16 November 2014 7:26 pm
அண்மைக் காலங்களில் அதிகமாகவும் அடிக்கடியும் தொலைக்காட்சிகளில் செய்தி ஊடகங்களில் பேசப்படுவதும், விளம்பரப்படுத்தப் படுவதும் இந்தியத் தலைமை அமைச்சரின் தூய்மை இந்தியா" திட்டம் குறித்தச் செய்திகளே!. இந்தியாவின் தேசத்தந்தை என்றழைக்கப்படும் காந்தி பிறந்த நாளன்று அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின் பரப்புரைத் தூதர்களாக கோவா மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா உட்பட பாபாராம் தேவ், சசிதரூர், பிரியங்கா சோப்ரா, அனில் அம்பானி, கமல் ஹாசன், சச்சின் தெண்டுல்கர், சாசியா இல்மி, சல்மான்கான் என ஒன்பது பேர் அறிவிக்கப் பட்டனர். இந்திய மண்ணின் அசுத்தத்தைப் போக்குவதற்கான நல்முயற்சியென பலரும் பாராட்டுகின்றனர். செய்தித் தாள்களிலும், காட்சி ஊடகங்களிலும் தலைமையமைச்சர், சில மாநில முதமைச்சர்கள், பண முதலாளிகள், நடிகர்கள், சாமியார்கள் எனப் பலரும் துடைப்பங்களைக் கையிலேந்தி சிதறிக் கிடக்கும் சில சருகுகளை ஆங்காங்கே தூய்மைப்படுத்துவதாக நாட்டுக் குடிமக்களுக்குக் காண்பிக்கப்படுகிறது. ஆனால் மனிதக் கழிவுகளை மனிதனே கையிலெடுத்துத் துப்பரவு செய்வதும், கழிவு நீர்க் கால்வாய்களில் இறங்கி தூர்வார்வதும் இந்தியாவில் ஒரு சில குறிப்பிட்ட சாதி மக்களே தொடரும் அவல நிலை இன்றும் தொடர்கின்றது. அவை சட்டங்களினால் தடை செய்யப்படவில்லை அல்லது நவீனக் கருவிகளைப் பயன்படுத்தி அந்தத்தொழிலாளர்களின் பணியில் மாற்றம் ஏற்படவும் இல்லை. தூய்மை இந்தியா திட்டத்தில் இந்தப் பணிகளைச் செய்வதற்கும் யாராவது முன்வரலாமே! தற்போது தலைமையமைச்சர் தொடங்கியிருக்கும் இத்திட்டத்தினால் பலன் விளையும் என்ற நம்பிக்கையிருக்குமானால், குசராத் மாநிலத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியிலிருந்த நிலையில் அம்மாநிலத்தையாவது தூய்மைப் படுத்தி இந்தியாவுக்கு எடுத்துக் காட்டியிருக்கலாமே! மாறாக சிக்கிம் மாநிலம் அல்லவா இந்தியாவின் தூய்மையான மாநிலம் என வரையறுக்கப்பட்டுள்ளது. மேலைநாடுகள் என்று சொல்லப்படும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் 70 விழுக்காடு மின்னணுக் கழிவுகள் இந்தியாவிற்குக் கொண்டு வரப்படுகின்றன. உலகில் உலாவரும் கப்பல்களில் பெரும்பாலானவை குசராத் மாநிலம் அலங் என்ற பகுதியிலேயே உடைக்கப்பட்டு இந்தியாவின் மேற்குக் கடற்கரை மாசு படுத்தப் படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் குப்பைகள் மறுசுழற்சிக்ககாக இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கின்றன. பன்னாட்டு நிறுவனங்கள் பல நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. பெருமுதலாளி நிறுவனங்கள் காடுகளை அழித்துப் பழங்குடி மக்களை விரட்டியடித்துக் கனிம வளங்களை கொள்ளையடிக்கின்றன. இந்த ஒழுங்கீனங்கள் குறித்து உரிய நடவடிக்கைகள் இன்றி, தூய்மை இந்தியா எனப் பேசுவது நகைப்புக்குரியதாகும். அரசு சார்பில் செய்யப்படும் விளம்பரங்களுக்குச் செலவிடப்படும் நிதியில் பல நவீனக் கருவிகளை வாங்கி உரியமுறையில் நடைமுறைப்படுத்தியிருந்தால் நகர வீதிகளில் சில சற்றேனும் தூய்மை அடைந்திருக்கும். உலக அளவில் மிகவும் தூய்மையான நாடுகளின் வரிசையில் இருக்கும் சுவிட்சர்லாந்து, கனடா, சுவீடன், அயர்லாந்து, நார்வே, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளின் தலைமையமைச்சர்கள் இதுபோன்று சில நடைமுறைகளைக் கையாளவில்லையெனினும் அந்நாடுகள் தூய்மையாகவே தொடர்ந்து இயங்குகின்றன. எனவே எம் பார்வையில் போலியானச் இச்செயல்கள் இந்தியாவைத் தூய்மைப் படுத்தி விடாது என்பதே கருத்தாக உள்ளது.. இந்திய நாடு எந்தெந்த வகையில் தூய்மையற்றதாக, ஒழுங்கீனமானதாக விளங்குகின்றது என்பதைக் கண்டறியாமால் வெறும் மண்ணைத் தூய்மைப் படுத்துவதற்கு இவ்வளவு பெரிய பரப்புரைகள் தேவையில்லை. மண் தூய்மைப் படுத்தப் படவேண்டும் என்பதை விட மக்கள் மனம் தூய்மைப் பெறுவதே முதன்மையானதாகும். அகத்தூய்மை இன்றி புறத்தூய்மை செய்யப் புறப்படுவது வெற்றியை ஈட்டாது. அசுத்தங்கள் எவையவை எங்கேயிருக்கின்றது என்று ஆய்வு செய்யாமால் தூய்மை செய்வோம் என்று பேசுவதென்பது ஒலியின்றி உரக்கக் கத்துவது, நீரற்றக் குளத்தில் நீந்த முயற்சிப்பது, அரங்கின்றி ஆட நினைப்பது போன்ற செயல்களுக்கு ஒப்பாகும். தலைமையமைச்சர் கண்டு பிடித்துள்ள அசுத்தங்களை விட இந்தியாவில் மிகவும் கீழ்மையானதும், கொடுமையானதுமாகக் காட்சியளிப்பவை கையூட்டு, கருப்புப்பணம், சாதி, மதவெறி, மூடநம்பிக்கைகள் என்ற ஐம்பெரும் அசுத்தங்களாகும். இவைகளே இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும், வாய்ப்பிற்கும், மேன்மைக்கும் மலைபோல் உயர்ந்து நிற்கும் பெரும் தடைக் கற்களாகும். இவை நம் நாட்டில் பரவியுள்ள புற்று நோயாகும். எனவே இவற்றிற்கு புணுகு போடுவது போல் பேசுவதைத் தவிர்த்து அறுத்தெறிய முன்வருவதே மெய்யான நாட்டுப் பற்றாகும்; தூய்மைச் செயலாகும். ஆனால் இந்த ஐம்பெரும் அசுத்தங்கள் குறித்து இந்தியாவின் எந்த அரசியல் கட்சியும் தெளிவாகத் தன் நிலையை இதுவரை தெரிவித்ததுண்டா? அசுத்தங்களான இவைகளைப் பாதுகாக்கும் அரசியல்வாதிகளுக்கே இன்று பாதுகாப்பும் தேவைப்படுகின்றது. காந்தி, நேரு, சாஸ்திரி, காமராசர், பெரியார், அண்ணா ஆகியோர் பூனைப்படையுடன் வலம் வந்தவர்கள் அல்லர். மக்களோடு மக்களாக இறுதிவரை தொண்டாற்றியவர்கள். மக்களாட்சித் தளத்தில் காலமும் காட்சியும் மாட்சியும் மாற்றம் பெற்றுள்ளன. தனக்கு மட்டுமே முன்னுரிமை தரும் மனிதர்கள் நிறைந்த நாடாக மாற்றம் பெற்றுள்ள இந்தியாவில் வறுமையும் பொய்யும் புனைவும் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. இவைகள் களையப்படாமல் தூய்மை இந்தியா எனப் பேசுவது உண்மைக்குப் புறம்பானதாகும். உலகின் பிற நாடுகள் தான் செய்ய நினைக்கும் செயல்களை நினைத்தவுடன் செய்து முடிக்கின்றன. ஆனால் இந்தியாவில் ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறோம். பேச்சு என்பது உள்ளதை மறைக்கும் முழு வல்லமை படைத்த ஒரு கருவி. அறுபத்தேழு ஆண்டுகள் கடந்தபின்பும் இன்னும் எத்தனை காலம் இந்தியா ஏமாற்றப்படும்? ஒரு நாடு தன் மன உறுதியோடு செயல்படுவதற்கான ஆற்றலை எப்போது பெறுகிறதோ அப்போதுதான் அதன் இலக்கை எட்ட முடியும். எனவே மேற்சொன்ன ஐம்பெரும் நோய்களற்ற சிந்தனையுடைய நம் இளைய தலைமுறையே அந்த ஆற்றலைப் பெற முடியும். இந்தியாவைத் தூய்மைப் படுத்த இயலும் என்பது எம் கணிப்பாகும். சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல். (934) கனிவுடன் சு.குமணராசன், முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJANEditor in Chiefகார்த்திகை – 2045(நவம்பர் – 2014)"