மோட்டை போனால் கோட்டை வராது”” - தமிழ் இலெமுரியா

14 July 2014 6:11 am

இந்திய நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் புதிதாக அமைந்துள்ள பா.ச.க. தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி அரசு 2014-15 ஆண்டிற்கான இந்திய நிதி நிலை அறிக்கை மற்றும் தொடர்வண்டித் துறைக்கான நிதிநிலை அறிக்கை ஆகிய இரண்டையும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.  கடந்த பல்லாண்டு காலமாக இந்திய நாட்டை ஆண்ட காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்தியப் பொருளாதாரத்தை பாழ்படுத்தி வீழ்ச்சியடையச் செய்து விட்டது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டு பா.ச.க அணி பெரும்பான்மை நாடாளுமன்ற இருக்கைகளைப் பெற்று ஆட்சியமைக்கத் தகுதி பெற்றது. ஆள்வோர் எந்தக் கட்சியைத் சார்ந்தோராயினும் ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் பொழுது பொருளாதார வளர்ச்சி குறித்துப் பெருமைபட உரையாற்றுவதும், எட்டா வளர்ச்சி இலக்குகளை நிருணயம் செய்வதும் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஒன்றாகும். அந்த வகையில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதி நிலை அறிக்கைகளும் முந்தைய அரசின் பிம்பங்களேயொழிய பெரிதாக எந்த ஒரு மாறுபாட்டையும் உணர முடியவில்லை.  மேலோட்டமாகப் பார்க்கையில் இந்த நிதிநிலை அறிக்கை, பெரும்பாலான இந்திய ஊடகங்களால் பாராட்டப்படுவது போல், கவர்ச்சிகரமாகத் தெரிந்தாலும் எந்த ஒரு திட்டத்திற்கும் கால இலக்கு மற்றும் மொத்த மதிப்பீடு போன்ற அடிப்படைக் காரணிகள் இன்றி சில நூறு கோடிகளை ஒதுக்கி அறிவிப்புகள் வெளியிடுவதின் மூலம் வளர்ச்சிப்பாதையில் பயணிப்பதாகக் கருத இயலாது. நம்முடைய பொருளாதார வீழ்ச்சிக்குப் பெரிதும் கரணியமாக விளங்குகின்ற பதுக்கல், வரி ஏய்ப்பு, கறுப்புப்பணம்,  திட்டச் செலவீடுகளில் நடைபெறுகின்ற ஊழல், கசிவுகள், ஒவ்வொரு ஆண்டும் ஏறி வரும் பணவீக்கம், நிதிப்பற்றாக்குறை, ஏற்றுமதி இறக்குமதி இடைவெளி ஆகியவற்றை சரிசெய்யாமால் திட்டங்கள் வகுப்பதோ, அறிவிப்புகளை வெளியிடுவதோ உரிய பலனைத் தராது என்பதே வரலாற்று உண்மையாகும். இடைத்தரகர்களும், பெருமுதலாளிகளுமே பெரும்பாலான நிதியை உறிஞ்சி வருகின்றனர்.  மோட்டை போனால் கோட்டை வராது" என்பது தமிழ்நாட்டுப் பழமொழி ஆகும். வயல் வெளிகளில் எலி வளைகளால் ஏற்படும் மோட்டைகளைச் சரிசெய்யாமல் எவ்வளவு நீரைப்பாய்ச்சி உரமிட்டு விவசாயம் செய்தாலும் உரிய விளைச்சலைக் காணமுடியாது என்பது நியதியாகும். அதே நிலையில் தான் நம் இந்திய நாடு பல்லாண்டு காலமாகப் பயணித்து வருகின்றது.  இதன் விளைவாகவே, பொருளாதார அளவீடுகளில் உலக நாடுகளுடன் நம் நாட்டை ஒப்பிட்டுப் பார்க்கையில் தரவரிசைப் பட்டியலில் 137 வது இடத்திலும், வணிகம் செய்ய உகந்த நாடுகளின் தர  வரிசையில் 134 வது இடத்திலும், கல்வி வளர்ச்சிக்காக செலவிடும் நாடுகளின் நாடுகளின் வரிசையில் 140 ஆம் இடத்திலும், மனித மேம்பாட்டுக் குறியீட்டில் 136 வது இடத்திலும் இருப்பது மட்டுமின்றி இந்திய மக்கள் தொகையில் சற்றொப்ப 40 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் (அதாவது அன்றாட வருவாய் ரூ. 20க்கும் குறைவானவர்களாக) வாழ்ந்து வருகின்றனர். இச்சூழலில் இந்திய மக்கள் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகின்றார்கள் என்று பெருமை பேசும் கூற்று மாபெரும் பொய்யாகும். ஆனால் பெருமுதலாளிகளும், புதிய பணக்காரர்களும் வளர்ந்து வருகின்றனர் என்பது மெய்யாகும். இந்தியாவின் பொருளாதாரப் பகிர்வு மிகவும் சமனற்றதாக விளங்குகின்றது. குறிப்பாக, தலித்துக்கள், ஒடுக்கப்பட்டோருக்கும் மற்றவர்களுக்கும், நகர வாசிகளுக்கும், கிராம வாசிகளுக்குமான பொருளாதார நிலை வேறுபாடுகள் மிகவும் பெரிது. இவர்களுக்குள்ளான இடைவெளிகள் அதிகம். ஏன் இந்த நிலைமை?  தற்போது அறிவிக்கப் பட்டுள்ள உயர் தொழில்நுட்பக் கல்வியகங்கள் (IIT), உயர் மேலாண்மைக் கல்வியகங்கள் (IIM), அகில இந்திய மருத்துவமனைகள் (AIIMS) இந்தியாவிற்குத் தேவையானவையே என்பதை மறுப்பதற்கில்லை. இதில் பெரும்பாலும் மேல்தட்டு உயர்சாதி மக்களே பயனாளிகள் என்பது தான் தற்போதையப் புள்ளி விவரமாகும். ஆனால் அதைவிட முதன்மையானது தொடக்க நிலை, இடைநிலைக் கல்வியாகும். அடித்தளம் சீர்பட அமையப் பெறாமல் கோபுரம் கட்டுவது இடைவெளியை அதிகப் படுத்துமே ஒழிய ஒரு சமச்சீரான வளர்ச்சிப் பாதையை எட்ட உதவாது. மொத்த தேசிய உற்பத்தி வருமானத்தில் (GDP) குறைந்த அளவு 7%  நாட்டின் கல்விக்காகவும், மற்றுமொரு 7% அடிப்படை  மற்றும் உயர்நிலை மருத்துவ வசதிகளுக்காகவும் ஒதுக்கப்பட வேண்டும். இவைகள் தற்போது 1 விழுக்காடு, 1.5 விழுக்காடு என்ற அளவிலேயே உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்பட்டும், அறிவிக்கப்படாமலும் அவ்வப்போது உயர்த்தப் படுகின்ற தொடர்வண்டிப் போக்குவரத்து கட்டண உயர்வுகளும், எரிபொருள் விலையேற்றங்களும் நாட்டின் பணவீக்கத்தை அதிகப்படுத்தி ஏழை மக்களை பெரிதும் எளியோராக்குகின்ற நிலையே தொடர்கின்றது.  ஒரு நாட்டின் பொருளாதார ஓட்டத்தில், உடம்பின் குருதி நாளங்கள் போன்று சுழன்று தூய்மைப்படுத்தி வலிமை சேர்க்க வேண்டிய நிதியம் கசிவதும், கருப்பாக மாறுவதும், கட்டிகளாக உறைவதும் நாட்டு நலத்திற்கு கேடு விளைவிப்பவைகளாகும் என்பதை உணர்ந்து கயமை, மடமை நீக்கி உணர்வுப்பூர்வமாக மக்களின் மெய்யான நலனுக்குச் செலவிட்டாலொழிய இந்தியாவின் எந்த நிதிநிலை அறிக்கையும் குடிமக்களுக்கு நீதியையும், மீதியையும் தரவல்லதாக அமையாது என்பதே எம் கருத்தாகும்.  சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல். (குறள்: 934) கனிவுடன்,  சு.குமணராசன், முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJAN, Editor in Chief.ஆடி – 2045(சூலை – 2014)"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி