புத்தொளி பரவட்டும் - தமிழ் இலெமுரியா

9 January 2014 8:46 am

புத்தொளி வீசிப் புறப்படும் ஒவ்வொரு புத்தாண்டிலும் புதுக் கோலம், புத்தாடை, புதுப்பானை, புத்தரிசி, புது மஞ்சள், கரும்பு, இஞ்சியென பொங்கலிட்டு மகிழ்ச்சியில் பொங்கினோம். அவைகள் பூத்துக் குலுங்கும் புதுமலராய் எழில் தோற்றம் அளித்தன; இதமான மணம் வீசின. கடந்த ஆண்டுகளின் அந்தக் கவின்மிகு நினைவுகள் இன்று வரலாற்றுச் சுவடுகளாய் வறண்டு கிடக்கின்றன. தற்போது மேலும் ஒரு புத்தாண்டை வரவேற்கிறோம். இந்தியாவில் 1947 ஆம் ஆண்டுக்கு முன்பு ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட நாள்களில், இந்திய நாட்டு மக்களின் சிந்தனையும், செயலும் மண்ணின் விடுதலை, மக்கள் விடுதலை என்ற இலக்குகள் நோக்கி நகர்ந்தவையாகும். ஆனால், அதன் பின்பு நாம் பெற்றிருக்க வேண்டிய தன்னாட்சி, தன்மானம், தன்னிறைவு, ஒருமைப்பாடு, சமுகச் சமனியம், மொழி உரிமை, வளமான கல்வி, வறுமையற்ற வாழ்க்கை, பொருளாதார ஏற்றம் போன்றவைகளில் நாம் இன்றளவும் உலகளவில் போதிய வளர்ச்சியை எட்டிட இயலவில்லை என்பது வருந்தத்தக்க உண்மையாகும். மக்களால், மக்களுக்காக, மக்களே ஏற்படுத்திக் கொண்ட குடியாட்சி முறைத் தழுவிய ஓர் அரசமைப்புச் சட்டத்தை நாமே வகுத்துக் கொண்டு, மக்களாட்சி முறையில் ஆட்சிகள் அமைவுற்றாலும் மக்கள் மனநிறைவை எட்ட வில்லையே ஏன்? என்பது ஆய்வுக்குரிய விடயமாகும். விடுதலையடைந்த இந்தியாவில் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கட்சிகள் நாட்டில் நல்லெண்ணம், நல்லிணக்கம், ஒழுக்கம், ஒருமைப்பாடு, மாநிலங்களுக்குச் சம ஈவு, மொழிகளுக்குச் சம உரிமை, கூட்டாட்சி என்கிற நேர்மையான கோட்பாடுகளைத் தவிர்த்து, அதிகார போதை, ஆதிக்க எண்ணம், உள் நோக்கு, தன்னலம், தனி மனித வழிபாடு, மதவெறி, சாதி வெறி, சமய வெறி, சனாதன வெறி, மூட நம்பிக்கை, வேற்றுமை எண்ணம், பதவி, பணம், பட்டம் தரும் சுகங்களுக்காக எதையும் இழக்கும் சித்தம், ஊழல் என அடுக்கடுக்கான அழுக்காறுகளைச் சிறுகச் சிறுகச் சேமித்துக் கொண்டதின் விளைவு இன்று தேசிய அளவில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை எட்ட முடியாத வண்ணம் மாநில மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளன.  1950, 1960 களில் இந்திய நாடு சந்தித்தத் தேர்தல்களில் முதன்மைக் கட்சிக்கு சற்றொப்ப 350-360 நாடாளுமன்ற இருக்கைகள் கிடைத்தன. பொதுவுடைமைக் கட்சிகள் எதிர் கட்சியாய் செயல்பட்டன. ஆனால் 1970களுக்குப் பிறகு நடுவணரசின் நலிவான செயல்பாடுகளும், நச்சுமனப் போக்கும் பல மாநிலங்களை அந்நியப்படுத்தியது. நடுவணரசின் இந்த தவறான கோட்பாடுகள் மாநில உணர்வுகளுக்கும், உரிமைக் கோரளுக்கும் உரமூட்டின. எண்ணற்ற மாநிலக் கட்சிகள் உருவாகின. 1984 ஆம் ஆண்டு ஒரு மாநிலக் கட்சியே நாடாளுமன்றத்தின் எதிர் கட்சியாகப் பலம் பெற்றது. தேசிய அரசியல் கோட்பாடு என்கிற சித்தாந்தம் பட்டுப்போனது. தொடர்ந்து வந்த தேர்தல்களில் இழுபறி நிலைமைகள். மிசா, பொசா, தடா, பொடா என எண்ணற்ற சட்டங்கள் ஏவிவிடப்பட்டன. இவைகளெல்லாம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என இன்று வரை மீள்பார்வை செய்யப்பட வில்லை.  1996லிருந்து 1999 வரை மூன்று தேர்தல்கள், நான்கு தலைமையமைச்சர்கள். நடுவணரசில் தனிப் பெரும்பான்மை என்பது கானல் நீராகியது. இது ஒரு புறமிருக்க அரசியல் கட்சிகளின் உட்கட்சி சனநாயகமாவது உயிரோடிருக்கின்றதா என்றால் அதுவும் இல்லை. மத்தியில், மாநிலத்தில் ஆளும் அரசுகளின் அமைச்சரவை முடிவுகள் கூட தனிமனித விருப்பு வெறுப்புகளால் மாற்றம் பெறுகிறது. தலைமையமைச்சர், முதலமைச்சர் போன்றோர் தலை குனிய வேண்டிய நிலையைக் காண்கிறோம். கோபுரமாய் திகழ வேண்டியோர் குப்பைகளாகக் குவிந்து கிடக்கின்றனர். சீலம் குன்றி சிதைந்து போயினர். எனவே அரசியல் என்றாலே வெறுப்பாக நோக்கும் போக்கு மக்களிடையே இன்று வளர்ந்து விட்டது. இவற்றிற்கெல்லாம் யார் காரணம்? குடிமக்களாகிய நாமே பொறுப்பேற்க வேண்டும். கருவறையில் தோன்றி கல்லறை நோக்கிப் பயணிக்கும் மனித வாழ்வின் ஒவ்வொரு நொடி பொழுதும் ஒப்பிலாதவை. அவை ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு உண்மையை உலகில் பதிய வைக்கின்றன. அரிதான மாற்றங்களை நிகழ்த்துகின்றன. எனவே வரலாற்றுச் சுவடுகள்  நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகள் என்பதறிவோம். இந்த ஆண்டு பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கின்றோம். இதில் அரசியலை வெறுப்பதென்பது தவறான கொள்கையாகும். இது நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் மற்றொரு வாய்ப்பு. அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்துவது நமது கடமை; நமது உரிமை. நம்முடைய மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு, கடந்த கால வரலாற்று நிகழ்வுகளைச் சீராய்வு செய்து நமது வாக்குகளைப் பயன்படுத்திடல் வேண்டும். இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரும் மனத் தூய்மையுடனும், நேர்மையுடனும், தொலைநோக்குப் பார்வையுடனும் செயல்பட்டால் இருண்டுகிடக்கும் இச்சூழலிலும் ஓர் ஒளிக் கீற்று தோன்றும் என நம்பலாம். இப்புத்தாண்டின் பூரிப்பு நிலைத்திட, புத்தொளி பரவிட எம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு. (குறள்: 554) கனிவுடன், சு.குமணராசன் முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJANEditor in Chiefதை – 2045(சனவரி – 2014)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி