதிக்கப் பட்ட தமிழ் மக்களை ஒரு தரப்பாக ஏற்க மறுத்திருப்பது. 2) ஒரு நாட்டு அரசே தன் மக்கள் மீது ஏவி விடப்பட்ட பயங்கரவாதத்தை  இனப்படுகொலை" என்று ஏற்பதற்குப் பதிலாகப் "போர்க்குற்றம்" என வகைப்படுத்திருப்பது. பொதுவாகவே மனித உரிமை ஆணையாளரின் ஆய்வறிக்கைக்குப் பின்னர் கொண்டு வரப்படும் தீர்மானங்கள் அந்தத் தீர்மானத்தின் கருக் கொள்கையினைப் நிறைவேற்றுவதாக அமையவேண்டும் என்பதே நியதியும் மரபும் ஆகும். ஆனால் தற்போது குற்றச் செயல்களுடன் சம்பந்தப் பட்ட அரசே உள்ளகப் பொறிமுறையின் ஊடாக உசாவுகை (விசாரணை) நடத்த வேண்டும் என ஐ.நா.வின் மனித உரிமைப் பேரவை உறுப்பு நாடுகள் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இவர்களின் நிலைப்பாடு நீருக்குள் நிழலைத் தேடும் அறியாமையையே வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.  புவிசார் தொடர்பும் பண்பாட்டுப் பிணைப்பும் அரசியல் கடமையும் உரிமையும் மிக்க அண்டை நாடான இந்தியா முன்னெடுப்பதற்குப் பதிலாக இந்தத் தீர்மானத்தை அமெரிக்க நாடு முன்மொழிய, இந்தியா உட்பட ஏனைய நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன என்பது ஒரு சீர்கேடான முன்மாதிரியாகும். இலங்கைத் தமிழர் சிக்கல்களுக்கு விடை கொடுத்தேன்; படை கொடுத்தேன்; ஒப்பந்தம் செய்தேன் இவைகளின் விலை என்ன?  விளைச்சல் என்ன? என்று தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசு ஐ.நா. அவையில் அசையாதிருப்பதும் அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிப்பதும் எவ்வகையான அரசியல் என்பது எமக்கு விளங்கவில்லை?  ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் அங்கம் வகித்து முதலாளித்துவப் போக்கைக் கடைபிடிக்கும் பெருநாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம் பிடிக்க வேண்டும் என்கிற வேட்கையின் வெளிப்பாடாக சந்தைக்காடாக விளங்கும் இந்தியாவும் இந்த மந்தைக் கூட்டத்தில் இணைந்துள்ளதா? என எண்ண வேண்டியுள்ளது. இலங்கையின் இறுதிக் கட்டப் போரின் போது ஐ.நா. தோல்வியடைந்துவிட்டது. மனித உரிமைகளைக் காக்கவோ மீறல்களைத் தடுத்து நிறுத்தவோ தக்க நடவடிக்கைகளை ஐ.நா. எடுக்கவில்லை. அதில் தோற்றுப் போனதற்குக் காரணம் ஐ.நா. உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாமையே என வெளிப்படையாக அதன் செயலாளர் பான் கி மூன் 2012 ஆம் ஆண்டு ஒத்துக் கொண்டு வருத்தம் தெரிவித்த நிலையிலும் ஐ.நா. மனித உரிமைக் குழுவின் உறுப்பு நாடுகள் சிங்கள அரசின் விருப்புக்கு ஒப்ப ஒரு உள்ளக உசாவுகை என ஒப்புக் கொண்டிருப்பது தமிழ் இனத்திற்கு வழங்கப் பட்டிருக்கும் ஓர் அநீதி ஆகும். மனித உரிமைக்கு விடுக்கப்பட்டிருக்கும் ஓர் அறைகூவல் ஆகும்.   இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலை குறித்து நீதி வழங்குவதிலும் பொறுப்புக் கூறுவதிலும் தீர்வு காண்பதிலும் பன்னாட்டு அமைப்புகளோ அல்லது மனித உரிமைப் பேரவையோ இலங்கையை நேரடியாகக் கட்டுப்படுத்தக் கூடிய அம்சங்கள் எதுவுமின்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வல்லரசுகளின் புவிசார் பார்வை, அரசியல் நகர்வு, தன்னலம் போன்ற காரணிகளுக்கு உட்பட்டவைகளேயன்றி வேறல்ல என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகின்றது.  எனவே, இற்றைச் சூழலில் பிறரைக் குறை கூறிப் பயனில்லை. தமிழர்களிடையே உணர்ச்சிகள் ஊடியிருந்த அளவு ஒற்றுமை இல்லாது போயிற்று. கிளர்ச்சிகளால் எழுந்த தமிழர்களிடையே அதன் வெற்றி காணும் வரை தொடர்ச்சி இல்லாமல் போய்விட்டது. தொய்வுக்கு மெய்யான கரணியம் தமிழர் ஒற்றுமை இன்மையே என்பதை உணர்ந்து ஆக்கப் பூர்வமான சிந்தனைகள் அறிவுப்பூர்வமான அணுகுமுறைகள் ஆழ்ந்த நோக்குடைய செயல் திட்டங்கள் என வகுத்துச் செயல் பட வேண்டும் என்பதே உலகில் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கு எம் வேண்டுகோளாகும். தமிழினத்தின் விடியல் என்பது ஒட்டு மொத்தத் தமிழினத்தின் விழிப்பில் விளையக் கூடிய ஒன்றாகும். இளைஞர்களே புழுதிச் சாம்பலின் கதகதப்பில் காய்ந்து கொண்டிருக்கும் பூனைகள் போல கண் மூடிக் கொண்டிருக்காமல் நீதியைப் பெறுவதில் நமது பங்கென்ன? பணியென்ன? என்ற வினாக்களை நெஞ்சில் நிறுத்தி துஞ்சாமல் செயல்பட வேண்டிய வேளை இது! விழித்தெழுக! விடியலைக் காண்க!.  அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர்.  ( திருக்குறள் : 997)  - திருவள்ளுவர்கனிவுடன்  சு.குமணராசன்முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJANEditor In Chiefஐப்பசி – 2046(அக்டோபர் – 2015)"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி