வேற்றுமை விதைகள் - தமிழ் இலெமுரியா

14 November 2013 8:10 am

1947 ஆம் ஆண்டு ஆகசுடு 15 ஆம் நாள் அறிவிக்கப் பட்ட இந்தியா என்ற நாட்டின் எல்லைப் பரப்புக்குள் பல்வேறு இனங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு பண்பாடுகள் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள் என்பதைக் கருத்தில்  கொண்டு, 1935 ஆம் ஆண்டு வெள்ளையர்களால் வகுக்க்கப் பட்ட பிரிட்டிசு – இந்தியா அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவின் அரசமைப்பு ஆவணம் உருவாக்கப்பட்டது. இதன் முதன்மைச் சொல்லே இந்தியா என்ற நாடு பல மாநிலங்களின் கூட்டிணைப்பாகும்" என்று தான் தொடங்குகிறது. இந்தியா வேற்றுமைகள் நிறைந்த நாடாக இருப்பதாலும், முரண்பட்ட பண்பாடுகளைக் கொண்ட தேசிய இன மக்கள் நிலவியல் மற்றும் வரலாற்று ஆளுமைகளினால் தொடர்பு கொண்டிருப்பதாலும் இது பன்மையில் ஒருமை காணும் ஒரு கூட்டுக் குடும்பம் போன்ற அமைப்பாகும். இது போன்ற அமைப்பு கொண்ட நாட்டில் மாநில மக்களின் மொழி, பண்பாடு, சமுக உணர்வு போன்றவற்றைப் பாதுகாப்பதன் மூலமே மெய்யான தேசிய ஒருமைப்பாட்டையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் அடையாளம் காண இயலும். ஆனால் இந்திய அரசியலில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆதிக்க முயற்சிகள் நம் நாட்டு மக்களின் இறைமைக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிராகவே உள்ளன. அரசமைப்புச் சட்டம் வகுக்கப்பட்ட போது, மூன்று வகையான ஆளுமைப் பட்டியல்கள், அதாவது மத்தியப் பட்டியல், பொதுப்பட்டியல், மாநிலப் பட்டியல் எனப் பிரித்து பெரும்பாலான ஆளுமைத் தன்மைகள் நடுவணரசுப் பட்டியலில் இடம் பெறும் வகையில் 97 அதிகாரங்களும், பொதுப்பட்டியலில் 47 அதிகாரங்களும், மாநிலப் பட்டியலில் 66 அதிகாரங்களும் முறைப்படுத்தப் பெற்றது. பொதுப் பட்டியல் என பெயரளவில் ஒன்று இருப்பினும் அதன் ஆளுமைகள் அனைத்தும் நடுவணரசின் வரம்பிற்குட்பட்டவையாகும். எஞ்சியிருக்கின்ற மாநில அதிகாரங்களிலும், காலவோட்டத்தில், குறிப்பாக 1976 ஆம் ஆண்டு நெருக்கடிநிலைப் பிரகடனத்திற்குப் பிறகு, தொழில் துறை, மின்சாரத்துறை, எரிவாயு உற்பத்தி, பெரும் துறைமுகம், விற்பனைவரி, கல்வி உள்ளிட்ட பல ஆளுமைகளை நடுவணரசு எடுத்துக் கொண்டது. 1919, 1935, 1950 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப் பட்ட இந்திய அரசுச் சட்டங்களில் கல்வியை, தாய்மொழிக் கல்வியை உறுதி செய்யும் பொருட்டு,  மாநிலப் பட்டியலிலேயே வைத்திருந்தன. ஆனால் 1976 ஆம் ஆண்டு இது பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுவிட்டது. தரமான கல்வியைத் தருவதற்காகத்தான் கல்வியைப்  பொதுப்பட்டியலுக்கு மாற்றுவதாகக் கூறினார்கள். ஆனால், உண்மை  அனுபவம் அவ்வாறு இல்லை. நடுவணரசால் தரமான கல்வி தரப்பட்டதாகக் கூற முடியவில்லை. உலக அளவில் உள்ள தரமானப் பல்கலைக் கழகங்கள் 200-ல் ஒன்று கூட இந்தியாவில் இல்லையே என குடியரசுத் தலைவரும், தலைமையமைச்சரும் வருந்துகின்றனர். எனவே,  இதன் அடிப்படை நோக்கம் அதிகாரக் குவியல் என்பது மட்டுமல்ல, அதனையும் தாண்டி, இந்தியா என்றால் இந்தி மொழி, இந்து மதம், ஆரியப் பண்பாடு என்பனவற்றை நிலை நிறுத்த நடத்தப்பெறும் முயற்சி என்பதுதான் இதன் அடிநாதம் ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு நடுவணரசின் கீழ் இயங்கும் என்.சி.இ.ஆர்.டி (NCERT) தயாரித்த வரலாற்றுப் புத்தகத்தில் – ஆரியர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்றும், திராவிடர்கள் அல்லது தமிழர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும் எழுதப்பட்டு தவறான வரலாற்றுக் கருத்துக்கள் பரப்பப்பட்டன. இதுபோன்றக் கோட்பாடுகளில், வட இந்தியத் தேசியக் கட்சிகளிடையே எவ்வித கருத்து மாறுபாடும் இல்லை எனலாம். இதன் தொடர்ச்சியாகவே, தற்போது இந்திய அரசு "ராஷ்ரிய ஆதர்ஷ் வித்யாலயா" என்ற ஒரு பள்ளிக்கல்வி திட்டத்தை வகுத்து, அதை நடுவணரசும், தனியார் நிறுவனங்களும் கூட்டாக நடைமுறைப்படுத்தும் வகையில் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், நடுவணரசால் நடத்தப் பெறும் சி.பி.எஸ்.இ(CBSE) பாடத்திட்டத்திற்குட்பட்டு, இந்தியும் ஆங்கிலமும் பயிற்று மொழியாக இருக்கும். இது போன்ற பள்ளிகள் படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைக்கு வர உள்ளன. இந்தக் கல்வி முறையினால், வருங்காலத்தில், மொழி வழி தேசிய இன மக்களின் மொழி, வரலாறு, பண்பாட்டுத் தளங்கள் முற்றாக அழிந்து விடும்.  மாணவர்கள் தாய்மொழிக் கல்வியைத் தவிர்த்திட வைக்கும் ஒரு தந்திரம் இது எனலாம். இதே போன்று நாடெங்கும் "நவோதயா" பள்ளிகளை ஏற்படுத்தி, இந்தியைத் திணிப்பதற்கான முயற்சிகள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப் பட்டு, அன்றைய தமிழ் நாடு அரசின் கடும் எதிர்ப்பால் தோல்வியைத் தழுவின. இந்திய தேசிய ஒற்றுமை என்ற பெயரில் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் நோக்கிலும் செயல்படத் துடிக்கும் நடுவணரசின் போக்கு, சொந்தமுடையார் என்று சொல்லிக் கொண்டு சூது மனத்தவர் நடத்தும் சூழ்ச்சி போன்றது என்பதை தமிழ் மக்களும், தமிழ்நாடு அரசும் உணர வேண்டும். ஆங்கிலேயர்களால் "இண்டியா" என்றழைக்கப் பட்ட நாட்டின் பெயருக்கும், இந்தி, இந்து என்கிற மொழி மற்றும் மதப்பெயர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையெனினும், இந்தியப் பெருங்கடல் பரப்பை இந்து மகா சமுத்திரம் என்றும், இந்தியாவின் பெயரை இந்துஸ்தான் என்றும் அழைக்க எண்ணுவது ஆதிக்க சக்திகள் தங்கள் எண்ணங்களை ஆழப்பாய்ச்ச விரும்புகின்றனர் என்பதையே பறைசாற்றுகிறது. இது தவிர, நடுவணரசின் நிறுவனங்கள், திட்டங்கள் அனைத்திலும் பயன்படுத்தப்படும் சொற்களான கேந்திரிய, விகாஸ், நிகாம், தூர்தர்ஷன், துரந்தோ, தட்கல், வித்யாலயா, ஜன்கல்யாண் போன்றவை மாநில மொழிகள் மீது நடுவணரசு நடத்தும் வன்புணர்வுக்கு ஒப்பாகும். இது போன்ற எண்ணங்களும், செயற்பாடுகளும் நம் நாட்டு மக்களின் உரிமைக்கும், ஒற்றுமைக்கும் எதிரான விளைவுகளையே ஏற்படுத்தும். அண்மைக்காலமாக பெருகிவரும் மாநிலக் கட்சிகளே இந்த அய்யத்திற்குச் சான்றாகும். நடுவணரசின் தவறான கொள்கைகளால் அன்னியப்பட்ட மாநில மக்கள் தேசிய கட்சிகள் தங்களுக்கு எந்தத் தீர்வையும் தராது என்ற முடிவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கி விட்டனர். இந்த நம்பிக்கையின்மையே மாநிலக் கட்சிகளாக அரசியல் உருவகம் பெறுகிறது. புது தில்லியிலே அரசு மாறினாலும், கட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறினாலும் கயமை எண்ணங்கள் மட்டும் மாறவேயில்லை. முந்தைய சோவியத் உருசியாவில் கல்வி, மய்ய அரசின் கட்டுப் பாட்டில் இருந்தது. அப்படி இருந்ததால் உருசிய மொழி மற்ற மாநிலங்களின் மீது திணிக்கப்பட்டு சோவியத் உருசியா உடைவதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது என்பதை சோவியத் உருசியா உடைந்து போனது பற்றி ஆராய்ச்சி செய்த போலந்து நாட்டுப் பேராசிரியர் பிரிசுகி கூறுகின்றார். ஒற்றுமை என்பது உதட்டளவுச் சுரப்பாக, உரிமை என்பது ஏட்டளவு இருப்பாக, வேற்றுமை விதைகளை விதைப்பதையே நினைப்பாகக் கொண்ட அரசியலாளர்கள், அதிகார மையங்கள் இருக்கும்வரை உண்மையான கூட்டாட்சியின் உயிரோட்டம் தென்படாது. மாநில உரிமைகள் புதைக்கப் படுவதையும், மக்களாட்சி மரபுகள் சிதைக்கப் படுவதையும், வேற்றுமை விதைகள் விதைக்கப் படுவதையும், தமிழ் இனம் தொடர்ந்து சிதைக்கப் படுவதையும் தமிழ் நாட்டு மக்கள் இனியும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை நிந்திப்போர் உணர வேண்டும். நேர்மையான நல்லுள்ளம் மலர வேண்டும்.  ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்.      (குறள்: 834)                                                           கனிவுடன்,  சு.குமணராசன்.முதன்மை ஆசிரியர்.S.KUMANA RAJAN, Editor in Chiefகார்த்திகை – 2044(நவம்பர் – 2013)"

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி