16 July 2013 2:53 pm
மக்களாட்சி நடைபெறும் ஓர் நாட்டின் அடித்தளமாகத் திகழ்வது அறிவார்ந்த அரசியல், நேர்மை தவறா நிருவாகம், மெய்ப் பொருள் உணத்தும் நீதி, குமுகாயம் சார்ந்த ஊடகம் என்பவைகளாகும். இவற்றில் நான்காவது தூணாக போற்றப்படும் ஊடகத் துறையின் தற்போதைய நிலையற்றத் தன்மையும், நெறி தவறும் போக்கும், பொருளியல் சார்பும் ஏராளமான இந்திய மக்களின் எதிர் பார்ப்பை நிறைவேற்றவில்லை. தற்கால ஊடகங்களின் இதழியல் நெறியும், தரமும் தாழ்ந்து வருகின்ற போக்கையே காண முடிகிறது. இன்று பலராலும் கேட்கப்படும் கேள்வி யாருக்கு ஆதரவாக இத்துறை செயலாற்றுகிறது? என்பது தான். இந்திய அளவில் பல்வேறு பருவ இதழ்கள், நாளிதழ்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், வானொலி நிலையங்கள் என பலருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் அய்ம்பதுக்கும் அதிகமான தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. எனினும் சமுதாயப் பார்வை அருகி வருகின்றது. கேளிகளும், கேளிக்கை நிகழ்ச்சிகளுமே பெரு நேரம் காட்சியளிக்கப் படுகிறது.
கடந்த கால வரலாற்றில் இதழியல் பணி என்பது சமகால சமூகத்தின் நாடித் துடிப்பாக விளங்கியது. அவைகளுக்குக்கான ஒரு கொள்கையும், இலட்சியமும் இருந்தன. அதன் விளைவாகவே இந்திய விடுதலைப் போராட்டமும், நாட்டின் சமுக மறுமலர்ச்சியும் ஓரளவு வெற்றி கண்டன. மகாத்மா காந்தி, சவகர்லால் நேரு, இராசாராம் மோகன்ராய், அயோத்திதாசர், பெரியார், அண்ணா, அய்யங்கலி, பாரதி, உ.வே.சா, தாமரைச் செல்வர், குன்றக்குடி அடிகளார் என பல்துறைத் தலைவர்களும் தத்தம் காலநிலையில் அச்சு ஊடகத்தின் அடித்தளமாக விளங்கியவர்களே. அவர்களின் நேர்மையும், நிறைந்த அறிவும் நம் நாட்டின் உரிமை, உழைப்பு மற்றும் பொருளாதார மேன்மைக்கு வித்திட்டன. ஆனால் இன்று உலகமயமாக்கல், பொருளாதார வளர்ச்சி, நாகரிகம் என்ற போர்வையில் கல்வி, மருத்துவம் போன்ற அரசுச் சேவைகள் கூட வணிகமயமாக்கப்பட்டது போல ஊடக்த்துறையிலும் இலாப நோக்கு வணிகர்களின் பெருக்கம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைக்குப் பின்பு திட்டமிட்டு, அடித்தளமைத்து, கட்டி முடிக்க வேண்டிய சமுகப், பொருளாதார கட்டமைப்புகள் வேரற்றச் செடியாகவும், விளைச்சலற்ற நிலமாகவும் காட்சி தருகின்றன. பெரும்பாலான ஏடுகள் பங்கு வணிகச் சந்தையில் தங்களைப் பட்டியலிட்டுக் கொண்டு பொருளேற்றம் குறித்துக் கவலைப்படுகின்றனவே தவிர தன் அறம் சார்ந்த சேவையினைச் செய்வதில்லை.
கடந்த சில திங்கள்களுக்கு முன்பு மும்பையிலிருந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாக வெளிவரும் ஒரு நாளிதழில் இரண்டு இந்திய முன்னோடிகளின் மறைவைக் குறிக்கும் செய்திகள் வெளியாயின. ஒருவர் கேப்டன் லச்சுமி சேகல் என்ற விடுதலைப் போராட்ட வீராங்கணை. தன்னலமற்ற தனிநபராக நேதாஜி சுபாசு சந்திரபோசு தலைமையிலான இராணுவத்தின் மருத்துவராகப் பணிபுரிந்து பின்னர் ஏழை எளிய நோயாளிகளைக் காக்கும் சமூகத் தொண்டராக வாழ்ந்து எதிர்காலத் தலைமுறைக்கு வழிகாட்டி, எழுச்சியின் சின்னமாகத் திகழ்ந்தவர். இன்றைய இளைய தலைமுறையான மாணவர்களின் சிந்தனைக்கு உரமானவர். கேப்டன் லச்சுமி சேகல் அவர்களின் தனி வாழ்வு, பொது வாழ்வு, புரட்சி வாழ்வு என அனைத்தையும் சற்றொப்ப முன்னூறு சொற்களால் முடித்துக் கொண்டு, நாளிதழின் ஒன்பதாவது பக்கத்தில் அவர் மறைவுச் செய்தியை வெளியிட்டிருந்தது அந்த ஏடு. ஆனால் அதே கால கட்டத்தில் நோய்வாய்ப்பட்ட நிலையில் மருத்துவ மனையில் மறைந்த நடிகர் ராஜேசு கண்ணாவின் மறைவுச் செய்தி முதல் பக்கம் தொடங்கி மூன்று பக்கங்களாக வெளியிட்டது மட்டுமன்றி, தொடர்ந்து சில நாட்கள் பல பக்கங்களில் அவருடைய திரைப்படங்களும், கட்டுரைகளும் வெளியிடப்பட்டன. இந்தச் செய்தி அடங்குவதற்கு சற்றொப்ப ஏழு நாள்கள் ஆகியது. ராஜேசு கண்ணா ஒரு சிறந்த நடிகர் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்துகள் இல்லையெனினும் குமுகாயத்தில் அறிவையும், நேர்மையையும், தேசப்பற்றையும் வளர்க்க வேண்டிய பொறுப்புள்ள செய்தித்தாள்கள் கூட இவ்வாறு மாற்றம் பெற்றிருப்பது வேதனையளிப்பதுடன், சனநாயகத்தின் தூண் என வருணிக்கப்படும் துறையின் தற்கால போக்கையும், மலிவுப் பதிப்பையுமே பறை சாற்றுகிறது. இது போன்ற நிலையே தமிழ்நாட்டிலும் காணப்படுகின்றது. வெற்றுணர்ச்சிகள் சார்ந்த செய்திகள் முதன்மைத்துவம் பெறுகின்றன.
2009 ஆம் ஆண்டு ஈழமண்ணில் நடைபெற்ற பேரவலங்களை தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பல ஊடகங்கள் செய்தியாகக் கூட வெளியிடவில்லை என்பதும் இவண் நினைவு கூரத்தக்கது. பிரபலமான, பெரும்பாலான நாளிதழ்களின் முதற் பக்கம் முழுவதும் வெற்று விளம்பரங்களால் கையாளப்பட்டுள்ளன. தேர்தல் காலங்களில் செய்தித்தாள்களின் சில பக்கங்கள் விலைக்கு வாங்கப்பட்டு, விளம்பரங்கள் செய்தியாக வருகின்றன. பணத்திற்காக எழுதுவோர், பணத்திற்காக உரிமையை பணயம் வைப்போர், பணத்திற்காக பதவி ஏற்போர், பணத்திற்காக பட்டம் கொடுப்போர் என ஒவ்வொரு துறையும் முதலாளிகளின் வணிக நோக்கு என்னும் மாய வலையில் சிக்கிக் கொண்டுள்ளது. இத்தகையோர் திருந்துவது எப்போது? திருத்தப்படுவது எப்போது? என சிந்திக்க வேண்டிய காலகட்டம் இதுவல்லவா!
கதைகளும், கற்பனைகளும், காப்பியங்களுமே நம் வரலாறு, பண்பாடு, நாகரிகம் எனப் பெரும்பாலான இந்திய மக்கள் கருதுவதின் விளைவாக மனவளர்ச்சி குன்றியிருக்கும் நம் நாட்டின் மக்களாட்சி தூண்களும் முறிந்து போகுமானால் மாண்புகளும், மரபுகளும் மறைந்து போகும். மக்களாட்சி உயிர் மூச்சு நின்று போகும்.
சீர்மை சிற்ப்பொரு நீங்கும் பயனில
நீர்மை யுடையார்ச் சொலின்.
(குறள்: 195)
கனிவுடன்,
சு.குமணராசன்.
முதன்மை ஆசிரியர்.
(பங்குனி 2013)