23 May 2013 2:12 pm
விலங்கினத்திலிருந்து அல்லது குரங்கு நிலையிலிருந்து மனித இனத்தைப் பிரித்துக் காட்டுவது மனித இனம் மேற்கொண்டுள்ள உழைப்பேயாகும். தன்னுடைய தேவைகளை தன் இச்சைக் கேற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டு நுகரும் நிலைப்பாட்டிற்கு மனித இனத்தின் உழைப்பே மூல காரணமாகும்.
இவ்வுழைப்பிற்கு உறுதுணையாக மனித இனம் கண்ட முதல் இயற்கை சக்தி நெருப்பு. உடம்பின் வெப்பம் உழைப்பதற்கும், உலையில் ஏற்படுத்தும் வெப்பம் உற்பத்திக்கும் காரணமாகி எண்ணற்ற வளர்ச்சியைக் கண்டுள்ளது இவ்வுலகம். இவையிரண்டில் ஒன்று குறைந்தாலும் அந்நாட்டில் வளர்ச்சியையோ, ஏற்றங்களையோ காண்பது அரிதாகிவிடும். உழைப்பிற்கேற்ற ஊதியம் குறைந்தாலும், உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் குறைந்தாலும் நாட்டில் பொருளாதாரச் சீரழிவிற்கு வழி வகுக்கும்.
இன்று இந்திய நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் இந்நிலையின் அறிகுறியே. ஒருபுறம் கச்சா எண்ணெய்யின் விலையேற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி, மறுபுறம் இந்நிலையைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பொருளைக் குவிக்கும் வியாபாரிகள் மற்றும் பண முதலைகள் என இரண்டிற்கும் நடுவில் சிக்கித் தவிப்பது ஏழை மக்களே.
நம் நாட்டின் பண வீக்கம் எட்டு விழுக்காட்டைத் தாண்டிய நிலையில் நாட்டில் ஒன்பது விழுக்காடு பொருளாதார வளர்ச்சி என்று மார்தட்டிக் கொள்வதில் எந்த உண்மையும் இல்லை. பொருளாதார வளர்ச்சியின் இலாபத்தைப் பணக்காரர்களும், விலைவாசி ஏற்றத்தின் இழப்பை ஏழைகளும் பகிர்ந்து கொள்வதென்பது ஏழை, பணக்காரன் எனும் ஏற்றத்தாழ்வை, இடைவெளியை அதிகப்படுதுகின்ற ஒன்றாகும். சம ஈவும், சம நுகர்ச்சியும் இல்லாத நாட்டில் வளர்ச்சி என்ற சொல்லுக்கு இடமில்லை.
ஏற்கெனவே சமூக ஏற்றத்தாழ்வு எனும் தீராத நோயினால் பாதிக்கப்பட்டிருகின்ற இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வை ஊக்குவிக்கின்ற அனைத்துக் காரணிகளையும் அடையாளம் கண்டு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியது அரசாள்வோரின் கடமையாகும். இந்நிலை குறித்து அலசும் வகையில் எரிபொருள் குறித்த தகவல்களும், உழைக்கும் இனமாகவே தன்னை உலகில் அடையாளம் காட்டி கலைந்து போய் பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழினத்தின் தொலைந்து போன தமிழ் நிலம் பற்றியத் தொன்மைச் செய்திகளும் இத் திங்கள் இதழில் இடம் பெற்றுள்ளன. தன் வரலாற்றைத் துறந்த, மறந்த எந்த இனமும் உய்வு பெற்றதாக உலகில் வரலாறு இல்லை.
கனிவுடன் சு.குமணராசன்,
முதன்மை ஆசிரியர்.
நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
(குறள்: 948)
(சூன் 2008)