வீழ்ச்சியுறும் நாணயம் - தமிழ் இலெமுரியா

10 September 2013 8:01 am

1947 ஆம் ஆண்டு வெள்ளையர்களின் ஆளுமையிலிருந்து விடுதலை பெற்ற போது இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 1:1 என்கிற அளவில் சமமாக இருந்தது. கொள்ளையடிப்பதாகக் கருதப்பட்ட வெள்ளையர்கள் ஆட்சி அகன்று 66 ஆண்டுகளுக்குப் பின், மக்களாட்சிக் குடியரசில், தற்போதைய மதிப்பு டாலருக்கு நிகராக 1:66 என்ற அளவில் 66 மடங்குச் சரிவை எட்டியுள்ளது. ஓர் நாட்டின் நாணய மதிப்புச் சரியும் போது அந்நாட்டுப் பொருளாதாரத்தின் அடித்தளம் அசையும். மக்களிடம் வாங்கும் வலிமை குறையும். பணப் புழக்கம் குறையும். நுகர் பொருள்கள் விலையேற்றம் பெறும். ஏற்றுமதியினால் விளையும் பயன்கள் பின்னுக்குத் தள்ளப்படும். வெளிநாடுகளில் கடன் பெற்றுள்ள வங்கிகள், வணிக நிறுவனங்கள் இழப்பிற்கு உட்படும். வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருவாய் அதிகரிக்கும். நாட்டின் பொருளாதாரத் தரம் மதிப்பீட்டு நிறுவனங்களால் குறைத்து மதிப்பிடப் பெறும். நாட்டு நிதிநிலையில் பற்றாக்குறை ஏற்படும். பாமர மக்கள் மீது வரிச்சுமை அதிகரிக்கப்படும். மேற்கண்டவற்றை உறுதிபடுத்தும் வகையில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்ட முடியாத நிலையில், வெறும் 4.5 விழுக்காடாகவும், பணவீக்கம் 10 விழுக்காடாகவும் மாற்றம் பெற்று தற்போதைய இந்தியாவின் பொருளாதார நிலை, சமூக நிலை மேலும் மோசமடைந்து சரிவைச் சந்தித்து வருவதாகவே உலகம் கணித்துள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிலரின் செயல்முறைகளினால் உலக அளவில் இது போன்றச் சிக்கலை பிரேசில், இந்தோனேசியா போன்ற நாடுகளும் சந்தித்துள்ளன. எனினும், இந்தியாவின் வீழ்ச்சிக்கான கரணியங்கள் அவற்றிலிருந்து சற்று மாறுபட்டவையாகும். 2008 ஆம் ஆண்டு உலகின் பெரு வல்லரசான அமெரிக்க நாட்டின் பொருளாதாரச் சிக்கலில் உலக நாடுகள் பல தாக்கங்களுக்குட்பட்டு மிரண்டு போன நிலையில், இந்திய அரசு அவற்றைச் சமாளித்து, அந்தச் சரிவுப் பேரலை வெகுவாக இந்திய நாட்டைப் பாதிக்காத வகையில் நம் பொருளாதாரக் கொள்கைகள் அமைந்துள்ளன என பெருமைப்பட்டுக் கொண்டதுடன், நம் நாட்டைப் பீடித்துள்ள வறுமை, அறியாமை, கல்வியின்மை, பொதுநலக் கேடு போன்றவைகளையும் ஒழித்துக் கட்டுவோம் என ஆட்சியாளர்களால் பரப்புரை செய்யப்பட்டது. அந்தச் சொல்வெட்டுகளே அவர்களுக்கு மீண்டும் ஒரு வெற்றியைத் தந்தது. ஆனால் நம் இந்திய நாட்டின் தற்போதையப் பொருளாதார நிலையோ, சமூக நிலையோ அவற்றைப் பிரதிபலிப்பதாக இல்லை. நாட்டின் உட்கட்டமைப்பு, பொருளாதரம், சமூக நலம் என அனைத்திலும் தோல்வியைச் சந்தித்து வருகின்றோம். இந்த இழிநிலைக்குக் கரணியமாக அமைவது நாணயச் சரிவு மட்டுமல்ல, மாறாக நம் நாட்டு அரசியலாளர்கள், பெரு முதலாளிகள், ஊடக உரிமையாளர்கள் ஆகியோர்களின் நாணயமற்றத் தன்மையும், நேர்மையற்ற செயல்பாடுகளும் ஆகும். இவர்கள் சிறுபான்மையினரேயெனினும் நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திப் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரத்தை நிருணயம் செய்பவர்களாவர். ஆட்சிப் பொறுப்பில் இருப்போரின் தவறான கொள்கைகளும், கவலையற்றப் போக்குமே இவ்வீழ்ச்சிக்கு முதன்மையான காரணமாக அமைந்தாலும், ஆளும் கட்சியை  முழுமையாகக் குற்றம் சாட்டி, எதிர்க் கட்சிகளோ, இந்தியக் குடிமக்களோ தங்களைத் தூய்மையானவர்களாகக் காட்டிக் கொள்ள முயல்வதும் ஏற்புடையதல்ல. 1970களில் நான்கு கோடி ஊழல் மிகப் பெரிய அளவில் விவாதங்களுக்கு உட்பட்ட நிலையில் மக்கள் அதிர்ந்தனர், அஞ்சினர். ஆனால் இன்று நான்கு கோடிகள் அல்ல, நாற்பது கோடிகள் அல்ல, நாலாயிரம் கோடிகள் அல்ல, அவற்றையும் தாண்டி பல இலக்கம் கோடிகள் என நாடாளுமன்றத்தில் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதும், கூச்சலிடுவதும் அன்றாட நாடாளுமன்ற நடைமுறைகளாகி விட்டன. கையூட்டுகளில் தொடர்புள்ள கோப்புகள் திருடப்பட்டதாகவும், தொலைந்து போனதாகவும் சொற்போர்கள் நடைபெறுகின்றன. ஏற்றுமதி – இறக்குமதி இடைவெளி விரிவடைந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரச் சுழற்சியில் பயன்பட வேண்டிய பணம் பதுக்கப்படுகிறது. இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணம் சற்றொப்ப 10 இலக்கம் கோடிகள். தங்கத்தில் இந்தியர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ள பணம் சற்றொப்ப 9 இலக்கத்து 25 ஆயிரம் கோடிகள். திருப்பதி ஏழுமலையான் கோயில் வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பு சற்றொப்ப 60,000 ஆயிரம் கோடிகள். இவைகளை மீட்டெடுப்பதும், நெறிப்படுத்துவதும், பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி எண்ணெய் இறக்குமதியை வெகுவாகக் குறைப்பதும், அயல்நாட்டு நுகர் பொருட்கள் மீதான மோகத்தைத் தவிர்ப்பதும் இன்றைய இந்தியாவின் உடனடித் தேவைகளாகும். நிலவளமும், நீர்வளமும், மனித வளமும் தன்னகத்தே கொண்ட நம் இந்திய நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியைப் பெருக்க முனைப்புடன் செயல்படுவது தவிர்த்து, வெளிநாட்டு முதலீடுகள், நுகர் பொருட்களுக்கு செய்யப்படும் விளம்பரங்கள், கொள்கை அறிவிப்புகள் என அனைத்தும் இந்திய நாட்டை மேலும் பாதாளத்தில் வீழ்த்தும். எனவே நீதியும், நேர்மையும், தூய எண்ணங்களும் இன்றி, தேர்தல் அரசியல் ஒன்றையே குறி வைத்து ஏற்படுத்தப்படும் எந்தச் சட்டங்களும், திட்டங்களும் இந்திய நாட்டின் சரிவைச் சரிசெய்து விட முடியாது. அரசியலைத் தொண்டாகச் செய்வதற்குப் பதில் தொழிலாகச் செய்வோரின் எண்ணிக்கை பெருகியதின் விளைவாக இன்று அரசியல், கல்வி, மருத்துவம், என அனைத்தும் வணிகமயமாக்கப்பட்டு, பாமர மக்களும், நேர்மையாளர்களும் பாதிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். விடுதலை பெற்ற இந்தியாவின் நிலமும், வளமும், பலமும் சுரண்டப்பட்டும், சூறையாடப்பட்டும் வருகின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கலுக்குக் காரணம் இந்திய நாணயமான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி மட்டுமல்ல, இந்தியர்களின் நாணயம், நேர்மை, நீதி ஆகியவற்றின் வீழ்ச்சிகளும் காரணம் என்பதை அறிந்து திருந்த வேண்டும். சமூக, பொருளாதார மாற்றங்கள் சட்டங்கள் மூலம் நடைமுறைப் படுத்தப்பட்டாலும், ஆள்வோரும், கொள்வோரும் தூய்மை மனத்துடன் ஒப்ப வேண்டும். சிந்தனைகள் சீழ் இன்றிச் சீர்மைப் பெற வேண்டும். நிகழ்காலத்தில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே – நயமுறு வினைகளே நாளைய விளைவுகளுக்கு நாற்றுகளாகும் என்பதறிந்து செயல்பட வேண்டும். இல்லையெனில், ஒளிர வேண்டிய இந்தியத் திருநாடு கரியாய் கரிந்து விடும். சொல்லியதைத் திரும்பத் திரும்பச் சொல்வதில் எமக்குச் சுவையில்லை. ஆயின் சொல்வதைத் திரும்பத் திரும்பச் சொன்னால்தான் நம்மவர் செவி மடுப்பர், சிந்தையில் கொள்வர் எனும் நிலையாகும் போது நமக்கு வேறு வழியில்லை. நம்முடைய நோய்க்கு நாம் தான் மருந்துண்ண வேண்டும். நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். (குறள்: 948) கனிவுடன், சு.குமணராசன், முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJANEditor in Chief,புரட்டாசி – 2044(செப்டம்பர் – 2013)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி