18 May 2014 12:06 am
வைகாசித் திங்கள் இதழ் தங்கள் கைகளில் தவழும் இந்த வேளையில் இந்திய நாட்டின் 16 வது நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியிருக்கும். கடந்த ஒரு மாத காலமாக தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகளும், தேசியக் கட்சிகள் என்று சொல்லப்படுகின்ற வடமாநில அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு ஒருவொருக்கொருவர் கட்சி ரீதியாகவும், தனிமனித நிலையிலும் வசைமாரிப் பொழிந்து கொண்டனர். தவறான வழியில் குவிக்கப்பட்டச் சொத்துகளைப் பட்டியலிட்டுக் கொண்டனர். தங்களுக்குள் ஊழல்களையும் பறைசாற்றிக் கொண்டனர். இந்திய நாட்டின் சமூக, பொருளாதார நிலைகளைக் கவனத்தில் கொண்டு மறுமலர்ச்சியும் தொலைநோக்குப் பார்வையும் உள்ளடக்கிய சிந்தனைகளுடன் வெளிப்படையாக தத்தம் திட்டக் கொள்கைகளை அறிவிப்பதற்குப் பதிலாக, சற்றொப்ப அனைத்து அரசியல் கட்சிகளும் சுற்றிச் சுற்றி வரும் செக்கு மாடுகள் போன்று, ஏற்கனவே கடந்த காலங்களில் அவரவர் தேர்தல் அறிக்கைகளில் சொல்லப்பட்ட விடயங்களையே மீண்டும் அழகிய வடிவில் அச்சிட்டு வெளியிட்டனர். எந்தச் செயலுக்கும் கால அளவைகள் ஏதேனும் மறந்தும்கூட சுட்டிக்காட்டப் படவில்லை. பரப்புரைக் கூட்டங்களில் பள்ளிச் சிறுவர்கள் ஒருவரையொருவர் பகடி செய்வது போன்றே அரசியல் கட்சித் தலைமைகளுக்குள்ளும் தனிமனித விமர்சனங்களும், ஏகடியங்களும் வெகுவாக இடம் பெற்றிருந்தன. அய்ந்தாண்டுகளுக்கு ஒரு முறை அரசியல், சினிமாத் துறைகளிலிருந்து வரும் அலங்காரப் பதுமைகளைக் காணவும் அவர்களின் நகைச்சுவை ததும்பும் பேச்சுகளைக் கேட்கவும், மந்தை மந்தையாக வரும் விலங்கினங்கள் போல், மக்களும் திரளக் கண்டோம். இந்திய நாட்டிலும் தமிழ்நாட்டிலும் பல்லாண்டு காலமாக ஆட்சிபுரிந்தோரும், ஆள்வோரும் பரப்புரையில் பவனி வந்தனர். சிலர் நாட்டியல் பேசினர்; சிலர் நல்லிணக்கம் பேசினர்; ஒருமைப் பாடு பேசினர் சிலர்; வறுமை ஒழிப்பு பேசினர் இன்னும் சிலர். அரசியலில் நடிகர், நடிகையர் பலரை ஒருசேரப் பார்த்துவிட்டோம் எனப் பூரித்தனர் சிலர்; பூத்துக் குலுங்கினர் பலர்; ஒருதாய் மக்கள் ஒன்றுபட்டு நிற்போம் என்ற ஒலிமுழக்கமும் ஆங்காங்கே அருவியாய்க் கொட்டியது. எந்தவித சூதும் வாதும் வஞ்சமுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழை, எளிய, உழைப்பாளித் தமிழ் மக்களுக்கு எல்லாமே இனித்தது. தமிழர் நலன் கிணற்றில் போடப்பட்டக் கல்; தமிழர் வாழ்வு பலருக்குக் கிள்ளுக் கீரையென்ற நிலையிலும் திரண்டு வந்து வாக்களித்து தன் சனநாயகக் கடமைகளை நிறைவேற்றினர் நம் தமிழ்நாட்டு மக்கள். அத்தனைக்கும் தற்போது விடை கிட்டியிருக்கும் என நம்புகின்றோம். கடந்த காலங்களில் சில அரசியல் கட்சிகள் தமிழினத்தை வெட்டிச் சாய்த்த வாளாகவும், கொட்டித்தீர்த்தத் தேளாகவும் செயல்பட்டனர் என்பதை சுட்டிக் காட்டி அவர்களின் தோல்வியை உறுதி செய்க; வெற்றிக்கனியை எட்டாக் கனியாக்குக என்றெல்லாம் சென்ற இதழில் உணர்த்தியிருந்தோம். எனினும் தற்போது கிடைத்திருக்கும் விடை எதுவாயினும், விளைவு எதுவாயினும் சரியே என ஒத்துக் கொள்வதுதான் சனநாயக் கோட்பாடு. எந்த நிலையிலும், நமது உடன்பாடு என்பது உண்மைகளுடன் மட்டுமே. ஒரு காலத்தில் மக்களுக்குத் தொண்டு செய்வதற்காகப் பயன் பட்ட அரசியல் களம் இன்று ஒரு சிலரைத் தவிர பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு தொழில் செய்வதற்கான ஓர் தளமாக மாற்றம் பெற்றுள்ளது என்பதே நடைமுறை உண்மையாகும். தற்கால அரசியல் நடைமுறைகள் எதுவாகினும், ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்குள் புகவிருக்கும் வேட்பாளர்கள் யாராகினும், எக்கட்சியைச் சார்ந்தோராயினும் நெஞ்சார வரவேற்கவும், வாழ்த்தவும் கடமைப்பட்டுள்ளோம். இதுகாறும் அவர்கள் தத்தம் கட்சிகளின் வேட்பாளர்கள் என்கிற நிலை தற்போது மாற்றம் பெற்று அவர்கள் அந்தந்த தொகுதி மக்களின் காப்பாளர்கள் என்ற நிலைக்குத் தங்களை உயர்த்தியுள்ளனர். இனி அவர்கள் கட்சி அரசியலைத் தாண்டி ஆட்சி அரசியலுக்குத் தங்களைத் தகுதிப் படுத்திக் கொள்வதே அவர்களுக்கும், நாட்டுக்கும் நலம் பயக்கும். தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப் பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தோராயினும், தமிழ் மக்களின் மனதில் பெருவேதனையைத் தந்துள்ள ஈழத்தமிழர் சிக்கல், தமிழ் மீனவர் சிக்கல், காவிரிநீர்ப் பங்கீட்டுச் சிக்கல், முல்லைப் பெரியார் அணை நீர்மட்டச் சிக்கல், தமிழ்நாட்டின் நீராதாரம், போதிய அளவு மின்சாரம் என்பவையே தீர்க்கப்பட வேண்டிய முதன்மைத் தேவைகளாகும். மேற்சொல்லப்பட்ட அனைத்திற்கும் நடுவணரசு மற்றும் அண்டை மாநிலங்களின் நேர்மையற்றச் செயல்பாடுகளே காரணம் என்பது வெள்ளிடை மலை. எனவே இந்த விடயங்களில் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒருமித்துக் குரல் எழுப்பி, நம் வலிமையை உணர்த்தினாலொழிய வெற்றி இலக்கையோ, தீர்வுகளையோ எட்ட இயலாது என்பதை உணர்த்தக் கடமைப் பட்டுள்ளோம். அண்டை மாநிலங்களில் தமக்குள் கட்சி வேறுபாடுகளும், சின்னஞ்சிறு கருத்து வேறுபாடுகளும் உடையவர்களாய் இருப்பினும், தமது இனம் ஒதுக்கப்படுகிறதென்றால்; தமது உணர்வு பழிக்கப்படுகிறெதென்றால்; தமது உரிமை மறுக்கப் படுகிறதென்றால்; தமது மொழி அழிக்கப்படுகிறதென்றால்; தமது வளம் சுரண்டப்படுகிறதென்றால்; தமது நாட்டு மக்களுக்கு ஆபத்து நேர்கிறதென்றால் ஒன்று பட்டு நிற்கின்றனர்; உரத்துக் குரல் கொடுக்கின்றனர்; போராட்டங்களை மேற்கொள்ளுகின்றனர். ஆனால் தமிழர்களின் நிலைப்பாடு என்ன? சற்று சிந்திக்க வேண்டுகிறோம். ஆந்திர மாநில மறு சீரமைப்பில் தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பெற்ற பின்னர், தென் இந்தியாவில் அதிகமான அளவு நாடாளுமன்ற உறுப்பினர்களை தில்லிக்கு அனுப்பும் மாநிலம் தமிழ்நாடு என்பது தற்போதைய நிலையாகும். எனவே நடுவணரசில் எந்தக் கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும், எவ்வளவு பெரும் பான்மையுடன் ஆட்சியமைத்தாலும் தென் இந்தியாவில் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய தமிழ்நாட்டைத் தவிர்த்து, அம்மக்களின் உணர்வுகளுக்கு மாறாக எந்தக் கொள்கை முடிவுகளையோ, சட்டவரைவுகளையோ இயற்ற முடியாது என்பதை தமிழ் நாட்டு உறுப்பினர்கள் நன்கு உணரவேண்டும். இதுவரையில் எப்படியிருந்தாலும், இனி இருக்கின்ற காலம் வரை ஏற்றதைச் செய்யலாமே – இனியதைத் தொடரலாமே! பதவி அல்லது பொறுப்பு என்பது பொது வாழ்வில் புனிதமுறப் போற்றப்பட வேண்டிய ஒரு பொன் மலராகும். இறுதியாக நாம் விடுக்கும் ஓர் வேண்டுகோள், ஆண்டுக்கு ஒரு முறையேனும் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்களின் செயற்பாடுகளை தமிழ் நாட்டுக்கு நலம் பயக்கும் வகையில் மறு ஆய்வு செய்து உரிய அரசியல் வியூகங்களை வகுத்துச் செயல் படுவதுடன், நட்பு உணர்வோடு கலந்துரையாடி விருந்துண்டு மகிழ வேண்டும். இதுவே தமிழ்நாட்டை வளர்ச்சியுறச் செய்வதற்கான மருந்தாகும், மக்களாட்சி மேன்மையுடன் தங்களைத் தேர்வு செய்த தமிழ் நாட்டு மக்களுக்கு நீங்கள் தரும் நல் விருந்தாகும். பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு (குறள்: 735) கனிவுடன், சு.குமணராசன் முதன்மை ஆசிரியர்S.KUMANA RAJANEditor in Chiefவைகாசி – 2045(மே – 2014)