17 March 2015 4:03 pm
உலக வரலாற்றில் 1950-&60 களில் மேற்குலகு நாடுகள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்த கிழக்காசிய நாடுகளில் ஒன்று இந்தியா மற்றொன்று ஜப்பான் ஆகியவனவாகும். இவையிரண்டும் ஒரே காலகட்டத்தில் தன் புதிய அரசியல் பயணத்தை தொடங்கிய நாடுகள்; ஒன்று மக்களாட்சி நாடாளுமன்ற முறைமையையும், மற்றொன்று மன்னராட்சி நாடாளு மன்ற முறைமையையும் பின் பற்றி தத்தம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல விரும்பின. அக்கால கட்டத்தில் அமெரிக்காவிற்கு ஈடான பலம் வாய்ந்த நாடாக விளங்கிய உருசிய நாட்டுக்கு ஈடாக ஆசியாவில் மற்றொரு நாடு வளர்ச்சிப் பெறுவதை மேற்கத்திய நாடுகளும் விரும்பின. இந்த இரு நாடுகளில் முதல் பத்தாண்டுகளில் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதே கால கட்டத்தில் பண்டித சவகர்லால் நேரு தலைமையில் அமைந்த இந்திய ஆட்சியில் ஓரளவுதான் வளர்ச்சியை, மாற்றத்தை எட்ட முடிந்தது. குறிப்பாக முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களில் தொழில்துறையில் சற்று வளர்ச்சியை எட்டியது. அதுவும் கூட நிலச்சுவான்தாரர்கள், குறுநில மன்னர்கள், சமீன்தார்கள் போன்றவர்களின் ஆதிக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளினால் விளைந்த ஒன்றாகும். இது ஒரு புறம் ஆறுதலான செய்தியாக அமைந்திடினும் இந்தியாவின் இருண்ட பகுதியாக வியப்புடனும், அதிர்ச்சியுடனும் மேற்கத்திய நாடுகள் வெளிப்படுத்திய விடயங்கள் இந்தியாவில் நிலவி வரும் சாதி, மதம், மொழி, பாலியல் ஏற்றத்தாழ்வுகளும் வேறுபாடுகளும் ஆகும். எனவே இந்தியாவில் மக்களாட்சி என்பது அம்மக்களின் விருப்பமாக இருக்கலாம்; ஆனால் அது யதார்த்தம் அல்ல என முடிவு செய்தனர். அக்கால கட்டத்தில் கேரள மாநிலம் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் நடுவணரசிலும் இந்திய தேசிய காங்கிரசின் பலம் 75 விழுக்காட்டிற்கு மேலிருந்தது. எனினும் மக்களாட்சியின் உண்மையான வெளிச்சம், விளைச்சல், வளர்ச்சி மக்களுக்குக் கிட்டவில்லை. காரணம் இந்திய மக்களின் ஒற்றுமைப் போக்கான வளர்ச்சிக்குத் தடையாக நின்றது இந்தச் சாதி & மதப் பாகுபாடுகளும் முதலாளித்துவ எண்ணங்களுமேயாகும். வெள்ளையர் ஆட்சியின் போது இருந்த பொதுவான ஒற்றுமை, புரட்சிகர வேகம், நாட்டுப்பற்று போன்றவைகள் சிறுகச் சிறுக மங்கியது. உலகின் மிகப்பெரிய மக்களாட்சிக் கோட்பாடு உடைய நாடு என்று புகழப்படும் இந்தியாவில் எண்ணற்ற அரசியல் கட்சிகள் வெவ்வேறு கொள்கைகளின் அடிப்படையில் தோன்றின. அனைவரும் பொதுவுடமை அல்லது சமுகச் சமநல கோட்பாடுகளையே வலியுறுத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதாக விளம்பின. நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கமே தலையாயம் எனவும் முழங்கின. எனினும் இன்று வரை வறுமை, பொய்மை, ஊழல், சாதி, மதம் போன்ற மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிர்வினையாற்றும் காரணிகளிலிருந்து விடுபடவில்லையென்பது மட்டுமல்ல அவைகளே இன்றைய அரசியல் கட்சிகளுக்கு உரமாக அமைந்து நாட்டில் மிகப்பெரும் ஊறுகளை விளைவித்துக் கொண்டிருக்கின்றன. தேச ஒற்றுமை, சமுக வளர்ச்சி, சமுக மறுமலர்ச்சி எனத் தொடங்கிய அகில இந்தியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் அனைத்திற்கும் இன்று துணையாககவும், தோழனாகவும் இருப்பது மதம், சாதி, கருப்புப்பணம் மற்றும் பகுதி சார்ந்த உணர்வுகள் என்பனவேயாகும். மேலும் இன்றைய அரசியல் கட்சிகளின் முழு முதல் கொள்கை வாக்கு வங்கி மட்டுமே!. அதை ஏற்படுத்த அல்லது தக்கவைத்துக் கொள்ள எந்தவிதத் தீமைகளையும் செய்யத் துணிந்து விட்டனர். சாதி, மதம், பதவி, பொருள் குறித்த மோதல்களின் ஊற்றுகளாகவும் நாற்றுகளாகவும் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் அமைந்து விட்டன. நாட்டின் நன்மை, ஒற்றுமை, வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நாடாளு மன்றத்தில், சட்டமன்றத்தில் பணியாற்ற வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் தற்போது அந்தந்தக் கட்சித் தலைவர்களின் விருப்பு, வெறுப்புகளை வெளிப்படுத்தும் ஊதுகுழல்களாக மாறிவிட்டனர். இந்தியாவில் பெரும்பான்மையானக் கட்சிகளில் உட்கட்சி மக்களாட்சி என்பது அந்தந்த கட்சித் தலைவர்களின் குடும்ப வாரிசுகள், உறவினர்கள் விருப்புகளுக்கு ஒப்ப அமைவதாகி விட்டது. இதில் பொதுவுடமைக் கட்சிகள் போன்ற சில விதிவிலக்குகள் உண்டெனினும் அவர்களின் வலிமை இந்திய அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திட இயலாது. மேலும் ஒரு சில கட்சிகள் வாரிசு அரசியலிலிருந்து விலகி நின்றாலும் மதப் பெரும்பான்மை, சாதிப் பெரும்பான்மையின் வாரிசுகளாக இயங்கி வருகின்றன. இன்னும் சில தனி மனிதர்களையே சுற்றி வரும் உதவாப் போக்கையே கைக்கொண்டுள்ளன. ஆண்டாண்டு காலமாக இலட்சியப் போக்குடனும் தேசிய உணர்வுடனும் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சிகள் கூட இன்று வணிக நிறுவனங்கள் போல காட்சியளிக்கின்றன. இளைய தலைமுறையினர் அந்தந்தக் கட்சிகளைத் தன் குடும்ப சொத்தாகவே எண்ணிச் செயல்படும் வகையில் மாற்றம் பெற்றுள்ளன. தேர்தல் கூட்டணிகள் கூட குடும்ப உறுப்பினர்களால் முடிவு செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக வட இந்தியாவில் மகாராட்டிரம் உட்பட கடந்த நாடாளுமன்ற, சட்ட மன்ற தேர்தல்களில் நடத்தப் பெற்றக் கூட்டணிப் பேரங்கள் குடும்ப உறுப்பினர்களால் மட்டுமே தீர்மானிக்கப் பட்டவைகளாகும். லோகியா, ஜெயப்பிரகாசு நாராயணன், அம்பேத்கர் போன்ற சமுகநல சித்தாந்த வாரிசுகளாக, பொதுவுடமை, சமுக நீதி, சிறுபான்மையினர் நலம் பேணும் கொள்கையாளர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற ராம்விலாஸ் பாசுவான், உதித்ராஜ், ராம்தாசு அத்வாலே, முப்தி முகம்மது சய்யது, லல்லுபிரசாத் போன்றவர்கள் கூட நேர் எதிர், முரண்பாடன கொள்கைகளையுடைய மதவாத கட்சிகளுடன் கூட்டணி வைத்து வெற்றி பெறமுடிகிறதென்றால் வாக்களிக்கும் மக்களை மந்தைகளாகத் தானே கருத முடியும். செல்லிடப் பேசியில் ஒரு தவறு அழைப்பு கொடுத்தால் கூட அரசியல் கட்சிகளில் அங்கத்தினராகி விடலாம். கொள்கை கோட்பாடுகள் நடைமுறைகள் பற்றிக் கவலை இல்லை என்ற அளவு அரசியல் உணர்வு மாற்றம் பெற்றுள்ளது. யாரையும் உள்ளிழுக்க, ஊக்கப்படுத்த பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் அணியமாகிவிட்டனர். தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை, ஐந்தாண்டு திட்டங்கள் அனைத்தும் பொய்மையும் போலியும் நிறைந்த ஒன்றாக வெறும் அறிவிப்புகளாகவே உள்ளது. தொடர்வண்டித்துறை நிதி நிலை அறிக்கையில் இதுகாறும் அறிவிப்புகளாக இருக்கும் திட்டங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. மக்களாட்சியின் மெய்யான மாண்புகளை எட்ட இயலாமல் இன்று வரை போராடிவரும் இந்தியாவின் இந்த இழிநிலைக்குக் காரணம் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல. மக்களாட்சிக் கோட்பாட்டை பின்பற்றாத மக்களை விட மக்களாட்சி முறைமையைக் கைக்கொண்டுள்ள இந்திய நாட்டுக் குடிமக்களின் கடமையும் பொறுப்பும் நாட்டுப் பற்று உணர்வும் மிக முக்கியமானது என்பதை உணரவேண்டும். அதுவும் பல தேசிய இனங்கள், மொழிகள், மதங்கள், சாதிகள், பண்பாடு, கலாச்சார வேறுபாடுகள் நிறைந்த பன்முக இந்தியச் சமுகம் மிகவும் பொறுப்புணர்வுடன் சமுகத் தளத்தில், அரசியல் தளத்தில் பங்காற்றுவதன் மூலமே இதற்கு விடை காண முடியும். உதட்டில் ஒன்றும் உள்ளத்தில் ஒன்றும், இல்லத்தில் ஒன்றும் என வெவ்வேறு கொள்கை கொண்ட தலைவர்கள், தனிமனிதர்கள் ஒடுக்கப் பட வேண்டும், ஒதுக்கப்பட வேண்டும். உலகிலேயே அதிக மனித வளத்தையும், பெரும் பான்மை இளையோரையும் கொண்ட இந்திய நாட்டில் மெய்யான மக்களாட்சி மலர வேண்டுமாயின் குழு மனப்பான்மை, சார்பு மனப்பான்மை, சாதிய மனப்பான்மை, மதச் சார்பு, மொழி வெறி, பொருள் மோகம் போன்றவைகள் தவிர்த்து நாட்டுப்பற்றும் மனிதநேயச் சிந்தனைகளும் தெளிவான அரசியல் தத்துவங்களும் இளையோர் நெஞ்சத்தில் விதைக்கப்பட வேண்டும். பதிக்கப்பட வேண்டும். அரசியலில் தலைமை ஏற்போர் நேர்மைமிக்கவராக இருத்தல் வேண்டும். இவைகள் தவிர்த்த எந்த வினையும் மங்கி வரும் மக்களாட்சிக் கோட்பாட்டை மறைந்த ஒன்றாகவே மாற்றும் இயல்பினதாகவே முடியும். ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல். (குறள்: 834)கனிவுடன் சு.குமணராசன்,முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJANEditor In Chiefபங்குனி – 2045(மார்ச் – 2015)