பேணுவோம் பெண்ணுரிமை - தமிழ் இலெமுரியா

15 September 2014 2:51 am

அண்மைக்காலமாக ஊடகங்களில் அதிகமாக அடிக்கடி இடம் பெறுகின்ற செய்திகள் பெண்கள் மீதான வன்புணர்வு, பாலியல் கொடுமைகள், பெண் குழந்தைகள் மீது பாலியல் குற்றங்கள் என்பனவாகும். 2012 ஆம் ஆண்டு இந்தியத் தலைநகர் புது தில்லியில் நிகழ்ந்த ஒரு பாலியல் குற்றம் இந்திய நாட்டையே உலுக்கியது. பின்னர் அடங்கி ஒடுங்கியது. அதன் பின்னர் பெண்கள் பாதுகாப்புக்கென ஒரு நிதியமும் ஆயிரம்கோடி ரூபாயில் ஏற்படுத்தப் பட்டுள்ளதாக அன்றைய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நடுவணரசின் பொது நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப் பட்டபோது அறிவித்தார்.  இந்திய நாடு விடுதலை அடைந்து அறுபத்தேழு ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் அந்நாட்டுக் குடிமக்களுக்கு  உரிய முழுமையான பாதுகாப்பை வழங்க இயலவில்லை என்பதையே உணர்த்துகின்றது. இதில் பாலின வேறுபாடுகளுக்கு இடம் இல்லை. ஆண், பெண் என இரு சாராரும் நிகரான உரிமையுடன் வாழ்வதே ஏற்றத்தாழ்வற்ற சமுக நியதியும், நீதியும் ஆகும். ஆனால் இந்தியாவின் குடிமக்களில் ஒரு பகுதியான சமுகப் படிநிலையில் கீழோராகக் கருதப்படும் தாழ்த்தப் பட்ட மக்கள்,  குறிப்பாகப் பெண்கள் மீது ஆதிக்க எண்ணம் கொண்ட மனித விலங்குகள் தொடர்ந்து தம் ஆளுமைகளைச் செலுத்தி வருகின்றன என்பது  இந்திய நாட்டில்மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.  இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் குறிப்பாக வட இந்திய மாநிலங்களில் தொடர்ந்து நடை பெற்று வரும் கொடுமைகள் பல காலம் நடை பெற்று வந்தாலும், அண்மைக்காலமாகவே ஊடகங்களில் அவைகள் செய்திகளாகவும், பெண்கள் பாதுகாப்பு குறித்த சொற்போர் மேடைகளாகவும் மாற்றம் பெற்று வருகின்றது. இந்த விவாதங்களில் பங்கேற்போர் செய்தியாளர்களாக இருந்தாலும், சமுகப் போராளிகள் என தம்மை அழைத்துக் கொள்கின்ற அரசியல் கட்சிகள் மற்றும்  அரசு சாரா நிறுவனங்களின் பெருமக்களானாலும் பெரும் பாலும் ஆரியச் சிந்தனைகளின் ஊற்றாக விளங்கும் மேட்டுக் குடியினராகவும், ஆணாதிக்க எண்ணம் கொண்டவர்களாகவுமே உள்ளனர். இதில் பங்கேற்கும் பல பெண்களும் கூட தங்கள் மூளையில் மதம், சடங்கு, சம்பிரதாயம், மரபு, இந்தியப் பண்பாடு என பல தளைகளை, தடைகளை விரும்பி ஏற்றுக் கொண்டவர்களாவே காட்சி தருகின்றனர். இதன் விளைவாக விவாத மேடைகளில்  அவிழ்க்கப் படும் முடிச்சுகள் பெண்களைப் பாதுகாப்பாக சமுகத் தளத்தில் ஆண்களுக்கு நிகராக உலவ விடுவது எப்படி என்பதைத் தவிர்த்து பெண்கள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தியல்களே முதன்மை பெறுகின்றன. எம் பார்வையில் இது போன்ற விவாதங்கள் தற்போது திட்டமிட்டு நடத்தப்படுபவையாகும். நவீன அரசியல் சமுகத்தளங்களில் உலகளவில் பெண்கள் பல முன்னேற்றங்களைக் கண்டு வருகின்ற இவ்வேளையில் அவைகள் தத்தம் மதம், மரபு சார்ந்த சிந்தனைகளுக்கு எதிரானவை என்று எண்ணும் சில விலங்காண்டிகளின் விருப்பமே வேறு ஒரு விதமாக வெளிப்படுகின்றது என்பதை உன்னிப்பாகக் கவனிப்போர் புரிந்து கொள்ள இயலும்.  இது எப்படியிருக்கின்றதென்றால் ஒரு நாட்டில் திருட்டு, கொலை, குற்றங்கள் மிகுதியாக நடைபெறும் பொழுது சட்டம், ஒழுங்கு ஆகியவற்றைக் கைக்கொண்டு ஒடுக்குவதற்குப் பதிலாகப் பொதுமக்களைத் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வர வேண்டாம் என்று தடை விதிப்பது, பொருள்களை கையில் எடுத்துச் செல்ல தடை விதிப்பது  போன்று உள்ளது.  படித்தோர், பண்பட்டோர், விழிப்புணர்வு மிக்க பன்முகத் தன்மை வாய்ந்த மக்கள் வாழ்கின்றதாகச் சொல்லப் படும்  மும்பை, சென்னை, தில்லி, கொல்கத்தா போன்ற பெருநகரங்களிலும் கூட பெண்களுக்குப் பேரூந்துகளிலும், தொடர்வண்டிகளிலும், கல்விக்கூடங்களிலும் இடஒதுக்கீடு செய்வதும், இரவு நேரங்களில் வெளியே செல்வது தடுக்கப்படுவதும், உடைகள் அணிவதில் பல கட்டுப்பாடுகளை விதிப்பதும், ஆண்களுக்கு எதிராகப் பேசுவதைத் தவிர்ப்பதும், தன்னை வலிமை குன்றிய மனித இனமாக மனதளவில் ஏற்றுக் கொள்ளும் உளவியலை வளர்ப்பதும் பெண்கள் பாதுகாப்புக்கு உதவும் காரணிகளாகத் தீர்மானம் செய்வது எந்த வகையில் நீதியாகும்.  பெண்கள் முழு உரிமையுடன், முழு நேரமும்  செயல்படுவதற்கு சமுகத் தளத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும், தனி மனித உணர்வுகளுக்கு எதிராக தடைகள்  ஏற்படுத்துவதும் நேர்மையற்றவை என்பது எம் கருத்தாகும்.  தமிழ்ச் சமுகத்தில் அவ்வையிலிருந்து ஆண்டாள் வரை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக முழு உரிமை பெற்றத் தாய்வழிச்  சமுகமாக, மன்னர்களைக் கூட மண்டியிடச் செய்யும் வலிமை மிக்க பாலினமாகவே பெண்கள் வாழ்ந்து வந்துள்ளனர். வீட்டையும், நாட்டையும் பாதுகாப்பதில் பெண்களின் பங்கு அளப்பரியதாகும். ஆனால் இந்தியாவில் வலுப்பெற நினைக்கும் மதம், சாதியம், மனு (அ)தர்மம் அவற்றில் முகிழ்த்திருக்கும் ஆணாதிக்க எண்ணங்கள் நிலைத்திட வேண்டும் என்ற விருப்புடன் செயல் படும் சக்திகள் தங்கள் மூளையைச் சலவைச் செய்வதற்குப் பதிலாக ஊடகங்களில் தங்கள் கீழ்மை எண்ணங்களைக் கலவை செய்கின்றனர் என்பதைப் பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  ஆதிக் காலத்திலிருந்தே ஆணாதிக்கம் என்பது குமுகாயத்தில் ஏற்புமை பெற்ற ஒரு பெருமை என்று ஆகிவிட்டது. சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, உயர்ந்த ஆன்மிகவாதிகள் கூட பெண்மையின் பெருமையை, ஆளுமையை தெளிவாக உணரவில்லை. வள்ளுவர் வாழ்ந்து பல்லாண்டுகளுக்குப் பின்னரே பெண்ணுரிமைப் பேச ஒரு பெரியாரை, ஒரு பாரதியை, ஒரு பாரதிதாசனைக் காண முடிந்தது. எனினும் ஆன்மிக வளர்ச்சிக்குப் பெண்களை ஒரு தடைக்கல்லாகவே எண்ணும் போக்கு இன்றளவும் தொடர்கின்றது.  பெண்களுக்கான இட ஒதுக்கீடு, உரிமை வாய்ப்பு என காலங்காலமாக அனைத்து அரசியல் கட்சிகளாலும் பேசப்படினும் அவை சட்டவடிவம் பெறவில்லையே ஏன்? அல்லது சட்டவடிவம் பெற்றால் தான் இட ஒதுக்கீடா? இரண்டுமே தவறல்லவா? பெண்ணுரிமை பேசும் கட்சிகள் தங்கள் வேட்பாளர் தேர்வில் பெண்களுக்கு உரிய ஒதுக்கீடுகள் செய்வதை யார் தடுக்கின்றார்கள்? எனவே அனைத்தும் ஆணாதிக்கத்தின் அரங்கேற்றப் படாத நாடகங்கள் என்பதை ஒப்ப வேண்டும். அனைத்திற்கும் விடையாக அமைவது பெண்ணுரிமைப் பேணலை ஆண்களின் மனம் இதுகாறும் ஒப்பவில்லை என்பதைத் தவிர வேறென்ன இருக்க முடியும்? சாதி, மதம், ஆணாதிக்கம் என ஆழ வேறூன்றியிருக்கும் நச்சு வேர்களை தத்தம் மூளையிலிருந்து பிடுங்கி எரியாதவரை பெண்கள் உரிமை, பெண்கள் பாதுகாப்பு என்ற நாடகங்களும் அரங்கேற்றப் பட்டுக் கொண்டேதான் இருக்கும். இன்றளவும் விவரம் புரியாமல் உலாவந்து கொண்டிருக்கும் பெண்களும், பெண்ணுரிமை வாதிகள் என்று தங்களைப் பிரகடனப் படுத்துவோரும் விதையறியாமல், வேர் அறியாமால் பாலின வேற்றுமை போக்கைக் களைந்து விடுவோம் என்பது அறியாமையாகும்.  விடுதலை என்பது வேண்டுவதல்ல! வெற்றி நோக்குடன் தட்டிப் பறிப்பதாகும்.  சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின் வறுமை தருவதுஒன்று இல்  ( குறள் – 934) கனிவுடன், சு.குமணராசன் முதன்மை ஆசிரியர்S.KUMANA RAJANEditor in Chiefபுரட்டாசி – 2045(செப்டம்பர் – 2014)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி