14 November 2015 8:32 pm
இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி கடந்த ஓராண்டு காலமாக மிகத் தீவிரமாக வெளிநாடுகள் பலவற்றிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக முதலீட்டாளர்கள் பலரும் இந்தியாவில் முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருவதாகச் சொல்லப் படுகிறது. இது வரவேற்கத் தக்க நடவடிக்கையென இந்திய ஊடகங்கள் பலவும் எழுதி வருகின்றன. நாமும் வெகு நம்பிக்கையுடன் வரவேற்கின்றோம். தற்போது மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ச.க கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திய நாட்டைப் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே எமது முதல் இலட்சியம் எனவும் முந்தைய பேராயக் கட்சி (காங்கிரசு) அரசு ஊழலில் திளைத்து வருவதாகவும் பொருளாதாரச் சீர் கேடுகளுக்கு வழி வகுத்தது எனவும் பெரும் பரப்புரை செய்தது. மேலும் மேனாள் தலைமையமைச்சர் நாட்டில் நடைபெறும் பல்வேறு செய்திகள், அரசு மீது சுட்டப்படும் குற்றச் சாட்டுகள் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் ஒரு ஊமை போல் வாய் பேசாமல் இருப்பதாகவும் பல விடயங்களில் ஆமை போல் செயல் படுவதாகவும் விமர்சனம் செய்யப்பட்டார். இது போன்ற பரப்புரைகளே பா.ச.க. பெரும்பான்மை இருக்கைகளை நாடாளுமன்றத் தேர்தலில் கைப்பற்றும் அளவுக்கு அவர்களுக்குப் பெரும் பலத்தைத் தந்தது. ஆனால் கடந்த பதினெட்டு மாத ஆட்சிக் கால தற்கால அரசின் நடவடிக்கைகள் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளைப் பிரதிபலிப்பதாகத் தெரியவில்லை. கடந்த சில மாதங்களாக இந்திய நாட்டில் நிகழ்ந்து வரும் சொல்லாடல்களும் நிகழ்வுகளும் வன்முறைகளும் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரையும் மிகுந்த கவலைக்குள்ளாக்கியுள்ளன. இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர், இந்திய நாட்டில் நடைபெற்று வரும் நிகழ்வுகளும் அரசியல் கட்சிகள் சிலவற்றின் கொள்கைப் போக்கும் இந்திய நாட்டின் ஒற்றுமைப் போக்கை அச்சுறுத்துவதாகவும் நாட்டில் நிலவி வரும் சகிப்புத் தன்மை வெகுவாரியாக குறைந்து வருவதாகவும் பல முறை கருத்துத் தெரிவித்துள்ளார். இந்திய அரசின் ரிசர்வ் வங்கியின் ஆளுனர் ரகுராம் ராஜன் புது தில்லியில் தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா உரையாற்றுகையில் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சகிப்புத் தன்மை மிக அவசியமான காரணிகளில் ஒன்று என்பதுடன், தற்போதைய இந்தியச் சூழல் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது போன்ற ஒரு உணர்வு தென்படுவதாகவும் தன்னுடையக் கருத்தாகப் பேசியுள்ளார். இது போன்ற கருத்துகளை இந்தியப் பெருந்தலைவர்கள் பலர் வெளியிடக் காரணமாக இருப்பது கடந்த சில காலங்களாக இந்திய மாநிலங்களில் நடை பெற்ற சில நிகழ்வுகளின் தொடர்ச்சியேயாகும். மாட்டிறைச்சியை உணவாகக் கொண்டமைக்காக ஒருவர் கொலை செய்யப் பட்டிருப்பது, முற்போக்குக் கருத்துகளைப் பேசியும் எழுதியும் வந்தமைக்காக நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, சாகித்ய அகாதமி விருதாளர் எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி ஆகியோர் திட்டமிட்டுக் கொலை செய்யப் பட்ட விதம், பா.ச.க. அரசின் மதவாதக் கொள்கை, பாடத்திட்டங்களில் இந்துத்துவக் கொள்கைகளை தீவிரப்படுத்தல் போன்ற பல்வேறு காரணிகளே குடிமக்களின் அச்சத்திற்குக் கரணியமாக விளங்குகின்றன. மேலும் ஒரு காலத்தில் இந்தியாவில் தடை செய்யப் பட்ட இயக்கமான ஆர்.எசு.எசு. போன்ற இயக்கங்கள் தற்போதைய அரசை வழிநடத்துகின்றது என்ற குற்றச் சாட்டை மெய்ப்பிக்கும் விதமாக அரசு ஊடகமான வானொலியில் ஆர்.எசு.எசு. தலைவர் உரையாற்றுவதற்குக் கொடுக்கப் பட்ட வாய்ப்பு, அரசின் போக்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து அந்த இயக்கத்துடன் ஆலோசனை போன்றவைகள் இவைகளை மேலும் உறுதிப் படுத்துகின்றன. அரசின் இந்த அணுகு முறை நாட்டின் பல்வேறு தரப்பினரின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. தங்களின் எதிர்ப்பை உணர்த்துவதற்காக கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் என பலர் தங்களின் சேவைகளைப் பாராட்டி கடந்த காலத்தில் நடுவணரசால் வழங்கப்பட்ட பத்மபூசன், பத்மசிறி, சாகித்ய அகாதமி விருதுகள் உள்பட ஏராளமான பல விருதுகளை திரும்பத் தருவதாக அறிவித்துள்ளனர். இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலுள்ள பலராலும் தெரிவிக்கப்படுகின்ற மக்களாட்சி முறையில் கையாளப்படும் ஓர் எதிர்ப்பாகும். இந்தப் பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கின்றது. இந்தச் சூழலின் அடிப்படைத் தன்மைகளைப் புரிந்து கொண்டு அதன் வேர்க்காரணங்களை அறிந்து உரிய முறையில் தன்னை சரிசெய்து கொள்வது அரசுக்கும் நாட்டிற்கும் நன்மை பயக்கும் செயலாகும். ஆனால் இவையனைத்தும் எதிர்க்கட்சியினரால் தூண்டப்படுபவை, அரசுக்கு எதிராக வைக்கப் படும் குற்றச்சாட்டுகள் இவைகளில் உண்மை இல்லை என ஆளும் கட்சியினரால் புறந்தள்ளப் படுகின்றதேயொழிய மேற்கண்டவை குறித்து வருத்தம், கண்டனம், ஆய்வுகுட்படுத்தல் என எதுவும் தற்போதைய அரசால் மேற்கொள்ளப் படவில்லை. இந்த நிகழ்வுகள் குறித்து தலைமை அமைச்சரும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இது ஒரு அசாதரணமான சூழல் ஆகும். மதம் பிடித்த யானைகளைக் கூடக் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். ஆனால் மதம் பிடித்த மனிதர்களை அடக்குவது என்பது இயலாத ஒன்று என்பதை தற்காலச் சூழல் நாட்டுக்கு அறிவித்துள்ளது. இது தலைமையமைச்சரின் இயலாமையா அல்லது விருப்பமா என்பதை நம்மால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால், நரேந்திர மோடி தன் செயல் திட்டங்களில் ஒன்றாகச் சொல்லப் பட்ட பொருளாதார வளர்ச்சி குறித்து உரிய இலக்கை எட்டமுடியாமல் தவிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் பல நாடுகளின் தொழில், வணிகச் சூழல், வளர்ச்சி நிலை போன்றவை குறித்து அலசி ஆய்வு செய்து ஆண்டு தோறும் அறிவிக்கை வெளியிடும் அமெரிக்க நிறுவனம் மூடிசு (விஷீஷீபீஹ்s) ஓர் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. அதில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள்:-தொழில் மற்றும் வணிகத்தில் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி இலக்கை அடைய வேண்டும் என இந்திய அரசு பல திட்டங்களை முன்னெடுத்தாலும் அவைகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றது. எந்த வித வளர்ச்சியும் முதலீடும் ஒரு நாட்டில் நிலவும் சமுக பொருளாதாரச் சூழ்நிலையை வைத்து தான் நிருணயம் செய்யப் படும். ஆனால் இந்தியாவில் அரசியல் ரீதியான விமர்சனங்களும் நிகழ்வுகளுமே மோடி அரசுக்குப் பெரும் சிக்கலை உருவாகியுள்ளன. தன்னை ஒரு தேசியவாதியாகக் காட்டிக் கொள்ள மோடி பெரும்பாடுபட்டாலும், அவர் சார்ந்திருக்கும் கட்சியிலுள்ள பெரும்பாலானத் தலைவர்கள் அப்படி நினைப்பதாகத் தெரியவில்லை. அவர்களின் பேச்சுகள், நடவடிக்கைகள் இந்தியச் சமுகத்தில் பல சிக்கல்களுக்குக் காரணமாக அமைகின்றன. வன்முறைக்கும் காரணமாக அமைந்து விடுகின்றன. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யத் தயங்குகிறார்கள் எனவே முதலீகள் குறைந்து வருவதற்கு வாய்ப்புள்ளது. மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகளின் பலம் அதிகம் இருப்பதால் நில எடுப்பு மற்றும் சேவை வரி மசோதா போன்றவைகளை அரசு நிறைவேற்ற இயலவில்லை.மாறாக நாட்டின் பிற சிக்கல்களை விவாதிப்பதிலே நாடாளுமன்றம் முடங்கி விடுகிறது. இறுதியாக இந்த அறிக்கை வெளிக்கொணரும் செய்தி பெரும்பான்மை பலமும், மதவாதமும் பரந்து செயல்படுத்தப்படும் கலாச்சாரத் தடைகளும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடைக்கற்களாக அமையும் என்பதாகும். மேற்சொல்லப் பட்டுள்ள எச்சரிக்கையை மோடி அரசு எதிர்க்கட்சிகளின் காழ்ப்புணர்வு எனச் சொல்லி ஒதுக்கி விட முடியாது. மாறாக இந்த அறிக்கையை வெளிக் கொணர்ந்தமைக்காக நரேந்திர மோடி, மூடிசு நிறுவனத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். இந்தியத் தலைமை அமைச்சர் மோடி தன் மவுனம் கலைக்க வேண்டும். "அனைவருடைய வளர்ச்சிக்காக அனைவரோடும்" என்ற சொல்லாடலை அதிகம் கையாளுகின்ற வலிமை மிக்க மோடி அவர்கள் தான் கையெலெடுக்க வேண்டியது நாட்டின் பொருளாதார வளர்ச்சியா? அல்லது மதவாத அரசியலா? என்பதை முடிவு செய்ய வேண்டும். பாதை சரியாக அமைந்தால் தான் பயணம் இனிதாக அமையும். காலம் கடந்து விடவில்லை. தலைமை அமைச்சரின் தெளிவான சிந்தனையும் செயலுமே இந்திய நாட்டின் எதிர்கால வளர்ச்சியைத் தீர்மானிக்கும். எந்த ஒரு தனி மனிதனின் சொல்லுக்கும் நற் செயலுக்கும் இருக்கும் தொடர்பே மனித ஒழுக்கத்தின் உறைவிடமாகவும் அடையாளமாகவும் அறியப்படும். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற ( திருக்குறள் : 34) – திருவள்ளுவர்கனிவுடன் சு.குமணராசன்முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJANEditor In Chiefகார்த்திகை – 2046(நவம்பர் – 2015)