உளப்பிணி நீக்கி பசிப்பிணி ஆற்றுக! - தமிழ் இலெமுரியா

17 July 2013 5:45 pm

Parliament building

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களேயிருக்கும் சூழலில், நாடாளுமன்ற சனநாயக நெறிமுறைகளைத் தவிர்க்கும் வகையில், அவசர அவசரமாக உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்கிற ஒன்றை நடுவண் அமைச்சரவை ஒப்புதலின் பேரில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு அவசரச் சட்டமாகப் பிரகடனப் படுத்தியுள்ளது நடுவண் அரசு. இதன் மூலம் இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 67 விழுக்காடு மக்கள் (அதாவது சற்றொப்ப 82 கோடி மக்கள்) நடுவணரசு மானியத்தின் மூலம் சலுகை விலையில் மாதம் ஒன்றுக்கு 5 கிலோ உணவுப் பொருள்களைப் பெறவும், தாய்மைப் பேறு அடைந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய உணவு அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”

என்ற மணியான மணிமேகலைக் காப்பியத் தொடரின் அறம் செய்யும் வரிகளோடு ஒப்பு நோக்குகையில் இது ஒரு அறப்பணியாகவே தோற்றம் அளிக்கின்றது. எனினும், இச்சட்டத்தின் செயல்முறை, பயன்பாடு, நிதி ஒதுக்கீடு போன்றவைகளைக் கருத்தில் கொள்ளும் போது பல வகையான அய்யப்பாடுகள் தற்போதைய அரசின் நேர்மையை உரசிப் பார்க்கின்றன. அதாவது இதன் பயனாளிகள் யார்? யார்? என்பதை மாநில அரசுகள் தீர்மானிக்க வேண்டும் என்கிற நிலையில் இதுவரை அவர்கள் அடையாளப் படுத்தப்பட வில்லை. இத்திட்டற்கான செலவு ரூபாய். ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் கோடி; எனினும் உரிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அரசின் பொது விநியோகத் திட்டங்களினால் அடையாளப் படுத்தப்பட்ட மக்களில் பயன் பெறுவோர் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே எனவும், சற்றொப்ப 71 விழுக்காடு இடைத்தரகர்கள், முகவர்கள், பதுக்கல் பேர்வழிகள், அரசியல் வாதிகள் போன்றோருக்குத்தான் பலன் தந்துள்ளன என்பதும் வரலாற்று உண்மைகளாகும். எனவே மேற்கண்ட காரணிகளின் தன்மைகளைச் சரிசெய்யாது இச்சட்டத்தை குடியரசுத் தலைவர் மூலம் அவசரமாகப் பிரகடனப்படுத்தியிருப்பது கேள்விக்குரிய ஒன்றாகிறது. இதற்கு ஆளும் தரப்பில் சொல்லப்படும் விளக்கம் அவர்களின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சம் என்பதாகும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு, பெண்கள் இட ஒதுக்கீடு, லோக்பால் மசோதா, தெலுங்கானா மாநில உருவாக்கம், கறுப்புப்பண ஒழிப்பு, வறுமை ஒழிப்பு என பல அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு இந்த ஒரு வாக்குறுதி மட்டுமே நிலுவையில் இருப்பது போன்று பேசப்படுவது நகைப்புக்குரியதாகும். எனவே, இது எதிர்வரும் தேர்தலை மட்டும் மனதில் வைத்து வாக்கு வங்கிக்காகச் செய்யப்படும் துரித வேலை என்று கூறும் எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டு நியாயமானதே. சற்றொப்ப 55 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவை ஆண்டு வரும் பேராயக் கட்சி அரசுக்கு இப்போதுதான் இந்த வறுமை நிலை உணரப்படுகிறதா? இதை ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டே நடைமுறைப் படுத்தியிருக்கலாமே!

எதிர்க் கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளாவது தத்தம் கடமை உணர்வுடன், ஆளும் கட்சியின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி அழுத்தம் தந்தவர்களா என்றால் அதுவும் இல்லை. இதன் மூலம் இந்திய மக்களுக்குக் கிடைக்கும் படிப்பினை என்பது எந்த அரசியல் கட்சியும் இந்திய நாட்டின் சமூக, பொருளாதார சமனியக் கொள்கைகளுக்கு ஆதரவான, தொலை நோக்கான எண்ணத்துடன், நேர்மையுடன் பணியாற்றவில்லை என்பதேயாகும். இது போன்ற மலிவுப் பொருட்களும், இலவயங்களும் நடுவண் அரசாலும், சில மாநில அரசுகளாலும் அவ்வப்போது நடைமுறைப் படுத்தப்படுவது ஒரு சில பயன்களை விளைவிப்பினும், வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டும் தான் மிகுதி என்பது புலனாகிறது.

இந்திய நாடு ஏழை நாடல்ல! ஆனால் ஏழைகள் மிகுந்த நாடு. விடுதலை பெற்று அறுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் 67 விழுக்காடு மக்கள் ஏழைகள் என்பதை அரசே ஒப்புக் கொள்கின்ற இழிநிலையிலிருந்து நம் இந்திய நாட்டின் சமூக, பொருளாதார கட்டமைப்பு இதுகாறும் மாற்றம் பெறவில்லை என்பதை உணரலாம். 

பிறவி இழிவு, பாமரத் தன்மை, கல்வி மறுப்பு, ஊழல் என்கிற சமூகக் கட்டமைப்பை அழியவிடாது பாதுகாத்துக் கொண்டு, சமயங்களின் பெயரால் சட்டங்கள், ஆகம விதிகள் என்கிற போர்வையில் சமூக ஏற்றத்தாழ்வுகள், உரிமை மறுப்பு, படிநிலை சமூக அமைப்பு போன்றவைகளை உச்ச சாதியினரும், முதலாளியினரும், சில அரசியலாளர்களும் நிலை நிறுத்தி வருகின்றனர். சாதிகளை விட ஏற்றத்தாழ்வான சிந்தனைகளும், ஊழல் செயலாக்கங்களும் வலுவடைந்து சமூகப் பொருளாதார சமன்பாட்டை தவிர்த்தே வருகின்றது. பெரும்பாலான அரசியல் கட்சிகளின் உயர் பதவி தேர்வும், வேட்பாளர்கள் தேர்வும் சாதி, மதம், பொருள் ஆகிய கட்டமைப்பிற்கு ஊறு நேரா வண்ணமே நடத்தப் பெறுகின்றன. கொள்கை சார்ந்த செயல்முறைகள் வெறும் ஏட்டளவிலும், பேச்சளவிலுமே கள்ளத்தனமாக, கபட எண்ணத்துடன் மட்டுமே கையாளப்படுகின்றன. சாதியமும், ஆணாதிக்கமும் நிறைந்த ஒரு படிநிலை அமைப்பை சமூக, பொருளாதார கட்டமைப்பில் நிலை நிறுத்திக் கொண்டு வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி எனப் பேசுவதும், சட்டங்கள் இயற்றுவதும் பேதமைத் தன்மையாகும். விவசாய விலை பொருட்களுக்கு அரசு விலை நிருணயம் செய்வதும், ஆதிக்க சக்திகள், பெரும் பணக்காரர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு அவர்களே விலை நிருணயம் செய்து அரசுகளைக் கட்டுப்படுத்துவதும் எந்த வகையான நீதி?

எனவே இது போன்ற அவசர நடைமுறைகள் நாட்டின் பணவீக்கம், பொருளாதாரப் பற்றாக்குறை மற்றும் வேளாண் மக்களின் வீழ்ச்சி ஆகியவைகளுக்கே வித்திடுமேயன்றி நாம் எதிர்பார்க்கின்ற பயனைப் பெற முடியாது என்பது எம் கருத்தாகும். சமயம், சாதி, ஊழல், தொழிலாளி போன்ற இழிநிலை, கீழ்நிலை படிநிலைக் கட்டமைப்புகள் நம் நாட்டின் உளப்பிணிகள். இந்த உளப் பிணிகளை முறையாக அறுவை சிகிச்சை செய்து முற்றிலுமாக நீக்கி விட்டு பசிப்பிணி குறித்து கவலைப்படுவதே நியாயமான, நிரந்தரமான தீர்வாக அமையும்! மற்றவையெல்லாம் போலிப் புனைந்துரைகளே!

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
(குறள்: 238)

கனிவுடன்,
சு.குமணராசன்,      
முதன்மை ஆசிரியர்.

(ஆடி 2013)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி