14 January 2016 8:32 pm
ஒவ்வொரு புத்தாண்டின் விடியலிலும் நம் வாழ்வு நலமாகட்டும் வளமாகட்டும் என்ற எதிர் பார்ப்புகளோடு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதென்பது ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவரும் ஒரு தொடர் நிகழ்வாகும். ஐம்பூதங்களின் ஆற்றலும், ஐம்புலன்களின் அவாவும் காலப் பயணத்தின் நீட்சியை விரைவு படுத்துகின்றன. நாட்களாக, திங்கள்களாக, ஆண்டுகளாக உருண்டோடுகின்றன. ஒவ்வொரு புத்தாண்டின் விடியலில் புதுமையை எதிர்பார்க்கும் மக்கள் கூட்டம் ஆண்டு முடிவில் கடந்து போன காலம் தத்தம் வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களையும் மாற்றங்களையும் எண்ணிப்பார்க்கின்றனர். இதில் பலருக்கு, குறிப்பாக இந்திய மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. அந்த வகையில் கடந்து போன ஆண்டில் இவ்வுலகம் சந்தித்த நிகழ்வுகளை அசைபோட்டுப் பார்க்கையில் இனிமையை விட பல இன்னல்களையே உலக மக்கள் பெரிதும் எதிர்கொண்டுள்ளனர் என்றே புலப்படுகிறது. 2015 ஆம் ஆண்டில் உலகம் போற்றிய உவப்பானச் செய்திகளில் ஒன்று செவ்வாய்க் கோளுக்கு இந்திய விண்கலம் தடையின்றி சென்று கொண்டிருப்பது; மற்றொன்று செவ்வாய்க் கோளில் நீர் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் அறிவியல் ஆற்றலின் வெளிப்பாடு. ஐம்பத்தி நான்கு ஆண்டுகள் எதிரும் புதிருமாக விளங்கிய அமெரிக்கா- & கியூபா நாடுகள் பகைமை மறந்து நட்புக் கரம் கோத்திருப்பது. இந்த செய்திகள் இனிப்பானவையெனினும் இருள் தீர நோக்கினால் எண்ணற்றத் துயரங்களை கழிந்து போன ஆண்டில் இவ்வுலகம் உள்வாங்கியுள்ளது. அண்மையில் பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரிசு நகரில் நிகழ்ந்த வன்முறைச் செயல், செப்தம்பர் மாதம் மெக்கா நெரிசலில் 2200 பேர் உயிரிழப்பு, செருமானிய நாட்டில் நிகழ்ந்த வானூர்தி விபத்து, எகிப்து நாட்டில் சுட்டு வீழ்த்தப்பட்ட உருசிய விமானம், சிரியா & துருக்கி போன்ற நாடுகளில் தொடரும் மதவெறித் தாக்குதல்கள் என மனித நேயம் மறந்து உலகச் சமுகத்தின் மீது ஏவிவிடப்பட்டிருக்கும் இன்னல்கள் ஏராளம். மேற்கண்ட செய்திகள் உலகிற்கு உணர்த்தும் உண்மை மதவெறியும் இனவெறியும் மக்கள் மனத்தில் ஆதிக்கம் செலுத்தும் தன்மையேயாகும். இவை தவிர்த்து இயற்கைப் பேரிடரால் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்த ஓலம்; வான்மழை வேண்டி ஏங்கித்தவித்த தமிழ் நாட்டின் வரலாற்றில் சற்று மாறுபாடாக இவ்வாண்டு பெய்த மழையால் மக்கள் வெள்ளப்பெருக்கில் வீடிழந்து உடைமைகள் இழந்து பரிதவித்த இன்னல்கள், உயிரிழப்புகள் சொல்லில் அடங்காதவை. இந்தச் செய்தியிலும் புதைந்திருக்கும் உண்மை இயற்கையை எதிர்த்து தம் வாழ்க்கையின் வரம்புகள் மீறும் மனித குலத்திற்கு இயற்கை விடுத்திருக்கும் ஓர் எச்சரிக்கை என்பதாகும். மேலும் காலவெள்ளத்தில் கரைந்து போன மறைந்து போன பட்டியல்களின் வரிசையில் தத்தம் வாழ்க்கையைச் சமுகத்துடன் தொடர்புப் படுத்தி பணியாற்றிய பலரில் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம், ஆர்.கே. இலட்சுமணன், மீரா கோசாம்பி, வினோத் மேத்தா, கோவிந்த பன்சாரே, கல்புர்கி, சசி பெருமாள், எம்.எசு.விசுவநாதன், செயகாந்தன், நாகூர் அனிபா, மனோரமா போன்றோர் சிலராவர். இவர்களையும் கடந்த ஆண்டில் இழந்திருக்கிறோம். இழப்புகள் அனைத்தும் நமக்குச் சில பாடங்களைக் கற்றுத் தந்துள்ளன. வரலாற்றின் துணையின்றி நம் வழித்தடத்தின் இலக்குகளை அடைய இயலாது. எனவே அல்லவை அகற்றி அறிவுப் பார்வை முகிழ்க்கும் வண்ணம் புத்தாண்டு அமையவேண்டும். இவ்வாண்டில் தமிழ்நாடு மாநிலம் மக்களாட்சித் தன்மையின் ஓர் அடையாளமான பொதுத்தேர்தலையும் சந்திக்கவிருக்கிறது. வெற்று உணர்ச்சிகளும் வெறுமைக் கிளர்ச்சிகளும் சிறுமைச் செயல்களும் சீரற்ற எண்ணங்களும் வேரறுக்கப்பட்டு பொது நலப்பொன்னிழை கொண்டு நாட்டு நலமெனும் நல்லாடை செய்ய நம்பிக்கையுடன் முன் வருகின்ற ஆன்றோர்கள் ஆட்சி அமைய வேண்டும் என்பது எம் அவாவாகும். ஆனால் தன்னலமில்லாத் தலைமை என எவரையும் இன்று அடையாளப் படுத்த முடியவில்லை. தன்னலம் குறைவாகவும் பொது நலம் மிகுதியாகவும் உள்ள தலைமை தமிழ் நாட்டு மக்களுக்கு அமைந்தாலும் கூட நாம் அமைதி பெறலாம். வெள்ளத்தில் சிக்கிய சென்னை மக்களின் உள்ளத்தில் உருவான மனித நேயம் நிலைப் பெறவேண்டும். மதவெறி மாய்ந்து பிரிவினை ஓய்ந்து தீர்க்கமான திட்டங்களை திளைக்க வைத்து செயல்படும் ஆண்டாக இப்புத்தாண்டு மலரவேண்டும். கையில் காசு இருந்தாலும் கூட காலம் நமக்குக் கை கட்டி நிற்காது. மனதில் மாசற்று வாழ்வதே மகிழ்வுக்குரியதாகும். உழைப்பை ஈந்து, உரிமையைப் பெற்று, உணர்வை வளர்த்து, உண்மை பேசி உறவைப் பெருக்குவோம் என்ற உறுதியுடன் இப்பொங்கல் புத்தாண்டை, தமிழ் தேசியத் திருநாளை வரவேற்போம்; வளம் பெறுவோம்; அனைவரையும் வாழ்த்துவோம். உரெனென்னும் தொட்டியா னோரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்புக்கோர் வித்து. (திருக்குறள் 24) – திருவள்ளுவர்கனிவுடன் சு.குமணராசன்,முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJANEditor In Chief.தை – 2047(சனவரி – 2016)