பல்கலைக் கவலை - தமிழ் இலெமுரியா

16 July 2013 2:47 pm

University

இந்தியாவின் கல்வி  நிலை குறித்து ஆராய வேண்டி, இந்தியக் குடியரசுத் தலைவர் பிராணாப் முகர்ஜி ஏற்பாடு செய்திருந்த மத்தியப் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் பங்கேற்ற மாநாடு இம்மாத தொடக்கத்தில் புது தில்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் இந்தியக் கல்வித் தரம் உலக அளவில் குறிப்பிடும் படியாக இல்லை என்பதுடன், பன்னாட்டு அளவில் தரப்படுத்தப்பட்ட 200 பல்கலைக் கழகங்களில் ஒரு இந்தியப் பல்கலைக் கழகம் கூட இடம் பெறவில்லை என வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார். இதே கருத்தை தற்போதைய குடியரசுத் தலைவரும், மேனாள் நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி சில ஆண்டுகளுக்கு முன்பு, நிதிநிலை அறிக்கையின் போதும் குறிப்பிட்டார் என்பதும் நினைவில் கொள்ள வேண்டும். உலகின் வளர்ந்து வரும் நாடாகவும், வல்லரசாகவும் தன்னைப் பற்றி பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் இந்தியாவில் கல்வித்தரம் இந்நிலைக்கு மாறுபட்டதன் கரணியம் என்ன? பல்கலைக் கழகங்களும், கல்விக் கூடங்களும் புற்றீசல் போல பெருகினாலும் முறையானக் கல்வியை இந்திய நாட்டில் இதுவரை எட்ட முடியவில்லையே ஏன்? இந்திய நாடு விடுதலைக்குப் பின்பு தொடர்ந்து பல்லாண்டு காலமாக ஆட்சிபுரிந்து இதற்கு விடையைத் தரவேண்டிய அவர்களே வினாவைத் தொடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது. 

இந்தியாவில் எந்தக் கட்சியினர் ஆட்சிக்கு வந்தாலும், ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் காட்டும் துரிதத்தை, வேட்கையை நாட்டின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான கல்வி மேம்பாட்டில் காட்டுவதில்லை என்பதே! அரசியல் சார்பற்ற மேனாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தான் முதன்முறையாக 2003 ஆம் ஆண்டு மத்திய பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாட்டை முன்னெடுத்து நடத்தினார். ஆனால் அதற்குப் பின்பு ஒவ்வொரு ஆண்டும் திறனாய்வு செய்வதைத் தவிர்த்து சற்றொப்ப பத்தாண்டுகள் கழித்து அதுபோன்ற ஒரு மாநாட்டைக் கூட்டிக் கல்வித் தரம் உயரவில்லை என ஒப்பாரி வைப்பதற்கு யார் பொறுப்பாகிறார்கள்?

உலக மக்கள் தொகையில் 77.5 கோடி மக்கள் படிப்பறிவில்லாதவர் என உலக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. அதில் 26.8 கோடி பேர் இந்தியாவில் உள்ளனர் என்பது எதைக் காட்டுகின்றது. பதவிக்கு வரும் அரசியல் கட்சிகள் தூய உள்ளத்தோடு நாட்டு மக்களின் மன வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பணியாற்றியிருந்தால் இந்த அறுபத்தைந்து ஆண்டுகளில் நம்முடைய இலக்கை எட்டியிருக்க முடியாதா? இந்தியாவில் ஆரம்பக் கல்விக் கூடத்திலிருந்து உயர் கல்வியை எட்டிப் பிடிக்கும் மாணவர்களின் விகிதம் வெறும் 12 விழுக்காடு மட்டுமே. ஆரம்பப் பள்ளிகள், இடை நிலை, உயர் நிலைக் கல்வி நிறுவனங்கள் பலவும் தனியார் மயமாக்கப்பட்டு கல்வியும் ஒரு வணிகமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் கல்வி கற்பது பெரும் பொருட்சுமை என்ற அளவில், எவ்வாறு இந்திய மக்களின் மனித வளத்தை வெளிக் கொணர முடியும்? வளர்ச்சி பெற்ற நாடுகளில் கல்வி அனைவருக்கும் சமமாக ஏற்றத் தாழ்வின்றி, அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன. ஏழை, பணக்காரன், அரசியல்வாதி, புகழ் பெற்றவன், சினிமாக்காரன் என ஏற்றத்தாழ்வுடன் மாணவர்களுக்கு கல்வி புகட்டும் நிலை அங்கு இல்லை. ஆனால் இந்தியாவில் தான் பணத்திற்கு தகுந்த கல்வி என்று, புனிதமான கல்வியிலும் சாதி ஏற்றத்தாழ்வுகளைப் புகுத்தியுள்ளோம். தேவையற்ற அநாகரிகங்களை வெளிநாட்டினரிடமிருந்து பெறத் துடிக்கும் நாம் அவர்களிடமிருந்து சில நல்ல விடயங்களையும் பெற்றுக் கொள்ள வேண்டாமா? கல்வி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால் பின் அரசாட்சி எதற்காக?

கல்வி விடயத்தில் நடுவண் அரசும், மாநில அரசுகளும் பொறுப்பற்றத் தன்மையிலேயே நடந்து கொள்கின்றன. நாட்டின் பாதுகாப்பிற்காக 30 விழுக்காடு செலவு செய்வதும் கல்விக்காக 3.5 விழுக்காடு செலவு செய்வதும் தான் நம் நாட்டின் பொருளாதார அளவு கோல். நாட்டின் மொத்த உற்பத்தி (எஈக) யில் கல்வி கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்காகச் செலவிடும் தொகை வெறும் 3.5 விழுக்காடு மட்டுமே. ஆனால் மேலை நாடுகளில் இது 6 லிருந்து 7.5 விழுக்காடு என உள்ளது. 1968 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கல்விக் கொள்கைகளில் கல்வி மேம்பாட்டிற்காக 6 விழுக்காடு எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்து 45 ஆண்டுகளுக்குப் பின்னரும் நாம் அதை எட்ட முடியவில்லை என்றால் யார் காரணம்?

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு தலைமுறையினர் தனியார் பள்ளிகளில், வசதி பெற்ற குழந்தைகள் தமிழே கற்றதில்லை. மறுபுறம் அரசு பள்ளிகள் ஏழைகளின் புகலிடமாக மாறிப் போனது! பெரும்பாலான மாநிலங்களில் கல்விக்கான அடிப்படைக் கட்டுமான வசதிகள் போதுமானதாக இல்லை. சாதிப் பிரச்சனையை பொருத்தவரை, சமூகத்தில் சாதி அமைப்பை உறுதிப்படுத்தும் விடயங்களை மாற்றுவது குறித்த திட்டக் கூறுகளும் இல்லை. இந்தியாவில்தான் மதுவிற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து அரசாங்கம் நேரடி வணிகம் செய்வதும், கல்வியைத் தனியார் மயமாக்கி வணிகப் பொருளாக மாற்றியிருப்பதுமான சீர்கேடு நிகழ்ந்துள்ளது. எனவே ஆட்சியாளர்கள் அலங்காரப் பதுமைகளாக அவ்வப்போது வந்து அங்கலாய்ப்பதும், அறிவுரை சொல்வதையும் விடுத்து சிந்தனையை விரிவாக்கி செயல்படுங்கள். அடுத்த தலைமுறையாவது அறிவு வழி நோக்கிப் பயணிக்கும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
(குறள்: 948)

கனிவுடன்,          
சு.குமணராசன்.
முதன்மை ஆசிரியர்
(மாசி 2013)

கோப்புகள்


ஒலிக்கோவைகள்


ஆசுத்திரேலியாவின் முதன்மை வானொலியான SBS Radio க்கு சு.குமணராசன் அளித்த தொலைப்பேசி செவ்வி