மனித நேயம் மலரட்டும் - தமிழ் இலெமுரியா

15 December 2015 3:26 pm

இந்த ஆண்டு (2015) தமிழ் நாட்டில் பெய்த வடகிழக்குப் பருவமழை யாரும் எதிர்பாரா அளவு மிகுதியான ஒன்றாகும். வடகிழக்குப் பருவக் காற்றுடன் வங்காள விரிகுடாவில் அவ்வப்போது ஏற்பட்டக் காற்றழுத்தத் தாழ்வு நிலை கார்த்திகைத் திங்களில் பெய்த இப்பெருமழைக்குக் கரணியமானது. கடந்த நூறு ஆண்டுகளுக்குப் பின் பொழிந்திருக்கும் ஒரு பெருமழையாகும். ஒவ்வொரு ஆண்டும் வான்மழை வேண்டி வாடிய முகத்துடன் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த தமிழ் நாட்டு மக்கள் இந்த ஆண்டு பெய்த மழையைக் கண்டு அஞ்சி நடுங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். குறிப்பாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மக்கள் வாழ்க்கையும், வாழ்விடங்களும் தாங்கொணா துயரத்துக்குள் ஆட்பட்டன. இருக்க இடமின்றி ஆற்றோரங்களில் குடிசைகள் அமைத்து தன் அன்றாட வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த ஏழை மக்களின் வாழ்விடங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப் பட்டுக் கடலில் கலந்தன.  சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் சிறுகச் சிறுகச் சேமித்து வீட்டு மனைகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள் என நகர்ந்த நடுத்தர மக்களின் வாழ்விடங்களும் உடைமைகளும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப் பட்டு பல நாட்கள் உறங்க இடமின்றியும் உடுக்க உடையின்றியும் பசியார உணவின்றியும் பரிதவித்த நிலை நம் வாழ்நாளில் கண்டிராத ஒரு பெரும் சோக நிகழ்வாகும்.  இயற்கையை மனிதன் வெல்ல முடியாது என்பது உண்மையே எனினும் வாழ்க்கைப் பயணத்தில் இது போன்று எதிர் கொள்ள வேண்டிய இயற்கைச் சீற்றங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள உரிய முறைமைகளை வகுத்துச் செயல் பட வேண்டுமென்பதை இந்தப் பேரிடர் நமக்கு உணர்த்தியுள்ளது.  இந்தியாவின் பிற நகரங்களான மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில்  இது போன்று மழை பெய்தாலும் அந்நகரங்களின் ஊடுருவிச்செல்லும் ஆறுகள் மிகை நீரின் வடிகாலாகச் செயல்பட்டு வெள்ளச் சேதங்களை மட்டுப் படுத்துபவைகளாகும். ஆனால் சென்னை நகரின் அமைப்புச் சற்று வேறுபாடான ஒன்றாகும். சென்னை நகரின் இடையோடும் ஆறுகள், மிகுதியாகப் பெருக்கெடுக்கும் மழை நீர் மற்றும் சென்னைக்கு அருகே இருக்கும் குளங்கள், ஏரிகள் மூலம் நிரம்பிவழியும் மிகை நீரின் கொள்ளிடமாகவும் செயல்படுவதாலும், வடிகால் முகத்துவாரங்கள் கழிவுகளால் அடைக்கப் பட்டிருப்பதாலும் சென்னை நகர் நீரில் மிதக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. எனவே பிற மாநில மக்களை விட தமிழ் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட உரிய நீரியல் மேலாண்மை, நீரிடர் மேலாண்மை, பேரிடர் மேலாண்மை எனத் திட்டங்கள் வகுக்கப் பட்டுச் செயல் படுத்தப் பட்டிருக்க வேண்டும். ஆனால் வருமுன் காக்கும் தொலை நோக்குப் பார்வை, மேலாண்மை சிந்தனைகள் இதுகாறும் ஆட்சி செய்தவர்கள், ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என யாருடைய எண்ணத்திலும் தோன்றிராத ஒன்றாகும். எனவே இப்பேரிடருக்கு நாமும் ஒரு காரணம் என்பதை மறந்திட இயலாது. காடுகள் மீது மனிதன் செய்த வன்புணர்ச்சி, நீராதாரங்கள் மீது நாம் செய்த வன்முறைகள், சமுகப் பொது ஒழுக்கம், சுற்றுச் சூழல் தூய்மை என பலவும்  பங்காற்றுகின்றன. குறைகளை நினைவு கூறும் தருணம் இதுவல்ல எனினும், இச்சூழ்நிலையில் இது இந்தியாவின் ஒரு தேசியப் பேரிடராக அறிவிக்கப் பட்டு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப் பட்டிருக்க வேண்டும். ஆனால் வட இந்திய ஆட்சியாளர்கள் இது காறும் உணரவில்லை போலும்.  இயற்கைச் சீற்றத்தின்  இடர்பாடுகள் என்பது ஏழை, பணக்காரர், உயர்சாதி, கீழ்சாதி, இந்து, இசுலாம், கிறித்தவர், பகுத்தறிவாளர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என எவ்விதப் பாகுபாடின்றி அனைவரையும் பாதித்த ஒன்றாகும். குழந்தைகள் பசியால் வாடினர், முதியோர்கள் ஊமைகளாக அழுதனர், உறவினர்கள் தத்தம் உறவுகளைத் தேடி அலைந்தனர். தொடக்கத்தில் அரசியல் கட்சியினர் ஆளும் கட்சினர், மாற்றுக் கட்சியினர், உதிரிக் கட்சியினர் என ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர், அரசின் தவறுகள் அதிகாரிகள் தவறுகள் பெரிதாகப் பேசப்பட்டன, அரசியல் ஒவ்வாமையும் காழ்ப்புணர்வும் அவ்வப்போது பெரிதாக வெளிப்பட்டன. ஊடகங்கள் தத்தம் உரிமையாளர்களின் மகுடிக்குத் தக்கவாறு உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் கூடத் தந்தன. ஆனால் தொடர்ந்து பெய்த மழையும் அதனால் விளைந்த இன்னல்களும் இடர்பட்ட தமிழ் நாட்டு மக்களிடம் உறங்கிக் கிடந்த மனித நேய உணர்வுகளை வெளிக் காட்டின. கட்சி அரசியலை மறந்தனர், கடவுளர்களை மறந்தனர், மதம், சாதி ஏழை பணக்காரன் என்ற உணர்வுகள் மங்கின. களத்தில் குதித்தனர். இடரில் சிக்கித் தவித்த மக்களுக்கு மீட்போர் அனைவரும் இறைவனாய் மாறினர்.  இந்துக்கள், இசுலாமியர், கிறித்தவர், சைனர், பகுத்தறிவாளர் என அனைவரும் ஒன்றாகச் செயல்படக் கண்டோம். வாழ்வாதாரம் தேடி கடலுக்குள் செல்ல வழியில்லாமல் பட்டினி கிடந்த மீனவ மக்களின் படகுகள் வெனிசு நகரத்தின் நாவாய்கள் போல தெருவெங்கும் சாலையெங்கும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டன. மீனவர்களைப் பார்த்து முகம் சுழித்த மேட்டுக் குடி முதியோர்களும், முதலாளிகளும் அதே மீனவர்களைக் கட்டித் தழுவி கரை சேர்க்கப் பட்டனர். தேசியப் பேரிடர் மீட்பு வீரர்கள், கப்பல் படை , கடலோரப்படை என அனைவரும் ஒன்று சேர்ந்தனர். இழந்த உடைமைகளைப் பெற முடியவில்லையெனினும் உலர்ந்த அந்த உள்ளங்களில் ஒரு நம்பிக்கை ஒளிவீசக் கண்டோம். ஒன்று பட்ட இந்த உணர்வும், மனிதநேயப் பற்றும் பாசமும், சாதி, மதம், கட்சி அரசியம் என அனைத்தையும் கடந்து கை கோத்த மாண்பும் என்றும் நிலைத்திட வேண்டும். தமிழர்களின் எதிர்கால இடர்களுக்கும் எதிரிகள் பலர் தரும் இடையூறுகளுக்கும் மனித நேயமே மாமருந்து என உணர்ந்திட வேண்டும். நமக்குள் இனி எவ்விதப் பாகுபாடுகளும் தலை தூக்க வேண்டாம். மலரட்டும் மனித நேயம்! மீண்டும் மகிழ்ச்சிப் பொங்கட்டும் எம் தாய்த் தமிழ் நாட்டில். வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனையது உயர்வு   (திருக்குறள் : 34) – திருவள்ளுவர்கனிவுடன்  சு.குமணராசன்முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJANEditor In Chiefமார்கழி – 2046(டிசம்பர் – 2015)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி