15 March 2016 9:07 pm
இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாய் ஒலித்து வரும் குரல் எதுவெனில் வறுமை ஒழிப்பு, பொருளாதார முன்னேற்றம், சமநிலைச் சமுதாயம், மத நல்லிணக்கம் என்பவைகளே. அரசியலாளர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பும் பிணைப்பும் இருந்திருக்குமெனில் இன்றளவில் இந்திய நாடு சாதிகளற்றச் சமுக சமனியத்துடன், பொருளாதார உச்ச நிலை எய்தி ஒரு வல்லரசாக உலக அரங்கில் பெருமையுடன் நடை போட்டிருக்க வேண்டும். ஆனால் அண்மைக் கால நிகழ்வுகளும் ஆட்சியாளர்களின் சிந்தனைப் போக்கும் இந்திய நாட்டை மேலும் கீழ் நிலைக்கே வலிந்து இழுத்துக் கொண்டு செல்வதாகவே எண்ண வேண்டியுள்ளது. ஆட்சிக் கட்டிலில் அமரும் கட்சி எதுவாயினும் எதிர்க் கட்சிகளை அடக்க நினைப்பதும், ஆட்சிக்கு எதிராக வைக்கப் படும் விமர்சனங்களை நாட்டு ஒருமைப்பாட்டிற்கு எதிராக வைக்கப் படுபவை என நிலை நிறுத்தி சட்டங்கள் மூலம் குரல்வளையை ஒடுக்க முயல்வதும் பல்லாண்டு காலமாகத் தொடரும் மெய்மையாகும். தேச நலன்களுக்கு எதிராகச் செய்லபடுபவர்கள் என கடந்த காலங்களில் தளைப் படுத்தப் பட்டு சிறையேகிய பல தலைவர்களில் சிலர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பலர் மறைந்து போய்விட்டனர். மிசாச் சட்டம், பொடா சட்டம், தடா சட்டம் என அவ்வப்போது கொண்டுவரப்பட்ட சட்டங்களினால் கண்டறியப் பட்ட நாட்டு எதிராளர்கள், தேசத் துரோகிகள் எத்தனை பேர் என இன்றுவரை எவராலும் பட்டியலிட இயலவில்லை. ஆனால் அப்பாவி பொது மக்களும் மாணவர்களும் எதிர்க்கட்சி சார்பாளர்களும் ஆளும் கட்சியின் நலனுக்கு எதிராகவோ அல்லது கருத்தியல் வழியாக விமர்சனம் செய்யப் படும் வேளைகளில் அச்சுறுத்தப் படுகிறார்கள் அல்லது கொலை செய்யப் படுகிறார்கள் என்பது இந்திய வரலாற்றின் நீங்கா வடுக்களாகும். கடந்த சில மாதங்களாக நடைபெறும் நாட்டு நிகழ்வுகள் இதனை உறுதிப் படுத்துகின்றன. அய்தராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை நிறைவு செய்த ஆய்வு மாணவரான வெர்முலா ரோகித் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக பல்கலைக் கழகத் துணை வேந்தருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள சில வரிகள் இன்றைய இந்தியாவின் நிலையை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. தலித் மாணவர்கள் சேரும் போதே கொடிய நஞ்சையும், விடுதியில் சேரும் தலித் மாணவர்களுக்கு தாம்புக் கயிரையும் கொடுத்து விடுங்கள் என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். சமூக புறக்கணிப்பால் இரண்டு வாரகாலமாக பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே கூடாரம் அமைத்து பாதிக்கப்பட்ட பிற மாணவர்களுடன் இணைந்து போராடி வந்த ரோகித் வெமுலா, பல்கலைக்கழகத்தின் தொடர் நெருக்கடிகளின் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என்பது அழுத்தம் திருத்தமாக அறிந்த உண்மை. இதன் பின்னணியில் ஏ.பி.வி.பி. போன்ற பா.ச.க. ஆர்.எசு.எசு. ஆதரவு மாணவர் அமைப்புகள் தொடர்புடையன என்பதும் கண்டறியப்பட்டது. அதே போன்று பண்டித சவகர்லால் நேரு அவர்கள் பெயரில் தில்லியில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தில் மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் மீதும் புனையப் பட்டுள்ள தேச இரண்டக வழக்குகள் ஒரு சன நாயக நாட்டின் கருத்துரிமை, சுய சிந்தனை ஆகியவற்றிற்கு அறை கூவல் விடுவது போல அமைந்துள்ளது. ஒரு இலட்சியவாதப் பல்கலைக் கழகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாகவும் அறிவுச் சோலையாகவும் ஆய்வுக் கூடமாகவும் விளங்கி வரும் பலகலைக் கழகம் தற்போது ஆட்சியாளர்கள் பார்வையில் தேசவிரோத சக்திகளை உற்பத்தி செய்யும் ஒரு கூடாரம் என வருணிக்கப் படுகிறது. ஆளும் கட்சிக்கு எதிராகவோ அல்லது பிறப்பினால் சாதி கற்பிக்கும் இந்துத்துவத்திற்கு எதிராகவோ கருத்துத் தெரிவித்தால் அது தேசவிரோதச் செயல் என அறிவிக்கப் படுகிறது. இது போன்ற பரப்புரைகளில் சில தொலைக்காட்சி ஊடகங்களும் தன் பங்களிப்பை தவறான முறையில் செய்து வருகின்றன. புனையப் பட்ட காணொளிகளை அந்த மாணவருக்கு எதிராகவும், பழமைவாத மத வெறியர்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வண்ணம் காட்சிப் படுத்தப் பட்டமையும் நீதி மன்ற விசாரணையில் வெளிவந்துள்ளது. இந்து மதத்தின் சாதி நிலை குறித்தும் மூடநம்பிக்கைகள் குறித்தும் வெளிப்படையாக விமர்சனம் செய்த எழுபத்தேழு வயது எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி சுட்டுக் கொல்லப் பட்டார். மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பரப்புரை செய்த சமுக ஆர்வலர் நரேந்திர தபோல்கர், பொதுவுடமைக் கட்சி சார்பாளர் கோவிந்து பன்சாரே ஆகியோரும் கொல்லப் பட்டனர், இவர்கள் எதற்காகக் கொல்லப் பட்டனர்? மாற்றுக் குரல்களுக்கு இங்கே இடமில்லை என்ற ஒரு தெளிவான பாசிசப் போக்கை முன்வைப்பதற்காகவே இவைகள் நிகழ்ந்துள்ளன. பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிரான தாக்குதல்கள் அவ்வப் போது இந்தியாவில் நிகழ்பவைதான் எனினும் பா.ச.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின் நிலவி வரும் போக்கு ஒப்பிட முடியாத வேதனையைத் தருகிறது. பெருமாள் முருகன் என்ற தமிழ் நாட்டு எழுத்தாளர் இந்து அமைப்புகளின் மிரட்டல்களுக்குப் பணிய வேண்டிய நிலை ஏற்பட்டு ஒட்டுமொத்த இலக்கிய வாழ்வையேத் துறந்து புலம் பெயர்ந்து சென்று விட்டார். மேற்சொல்லப் பட்ட நிகழ்வுகள் குறித்து நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சிகள் பலமுறை குரல் எழுப்பியும் கூட நாட்டின் தலைமை அமைச்சர் மோடி அந்நிகழ்வுகள் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் பதிலும் தராமல் அமைதி காப்பது நாட்டு மக்களின் அய்யப் பாட்டை அதிகரித்துள்ளது. ஒரு சிக்கலை மறைப்பதற்கு அல்லது திசை திருப்புவதற்கு இன்னொரு சிக்கலை உருவாக்குவது; ஒரு சாதியை எதிர்ப்பதற்கு மற்றொரு சாதியைத் தூண்டுவது; ஒரு போராட்டத்தை ஒடுக்குவதற்கு இன்னொரு போராட்டத்தை முன் எடுப்பது; ஒரு மதத்தினருக்கு எதிராக இன்னொரு மதத்தினரை தூண்டுவது; ஒரு இனத்தைக் காட்டிக் கொடுக்க இன்னொரு இனத்தை பயன் படுத்துவது போன்ற சிந்தனைப் போக்கே இந்திய அரசியல் தளத்தில் ஆழமாகப் புதைந்திருக்கிறது. இவைகள் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒன்றாக ஆகியிருக்கிறது. அதன் விளைவாகவே ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் அதிகார வர்க்கமும் ஆளும் வர்க்கமும் தன் கருத்தியல் மேலாண்மையை விட்டுக் கொடுப்பதில்லை என்ற உண்மை புலப்படுகிறது. தனது நாடு என்பதற்ககாக ஆளும் கட்சியின் கருத்தியல்புகளுக்கும் அதன் கண்மூடித்தனமான செயல்களுக்கும் ஆதரவாகவே பேச வேண்டும் என்பது எவ்வகையான சனநாயகப் போக்கு? ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மாந்த அறிவு எழுப்பிய கேள்விகளே அறிவியல் வளர்ச்சிக்கும் மனித குல மறுமலர்ச்சிக்கும் வித்தாகின; சத்தாகின. மனித குலம் முற்றாக மறையும் வரை மாற்றுச் சிந்தனைகளும் கேள்விக் கணைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். வினாக்கள் இன்றி விடைகள் இல்லை; விடைகள் இன்றி விளைவுகள் இல்லை; விளைவுகள் இன்றி வெற்றி இல்லை. இந்திய நாட்டுப் பொருளாதாரத்தின் வீழ்ச்சியை மீட்டு வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று வல்லரசாக்குவோம் என்ற மோடியின் பரப்புரை பா.ச.க. ஆட்சியமைக்கப் பெரிதும் துணை நின்றது. அந்த இலக்கை எட்ட வேண்டி உலகெங்கும் பயணித்து அந்நிய முதலீடுகளை ஈர்த்து இந்திய உட்கட்டமைப்பையும், வேளாண்மையும் மேம்படுத்துவது என்ற நல்லெண்ணத்துடன் செயல் படும் தலைமையமைச்சர் முதலில் சமுகத்தில் நிலவும் பிறவி இழிவு, ஏற்றத்தாழ்வு, சமுகப் புறக்கணிப்பு போன்ற பிற்போக்குத் தன்மைகளின் ஊற்றுகளைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும். இவற்றைக் கண்டும் காணாமல் இருப்பது மட்டுமல்ல, இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆதரவாகவும் அரசு செயல் படுகிறது போன்ற தோற்றத்தின் வெளிப்பாடே அய்தராபாத், ஜெ.என்.யூ. மற்றும் அலகாபாத் பல்கலைக் கழகங்களில் நிகழ்த்தப்பட்டிருக்கும் கலகங்கள் கலவரங்கள் பதற்றங்கள் களங்கங்கள். ஒரு நாட்டில் சமுக நல்லிணக்கமும் சமன்பாடும் இன்றி பொருளாதார வளர்ச்சியை எந்த நிலையிலும் எட்டி விட முடியாது. எனவே தங்களின் நல் முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமானால் மாணவர்களை, எதிர்க் கட்சியினரை பழிவாங்கும் போக்கைக் கைவிடுங்கள். தனி மனித நம்பிக்கைகளும், சித்தாந்த வேறுபாடுகளும் மனித நேயத்தைச் சிதைக்கா வண்ணம் செயல் படுத்த வழி காட்டுங்கள். வன்முறைகள் எதற்கும் தீர்வாகாது. வரலாறு இவற்றை மன்னிக்காது. பன்முகத் தன்மையும், பல மொழிப் பண்பாடும், பண்பாட்டுத் தொடர்பும் நீண்ட வரலாறும் ஒற்றுமைப் போக்கும் மனித நேயமும் என்றும் நிலைத்திட ஏற்றம் கண்டிட இன்றே சூளுரைப்போம். இளைய தலைமுறையே எழுக! வருக!. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (திருக்குறள்: 972) & திருவள்ளுவர்கனிவுடன் சு.குமணராசன்,முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJAN,Editor in Chiefபங்குனி – 2047(மார்ச் – 2016)