15 December 2014 5:00 pm
இந்திய நாட்டை ஒரு வல்லரசாக உருவாக்குவோம்; நல்லரசை அமைப்பதே எங்கள் நோக்கம்; வறுமையைப் போக்குவோம்; வளர்ச்சியைப் பெறுக்குவோம்; கச்சத்தீவை மீட்டு தமிழ்நாட்டு மீனவர்களின் சிக்கலை முடிவுக்குக் கொண்டு வருவோம்; மத நல்லிணக்கம் போற்றுவோம்; இலங்கையுடன் பேசுவோம்; ஈழம் குறித்த செயல்பாட்டை முன்னெடுப்போம். மேற்கண்ட சொல்வெட்டுகள் எல்லாம் தற்போது நடுவணரசில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரசோச்சி வரும் பா.ஜ.க தலைவர்கள் நரேந்திர மோடி, யஷ்யவந்த் சின்கா உள்ளிட்ட பல தலைவர்களின் வாயிலிருந்து உதிர்ந்த சொற்கோவைகளாகும். நாடாளிமன்றத் தேர்தல் பரப்புரையின் போது அயோத்தி, இராமர், இத்துத்துவம், சமற்கிருதம் போன்ற சொற்கள் அதிகம் வெளிவராமல் அடக்கியே வாசிக்கப்பட்டது என்பதை நாட்டு மக்கள் நன்கறிவர். மக்களுக்கு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதிருந்த வெறுப்பும் அளவிலா குற்றச்சாட்டுகளும் பா.ஜ.க அணிக்கு சாதகமாக அமைந்து தனிப்பெரும்பான்மை பெறும் அளவு வெற்றியை ஈட்டித் தந்தன. நஞ்சுடை தானறிந்து நாகம் கரந்துறையும்" என்று மூத்த தமிழ் நூல் மூதுரை செப்புவது போன்று எந்தெந்த செய்திகள் பரப்புரையின் போது அதிகம் பயன்படுத்தப்படாமல் மறைத்து வைக்கப்பட்டு, அடக்கி வாசிக்கப்பட்டதோ, அவைகள் அனைத்தும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பின்பு தன் மூல உடற்கூறுகளை வெளிப்படுத்தும் விதமாகப் பல வடிவங்களில் அரசோச்சும் அமைச்சர் பெருமக்களால் தற்போது வெளிப்படுத்தப் படுகின்றன. மதச் சிறுபான்மையினரை அரக்கத் தனமாக சித்தரித்தல், வகுப்புவாதக் கல்வி, இந்து பேரினவாத அடிப்படையில் வரலாற்றுப் பாடதிட்டங்களில் திருத்தி எழுதுதல், இந்தியத் தன்மையின் முக்கியச் சின்னமாக சமற்கிருதத்தை ஊக்குவித்தல், பள்ளி மாணவர்கள் மீது இந்து மதச் சின்னங்களை உட்புகுத்துதல், இந்தியப் பண்பாடு, சமுகம், தேசியவாதம் போன்றவற்றை மறு வரையறை செய்வதற்கும் உருக்குலைப்பதற்குமான செயல்பாடுகளை ஆள்வோரும் அவர்களைச் சார்ந்தோரும் செய்ய முயற்சிக்கின்றனர். ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களில் அரசு வலைத் தளங்களில் "இந்தி" மொழி கட்டாயம் எனத் தொடங்கி ஆசிரியர் தினத்தை "குரு உத்சவ" என்று விழாவெடுத்தும், இந்தியா இந்துக்கள் தேசம் என பேச வைத்தும், கேந்திர வித்யாலயா என்று அழைக்கப்படுகின்ற நடுவண் கல்வி நிறுவனங்களில் பாட மொழியாக சமற்கிருதம் அறிவிக்கப்பட்டும், இந்து மத நூலான "பகவத் கீதை"யை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென்று பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் நடுவணரசின் வெளி விவகாரத் துறை அமைச்சருமான திருமதி சுசுமா சுவராஜ் அறிவிக்கை செய்வதும், ராமரைக் கடவுளாக ஏற்காத அனைவரும் "முறைதவறிப் பிறந்தவர்கள்" என நடுவணரசின் மற்றொரு அமைச்சர் மூடத்தனமாகப் பேசுவதும் இந்துவத்தின் கோர முகம் சிறிது சிறிதாக வெளிப்படுவதைக் காட்டுவதாக அமைந்துள்ளது. கடந்த முறை 2000வது ஆண்டில் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த போது அன்றைய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை எதிர்த்து சங்காலத் தமிழுக்கும் தற்காலத் தமிழுக்கும் சற்றும் உறவு இல்லை என பெரும் தமிழ்ப் பண்டிதர் போலப் பேசி அக்கோரிக்கையை நிராகரித்ததும் இவண் நினைவுகூரத் தக்கது. எனினும் முந்தைய தி.மு.க. அரசின் தொடர் முயற்சியால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் வரலாற்றுத் தொன்மையும் இலக்கிய வளமும் மிக்க தமிழ்மொழி "செம்மொழி" தகுதி உடையதாக அறிவிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் நடைபெற வேண்டிய விரிவாக்கம் அடுத்தடுத்து வந்த மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படாமல் அறிவிப்பு என்ற அளவிலேயே முடங்கிப் போனது என்பது வருந்ததக்க ஒன்றாகும். உலகின் மூத்த மொழிகள் என்று வரலாற்று ஆய்வாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டிருகின்ற இலத்தின், கிரேக்கம், தமிழ், சீனம், எபிரேயம், சமற்கிருதம் போன்ற மொழிகளில் இன்று உலகளவில் பெரும்பாலாகப் பேசப்படுகின்ற மொழிகளில் ஒன்று சீனம், மற்றொன்று நம்முடைய தாய் மொழியான தமிழாகும். அது போலவே தமிழ்நாட்டுப் புலவர் திருவள்ளுவர் ஈந்து புறந்தந்த "திருக்குறள்" என்ற நூலுக்கு இணையான ஒரு மனித நேயக் கோட்பாடுகளுடன் கூடிய பொதுமை நூல் உலகில் வேறெதுவும் இல்லை. "தமிழ் மொழி", திருக்குறள் ஆகிய இரண்டையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் நாடு "இந்தியா" என நாடாள்வோர் பெருமைப்பட வேண்டும். ஆனால் அண்மைக்காலச் செயல்பாடுகள் இவற்றிற்கு எதிராகவும், பிற மாநில மொழிகளுக்குள் ஊடுருவும் வகையிலும், பிற மதத்தவர் மனதில் அச்சம் தொற்றும் விதமாகவும் "இந்து சமய" நூலை தேசிய நூலாக மொழிவதும், பரிந்துரைப்பதும் அருவருக்கத் தக்கச் செயல்களாகும். இது ஒரு பண்பாட்டுத் திணிப்பு என்றே எண்ண வேண்டியுள்ளது. ஒவ்வொரு மொழியையும் தாய்மொழியாகக் கொண்ட பல கோடி மக்களை உடைய பல தேசிய இனங்கள் ஒன்றிணைந்து வாழும் இந்தியாவில் அவரவர் மொழியும் வளர்ச்சி பெற நடுவணரசால் அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளதா என்றால் அது மிகவும் குறைவு. மேலும் எந்த மக்களாலும் தாய்மொழியாகப் பேசப்படும் நிலையில் இல்லாத சமற்கிருதத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டு அதற்கு இந்திய அளவில் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் ஆய்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் பெருந்தொகையை ஒதுக்கி வருகிறது. ஏன் இதற்கு மட்டும் இந்திய அரசு இவ்வளவு அக்கறையெடுத்துக் கொள்கிறது? சமற்கிருதத்தால் தமிழ் மரபு ஆக்கங்கள் பல இழப்புக்குள்ளாகியுள்ளன. நடுவண் அரசு, இந்திய தேசியம் என்ற பெயரில் இந்தியாவிலுள்ள பிற தேசிய இனங்களின் அடையாளங்களை அழிப்பதற்கு இம்முயற்சி வழிவகுக்கும். இந்திய நாட்டின் மொழிக் கொள்கை என்பது மக்களின் வளர்ச்சிக்காகவும் தனித்தனி தேசிய இனங்களின் நலன்களுக்காகவும் அல்லாமல் நடுவணரசில் பதவியேற்கும் நலன்களுக்காகவும், ஆதிக்க நிலைநாட்டலுக்கும் உருவாக்கப்பட்ட ஒன்றாகவே காட்சியளிக்கின்றது. இந்திய நாட்டில் 0.01 விழுக்காடு அளவு கூட மக்களால் பேசப்படாத மொழி சமற்கிருதத்திற்குச் செலவிடும் தொகை பல்லாயிரம் கோடியாகும். ஆனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒன்றாக இன்றும் இளமையுடன் செழித்தோங்கும் "தமிழ் மொழி செம்மொழி" என அறிவிக்கப்பட்ட பின்பும் புறக்கணிக்கப்படுவது தேச ஒற்றுமைக்கு உலைவைக்கும் போக்காகும். பகவத் கீதையைப் புனித நூல் என்பதும், சமற்கிருதத்தை திணிக்க முயல்வதும் இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, மதச் சார்பின்மை போன்ற கொள்கைகளுக்கு நேர் எதிராக தென்படுவதுடன், இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் தீங்கு விளைவிக்கும் நஞ்சாகும். இந்திய அரசியல் சாசனத்தின் 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்கப்பட்டு அனைத்து மாநில மொழி பேசும் மக்களுக்கும், மொழிச் சமன்பாடு! மொழி நிகரமை என்ற நம்பிக்கையை ஊட்ட வேண்டியதும், மத நல்லிணக்கதைப் போற்றும் வகையில் மனிதநேயச் சிந்தனைகளை விளக்கும் பொதுமை நூலான "திருக்குறளை" தேசிய நூலாக அறிவிப்பதும் இற்றைக் கால உடனடித் தேவைகளாகும். இந்தி திணிப்புக்கு எதிராகப் போராட்டக் களம் அமைத்து 50 ஆண்டுகளை எட்டும் இக்கால கட்டத்தில் இந்திய தேசிய இனங்களின் மொழிகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் காப்பதற்காக மீண்டும் அரசியல் போராட்டக் களங்கள் பிற மாநிலங்களிலும் ஆங்காங்கே உருவாகுவதைத் தவிர்த்து அறிவார்ந்த நிலையில் ஆட்சி புரிந்து இந்தியாவின் ஒற்றுமை சிதைந்திடா வண்ணம் காப்பாற்ற வேண்டும் என்பது எம் விளக்கமும் வேண்டுதலும் ஆகும். அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். (குறள்: 198) கனிவுடன், சு.குமணராசன் முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJANEditor In Chiefமார்கழி – 2045(டிசம்பர் – 2014)"